05) பெண்கள் போகப்பொருளாகப் பார்க்கப்படும் பார்வை
இஸ்லாத்தின் சட்டங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் காலத்தை வென்று எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக, பெண்களைப் பற்றி இஸ்லாம் முன்வைத்த நிலைப்பாட்டையும், அன்று உலகில் நிலவிய நிலைப்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாத்தின் வழிகாட்டலே இன்றும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
(அல்குர்ஆன்: 108:1-3)➚
பெண்களைப் பொறுத்தவரை ஆண்களின் பார்வை எவ்வாறு இருக்கிறது என்றால், அவர்களுக்கு ஒரு திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்கள். ஆனால் கணவன் இறந்துவிட்டாலோ அல்லது விவாகரத்து செய்துவிட்டாலோ அந்தப் பெண்ணுக்கு மறுமணத்தை மறுக்கிறார்கள். மறுமணத்தை மறுத்துவிட்டு, அவர்களின் உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெண்களை, அவர்கள் இளம்பெண்களாக இருந்தாலும் சரி, விதவைகளாக இருந்தாலும் சரி, சின்ன வீடாக வைத்துக்கொள்வதும் விபச்சாரத்திற்குப் பயன்படுத்துவதும் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பெண்களின் உரிமைகளைப் பற்றிப் பேசக்கூடிய இந்த நவீன காலத்தில் கூட, மனைவி இருக்கும் ஒருவன் பிற பெண்களோடு தவறான உறவு கொள்வதையோ, விபச்சார விடுதிக்குச் செல்வதையோ உலகத்தில் எந்தச் சட்டமும் தடுத்து நிறுத்தவில்லை. மனைவிக்குத் துரோகம் இழைப்பதை ஒரு குற்றமாகக் கருதாமல், தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதித்து வைத்திருக்கிறார்கள்.
மேலும், ஒரு பெண்ணுக்கு மனைவியென்ற அந்தஸ்தையும் சட்டபூர்வ உரிமைகளையும் தராமல், சின்ன வீடாக வைத்துக்கொண்டு வாழ்வதையும் சட்டங்கள் தடுப்பதில்லை. தன் கணவர் மற்றொரு பெண்ணோடு வாழ்கிறார் என்று மனைவியே நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டாலும், அதைத் தடுக்க முடியாது என்றும் அது குற்றமல்ல என்றும் கூறி வழக்குகளைத் தள்ளுபடி செய்து விடுகிறார்கள். இதன்மூலம், மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணை அனுபவிப்பது சட்டத்தின்படி குற்றமில்லை என்ற நிலையே நீடிக்கிறது.
அதுமட்டுமின்றி, பெண்களைக் கொண்டு விபச்சார விடுதிகளை அமைத்து, அதை ஒரு தொழிலாக அங்கீகரித்து, வரி வசூலித்துக்கொண்டு சிவப்பு விளக்குப் பகுதிகளை உருவாக்கும் அவலமும் நடக்கிறது. மேலை நாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் உரிமம் பெற்று விபச்சார விடுதிகள் சட்டப்பூர்வமாகவே இயங்குகின்றன. அங்கே இருக்கும் பெண்களை ஒரு போகப் பொருளாகக் கருதுவதால்தான் விபச்சார விடுதிகளுக்கு அனுமதியளிக்க முடிகிறது. பெண்களுக்கு எந்தச் சட்ட உரிமையும் கொடுக்காமல், ஆண்களின் சுகபோகத்திற்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் இழிவான நிலைதான் காணப்படுகிறது.
பெண்ணுரிமை பேசும் அமைப்புகள் கூட, மனைவி இருக்கும்போது பிற பெண்களோடு உறவு கொள்வதையோ, சின்ன வீடு வைத்திருப்பதையோ கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி களத்தில் இறங்குவதில்லை.
நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கையே இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அரசு ஊழியர் ஒருவர் மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணோடும் வாழ்ந்து வந்தார். அவர் பணியில் இருக்கும்போதே மரணித்துவிட்ட காரணத்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கல்வித் தகுதி இல்லாததால் முதல் மனைவிக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. உடனே, துணைவியாக இருந்த பெண் வழக்கு தொடர்ந்து, தனக்கு அந்த வேலை வேண்டும் என்று கோரினார். நீதிமன்றமும், அப்பெண் படித்திருக்கிறார் என்பதற்காக அரசு வேலையை அவருக்கும், பணப்பலன்களை முதல் மனைவிக்கும் வழங்கித் தீர்ப்பளித்தது.
ஒருவனுக்கு ஒருத்தி என்றும், பலதார மணம் தவறு என்றும் சட்டம் பேசும் நாட்டில், திருமணம் செய்யாமல் வைப்பாட்டியாக வைத்துக்கொள்வது மட்டும் குற்றமில்லாமல் போகிறது. திருமணம் செய்தால் பலதார மணம் என்று குற்றம் காண்பவர்கள், திருமணம் செய்யாமல் பெண்களைத் துணையாக வைத்துக்கொள்வதை அங்கீகரிக்கிறார்கள். இந்தத் தீர்ப்பை மகளிர் அமைப்புகளும் மகளிர் ஆணையமும் வரவேற்று அறிக்கை வெளியிடுகின்றன. ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிமை கிடைத்துவிட்டது என்று கூறுகிறார்கள். அப்படியானால், பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தியதற்கு உரிய தண்டனை பெற்றுத் தந்து முதல் மனைவியைப் பாதுகாக்காமல், இத்தகைய முறைகேடான உறவை அவர்களே வரவேற்கிறார்கள். பெண்களை ஆண்களின் இச்சையைத் தீர்க்கும் பொருளாகவே பார்க்கும் பார்வைதான் இதற்கு அடிப்படைக் காரணம்.
அன்று நாடகங்கள் மூலமாக பொழுதுபோக்கு நடத்திய காலத்திலிருந்தே, இன்று திரைப்படங்கள் வரை பெண்களை எவ்வாறு சித்தரிக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆடவிட்டு, ஆபாச சைகைகள் செய்ய வைத்து, ஆண்கள் ரசிக்கும்படியே காட்சிப்படுத்துகிறார்கள். கணவனுக்கு முன்னால் மட்டுமே அணிய வேண்டிய ஆடைகளோடு பொதுவெளியில் ஆண்களைச் சந்தோஷப்படுத்தும் காட்சிப் பொருளாகப் பெண்கள் மாற்றப்படுகிறார்கள். பெண்களை இப்படி இழிவுபடுத்துவதற்கு எதிராக எந்தப் பெண்ணுரிமைப் போராளியும் போர்க்குரல் எழுப்புவதில்லை. தணிக்கைக் குழுவில் பெண்களே உறுப்பினர்களாக இருக்கும்போதும், பெண்களே அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் பிரதமராகவும் இருந்தபோதும் கூட இந்தச் சீரழிவை அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுவெளியில் பெண்கள் அவயவங்களை அசைத்து ஆடுவதும், அதை ஆண்கள் கூடி விசிலடித்து ரசிப்பதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அவமானம் என்பதை உணர்ந்து, இதற்கு எதிராக எந்தச் சட்டமும் கொண்டுவரப்படவில்லை; எவரும் குரல் எழுப்பவும் இல்லை.
பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் சீருடைகளை எடுத்துக் கொண்டால், மாணவர்களுக்கு முழுக்கால் சட்டையோ அல்லது அரைக்கால் சட்டையோ வழங்கப்படுகிறது. ஆனால் மாணவிகளுக்கோ முழங்காலுக்கு மேல் உள்ள பகுதிகள் வெளியே தெரியும் வகையில் குட்டைப் பாவாடைகள் அணிவிக்கப்பட்டு பொது இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆண்களைப் போன்று அவர்களுக்கும் முழுக்கால் சட்டை வழங்கப்பட்டால் எந்தக் கவர்ச்சியும் வெளிப்படப் போவதில்லை. ஆனால், காற்றில் ஆடை விலகினாலோ அல்லது தவறான எண்ணம் கொண்டவர்கள் நோக்கினாலோ வக்கிரப் பார்வைக்கு ஆளாகும் விதமாகவே பெண்களுக்கு ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன.
ஆண்கள் தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு வருவதால் அவர்களுடைய உரிமை பறிக்கப்பட்டு விட்டதாக யாரும் கருதுவதில்லை. பெண்களும் ஆண்களைப் போன்றாவது, சொல்லப்போனால் ஆண்களை விடவும் அதிகமாகத் தங்களை மறைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆண்களைப் போன்றாவது தங்கள் உடலை மறைக்காவிட்டால், பெண்களைக் கண்டவரும் பார்த்து ரசிப்பதற்கான காட்சிப்பொருளாக ஆக்குவது மட்டுமே நோக்கமாகி விடுகிறது. பிறர் கண்களுக்கு விருந்தாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற தவறான பாடமே இதன் மூலம் பெண்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
ஒரு பெண் தன் கணவனுக்கு முன்னால் கவர்ச்சியாக இருப்பதும், அவளுடைய அழகைக் கணவன் ரசிப்பதும் அவளுக்குரிய கண்ணியம். ஆனால், கணவன் ரசிக்க வேண்டிய அழகை இந்த உலகம் முழுமைக்கும் வெளிக்காட்ட வேண்டிய அவசியம் என்ன? பெண்களை வெறும் காட்சிப்பொருளாக மாற்றி, ஆடவர்கள் தங்களை விநோதமான வக்கிரப் பார்வையோடு நோக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு அவர்களைத் தயார்படுத்தும் விதமாகவே கல்விக்கூடங்களின் ஆடை வடிவமைப்புகளும் அமைந்துள்ளன.
இதன் விபரீதத்தை உணர்த்தும் ஒரு நிகழ்வையும் நாம் பார்க்க முடிகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆண் மாணவர்கள் பள்ளி ஆசிரியைகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. பெண் ஆசிரியைகள் புடவை அணிந்து வரும்போது வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகள் தெரிவதைக் கவனித்த மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். இதனால் பல சிக்கல்கள் எழுந்து, சில விபரீதங்கள் நிகழ்ந்த பின்னர், பெண் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது சேலைக்கு மேல் முழுமையாக ஓவர்கோட் அணிந்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அவசர உத்தரவு பிறப்பித்தது. இதில் ஆபத்து இருக்கிறது என்பதை உலகம் உணர்ந்திருந்தாலும், இதுபோன்ற ஆடைகளை அழகு என்று கருதி அணிந்து செல்வது தங்களையே இழிவுபடுத்தும் செயல் என்பதைப் பெண்கள் உணர்வதில்லை.
வீடுகளில்கூட பெண் குழந்தைகளுக்கு ஆடை தேர்வு செய்யும்போதே இந்தத் தவறு தொடங்குகிறது. ஆண் குழந்தைகளை முழுமையான ஆடை அணியப் பழக்கும் பெற்றோர், பெண் குழந்தைகளுக்கு மட்டும் முழங்காலுக்கு மேல் உள்ள சிறிய ஆடைகளை அணிவித்து, தங்களுடைய உடலும் அங்கங்களும் பிறர் பார்ப்பதற்குரியவை என்ற தவறான எண்ணத்தைச் சிறுவயதிலேயே அவர்கள் மனதில் விதைத்து விடுகிறார்கள்.
விளையாட்டுத் துறையிலும் இந்த வேறுபாட்டை நாம் காணலாம். டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஆண்கள் முக்கால் சட்டை அணிந்து விளையாடும் வேளையில், பெண்களுக்கு மட்டும் காற்றில் பறந்தால் உள்ளாடைகள் தெரியும் வகையிலான மிகச் சிறிய ஆடைகள் தீர்மானிக்கப்படுகின்றன. அவர்கள் குதித்து விளையாடும்போது ஆண்கள் அவர்களை ரசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. ஆண்களுக்கு இணையான ஆடைகளையாவது பெண்களுக்கு வழங்கியிருக்க வேண்டாமா? பெண்களை அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய போகப் பொருளாக மாற்றும் இந்தச் சீரழிவு அனைத்துத் துறைகளிலும் பரவிக் கிடக்கிறது.
பெண்களை வெறும் போகப் பொருளாக நடத்தும் இத்தகைய இழிவான சிந்தனைகளுக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறது. ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர்த்து இன்னொரு பெண்ணை நாடுவதைத் தடுக்கும் ஆற்றல் எந்த நாட்டுச் சட்டத்திற்கும் இல்லை. சட்டம் போட்டாலும் ஆண்கள் பல பெண்களை நாடுவதை முழுமையாகத் தடுத்துவிட முடியாது என்பதை உணர்ந்த இஸ்லாம், அதற்கு ஒரு ஒழுக்கமான தீர்வை முன்வைக்கிறது. ஒருவன் மற்றொரு பெண்ணை அடைவதாக இருந்தால், அவளை மறைமுகமாக வைத்துக்கொள்ளாமல் சட்டப்பூர்வமாக மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
அவ்வாறு இரண்டாவதாக இணையும் பெண்ணுக்கும் முதல் மனைவியைப் போன்றே அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். கணவனின் சொத்தில் முதல் மனைவிக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை இரண்டாம் மனைவிக்கும் உண்டு; இருவரின் பிள்ளைகளுக்கும் சமமான சொத்துரிமை உண்டு என்று இஸ்லாம் வரையறுக்கிறது. ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்துக் கொண்டால் எந்தப் பொறுப்பும் சுமக்கத் தேவையில்லை, பணம் கொடுத்தால் போதும் என்ற உலக நடைமுறைதான் பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தும் நிலையை அதிகரிக்கிறது.
இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கிறது என்று குறை கூறுவோர், உலகில் ஆண்கள் பல பெண்களோடு தகாத முறையில் வாழ்ந்து வருவதைப் பெரிதாகக் கருதுவதில்லை. மேடைகளில் முற்போக்குப் பேசும் எத்தனையோ தலைவர்களும் அரசியல்வாதிகளும் சட்டத்திற்குப் புறம்பாகப் பல துணைவிகளைத் தங்களோடு வைத்துள்ளனர். அவர்களை எந்தச் சட்டத்தினாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் இஸ்லாமோ, இன்னொரு பெண்ணை நாடுவதாக இருந்தால் அவளை முறைப்படி மனைவியாக ஏற்றுக்கொண்டு, ஊரறிய அவளுக்கான அனைத்துப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. அப்படிப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டும் என்று வரும்போது, தவறான வழியில் பெண்களை நாடும் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர் அந்த எண்ணத்திலிருந்தே பின்வாங்கி விடுவார்கள். எனவே, ஒரு பெண்ணோடு தாம்பத்திய உறவு கொள்வதாக இருந்தால், அவளை மனைவியாக்கிக் கொண்டு அவளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்காமல் அதைச் செய்யக் கூடாது என்று கூறி பெண்ணின் கண்ணியத்தை இஸ்லாம் பாதுகாக்கிறது.
விமர்சனங்களுக்கு அஞ்சாமல் உலகிற்குத் தன் சட்டங்களை உறுதியாக முன்வைக்கும் மார்க்கம் இஸ்லாம். திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட முறையற்ற உறவுகளைக் கடுமையான குற்றமாக அறிவிப்பது இஸ்லாமிய சட்டம் மட்டுமே. பிற கலாச்சாரங்களிலும் இலக்கியங்களிலும் மனைவியே தன் கணவனுக்கு வைப்பாட்டியை அழைத்து வந்து விடும் விசித்திரங்கள் காணப்படுகின்றன. ஆனால், இஸ்லாத்தில் முறைப்படி மனைவியாக்கிக் கொள்ளாமல் எந்தவொரு பெண்ணையும் தீண்டுவதற்கோ, தவறாக நடப்பதற்கோ அனுமதியில்லை; மீறினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இஸ்லாமிய ஆட்சியில் விபச்சார விடுதிகளுக்கோ, பெண்களைப் போகப் பொருளாக்கும் அமைப்புகளுக்கோ இடமில்லை. விடுதிகளில் விபச்சாரம் செய்வதோ, சின்ன வீடு வைத்துக்கொள்வதோ அங்கே முற்றாகத் தடுக்கப்படும். இது குடும்பத்தோடு கண்ணியமாக வாழும் பெண்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் பாதுகாக்கும் சட்டமாகும்.
பெண்களை இழிவான செயல்களில் ஈடுபட வைத்து, அதுவே அவர்களுக்கான சுதந்திரமும் மதிப்பும் என்று தவறாக மூளைச்சலவை செய்யப்படுகிறது. பெண்களின் ஆடைக் குறைப்பைத் தங்களின் வக்கிரக் கண்களால் ஆண்கள் வேட்டையாடுவதைக் கவனித்து, சீனா போன்ற நாடுகள் கூட மினி கவுன் போன்ற ஆடைகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. ஆண்களின் பார்வை எவ்வாறு பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப சட்டங்களை அமைப்பதே பெண்களுக்கு உண்மையான கண்ணியத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் தரும். பெண்களை வெறும் ஆடற்பொருளாக நிறுத்துவது ஒருபோதும் அவர்களுக்குரிய கண்ணியமாகாது. விபச்சாரத்திற்கான வாசலை முற்றிலும் அடைத்து, திருமணத்தை மட்டுமே சட்டப்பூர்வ உறவாக அங்கீகரித்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
சூதாட்டத்தில் வீட்டையும் சொத்துக்களையும் இழந்து, இறுதியில் மனைவியையே பணயமாக வைத்துச் சூதாடிய இழிவான செயல்களைப் பெரும் தத்துவங்களாகவும் இலக்கியங்களாகவும் போற்றும் சமூகங்களை வரலாறு கண்டிருக்கிறது. பெண்களை ஓர் ஆடு, மாடு போலப் பொருளாகக் கருதும் போக்கிற்கு மத்தியில், இஸ்லாம் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாகத் தன் தூய நிலைப்பாட்டில் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. பெண்களை மேடைகளில் ஏற்றி, அவர்களின் பேச்சை விடுத்து அவர்களது உடலையே ஆண்கள் பார்க்க வைப்பதோ, அவர்களின் கண்ணியம் பேணப்படாத தொழில்களுக்கு அவர்களைத் தள்ளுவதோ பெண்களுக்குத் தரப்படும் மரியாதை அல்ல. இஸ்லாமிய நெறிகள் எங்கு முறையாகப் பின்பற்றப்படுகிறதோ, அங்கு மட்டுமே பெண்கள் உண்மையான மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுகிறார்கள்.
இஸ்லாத்தின் பலதார மணச் சட்டத்தையும் பலர் அறியாமையினால் விமர்சிக்கிறார்கள். ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சமூகச் சூழலில், பெண்களுக்கான உரிமையையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் ஒரு நடைமுறைத் தீர்வாகவே இச்சட்டம் அமைகிறது. ஆண்களின் பற்றாக்குறை ஏற்படும் போது, ஏற்கனவே திருமணமான ஒருவரை முறையாக மறுமணம் செய்துகொள்வதன் மூலம் ஒரு பெண் சட்டப்பூர்வமான மனைவி என்ற அந்தஸ்தையும், தன் உணர்வுகளுக்கான வடிகாலையும், வாழ்வுரிமையையும் பெறுகிறாள். இல்லையெனில், அப்பெண்கள் தவறான பாதைகளுக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்படுகிறது. பெண்களைப் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியாமல், மனைவியாக ஏற்று உலகிற்குப் பகிரங்கமாக அறிவித்து, வாழ்நாள் முழுவதும் பராமரிக்கும் கடமையை இஸ்லாம் ஆணின் மீது சுமத்துகிறது.
பெண்களை இழிவாகக் கருதும் சகல காரியங்களையும் தடுத்து, அதே வேளையில் அவர்களின் வாழ்வியல் தேவைகளுக்கான கண்ணியமான வழிகளைத் திறந்து வைத்துள்ள இஸ்லாமிய சட்டமே உண்மையான முற்போக்குச் சிந்தனையாகும். பெண்களின் ஆடை ஒழுக்கம் கூட அவர்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல; மாறாக, ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து அவர்களைப் பாதுகாத்து அவர்களின் கௌரவத்தை நிலைநிறுத்துவதற்கே ஆகும்.
பெண்களைப் போகப் பொருளாகக் கருதும் அனைத்துச் சீரழிவுகளையும் வேரறுத்து, திருமணத்தின் மூலமும் கண்ணியமான நெறிமுறைகளின் மூலமும் அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதே இஸ்லாத்தின் காலத்தை வென்ற சட்டமாகும்.