10) ஜீவனாம்சம்
கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்துவிட்டுப் பின்னர் விவாகரத்துச் செய்யும்போது, அதனால் பெண்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் இன்றைய சமூக அமைப்பில் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு முழுக்க முழுக்கக் கணவன்மாரே பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் குடும்பத் தலைவிகளாக வீடுகளிலேயே தங்கிவிடுவதால், அவர்களுக்கான பொருளாதாரத்தைத் திரட்டித் தரும் சுமையைக் கணவனே சுமக்கிறான். இத்தகைய சூழலில் விவாகரத்து ஏற்படும்போது, இனி யாருக்கும் எவ்விதப் பொறுப்பும் இல்லை என்று கூறி அவர்களை நடுத்தெருவில் நிறுத்துவது நியாயமாகாது. திருமணத்திற்குப் பிறகு பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் கூட அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கும் நிலையில், விவாகரத்தால் அப்பெண்கள் நிர்க்கதியாகி விடுகின்றனர்.
மனைவியைப் பிடிக்கவில்லை என்பதற்காக அவளைக் கொடுமைப்படுத்துவதையும் கொலை செய்வதையும் தடுப்பதற்காகவே விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆயினும் விவாகரத்து தவிர்க்க முடியாததாக மாறும் சூழலில், அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட முடியாது. சில மேற்கத்திய நாடுகளில் விவாகரத்திற்குப் பிறகு இருவருக்கும் எந்தப் பொருளாதாரக் கடமையும் இல்லை என்று முடித்துவிடுகிறார்கள். வேறு சில நாடுகளில் யார் வசதியாக இருக்கிறார்களோ அவர்கள் மற்றவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
நம் நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு, விவாகரத்துச் செய்த கணவனிடமிருந்து அப்பெண் மறுமணம் செய்யும் வரை மாதாந்திர ஜீவனாம்சம் பெறலாம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. விவாகரத்தான பெண்ணுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு தேவை என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இச்சட்டத்தின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், நடைமுறையில் இதனால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை.
இந்த ஜீவனாம்சத்தைப் பெறுவதற்குப் பெண்கள் நீதிமன்றப் படியேறி, வழக்கறிஞர்களுக்குப் பெருந்தொகையைக் கட்டணமாக அள்ளித் தர வேண்டியுள்ளது. நீதிமன்றம் ஒரு தொகையைத் தீர்ப்பளித்தாலும் கணவன் அதைச் சரியாகக் கொடுப்பதில்லை. அல்லது நீதிமன்றமே அவனது சக்திக்கு மீறிய தொகையை நிர்ணயித்துவிடும்போது, அன்றாடம் காய்ச்சியாக இருக்கும் அவனால் அதைத் தர முடிவதில்லை. இதனால் நீதிமன்றத் தீர்ப்பினால் அப்பெண்களுக்கு எந்தப் பயனும் கிடைப்பதில்லை.
மேலும் நம் நாட்டின் நிர்வாக அமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, எவ்வளவு பெரிய கோடீஸ்வரனும் தான் ஒன்றும் இல்லாத ஏழை என்று அதிகாரப்பூர்வமாக ஆவணங்களைத் தயாரித்துவிட முடிகிறது. வருமான வரியை ஏமாற்றுவதற்குப் பெரும் புள்ளிகள் போலி ஆவணங்களை உருவாக்குவது போல, ஜீவனாம்சம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்குக் கணவன் தனது சொத்துக்களைப் பிறர் பெயருக்கு மாற்றிவிட்டுத் தன்னை வறியவனாகக் காட்டிக் கொள்கிறான். போலி சான்றிதழ்களையும் ஆவணங்களையும் எளிதாகப் பெற்றுவிடக்கூடிய இத்தகைய அமைப்பில், நீதிமன்றம் எதையும் களத்தில் சென்று விசாரிக்காமல் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் சொற்பத் தொகையைத் தீர்ப்பளிக்கிறது. அந்த அற்பத் தொகையைப் பெறுவதற்குப் பெண்கள் அதைவிடப் பல மடங்கு செலவிட வேண்டிய அவலமே மிஞ்சுகிறது.
அத்துடன் கிராமங்களில் உள்ளவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டுமென்றால் தாலுகா, மாவட்டம் அல்லது உயர் நீதிமன்றம் என அலைக்கழிய வேண்டியுள்ளது. வாய்தா வாங்குவதற்காகவே பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வசதியான குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் விவாகரத்துச் செய்யப்படும்போது, இந்த அற்பத் தொகைக்காக நீதிமன்றப் படியேறித் தனது கண்ணியத்தைக் குலைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஏழைப் பெண்ணோ, கணவனிடமும் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாத நிலையில் நீதிமன்றத்திற்குச் செலவு செய்ய வழியின்றி முடங்கிப் போகிறாள். எனவே நடைமுறையில் உள்ள ஜீவனாம்சச் சட்டத்தால் பெண்களுக்கு உண்மையில் எந்த நன்மையும் விளைவதில்லை.
ஜீவனாம்சம் என்ற கருத்தை அனைவரும் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டாலும், தற்போதுள்ள சட்டமுறைகள் பெண்களுக்கு நடைமுறைத் தீர்வாக அமையவில்லை. ஆனால் இஸ்லாம் இந்த விவகாரத்திற்கு மிகச் சிறந்த, தொலைநோக்குடைய தீர்வை முன்வைக்கிறது. விவாகரத்து என்ற ஒன்று ஏற்படுவதற்கு முன்பாக, அதாவது திருமணத்தின் போதே பெண்களுக்கு ஒரு மகத்தான உரிமையை இஸ்லாம் பெற்றுத் தருகிறது. இல்லற வாழ்க்கையில் ஈடுபடும்போது ஆணை விடப் பெண்ணுக்கே அதிகப் பாதிப்பு ஏற்படும் என்பதால், பெண்கள் வெறுமனே திருமணத்திற்கு உடன்பட்டுவிடக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.
தம்பதியரிடையே மணவாழ்க்கை சுமூகமாக நீடிக்கும் வரை எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை. ஆனால், வாழ முடியாத சூழல் ஏற்பட்டுப் பிரிய நேரிடும்போது சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பாதிப்புகள் அதிகம். விவாகரத்தான ஒரு ஆணுக்கு அடுத்த நாளே மற்றொரு பெண் கிடைத்துவிடும்; எத்தனையாவது திருமணமாக இருந்தாலும் அவனுக்குப் பெண் கொடுப்பார்கள். ஆனால், விவாகரத்தான பெண்ணுக்கு அடுத்த நாளே மறுமணம் அமைவது அத்தனை எளிதல்ல.
பெற்றோர், பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் போன்ற இரத்த உறவுகள் இறைவனால் அமைக்கப்பட்டவை; ஆனால் கணவன் மனைவி உறவு என்பது மனிதர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஓர் உறவு. இது எப்போது வேண்டுமானாலும் முறிந்து போகலாம் என்பதைக் கவனத்தில் கொண்டே இஸ்லாம் பெண்ணுக்கு மகர் என்ற பாதுகாப்புத் தொகையை வழங்குகிறது. திருமணத்தின்போதே மாப்பிள்ளையின் பொருளாதார வசதிக்கு ஏற்ப ஐந்து லட்சமோ, பத்து லட்சமோ, ஒரு வீடோ அல்லது ஏழையாக இருந்தால் பத்தாயிரம் ரூபாயோ கேட்டுப் பெறலாம். அந்தத் தொகையைக் கொடுத்தால்தான் திருமணம் செல்லும் என்ற நிலையை இஸ்லாம் ஏற்படுத்துகிறது. பெண் விரும்பி விட்டுக் கொடுத்தாலே தவிர, அதை ஒரு பாதுகாப்புத் தொகையாகப் பெற்றுக் கொள்வதை மார்க்கம் அவளுக்கு உத்தரவாதப்படுத்துகிறது.
அந்தப் பாதுகாப்புத் தொகை பெண்ணின் தனிப்பட்ட உடைமையாகும். அதில் அவளது தந்தையோ, சகோதரர்களோ உரிமை கொண்டாட முடியாது. அவளது அன்றாடப் பராமரிப்புச் செலவுகள் அனைத்தையும் கணவனே ஏற்றுக்கொள்கிறான். எதிர்காலத்தில் விவாகரத்து போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே முன்கூட்டியே வாங்கப்படும் இந்தப் பாதுகாப்புத் தொகையே பெண்ணுக்குப் பாதுகாப்பானது.
விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிட்டால், ஏதோ ஒரு தபாலிலோ, தந்தியிலோ, எஸ்.எம்.எஸ்ஸிலோ அல்லது வழக்கறிஞர் நோட்டீஸ் மூலமாகவோ விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிக்கும் அறியாமை சில முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. இஸ்லாத்தில் அப்படித் தன்னிச்சையாக விவாகரத்து செய்ய முடியாது. விவாகரத்திற்குப் பிறகு வழங்க வேண்டிய பொருளாதாரக் கொடுப்பனவுகளை இஸ்லாம் மிகத் தெளிவாக வகுத்துள்ளது. ஓர் இஸ்லாமிய அரசு இருந்தால் அது இதை வசூலித்துத் தரும்; அரசு இல்லாத சூழலில் உள்ளூர் ஜமாஅத் போன்ற சமூக அமைப்புகள் இரு தரப்பையும் விசாரித்து, அந்த உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும். மதத்தைப் பயன்படுத்திச் சம்பாதிக்கும் சிலர் பணத்தைப் பெற்றுக்கொண்டு இதுபோன்ற முறையற்ற விவாகரத்துகளுக்கு மார்க்கத் தீர்ப்பு அளிப்பது தவறானதாகும். விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் திட்டவட்டமாகக் கூறுகிறது:
وَلِلْمُطَلَّقَـٰتِ مَتَـٰعٌۢ بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
(அல்குர்ஆன்: 2:241)➚
விவாகரத்து செய்துவிட்டால் ஏதோ ஒன்றுமில்லாமல் பிரிந்து செல்ல முடியாது; அவளுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும். அதுவும் மாதாமாதம் வழக்கு மன்றத்தின் மூலம் அலைக்கழிக்கப்படும் ஜீவனாம்சம் போன்று அல்லாமல், பிரியும் போதே ஒரு குறிப்பிட்ட தொகையாகவோ சொத்தாகவோ பேசி முடிக்கப்பட வேண்டும். அத்தொகையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதையும் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது:
عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَـٰعًۢا بِٱلْمَعْرُوفِ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ
வசதியுடையவர் அவரது வசதிக்குத் தக்கவாறும், வசதியற்றவர் அவரது நிலைக்குத் தக்கவாறும் அழகிய முறையில் வாழ்வாதாரம் வழங்க வேண்டும்; நன்மக்களுக்கு இது கட்டாயக் கடமையாகும்.
(அல்குர்ஆன்: 2:236)➚
வாழ்வாதாரத்தை இன்ன தொகை என்று அனைவருக்கும் பொதுவாக ஒரே அளவாக நிர்ணயிக்க முடியாது. கணவனின் வசதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டே அதைத் தீர்மானிக்க வேண்டும். உள்ளூர் ஜமாஅத்தில் உள்ளவர்களுக்கு அவ்வூரின் குடும்பப் பின்னணிகள், மாப்பிள்ளையின் சொத்து விவரங்கள் அனைத்தும் நன்கு தெரியும். எனவே, கணவன் தன் வசதியை மறைத்து ஏமாற்ற முடியாது. அவனது நிலைக்கு ஏற்ப, உதாரணத்திற்கு அவனுக்கு ஐந்து வீடுகள் இருந்தால் இரண்டு வீடுகளை அப்பெண்ணிற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சமூக அமைப்பின் மூலம் முடிவெடுத்து உடனடியாகப் பெற்றுத் தர முடியும். நீதிமன்றங்களில் ஆண்டுகணக்காக இழுத்தடித்து, இறுதியில் அவனது வருமானம் நலிந்துபோய் எதையும் பெற முடியாமல் போகும் நிலையை விட, திருமண பந்தம் முறியும் போதே ஒரு தொகையைப் பெற்றுத் தருவது பெண்ணிற்குப் பெரும் பயனளிக்கும்.
சிலர் திருமணம் செய்து உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாகவே, பிடிக்கவில்லை என்ற காரணத்தால் உடனடியாக விவாகரத்து செய்துவிடுவார்கள். பெண்ணைத் தீண்டாமல் விவாகரத்து செய்தாலும் கூட அவளுக்கு வாழ்வாதார இழப்பீடு வழங்க வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. ஏனெனில், பல காலம் சேர்ந்து வாழ்ந்தால்தான் பாதிப்பு என்றில்லை; திருமணம் முடிந்து கணவன் கைவிட்ட பெண் என்ற நிலையே அப்பெண்ணின் அடுத்த திருமண வாய்ப்பைப் பாதிக்கும். எனவேதான் தீண்டாமல் விவாகரத்து செய்தாலும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது:
فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًا
அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டுவிடுங்கள்.
(அல்குர்ஆன்: 33:49)➚
பெண்ணுடன் சேர்ந்து வாழாமல் ஒப்பந்தம் மட்டும் செய்துவிட்டு விவாகரத்து செய்தாலும், அவளது தகுதியையும் கணவனின் பொருளாதார வசதியையும் கருத்தில் கொண்டு, அவனுக்கும் சுமையாக அமையாத வகையில் அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ஈடாக வாழ்வாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இத்தகைய விவகாரங்களை முறையாகச் சமூக அமைப்பின் முன்னிலையில் வைத்து முடிவெடுக்கும் போதுதான் பெண்ணுக்குரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர முடியும்.
அதேவேளையில், ஒரு பெண் தன் கணவனோடு இருக்கும்போதே மற்றொரு ஆணோடு தவறான தொடர்பு வைத்திருந்து, அதனால் கணவன் அவளை விவாகரத்து செய்கிறான் என்றால், அத்தகைய சூழலில் அவளுக்கு இந்த வாழ்வாதார இழப்பீடு பெற்றுத் தரப்பட மாட்டாது. தவறு அவளது பக்கமே இருக்கும்போது கணவன் மீது சுமத்த முடியாது. நீதிமன்றம் போல் பலரறிய குறுக்கு விசாரணை செய்து மானபங்கப்படுத்தாமல், ஜமாஅத் நிர்வாகிகளிடம் அந்த உண்மையை எடுத்துக்கூறி அப்பிரச்சினையை முடித்துக்கொள்ளலாம்.
மனைவியின் ஒழுக்கக்கேடான நடத்தை என்ற காரணத்தைத் தவிர, அவளைத் தீண்டாமல் விவாகரத்து செய்திருந்தாலும் கூட அவளுக்குரிய வாழ்வாதாரத்தை ஒருசேரப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும். விவாகரத்து செய்யப்பட்டு இத்தா காலம் முடிந்த பிறகு அப்பெண் அடுத்த திருமணத்திற்குத் தயாராகிவிடலாம். விவாகரத்து செய்த உடனேயே அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட முடியாது; இத்தா காலம் முடியும் வரை அவள் அதே வீட்டில்தான் இருக்க வேண்டும்.
விவாகரத்து செய்யப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம் கணவன் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அவளை வெளியேற்றவோ அவள் வெளியேறவோ கூடாது என்றும் அல்குர்ஆனில் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அந்த மூன்று மாதங்கள் வரை விவாகரத்து நிலுவையில் இருக்கும். அதற்குள் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கொண்டால் விவாகரத்து நீங்கிவிடும்; மூன்று மாதங்களுக்குள் சேரவில்லை என்றால் மட்டுமே விவாகரத்து உறுதியாகும். அதன் பிறகு இத்தா காலம் முடிந்துவிட்ட காரணத்தால், அப்பெண் தனக்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு மறுநாளே வேறொரு திருமணம் செய்துகொள்ள முடியும்.
பொதுவான ஜீவனாம்ச முறையில் உடனடியாக மறுமணம் செய்வது சாத்தியப்படுவதில்லை. ஏனெனில் வேறொரு திருமணம் செய்துகொண்டால் ஜீவனாம்சம் கிடைக்காது; இன்னொருவனுக்கு மனைவியாக இருக்கும்போது முந்தைய கணவன் ஏன் பணம் தர வேண்டும் என்ற கேள்வி எழும். இதனால் ஜீவனாம்சம் பெறும் பெண்களில் சிலர், ஒருவனுக்கு மனைவியாகக் கட்டுப்பட்டு வாழ்வதை விட சுதந்திரமாக வாழலாம் என்று கருதி மறுமணத்தைத் தவிர்க்கும் சூழல் ஏற்படுகிறது. வாழ்வாதாரத்திற்கு முந்தைய கணவன் பொறுப்பேற்றுக்கொள்ள, தாங்கள் விரும்பியபடி வாழும் இத்தகைய தவறான போக்கை அந்த ஜீவனாம்சம் ஊக்குவிக்கிறது. ஆனால் இஸ்லாமோ விவாகரத்து உறுதியானதும், பந்தத்தை முழுமையாக முடித்துவிட்டு அப்பெண்ணை சுதந்திரமாக விடுவிக்கிறது. இதன் மூலம் அப்பெண்ணும் அவளது குடும்பத்தாரும் அவளது மறுவாழ்விற்கான முயற்சிகளில் ஈடுபட முடிகிறது; முந்தைய கணவனைச் சார்ந்து வாழ வேண்டிய தேவையும் இல்லாமல் போகிறது.
விவாகரத்து செய்யப்படும் போது அப்பெண் கர்ப்பிணியாக இருந்தால், அவள் பிரசவிக்கும் வரை ஒரு மனைவிக்குரிய அனைத்துச் செலவுகளையும் கணவனே ஏற்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
وَإِن كُنَّ أُو۟لَـٰتِ حَمْلٍ فَأَنفِقُوا۟ عَلَيْهِنَّ حَتَّىٰ يَضَعْنَ حَمْلَهُنَّ
அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவிடுங்கள்.
(அல்குர்ஆன்: 65:6)➚
குழந்தை பிறந்த பிறகு, அப்பெண் அக்குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்ற கட்டாயம் அவளுக்குக் கிடையாது. கணவனோடு மனைவியாக வாழ்ந்தால் மட்டுமே அது அவளது பொறுப்பாகும்; இல்லையெனில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி தந்தையிடமே கூறிவிடலாம். ஆயினும் தாய் இரண்டு ஆண்டுகள் பாலூட்ட முன்வந்தால், தந்தை அதற்கான கூலியாக رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ (அவர்களுக்கான உணவும் உடையும்) வழங்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகிறது.
இத்தொகையை நீதிமன்றம் சென்று வாங்குவது பெண்களுக்கு நடைமுறையில் சாத்தியமில்லை. மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வாங்குவதற்காக அதிக செலவு செய்து, துணைக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு தொலைதூர நீதிமன்றங்களுக்கு அலைய முடியாது. ஆனால் இஸ்லாமிய நடைமுறையில் ஜமாஅத் மூலம் இது தீர்க்கப்படுகிறது. கணவன் இத்தொகையைக் கொடுக்கத் தவறினால் ஜமாஅத் அவனைக் கண்டித்துப் பெற்றுத்தரும். மேலும், முந்தைய மனைவிக்குரிய கடமைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன என்ற தடையின்மைச் சான்றிதழைப் பெற்றால்தான், அவன் இன்னொரு பெண்ணை மணக்க அடுத்த ஊர் ஜமாஅத் அனுமதிக்கும். எனவே எளிய மக்களுக்கு உடனடி நீதியும் சரியான தீர்வும் கிடைக்க இத்தகைய சமூக அமைப்பே சிறந்ததாகும்.
ஷாபானு வழக்கிலும் கூட, அவரது கணவர் இஸ்லாமிய முறைப்படி தன் ஜமாஅத்தை அணுகி, முறைப்படி விவாகரத்து செய்திருந்தால் அது நீதிமன்றத்திற்குச் சென்றிருக்காது. ஜமாஅத்தில் இரு தரப்பையும் அழைத்து, கணவனின் பொருளாதார நிலையை விளக்கி, நியாயமான தொகையைப் பெற்றுத் தந்து பிரச்சினையை முடித்திருப்பார்கள். அதை விடுத்து கணவன் தன்னிச்சையாக நோட்டீஸ் அனுப்பியதால் அப்பெண் நீதிமன்றம் செல்ல நேரிட்டது. சமுதாய அமைப்புகளும் ஜமாஅத்களும் இருக்கையில் எதற்காக நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டும்? ஜமாஅத்தில் பேசி சுமுகமாக முடித்தால் குழந்தைகளுக்கான செலவையும் உத்தரவாதப்படுத்த முடியும்.
நீதிமன்றம் அந்த வழக்கைத் தவறாக அணுகி, இஸ்லாமியச் சட்டத்திற்கு எதிராகத் தலையிட்டதால்தான் முஸ்லிம்கள் போராடினார்களே தவிர, பெண்களுக்குரிய உரிமையை மறுப்பதற்காக அல்ல. அந்தப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டது உண்மைதான்; அதற்காக நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணிப்பது நியாயமாகாது. பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆண்களும், வரம்பு மீறி தவறான புகார்களைக் கொடுக்கும் பெண்களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இரு தரப்பினரும் மறுமை விசாரணைக்கு அஞ்சி நடக்க வேண்டும். ஜமாஅத்களும் ஒருதலைப்பட்சமாக இல்லாமல் இறையச்சத்தோடு நடுநிலையாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் பல ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்து, இறுதியில் மாதம் சில நூறு ரூபாய்களைத் தீர்ப்பாக வழங்குவது பெண்களுக்குப் பயனளிக்காது. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஜமாஅத்கள் மூலம் கணவனின் வசதிக்கேற்ப பெருந்தொகையைப் பெற்றுத் தந்து பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.
விவாகரத்திற்குப் பின் பெண்களை நீதிமன்றப் படிகளில் அலையவிடாமல், அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பையும் கௌரவமான மறுவாழ்வையும் உடனடியாக உறுதிசெய்யும் இஸ்லாமிய நடைமுறையே காலத்தை வென்ற மிகச் சிறந்த தீர்வாகும்.