08) ஆண்கள் பெண்கள் விவாகரத்து சட்டம்

நூல்கள்: காலத்தை வென்ற இஸ்லாம்

இஸ்லாத்தின் கொள்கைக் கோட்பாடுகள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை; காலத்தை வென்று நிலைத்து நிற்கக்கூடியவை. அந்த வகையில், குடும்ப வாழ்க்கை குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் உலகத்தின் பார்வையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாத்தின் அணுகுமுறையே நடைமுறைக்கு உகந்ததாகவும், அறிவுப்பூர்வமானதாகவும், சாத்தியமானதாகவும் திகழ்கிறது.

وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا
மூச்சிரைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!
(அல்குர்ஆன்: 100:1-4)➚

மனிதர்களுக்குத் தாய், தந்தை, சகோதரர்கள், மாமன், பெரியம்மா, சித்தப்பா போன்ற பல்வேறு உறவுமுறைகள் உள்ளன. இந்த உறவுகள் நாம் விரும்பிய நேரத்தில் உருவாக்கிக்கொள்ளவோ, மாற்றிக்கொள்ளவோ முடிகிற உறவுகள் அல்ல; நம் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு இறைவன் புறத்திலிருந்து அமைக்கப்பட்ட இயற்கையான பந்தங்கள். இவற்றுள் எத்தகைய சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழகாமல் இருக்கலாமே தவிர, அந்த உறவை அடியோடு மாற்றவோ இல்லையென்று ஆக்கவோ முடியாது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே பகையே உருவானாலும் தந்தை தந்தையே, மகன் மகனே என்ற அடிப்படை மாறாது.

ஆனால், திருமண பந்தம் அவ்வாறானதல்ல. ஓர் ஆணும் பெண்ணும் தமது உடல் தேவைக்காகவும், ஒருவருக்கொருவர் உற்ற துணையாக வாழ்வதற்காகவும் தாங்களாகவே தேர்ந்தெடுத்து ஏற்படுத்திக்கொள்ளும் உறவுதான் கணவன் மனைவி பந்தம். தாய், தந்தையை நாம் தேர்வு செய்வதில்லை; ஆனால் வாழ்க்கைத்துணையை நம் விருப்பத்திற்கேற்ப பல வாய்ப்புகளில் இருந்து நாமே தேர்ந்தெடுக்கிறோம்.

நாம் தேர்வு செய்து அமைத்துக்கொள்ளும் உறவு என்பதால், திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் மத்தியில் முரண்பாடுகள் எழ வாய்ப்புள்ளது. கணவன் மீது மனைவிக்கும், மனைவி மீது கணவனுக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். அவை நிறைவேறுமா என்று தெரியாமலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு அந்த எதிர்பார்ப்புகளில் சிக்கல் வரும்போது, தவறான முடிவெடுத்துவிட்டோமோ என்ற மன உளைச்சலும் சண்டை சச்சரவுகளும் உருவாகின்றன.

உடல் தேவை, அன்பு, அரவணைப்பு அல்லது பொருளாதார வசதி என ஏதோ ஒரு தேவையின் அடிப்படையில்தான் வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டாலும் இல்லறத்தில் கசப்புணர்வு தோன்றுகிறது. சிறிய குறைகளை சகித்துக்கொண்டு வாழ்ந்துவிடலாம்; ஆனால் வெளிப்படையாகச் சொல்ல முடியாத பாரதூரமான குறைகளும் சிலருக்கு ஏற்படலாம். குறிப்பாக, தாம்பத்திய வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் பொருத்தமில்லாத நிலை வரும்போது, வெளியில் நடிப்பதுபோல சில காலம் காட்டிக்கொள்ளலாமே தவிர, அது இறுதியில் பெருந்துன்பத்திலேயே முடியும்.

சரிசெய்யவே முடியாத பிரச்சனை ஏற்படும்போது, இருவரும் பிரிந்து செல்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். நாமாகத் தேர்ந்தெடுத்த உறவு நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாதபோது, வெறுப்போடு கட்டாயப்படுத்தி வாழ முடியாது. இருவரும் இணையாமல் பெயரளவில் கணவன் மனைவியாக வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

பிரச்சனை முற்றிவிட்டால் அதற்கு என்ன தீர்வு என்பதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக வழிகாட்டியுள்ளது. ஆனால், உலகின் பெரும்பாலான சித்தாந்தங்கள் கணவன் மனைவி உறவை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட புனிதமான பந்தம் என்றும், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றும் போதித்து மக்களை மூளைச்சலவை செய்தன. கணவனிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் அவருடன்தான் வாழ வேண்டும் என்று நிர்ப்பந்தித்தால், அந்தப் பெண்ணின் தேவைகள் எவ்வாறு நிறைவேறும்? அவளது தேவைகளை நிறைவேற்ற முடியாத ஓர் ஆணோடு வெறும் ஆண் என்பதற்காக மட்டும் வாழ முடியுமா? எனவே, பிடிக்காத கணவனிடமிருந்து விலகும் உரிமை பெண்ணுக்கும், அவ்வாறே மனைவியிடம் தீர்க்க முடியாத குறை இருந்தால் முறையாகப் பிரிந்துவிடும் உரிமை ஆணுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் உலகின் அனைத்து நாட்டுச் சட்டங்களும் விவாகரத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. தம்பதியருக்குள் பிரச்சனை என்றால் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற சட்டம் உலகமெங்கும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இச்சட்டங்கள் மதங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, மதக் கோட்பாடுகளை எதிர்த்து உடைத்தெறிந்து கொண்டுவரப்பட்டவை. ஆனால், இஸ்லாமிய மார்க்கம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தீர்வை வழங்கிவிட்டது. உயிரும் உடலுமாக நகமும் சதையுமாக வாழ்வது என்பது எல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே சாத்தியம். எதார்த்தத்தில் ஆண்மை இல்லாத ஒருவனைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, கல்லானாலும் கணவன் என்று வாழ நிர்ப்பந்திப்பது அவளைத் தவறான வழிக்குத் தள்ளுவதற்கு ஒப்பானதாகும். அத்தகைய பந்தத்தை முறித்துவிட்டு, அவள் கண்ணியமாக வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே சரியான தீர்வாகும். அதேபோல், மனைவியிடம் இல்லற நாட்டம் இல்லாதபோதோ அல்லது அவள் தவறான வழியில் செல்வது தெரியவந்து அதை ஏற்றுக்கொள்ள முடியாதபோதோ, பெயரளவில் அந்தப் பந்தத்தைத் தொடரச் சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதும், அற்பக் காரணங்களுக்காகப் பிரியக்கூடாது என்பதும் உண்மைதான். இஸ்லாமும் உடனே விவாகரத்து செய்யுமாறு கூறவில்லை. முதலில் நல்லுரை கூறுங்கள்; பிறகு படுக்கையிலிருந்து விலகி இருங்கள்; பெரிய பிரிவு வந்துவிடக்கூடாது என்பதற்காக லேசாக அடியுங்கள் என்று படிப்படியான தீர்வுகளைக் கூறுகிறது. அதுவும் பலனளிக்கவில்லை என்றால், فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِۦ وَحَكَمًا مِّنْ أَهْلِهَآ (அவனுடைய குடும்பத்திலிருந்து ஒரு நடுவரையும் அவளுடைய குடும்பத்திலிருந்து ஒரு நடுவரையும் அனுப்புங்கள்) என்று வழிகாட்டுகிறது. இரு குடும்பத்து நடுவர்கள் முன்னிலையில் பேசி இணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். சமையல் தெரியவில்லை, அழகு போதவில்லை, கோபப்படுகிறார் போன்ற மாற்றிக்கொள்ளக்கூடிய குறைகளாக இருந்தால் நடுவர்கள் மூலம் பேசிச் சரிசெய்து கொள்ளலாம்.

ஆனால், நடுவர்கள் பேசிப் பார்த்தும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் உலகில் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலில் இன்றைய உலகம் விவாகரத்தை மிகவும் கடினமானதாகவும் ஒரு குற்றம்போலவும் ஆக்கி வைத்துள்ளது. மனைவியைப் பிடிக்கவில்லை என்பதற்கு நியாயமான காரணம் இருந்து விவாகரத்து கோரினால், நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் அலைய வேண்டியுள்ளது. தனக்கு அன்பும் துணையும் தேவை என்று ஏங்கும் ஒரு மனிதன் இத்தனை ஆண்டுகள் என்ன செய்வான்? இதன் விளைவாகத்தான், கணவன் இருக்கும்போதே பெண் வேறொருவருடன் தொடர்பு கொள்வதும், பின்னர் அந்தத் தொடர்புக்குக் கணவன் தடையாக இருக்கும்போது கூலிப்படையை வைத்தோ தாமே திட்டமிட்டோ கணவனைக் கொலை செய்யும் கொடூரச் சம்பவங்கள் அரங்கேறுவதையும் நாம் பார்க்கிறோம். அதேபோன்று கணவன் மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடும் அவலங்களும் நிகழ்கின்றன.

பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்துவிட்டு வேறொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் என்ற மனப்பக்குவத்தை இஸ்லாம் வளர்க்கிறது. ஒரு பெண் பிரிந்து சென்றுவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று ஆத்திரப்படத் தேவையில்லை. பிடிக்காத பட்சத்தில் பிரிந்து செல்ல இருவருக்குமே இஸ்லாம் உரிமை அளிக்கிறது. கணவன் மனைவி விவகாரம் என்பது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இருவருக்கும் ஒத்துவரவில்லை என்றால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் சுமூகமாகப் பிரிந்துவிட வேண்டும். அதை விடுத்து பல ஆண்டுகள் பிரிந்து வாழுங்கள் என்று நீதிமன்றங்கள் இழுத்தடித்தால் திருமண பந்தத்தின் நோக்கமே பாழாகிவிடும். பேசிப் பார்த்துச் சரிவரவில்லை என்றால், இருவருமே அவரவர் விருப்பப்படி மறுமணம் செய்து புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழிசெய்வதே உண்மையான நீதியாகும்.

உலக நாடுகளில் உள்ள சட்டங்களில் விவாகரத்து அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அதற்காக விதிக்கப்படும் கடுமையான விதிமுறைகளும், நீதிமன்றங்களில் ஏற்படும் அதீத காலதாமதங்களும் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. விவாகரத்து பெறுவது எளிதாக இல்லாததாலும், சமுதாயப் பழிச்சொல், நீதிமன்றச் செலவுகள், ஜீவனாம்சம் போன்ற நடைமுறைகளுக்கு அஞ்சுவதாலும் பல ஆண்கள் விவாகரத்தும் செய்யாமல் மனைவியைப் பராமரிக்காமலும் விட்டுவிடுகின்றனர். பேருக்கு மனைவியாக வீட்டில் இருக்க வைத்துவிட்டு, அவளுக்குரிய எந்த உரிமையையும் பொருளாதாரத்தையும் வழங்காமல், ஆண்கள் வெளியில் முறைகேடான வழிகளில் இன்பம் தேடிச் செல்கின்றனர். இதனால் கணவன் இருந்தும் இல்லாதவளாக வாழும் பெண்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் பெருகிவிடுகிறது.

மதங்களில் விவாகரத்திற்கு அனுமதியில்லாத சூழலிலும், நாட்டின் சட்டப்படி விவாகரத்து பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையிலும் விபரீதங்களே ஏற்படுகின்றன. சில குடும்ப வழக்குகள் எழுபது ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட வரலாறும் உண்டு. சேர்ந்து வாழவே முடியாத சூழல் ஆயிரத்தில் ஐம்பது பேருக்காவது வரத்தான் செய்யும். அந்த ஐம்பது பேருக்கு முறையான தீர்வு இல்லையென்றால் அவர்கள் தவறான வழியைத் தேர்ந்தெடுப்பார்கள்; கள்ளத் தொடர்புகளிலும் குற்றங்களிலும் ஈடுபடுவார்கள். அத்தகைய நிலைக்கு அவர்களைத் தள்ளுவதை விட, வெட்கமின்றி உரிமையோடு வாழ்வதற்கான வழியை அமைத்துக் கொடுப்பதே சரியான தீர்வாகும்.

இதற்கு இஸ்லாம் மிக எளிய நடைமுறைத் தீர்வை வழங்குகிறது. விவாகரத்து செய்ய விரும்பும் போது ஜமாஅத்தார்கள் முன்னிலையில் பேசித் தீர்வு காணப்படுகிறது. ஜமாஅத்தார்களுக்கு இரு தரப்பாரின் குடும்பப் பின்னணியும், அவர்களின் பொருளாதார வசதியும் தெளிவாகத் தெரியும் என்பதால், நீதிமன்றங்களைப் போல காலதாமதம் செய்யாமல் இருவரையும் அழைத்து விசாரித்துத் தீர்வு காண முடிகிறது. சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை வரும்போது, கணவனின் பொருளாதார வசதிக்கு ஏற்ப மனைவிக்குரிய இழப்பீட்டைப் பெற்றுத் தந்து, இருவரும் பிரிந்து மறுமணம் செய்து கொள்ள வழிகாட்டப்படுகிறது.

அவ்வாறு விவாகரத்து செய்த பிறகும் கூட அவர்களை உடனே நிரந்தரமாக இஸ்லாம் பிரித்து விடுவதில்லை. தாம்பத்தியம் சார்ந்த பாரதூரமான பிரச்சனைகள் இன்றி, சிறிய காரணங்களுக்காகக் கோபத்தில் விவாகரத்து செய்திருந்தால், அந்தப் பிரிவுக்குப் பின் இருவரும் சேர்வதற்கான வாய்ப்பை இஸ்லாம் வழங்குகிறது. பொதுவாகப் பெண்களை விட ஆண்களே அவசரப்பட்டு விவாகரத்து கூறிவிட்டு, பின்னர் அந்தப் பிரிவை உணர்ந்து வருந்துவார்கள். எனவே விவாகரத்து செய்த பிறகும் மூன்று மாதவிடாய் காலம் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.

அந்த மூன்று மாதங்களுக்குள் இருவரும் பிரிவின் அருமையை உணர்ந்து, தவறைத் திருத்திக் கொண்டு சேர விரும்பினால், புதிய திருமணமோ சடங்குகளோ ஏதுமின்றி மீண்டும் இணைந்து கொள்ளலாம். மூன்று மாதங்கள் முடிந்த பின்னரும் கூட, இருவரும் விரும்பினால் புதிய மஹர் கொடுத்து முறையாக மீண்டும் திருமணம் செய்து வாழ முடியும். அவ்வாறு சேர்ந்து வாழ்ந்த பிறகும் பிரச்சனை ஏற்பட்டு இரண்டாவது முறையாக விவாகரத்து நிகழ்ந்தாலும், இதே போன்று மூன்று மாத கால அவகாசமும், மீண்டும் சேர்ந்து வாழும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

உலக சட்டங்கள் விவாகரத்து என்று வந்தால் உடனே உறவை ஒரேயடியாக வெட்டி முறித்து விடுகின்றன. ஆனால் இஸ்லாம், மனிதனின் கோபமும் அவசரமும் தணிந்து, பிரிவை உணர்ந்து மீண்டும் இணைந்து வாழ்வதற்கு இரண்டு முறை வாய்ப்பளிக்கிறது. மூன்றாவது முறையாகவும் விவாகரத்து செய்தால் மட்டுமே மீண்டும் சேர முடியாது என்ற விதியை வைக்கிறது. இதையே முத்தலாக் என்று தவறாகச் சித்தரிக்கிறார்கள்.

நீதிமன்றங்களுக்குச் சென்று பணத்தையும் வாழ்க்கையையும் வீணடிக்காமல், ஜமாஅத்தின் முன்னிலையிலேயே சுமுகமாகப் பிரிவதற்கும், திருந்தி மீண்டும் வாழ்வதற்கும் இஸ்லாம் அழகிய வழியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, விவாகரத்து செய்த பிறகும் அந்த மூன்று மாதவிடாய் காலம் வரை மிக முக்கியமான நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கிறது.

விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை கணவன் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது; அவளும் வெளியேறக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. விவாகரத்துக்குப் பிறகும் இத்தாவுடைய மூன்று மாத காலத்திற்கு இருவரும் ஒரே வீட்டில் இருக்கும்போது, ஒருவரையொருவர் பார்த்துப் பழகி, பிரிவின் வலியை உணர்ந்து, மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் இணைந்து கொள்வதற்கு இது வழியமைக்கிறது. அவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தக்கூடும் என்பதற்காகவே இந்த அவகாசம் வழங்கப்படுகிறது. விவாகரத்து செய்த பிறகும் சேர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் இத்தகைய சட்டத்தை உலகில் வேறு எந்த மார்க்கத்திலும் காண முடியாது.

விவாகரத்து செய்த பெண்ணை நடத்தை கெட்டவள் என்று உலக மதங்கள் கூறிவந்த காலத்தில், அவள் நடத்தை கெட்டவள் அல்ல, தன் உரிமைக்காகப் பிரிந்து வாழ்கிறாள் என்று பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தெளிவுபடுத்தியது. விபச்சாரம் செய்வதே ஒழுக்கக்கேடே தவிர, ஒத்து வராத கணவனைப் பிரிந்து மற்றொரு திருமணம் செய்வது ஒழுக்கக்கேடு அல்ல. ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ வாழ்நாள் முழுவதும் ஒரே வாழ்க்கைதான், எப்பாடு பட்டாவது அவளோடுதான் வாழ்ந்து தீர வேண்டும் என்று யாரையும் நிர்ப்பந்திக்காமல், இரு தரப்பையும் சமநிலையில் வைத்து இஸ்லாம் வழிகாட்டுகிறது.

நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுவதற்காகப் பல வருடங்கள் அலைந்து, திருமணத்தை விட விவாகரத்துக்கே பல மடங்கு பணத்தை செலவழித்து, நிம்மதியும் இல்லற சுகமும் இன்றி மக்கள் தவிப்பதை இன்று பார்க்கிறோம். இத்தகைய மன உளைச்சல்களும் அலைக்கழிப்புகளும் இன்றி, சுமுகமாகப் பிரிந்து கொள்வதற்கும், அதே நேரத்தில் மூன்று வாய்ப்புகளை வழங்கி மீண்டும் சேர்ந்து கொள்வதற்கும் ஆண்களுக்கு இஸ்லாம் எளிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதேபோன்று பெண்களுக்கும் கணவனைப் பிடிக்கவில்லை என்றால், ஜமாஅத்தில் முறையிட்டு விவாகரத்து பெற்றுக்கொள்ளும் குலா உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு விவாகரத்து பெற்ற பெண், ஒரு மாத இத்தா காலத்திற்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனைப் பிடிக்காத நிலையிலும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போது, அது குடும்பச் சீரழிவுக்கும், தகாத உறவுகளுக்கும், கொலை போன்ற குற்றங்களுக்கும் வழிவகுத்து விடுகிறது. விவாகரத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கத் தவறினால் சமூகத்தில் ஒழுக்கக்கேடே மிஞ்சும்.

விவாகரத்து செய்யும்போதும் கணவன் தன் வசதிக்கேற்ப, பெண்ணிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஒரு தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மார்க்கம் கூறுகிறது. மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பளித்து, விவாகரத்தை எளிதாக்கி, ஒழுக்கத்தையும் மனித மாண்பையும் பாதுகாக்கும் இஸ்லாத்தின் இந்த விவாகரத்துச் சட்டம் எக்காலத்திற்கும் பொருத்தமான, காலத்தை வென்ற சட்டமாகும்.

மனித இயல்பை முழுமையாக உணர்ந்து, ஆணுக்கும் பெண்ணுக்கும் சுமுகமான முறையில் தீர்வும் மறுவாழ்வும் வழங்கும் இஸ்லாமிய விவாகரத்துச் சட்டமே உலகிற்கு மிகச் சிறந்த வழிகாட்டலாகும்.