06) பெண்களின் ஆடை ஒழுங்கு

நூல்கள்: காலத்தை வென்ற இஸ்லாம்

இஸ்லாத்தின் கொள்கைகள், சட்டதிட்டங்கள், கோட்பாடுகள், அது கற்பிக்கும் பண்பாடுகள் மற்றும் வணக்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியவை; எக்காலத்திலும் எவராலும் ஆதாரத்தோடு மறுக்க முடியாதவை.

إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
(அல்குர்ஆன்: 108:1-3)➚

பெண்களைக் குறித்த இஸ்லாத்தின் பார்வையை உலகத்தின் பார்வையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது பலதார மணம், பெண்களுக்கான வாரிசுரிமை, மறுமணம், விதவைகள் மறுமணம் போன்ற விவகாரங்களில் உலகம் படிப்படியாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நோக்கியே வந்து கொண்டிருக்கிறது.

விபச்சாரத்தை ஒழிப்பதற்குத் திருமணமே முறையான தீர்வு என்பதை இஸ்லாம் அழுத்தமாக முன்வைக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்று பேசுபவர்கள், உலகம் முழுவதும் விபச்சார விடுதிகள் இயங்குவதைக் கண்டும், சின்ன வீடு வைத்திருப்பவர்களைக் கண்டும் அதற்கு எதிராகக் குரல் எழுப்புவதில்லை. சிவப்பு விளக்குப் பகுதிப் பெண்களுக்கும் உரிமை கொடுங்கள் என்று கேட்பதைத் தவிர, பெண்களின் பாதிப்பு குறித்து அவர்களுக்கு உண்மையான அக்கறை இருப்பதில்லை. ஆனால், ஒழுக்கக்கேடான வழிகளில் செல்வதை விடுத்து, திருமணத்தின் மூலமாகவே அந்தத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது; அதுவே அறிவுடைமையும் ஆகும்.

இன்றைய உலகில் பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் கருதி ஆடைகள் வடிவமைக்கப்படும் சூழலில், இஸ்லாம் கூறும் ஆடை ஒழுங்குகள் பெண்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், அடிமைகளாக்குவதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இஸ்லாம் வகுத்த ஆடை முறை சிறந்ததா அல்லது சமூகம் உரிமை என்று கூறிக்கொண்டிருப்பது சிறந்ததா என்பதை அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் அடிப்படையிலும், நடைமுறை ரீதியாகவும் ஆராய வேண்டும்.

ஆண்களும் பெண்களும் உடல் ரீதியாக முற்றிலும் மாறுபட்டவர்கள். பெண்கள் பொதுவாக ஆண்களை உடலமைப்பை மட்டுமே வைத்து ரசிப்பதில்லை; ஆனால் பெரும்பாலான ஆண்கள் பெண்களைப் பார்க்கும் பார்வையில் உடலமைப்பும் கவர்ச்சியும் பிரதானமாக இருக்கின்றன. இந்த உணர்வைத் தூண்டுவதற்கு ஆடையும் முக்கியக் காரணமாக அமைகிறது.

இதன் அடிப்படையில், பெண்கள் தங்கள் தந்தை, சகோதரன், தாய்மாமன், பெரியப்பா, சித்தப்பா போன்ற, யாரைத் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதோ அத்தகைய இரத்த உறவுகளுக்கு முன்னிலையில் இறுக்கமான ஆடைக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டிய கட்டாயமில்லை; ஏனெனில் அங்கு இச்சை உணர்வுகளுக்கு இடமில்லை.

அதேசமயம், திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்ட அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் பெண்கள் தங்கள் முகத்தையும் முன் கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. கருப்பு நிறப் போர்வையைத்தான் அணிய வேண்டும் என்றோ, முகத்தை முழுமையாக மறைக்க வேண்டும் என்றோ இஸ்லாம் கட்டளையிடவில்லை. முகம் மற்றும் கைகள் திறந்திருக்கும் ஆடை அமைப்பு பெண்களின் கல்விக்கோ, பணிக்கோ, வெளி உலகச் செயல்பாடுகளுக்கோ எந்த வகையிலும் தடையாக இருப்பதில்லை.

நமது சமூகத்தில் ஆண்கள் அணியும் ஆடைகளைக் கவனித்தால், அவர்களும் முகம் மற்றும் கைகள் மட்டுமே தெரியும்படி முழுக்கை சட்டையும் கால்சட்டையும் அணிகிறார்கள். பொதுவெளியிலோ, தலைமைப் பொறுப்பிலோ இருக்கும் ஆண்கள் தங்கள் வயிற்றுப் பகுதியையோ, முதுகையோ, தொடையையோ காட்டும் ஆடைகளை அணிவதில்லை. உடலை முழுமையாக மறைப்பதால் அவர்களின் உரிமை பறிக்கப்பட்டதாக யாரும் கருதுவதில்லை; மாறாக அது கண்ணியமாகப் பார்க்கப்படுகிறது. ஆண்களே முழுமையாக உடலை மறைக்கும்போது, பெண்களின் ஆடைக் குறைப்பை மட்டும் உரிமை என்று வாதிடுவது பொருத்தமற்றது.

இஸ்லாத்தின் இந்த வழிகாட்டலை உலகம் முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்பதற்காக இஸ்லாம் தோற்றுவிட்டது என்று கருத முடியாது. மது அருந்துவதை உலகத்தில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அது நல்லதாகிவிடாது. எவ்வளவு பேர் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விட எது சரியானது என்பதே முக்கியம்.

மருத்துவ ரீதியாக ஓர் ஆணுக்கு இசிஜி மற்றும் இஇஜி போன்ற கருவிகளைப் பொருத்தி, அவனுக்கு முன்னால் கவர்ச்சியான ஆடையணிந்த பெண் நடமாடச் செய்தால், அவனது இதயத் துடிப்பிலும் ஹார்மோன்களிலும் கடுமையான மாற்றங்கள் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பெண்ணுக்கு அதே சோதனையைச் செய்யும்போது, ஆணழகனைக் கண்டாலும் அவளுக்கு இத்தகைய உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. பெண்கள் ஆண்களிடம் வலிமையையோ, அன்பையோ, இளமையையோ விரும்பலாமே தவிர, உடலமைப்பைப் பார்த்து நிலைகுலைவதில்லை.

ஆனால் ஆண்களுக்குப் பெண்களின் அங்க அசைவுகளும் அலங்காரங்களும் கடுமையான சலனத்தை உண்டாக்குகின்றன. பெண்களைத் தொடர்ந்து இத்தகைய கவர்ச்சிகரமான கோலத்தில் பார்த்துப் பழகும் ஆண்களுக்கு, உடலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு இல்லறத்தில் ஈடுபட முடியாத பலவீனமும் ஆண்மைக் குறைவும் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களை இவ்வாறு வெறும் கவர்ச்சிப் பொருளாகக் காட்சிப்படுத்துவது, அவர்களது எதிர்காலக் கணவர்களின் திறனைக் குன்றச் செய்து பெண்களுக்கே இழைக்கப்படும் அநீதியாக முடிகிறது.

மேலும், பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்கும் ஆண்கள், தனிமையான சூழல் கிடைக்கும்போது இத்தகைய கவர்ச்சித் தூண்டுதலால் பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கும் விபரீதங்களும் நிகழ்கின்றன. இதற்கு ஆடை ஒழுங்கின்மையும் ஒரு முக்கியக் காரணியாக அமைகிறது.

புர்கா அணிந்த பெண்களும், முதியவர்களும், சிறுமிகளும் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களே என்று இதற்கு எதிர்க்கேள்வி எழுப்பப்படுகிறது.

ஒரு தவறான வாதத்தை முன்வைத்து இதை நியாயப்படுத்துவது அறியாமையாகும். ஒன்றினால் ஒரு விளைவு ஏற்படுகிறது என்று சொன்னால், அதன் மூலம் அந்த பாதிப்பு அதிகமாக நிகழ்கிறது என்பதே பொருளாகும். உதாரணமாக, புகை பிடிப்பவருக்குப் புற்றுநோய் வரும் என்று எச்சரிக்கும்போது, புகை பிடிக்காத ஒருவருக்கும் புற்றுநோய் வந்திருக்கிறதே என்று சிலர் வாதிடுவார்கள். புகை பிடிக்காதவர்களுக்கு வரவே வராது என்பது பொருளல்ல; புகை பிடிப்பவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்பதால்தான் அதைத் தவிர்க்கச் சொல்கிறோம்.

காமவெறி பிடித்த ஒரு மிருகக் குணம் கொண்டவன் கிழவியாக இருந்தாலும், பொம்மையாக இருந்தாலும் எதையும் விட்டுவைக்க மாட்டான். அவனைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இயல்பான ஒரு மனிதனின் மனதை அத்தகைய நிலைக்குத் தள்ளுவதில் ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கண்ணியமாக ஆடை அணிந்திருக்கும் பெண்களை விட, குறைவான ஆடை அணியும் பெண்களே பாலியல் சீண்டல்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் உள்ளாகும் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.

இறுக்கமான ஆடைகளை அணிந்து உடலின் அங்க அவயங்களை வெளிப்படுத்தும்போது, ஆண்கள் அதை ரசித்துப் பார்ப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பொது இடங்களில் அதை ரசித்துவிட்டுச் செல்பவன், சந்தர்ப்பம் அமையும்போது தனது இச்சையைச் செயலாக மாற்றிவிடுகிறான். வன்கொடுமை செய்த பின், பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருந்தால் சாட்சியாக மாறி தனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துவிடுவாள் என்பதால்தான் அவளைக் கொலையும் செய்கிறான். குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவே கற்பழித்துக் கொலை செய்யும் குற்றங்கள் நடக்கின்றன. எனவே, பெண்களைப் பலவீனப்படுத்தும் இத்தகைய சூழலுக்கு நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்?

ஆடை ஒரு பிரச்சனை இல்லை என்று சிலர் மேடைகளில் வாதாடலாம். ஆனால், மனித மூளையின் செயல்பாடுகளைக் கண்டறியும் கருவிகளைப் பொருத்திப் பார்த்தால், அத்தகைய ஆடைகள் ஆண்களின் மனதில் எத்தகைய சலனங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிடும். எதார்த்தத்தை மறைத்துவிட்டு பெண்ணுரிமை என்ற போர்வையில் பேசுபவர்கள், பெண்களைப் பார்த்து ரசிக்கும் வக்கிர புத்திக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை.

இஸ்லாத்தை பிற்போக்குத்தனமானது என்று கருதும் சீனாவில் கூட 2012 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள் குட்டைப் பாவாடைகள், இறுக்கமான உடைகள், மார்பு தெரியும் ஆடைகள் மற்றும் லெக்கின்ஸ் போன்றவற்றை அணியக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. பேருந்துகளில் உயரமான இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பெண்களை, தாழ்வான இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஆண்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பிய சம்பவங்கள் அங்கு அரங்கேறின. இதன் காரணமாக, பேருந்தின் பின்புறமுள்ள உயரமான இருக்கைகளில் பெண்கள் அமரக் கூடாது என்றும், இரட்டை அடுக்கு பேருந்துகளின் மேல் தளத்தில் பெண்கள் நிற்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குடை போன்று விரியும் ஆடைகளை அணிந்து நின்றதால் ஏற்பட்ட பாதிப்புகளே இதற்கு வழிகோலின. முன்கூட்டியே சிந்தித்து ஆபத்தைத் தவிர்ப்பவனே அறிவாளி; மீண்டும் மீண்டும் துன்பங்களைச் சந்தித்தும் திருந்தாமல் இருப்பவன் அல்ல.

அதேபோன்று ஆஸ்திரேலியாவில் ஒரு பேருந்து ஓட்டுநர், பேருந்தின் படிக்கட்டுகளில் சிறிய ரகசிய கேமராக்களைப் பொருத்தி வைத்திருந்தான். பெண்கள் படியில் ஏறும் போது அவர்களுடைய உடலின் உள்பாகங்களை ரகசியமாகப் படம் பிடித்துத் தனது கணினியில் சேமித்து ரசித்துவந்தான். ஒருநாள் அவன் கையும் களவுமாகப் பிடிபட்டான். பெண்கள் தங்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்திருந்தால், அத்தகைய கேமராக்களால் அவனுக்கு எந்தப் பயனும் கிடைத்திருக்காது. ஆடைக் குறைப்பே அவனுக்கு அத்தகைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அரைகுறை ஆடைகளை முற்போக்கு என்றும், அதுவே பெண்களுக்குக் கௌரவம் என்றும் சிலர் வாதிட்டாலும், பெண்களை இழிவாக நடத்திச் சீரழிக்கும் அவலங்களையே சமூகம் காண்கிறது. 2012-ஆம் ஆண்டு பெண்களை அசிங்கப்படுத்திய குற்றவாளி ஒருவனுக்கு ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எத்தகையதாக இருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன.

ஹரியானா மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் குட்டைப் பாவாடை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அம்மாநில மகளிர் ஆணையமே கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தது. பெண்களை ஆடைக்குள் அடைத்து வைக்கிறார்கள் என்று விமர்சித்து வந்த மகளிர் ஆணையமே, பள்ளிகளில் சீருடையாக இருக்கும் குட்டைப் பாவாடையால் மாணவிகள் தவறான பார்வைக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர்ந்து இந்தத் தடையைக் கோரியது. எனவே குட்டைப் பாவாடை வென்று நிற்கிறதா அல்லது கண்ணியமான ஆடை வென்று நிற்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரகுநந்தன் சர்மா போன்ற அரசியல் தலைவர்களும் கூட, பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளை அணியும்போது ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தெரிவதாகவும், தளர்வான ஆடைகளை அணியும்போது அத்தகைய தவறான பார்வை ஏற்படுவதில்லை என்பதால் இறுக்கமான ஆடைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பேசுகின்றனர்.

பொதுவாக மாணவப் பருவம் பெண்களின் இத்தகைய ஆடைகளை ரசிக்கும் மனநிலை கொண்டதுதான். ஆனால் அண்மைக்காலமாக விழிப்புணர்வு பெற்ற மாணவர்களே, இத்தகைய ஆடைகள் கவனத்தைச் சிதறடித்துத் தங்களைப் பாதிக்கின்றன என்பதையும், பெண்கள் ஏமாற்றப்படுவதற்கும் குற்றங்களுக்கு ஆளாவதற்கும் வழிவகுக்கின்றன என்பதையும் உணர்ந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் அகில இந்திய மாணவர் சங்கம் (All India Students Union), மணிப்பூர் ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (Democratic Students Alliance of Manipur), மணிப்பூர் மாணவர் கூட்டமைப்பு (Manipur Students Federation) உள்ளிட்ட ஏழு மாணவர் அமைப்புகள் கல்வித்துறை அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து முறையிட்டன. மாணவிகளின் இத்தகைய ஆடைகளால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தேர்வுகளில் தோல்வியடைகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினர். இதன் விளைவாக, மாணவிகள் முழங்கால் தெரியும் வகையில் சீருடை அணிவதற்கு மணிப்பூர் அரசு தடை விதித்தது. அங்கு இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை; ஆனால் சமூக எதார்த்தமும் அறிவியலும் அதுவே என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

பெண்கள் கண்ணியமாக ஆடை அணிவதால் என்ன குறைந்துவிடப் போகிறது? முகம் மற்றும் கைகளை மட்டும் வெளிப்படுத்தி உடலை மறைத்துக்கொண்டே பெண்கள் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, அமைச்சர்களாகப் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைப்பாகை, முழுச் சட்டை, கோட் என உடலை முழுமையாக மறைத்தே நாட்டை ஆண்டார்; அதனால் அவருடைய தகுதிக்கோ உரிமைக்கோ எந்தக் குறையும் வந்துவிடவில்லை.

வீட்டில் இருக்கும் ஓர் ஆண் சட்டையைக் கழற்றிவிட்டு லுங்கியுடன் அமர்ந்திருந்தாலும் அது எவருக்கும் விகாரமாகத் தெரிவதில்லை. ஆனால், அதே வீட்டில் இருக்கும் ஒரு பெண் தன் தந்தைக்கோ சகோதரனுக்கோ முன்னால் அவ்வாறு இருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே மனிதனின் உள்ளுணர்வாக இருக்கிறது. ஏனெனில் பெண்ணுக்குரிய அழகையும் ஈர்ப்பையும் இறைவன் தனித்துவமாகப் படைத்துள்ளான்.

மனித இனம் பல்கிப் பெருகுவதற்கு இந்த பாலின ஈர்ப்பு அவசியமானது என்றாலும், அந்த உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் முறையான ஆடை அமைப்பை வலியுறுத்துகிறது. பெண்கள் தங்களை ஒழுங்காக மறைத்துக் கொள்வது அவர்களை அடிமைப்படுத்துவதற்காக அல்ல; மாறாக எவராலும் தொல்லைக்கு ஆளாகாமல் கண்ணியமாக வாழ்வதற்காகவே ஆகும்.

ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ
அவர்கள் (கண்ணியமானவர்களாக) அறியப்பட்டு, தொல்லைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு இதுவே ஏற்றதாகும்.
(அல்குர்ஆன்: 33:59)➚

சீனா, ஆஸ்திரேலியா, மணிப்பூர், ஹரியானா போன்ற பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும்கூட ஆசிரியைகள் உடலின் பகுதிகள் வெளிப்படாமல் மேலங்கி (ஓவர்கோட்) அணிந்து பாடம் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய ஆடைக் கட்டுப்பாடுகள் பெண்களைப் பாலியல் அத்துமீறல்களிலிருந்து காக்கவே உதவுகின்றன.

இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடை ஒழுக்கத்தைப் பேணுவதே பெண்களுக்கும் ஆண்களுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்கி, காலத்தை வென்று நிற்கும் தீர்வாக அமைகிறது.