07) மாதவிடாய் பெண்கள்
இஸ்லாத்தின் கொள்கைக் கோட்பாடுகள் எல்லாக் காலத்திற்கும் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெண்கள் குறித்த விஷயங்களில் உலகத்தின் பார்வையும் இஸ்லாத்தின் பார்வையும் என்ன என்பதை அறிவியல் மற்றும் தர்க்க ரீதியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஆகும்.
ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கிற சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டுமே மாதவிடாய் ஏற்படுகிறது. மதங்கள் யாவும் இறைவனின் பெயரால் சொல்லப்படும்போது, மாதவிடாய் பற்றிய சரியான புரிதல் அவற்றுக்கு இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மதங்களிலும் சமுதாயங்களிலும் மாதவிடாய் ஏற்படும் அந்த ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பெண்கள் தீட்டாகக் கருதப்படுகிறார்கள். அவர்களை வீட்டின் ஓர் உறுப்பினராகக்கூடக் கருதாமல் வராந்தாவிலோ புழக்கடையிலோ ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்கள் எந்தப் பாத்திரத்தையும் தொடக்கூடாது, சமைக்கக்கூடாது, காய்கறி நறுக்கக்கூடாது, வீட்டு வேலைகள் செய்யக்கூடாது, யாரையும் தொடக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவர்கள் தொட்ட பொருள் தீட்டாகிவிடும் என்றும், அதைத் தொடுபவனும் தீட்டாகி குளிக்க வேண்டும் என்றும் கூறி மனித குலத்தின் ஓர் அங்கமான பெண்களை இழிவான படைப்பாக ஒதுக்கி வைக்கின்றனர்.
மனித இனம் உருவாவதற்கான ஓர் உன்னதமான நோக்கத்திற்காகவே இந்த மாதவிடாய் ஏற்படுகிறது என்பதை உணராமல், அவர்களைப் படைப்பால் இழிந்தவர்களாகக் காட்டி ஒதுக்கி வைத்த கொடுமையை உலகம் முழுவதும் பார்க்கிறோம். சமீப காலத்தில் மாதவிடாய்க்கான பாதுகாப்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே பெண்கள் இயல்பாகப் பணிகளில் ஈடுபட முடிகிறது. எனினும் மதக் கோட்பாடுகள் அவர்களைத் தீட்டுப்பட்டவர்களாகவே சித்தரிக்கின்றன.
ஆனால் இஸ்லாம் இதனை ஓர் இயல்பான நிகழ்வாக அணுகுகிறது. ஹஜ்ஜின் போது தம் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்ட சமயத்தில், இது கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல, ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் எழுதிய ஒரு விதி என்று கூறி, ஹாஜிகள் செய்கின்ற மற்ற எல்லாக் காரியங்களையும் நீயும் செய்; கஅபாவை மட்டும் தவாப் செய்யாதே என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள். இது பெண்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரண நிகழ்வு என்ற பார்வையை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் முன்வைத்தார்கள்.
فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ
இது ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் விதித்த ஒரு விதி.
(புகாரி: 294) ➚
கடவுளின் பெயரால் தத்துவங்களைச் சொல்லும் மதங்களுக்குப் பெண்களுக்கு மாதவிடாய் எதற்காக ஏற்படுகிறது என்று தெரியாதா? மாதவிடாய் ஏற்பட்ட காரணத்தினால் அவர்கள் கையால் தொட்டதெல்லாம் எப்படித் தீட்டாகும்? ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியிடம் ஒரு பாயை எடுத்து வருமாறு கூறினார்கள். தமக்கு மாதவிடாய் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியபோது, உன் கையிலா மாதவிடாய் இருக்கிறது, போய் எடுத்து வா என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெண்களை இவ்வாறு தீட்டு என்று ஒதுக்கி வைத்தால், ஆண் பெண் என்ற இரு படைப்புகளில் பெண் கேவலமான படைப்பு என்ற தவறான எண்ணமே ஏற்படும். யூத, கிறித்தவ, இந்து சமயங்கள் உட்பட பல்வேறு மதக் கோட்பாடுகளிலும் மாதவிடாய் வந்துவிட்டால் பெண்களை ஒரு மனிதப் பிறவியாகக் கூடப் பார்க்காமல் இழிவுபடுத்துகிறார்கள்.
உண்மையில் மாதவிடாய் என்பது கேவலமானதோ அருவருப்பானதோ அல்ல. மனித குலத்தைச் சேர்ந்த பெண்ணினத்திற்கு மட்டுமே மாதவிடாய் ஏற்படுகிறது; மற்ற எந்த விலங்கினங்களுக்கும் இது ஏற்படுவதில்லை. மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் தடிமனான தோலைக் கொண்டிருப்பதால் அவற்றின் கருப்பையில் இயல்பாக இயங்க முடிகிறது. மனிதன் மென்மையான தோலைக் கொண்டிருப்பதால், தாயின் கர்ப்பப்பையில் உருவாகும் கரு பஞ்சு போன்ற மெத்தையில் பாதுகாப்பாக வளர வேண்டும் என்பதற்காகக் கருப்பையின் உட்சுவரில் இறைவன் ஒரு படிமப் பாதுகாப்புச் சுவரை உருவாக்குகிறான். ஒரு மாதத்தில் கரு உண்டாகவில்லை என்றால், அந்தத் தடுப்புச் சுவர் கரைந்து இரத்தமாக வெளியேறுகிறது. இது மனிதக் குழந்தை நல்ல முறையில் உருவாகி வளர வேண்டும் என்பதற்காக இறைவன் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடே அன்றி, அசிங்கமோ அருவருப்போ அல்ல. இதை உணர்ந்தால் மாதவிடாயைத் தீட்டு என்று யாரும் ஒதுக்க மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் பெண்களை மாதவிடாய் காலத்தில் மிகவும் அருவருக்கத்தக்கவர்களாக நடத்தி வந்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய் சம்பந்தமான கருத்து என்னவென்று கேட்டபோது, அதற்கான பதிலை இறைவன் திருக்குர்ஆனில் அருளினான். மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஒரு தொல்லை தரக்கூடிய நிலை; எனவே அக்காலகட்டத்தில் அவர்களோடு உடலுறவு கொள்வதை விட்டு விலகியிருங்கள் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.
عَنِ ٱلْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَٱعْتَزِلُوا۟ ٱلنِّسَآءَ فِى ٱلْمَحِيضِ
மாதவிடாய் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகியிருங்கள்.
(அல்குர்ஆன்: 2:222)➚
இங்கு இஸ்லாம் தடுத்த ஒரே விஷயம் உடலுறவு மட்டுமே. இரத்தப்போக்கு இருக்கும் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதாலும், ஏற்கனவே உடல்ரீதியான தொந்தரவில் இருக்கும் பெண்களுக்குக் கூடுதல் சிரமம் கொடுக்கக் கூடாது என்பதாலுமே அது தவிர்க்கச் சொல்லப்பட்டது. மற்றபடி அவர்களோடு ஒன்றாகப் படுப்பது, அணைத்துக் கொள்வது, ஒன்றாக உணவருந்துவது போன்ற எதற்கும் இஸ்லாத்தில் தடை இல்லை. நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள், தமக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையிலும் நபி (ஸல்) அவர்களுக்குத் தலைவாரி விட்டதாகக் கூறுகிறார்கள் (புகாரி: 295) ➚. மாதவிடாயின் போது மனைவியைத் தீட்டு என்று ஒதுக்காமல், உடலுறவைத் தவிர்த்து மற்றபடி எப்போதும் போல வாழ்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதித்து வழிகாட்டியுள்ளார்கள்.
மாதவிடாய் காலத்திலும் பெண்கள் குர்ஆனை ஓதலாம்; அதற்கு எந்தத் தடையுமில்லை. ஆன்மீக அடிப்படையில் அவர்கள் செய்யக்கூடாத ஒன்று தொழுகை மட்டுமே. தொழுகைக்கு உடல் தூய்மை அவசியம். உடலில் இருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் தூய்மையற்ற நிலையில் தொழ முடியாது என்பதால் அந்நாட்களில் தொழ வேண்டாம் என்றும், விடுபட்ட அத்தொழுகைகளை அவர்கள் மீண்டும் தொழ வேண்டியதில்லை என்றும் இஸ்லாம் கூறுகிறது. உடலுக்குள் அசுத்தம் இருப்பது மனித இயல்பு என்றாலும், அது உடலில் இருந்து வெளியேறும் போதே தொழுகைக்கான தூய்மை பாதிக்கப்படுகிறது என்ற தர்க்கரீதியான காரணத்தாலேயே இந்நிலை சொல்லப்படுகிறது. அதேபோல ரமலான் மாதத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் அந்நாட்களில் நோன்பு வைக்கத் தேவையில்லை; விடுபட்ட நோன்புகளைப் பின்னர் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாம். புனித ஹஜ் பயணத்தின் போதும் கஅபாவைத் தவாப் செய்வதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லாக் காரியங்களையும் செய்யலாம்.
அரஃபா, மினா போன்ற இடங்களுக்குச் செல்வது, ஹாஜிகள் செய்கின்ற அனைத்துக் காரியங்களையும் செய்வது போன்ற அனைத்தையும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் செய்யலாம். கஅபாவை தவாஃப் செய்வதை மாத்திரம் மாதவிடாய் நிற்கும் வரை தள்ளிப்போட்டு, அதன் பின்னர் நிறைவேற்ற வேண்டும். தொழுகை, நோன்பு மற்றும் கஅபாவை தவாஃப் செய்தல் ஆகியவற்றைத் தவிர ஆன்மீக ரீதியாக பெண்களுக்கு இஸ்லாத்தில் வேறு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நேரத்தில், நபி (ஸல்) அவர்கள் தம் மடியில் படுத்துக் கொண்டு குர்ஆனை ஓதுவார்கள் என்று கூறுகிறார்கள். மாதவிடாய் காலத்தில் புனித நூல்களைத் தொடக்கூடாது, வீட்டுப் பாத்திரங்களைத் தொடக்கூடாது என்று உலகமே பெண்களை ஒதுக்கி வைத்திருந்த காலத்தில், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியின் மடியில் சாய்ந்து குர்ஆனை ஓதியிருக்கிறார்கள். மாதவிடாய் என்பது கணவன் மனைவியின் மடியில் படுத்துக் கொள்வதற்கோ, குர்ஆனை ஓதுவதற்கோ தடையாக இருக்காது என்பதை இது காட்டுகிறது.
அதேபோன்று, நபி (ஸல்) அவர்களின் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் அவர் படுக்கையை விட்டு இறங்கிச் சென்றபோது, ஆடைகளை முறைப்படி அணிந்து கொள்ளுமாறு கூறி, அதே போர்வையில் தம் மனைவியைத் தம்முடன் படுக்க வைத்துக்கொண்டார்கள். உடலுறவைத் தவிர்த்து, மாதவிடாய் நேரத்திலும் மனைவியை அணைத்துக் கொள்ளலாம்; ஒரே படுக்கையில் படுத்துக் கொள்ளலாம்; மற்ற எல்லா இன்பங்களையும் அனுபவிக்கலாம் என்பதைப் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் செயல்படுத்திக் காட்டியது.
பெருநாள் தொழுகையின்போதும் கூட மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தங்களை சமூகம் ஒதுக்கிவிட்டதாகக் கருதிவிடக்கூடாது என்பதற்காக, அவர்களையும் பெருநாள் திடலுக்கு வந்துவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள். தொழுகை நடக்கும் அந்தச் சில நிமிடங்கள் மட்டும் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருந்துவிட்டு, உரை கேட்பது, மகிழ்ச்சியைப் பகிர்வது போன்றவற்றில் அனைவரோடும் இணைந்து பங்கெடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியது. மாதவிடாய் பெண்களை அருவருப்பாகப் பார்த்த உலகிற்கு மத்தியில் இது மாபெரும் புரட்சிகரமான வழிகாட்டலாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது ஒரு பானத்தை அருந்திவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொடுக்கும்போது, தாம் வாய் வைத்த அதே இடத்தில் நபி (ஸல்) அவர்களும் வாய் வைத்து அருந்துவார்கள் என்று கூறுகிறார்கள். அவ்வாறே, இறைச்சி உள்ள எலும்பைத் தாம் கடித்துவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொடுக்கும்போது, தாம் கடித்த அதே இடத்தில் நபி (ஸல்) அவர்களும் கடித்துச் சாப்பிடுவார்கள். மாதவிடாய் ஏற்பட்ட காரணத்தினால் பெண்கள் இழிந்தவர்களோ, தீட்டானவர்களோ அல்லர்; உடலுறவைத் தவிர மற்ற அனைத்திலும் சமமான மனிதர்களே என்பதை நபி (ஸல்) அவர்கள் தம்முடைய குடும்ப வாழ்வின் மூலம் உலகிற்கு உணர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒளிவுமறைவும் இல்லாததால்தான், அவர்களின் மனைவியர் இத்தகைய நிகழ்வுகளை உலகிற்கு வெளிப்படையாக அறிவித்தார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம் சமுதாயத்தில் மாதவிடாய் பெண்கள் இழிவாகக் கருதப்படுவதில்லை.
மற்ற பல மதங்களின் கோட்பாடுகள் பெண்களைத் தொட்டாலே தீட்டு என்று அவர்களை ஒதுக்கி வைத்திருந்த சூழலில், இஸ்லாம் மட்டுமே இந்தச் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியது. மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு சிறிய உடல் உபாதை மட்டுமே. அந்த நேரத்தில் உடலுறவு கொள்வது தவிர மற்றபடி அவர்களை இழிவுபடுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பெண்கள் சமைக்கலாம், அவர்களோடு சேர்ந்து உண்ணலாம், ஒன்றாகப் பயணிக்கலாம், எல்லா மகிழ்ச்சிகளையும் அனுபவிக்கலாம்.
தொழுகை, நோன்பு, தவாஃப் மற்றும் உடலுறவு ஆகியவற்றைத் தவிர்த்து, மற்றபடி பெண்களை முழுமையாக கண்ணியப்படுத்த வேண்டும் என்று எழுதப் படிக்கத் தெரியாத நபி (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பது, இது இறைவனுடைய மார்க்கம் என்பதையே நிரூபிக்கிறது.
உலக வரலாற்றில் இத்தகையதொரு புரட்சியை வேறு எவரும் நிகழ்த்தியதில்லை; இஸ்லாத்தின் வழிகாட்டுதல் காலத்தை வென்று நிற்கிறது. இன்றைக்குப் பிற மதங்களைச் சார்ந்தவர்கள் மாதவிடாய் காலப் பெண்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தாமல் சமமாக நடத்துகிறார்கள் என்றால், அது தங்கள் மதக் கோட்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டுப் பெற்ற உரிமையாகும். ஆனால் முஸ்லிம் பெண்களோ பதினான்கு நூற்றாண்டுகளாகத் தங்கள் மார்க்கத்தின் கட்டளைப்படியே, இஸ்லாத்திற்குள்ளேயே இருந்து இந்த உரிமையைத் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறார்கள்.
இவ்விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு நுணுக்கமாக வழிகாட்டினார்கள் என்றால், இல்லறத் தேவைகள் பூர்த்தியாகாத ஆத்திரத்தில் ஒரு கணவன் தன் மனைவியை வெறுத்து அவசரப்பட்டு விவாகரத்து செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இப்னு உமர் அவர்கள் தம் மனைவி மாதவிடாய் நிலையில் இருந்தபோது விவாகரத்து செய்தார். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள் கண்டித்து, மாதவிடாய் காலத்தில் செய்யும் விவாகரத்து செல்லாது என்றும், அவளை உடனே திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவளது மாதவிடாய் காலம் முடிந்து அவள் தூய்மை அடையும் வரை காத்திருக்க வேண்டும்; அதன் பிறகு மனைவியின் நிலையும் கணவனின் மனநிலையும் இயல்புக்குத் திரும்பும் என்பதால், அவசரப்பட்டுப் பெண்களை ஒதுக்கிவிடக் கூடாது என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் இத்தகைய சட்டத்தை வகுத்தார்கள்.
இன்றைக்குப் பெண்ணுரிமை பேசுபவர்கள் மாதவிடாய் விஷயத்தில் பெற்றிருக்கும் சுதந்திரம் என்பது, தங்களை இழிவுபடுத்திய மதச் சித்தாந்தங்களுக்கு எதிராகப் புரட்சி செய்து உடைத்து அடைந்ததாகும். ஆனால் முஸ்லிம் பெண்களுக்கோ இந்தச் சுதந்திரத்தை இஸ்லாமும் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையுமே வழங்கின. தம் மனைவி மாதவிடாயாக இருக்கும்போது, அவர் வாய் வைத்து உண்ட அதே இடத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்டிருக்கிறார்கள்; மனைவியின் மடியில் தலைவைத்து உறங்கியிருக்கிறார்கள்; குர்ஆன் ஓதியிருக்கிறார்கள்; அவரிடம் தலைவாரிக் கொண்டிருக்கிறார்கள்.
மாதவிடாய் ஏற்பட்டதால் ஒரு பெண்ணின் உடலோ, ஆடைகளோ, அவள் சமைக்கும் உணவோ, தொடும் பாத்திரங்களோ தீட்டாகிவிடுவதாக இஸ்லாம் ஒருபோதும் கருதவில்லை. மாறாக, அதனைப் பெண்களுக்கு ஏற்படும் أَذًى (ஒரு உபாதை) என்று மட்டுமே அடையாளப்படுத்துகிறது. பெண்களின் இந்த இயற்கை நிலையைத் தீட்டாகக் கருதி ஒதுக்கிய மனிதக் கோட்பாடுகள் தோற்றுவிட்ட நிலையில், அவர்களைக் கண்ணியப்படுத்திய இஸ்லாத்தின் வழிகாட்டலே இன்றளவும் காலத்தை வென்று நிற்கிறது.
மாதவிடாய் என்பது ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய தீட்டல்ல, பெண்களுக்கு ஏற்படும் ஓர் இயற்கை உபாதையே என்பதை உணர்த்தி, பெண்களின் சுயமரியாதையையும் உரிமைகளையும் நிலைநாட்டியதில் இஸ்லாத்தின் சட்டங்களே காலத்தை வென்று நிற்கின்றன.