04) இத்தாவின் சட்டம் எதற்காக

நூல்கள்: காலத்தை வென்ற இஸ்லாம்

இஸ்லாத்தினுடைய கொள்கை, கோட்பாடு, சட்டதிட்டம், வணக்க வழிபாடு உள்ளிட்ட அனைத்துமே காலத்தைக் கடந்து நிற்கக்கூடியவை; எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக, பெண்கள் தொடர்பான இஸ்லாத்தின் சட்டங்கள் காலத்திற்குப் பொருந்தாதவை போன்றதொரு தவறான சித்தரிப்பு முன்வைக்கப்படுகிறது. ஆனால் பெண்கள் தொடர்பாக இஸ்லாம் வகுத்த சட்டங்கள் காலத்தை வென்றவையா, அல்லது முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கொண்டுவந்த சட்டங்களும் மற்ற சித்தாந்தங்களும் காலத்தை வென்றவையா என்பதை நடுநிலையோடு அணுகிப் பார்க்க வேண்டும்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
(அல்குர்ஆன்: 108:1)➚

فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
(அல்குர்ஆன்: 108:2)➚

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
(அல்குர்ஆன்: 108:3)➚

இஸ்லாம் பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்குகிறது. எனினும், மறுமணம் செய்துகொள்ளலாம் என்று பொத்தாம் பொதுவாகச் சட்டம் இயற்றினால் அது நீதியான சட்டமாக இருக்காது. மனிதர்கள் என்ற அடிப்படையில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்றாலும், உடற்கூறு ரீதியாக இருவருக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. அந்த உடற்கூறுக்குத் தகுந்தவாறு ஆணுக்குரிய முடிவையும் பெண்ணுக்குரிய முடிவையும் எடுக்க வேண்டும். இந்த உடற்கூறு ரீதியான வேறுபாட்டைக் கவனத்தில் கொண்டுதான் மறுமண உரிமை வழங்கப்பட வேண்டும்.

ஆனால் உலகத்தின் சட்டங்கள் அவ்வாறு அமையவில்லை. இன்றைக்குக் கணவன் மனைவியை விவாகரத்து செய்தாலோ, மனைவி கணவனை விவாகரத்து செய்தாலோ, அடுத்த நாளே அவள் இன்னொருவனைத் திருமணம் செய்யலாம்; அது அவளது உரிமை என்று உலகச் சட்டங்கள் கூறுகின்றன. அதேபோன்று கணவன் இறந்துவிட்டால், பழங்காலத்தில் மறுமண உரிமை மறுக்கப்பட்டிருந்தாலும், நவீன காலத்தில் கணவன் இறந்த அடுத்த நாளோ அடுத்த வாரமோ விரும்பினால் மறுமணம் செய்துகொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாம், மறுமண உரிமையை வழங்கும் அதே வேளையில், அந்த உரிமை பிறரைப் பாதித்துவிடக் கூடாது, பெண்ணின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடக் கூடாது, புதிதாக வரப்போகும் கணவனையும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி, அதற்கேற்ற விதிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது.

ஒரு கணவன் இறந்துவிட்டால், அந்த மனைவி உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. நான்கு மாதங்களும் பத்து நாட்களும் காத்திருந்து, அதற்குப் பிறகுதான் மறுமணம் செய்ய வேண்டும். அதேபோன்று கணவன் மரணிக்கும் நேரத்தில் அவள் கர்ப்பிணியாக இருந்தால், அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. உதாரணமாக, கணவன் மரணிக்கும் நேரத்தில் அவள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்து, அடுத்த நாளோ அடுத்த வாரமோ குழந்தை பெற்றுவிட்டால், அவள் காத்திருக்க வேண்டிய காலம் அவ்வளவுதான்; குழந்தை பிறந்த பிறகு அவள் மறுமணம் செய்துகொள்ளலாம். மாறாக, கணவன் இறந்த நேரத்தில் அவள் ஒரு மாதக் கருவைச் சுமந்திருந்தால், அவளுக்கு நான்கு மாதம் பத்து நாள் என்ற கணக்குக் கிடையாது; அவள் நிறைமாதக் கர்ப்பிணியாகிக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமணம் செய்யக் கூடாது.

மறுமணத்தை அனுமதித்த இஸ்லாம், விரும்பிய நேரத்தில் உடனடியாகச் செய்வதைத் தடுப்பதற்குக் காரணம் உண்டு. முந்தைய கணவனின் கருவைச் சுமந்துகொண்டு இன்னொருவனைத் திருமணம் செய்தால், அந்தக் குழந்தைக்குத் தந்தை யார் என்ற கேள்வி எழுகிறது. இறந்துபோன கணவனின் பிள்ளையை மறைத்து, புதிய கணவனின் தலையில் கட்டுவது மிகப்பெரிய மோசடியாகும். ஒருவனின் வாரிசு என்பது வளர்ப்பு, பராமரிப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பாரதூரமான உரிமைகளுடன் தொடர்புடையது. கணவன் இறந்த உடனே மறுவாரமே திருமணம் செய்து, அவள் கர்ப்பமாக இருந்தால், மூன்று மாதக் கரு வயிற்றில் பெரிய அளவில் தெரியாது. அத்தகைய நிலையில் திருமணம் செய்து ஐந்து அல்லது ஆறு மாதங்களில் ஒரு முழு குழந்தையைப் பெற்றெடுத்தால், புதிய கணவன் அதைத் தனது குழந்தை இல்லை என்று மறுப்பான்; முந்தைய கணவனின் குழந்தை என்று கூறி அவனது குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் குழந்தைக்குத் தந்தை யார் என்று தெரியாமல் போய், குழந்தையின் சட்டப்படியான உரிமைகளும் எதிர்காலமும் பறிபோய்விடும்; பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடும்.

ஆணுக்குக் கருப்பை கிடையாது என்பதால், அவன் மனைவியை இழந்த அடுத்த நாளோ அடுத்த வாரமோ மறுமணம் செய்துகொள்வதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் ஒரு பெண் உடனடியாக மறுமணம் செய்யும்போது, அவளுக்குக் கருப்பை இருப்பதால் புதிதாகத் திருமணம் செய்பவனுக்கும் பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அடிப்படையில்தான் நான்கு மாதம் பத்து நாட்கள் காத்திருக்குமாறு இஸ்லாம் பணிக்கிறது. இதன் முக்கிய நோக்கமே குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதுதான்.

وَأُو۟لَـٰتُ ٱلْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ
கர்ப்பிணிகளுக்குரிய தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்.
(அல்குர்ஆன்: 65:4)➚

கருப்பைக்குள் குழந்தை இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள நான்கு மாதம் பத்து நாட்கள் தேவையில்லையே; முதல் மாதத்திலேயே மாதவிடாய் தள்ளிப்போகும் போதோ அல்லது சோதனைக் கருவிகள் மூலமாகவோ ஒன்றரை மாதத்திலேயே தெரிந்துவிடுமே என்ற சந்தேகம் எழலாம். ஆனால் நடைமுறையில் ஒரு பெண் தன் கர்ப்பத்தை மறைக்க முற்பட்டால், ஆரம்ப ஓரிரு மாதங்களில் அதை எளிதில் மறைத்துவிட முடியும். நான்கு மாதம் பத்து நாட்கள் என்பது ஏறத்தாழ கர்ப்ப காலத்தின் பாதியாகும். இவ்வளவு நீண்ட காலத்தில் அவளது வயிறே அவள் கர்ப்பிணியாக இருப்பதை வெளிக்காட்டிவிடும். பெண் பார்க்க வருபவர்களும் குடும்பத்தினரும் எளிதில் கண்டுகொள்வார்கள்; யாரையும் ஏமாற்ற முடியாது. நான்கு மாதம் பத்து நாட்களுக்குப் பிறகும் ஒரு பெண்ணின் வயிறு சாதாரணமாக இருந்தால், அவள் கர்ப்பமாக இல்லை என்பது உலகிற்கு நிரூபணமாகிவிடுகிறது. அதற்குப் பிறகு அவளை மணக்கும் இரண்டாம் கணவனுக்கு எவ்வித சந்தேகமும் வராது; மீறி அவன் சந்தேகித்தால், நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்துத்தானே திருமணம் செய்தாய் என்று உலகமே அவனைக் கேட்கும். இதனால் வாரிசுப் பிரச்சனைகளும் சந்தேகங்களும் தவிர்க்கப்படுகின்றன.

எந்தவொரு சட்டத்தை இயற்றும்போதும் அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆணுக்குக் கொடுத்தது போன்று பெண்ணுக்கும் சம உரிமை தருகிறோம் என்ற பெயரில், உடற்கூறு எதார்த்தத்தையும் அதன் பின்விளைவுகளையும் கவனிக்காமல் உடனடியாக மறுமணத்திற்கு அனுமதிப்பது நீதியாகாது. ஒருவனின் குழந்தையை இன்னொருவன் தலையில் சுமத்துவதும், குழந்தையின் எதிர்காலத்தை நாசமாக்குவதும் நியாயமாகாது. பெண்கள் கருப்பையைச் சுமக்கக்கூடியவர்கள் என்ற உடற்கூறு எதார்த்தத்திற்கு ஏற்பவே அவர்களுக்கான சட்டங்கள் அமைய வேண்டும். அப்போதுதான் அவளது வாழ்க்கை தூய்மையாக்கப்பட்டு, அடுத்த திருமண வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும். இதற்காகவே இஸ்லாம் இத்தகைய காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்வதற்கு இஸ்லாம் விதித்துள்ள இந்த காலக்கெடு, அது காலத்தை வென்ற மார்க்கம் என்பதையே காட்டுகிறது. இன்றைக்கு எந்த ஒரு மருத்துவரிடமோ, விஞ்ஞானியிடமோ அல்லது தர்க்கரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் கேட்டாலும் இது சரியானது என்றே கூறுவர். முதல் கணவனுடைய குழந்தை ஒரு பெண்ணின் கருவில் இருக்க, அவள் அடுத்த நாளே இன்னொருவனைத் திருமணம் செய்து, அது அவனுடைய குழந்தை என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி எது நீதி, எது நியாயம், எது அறிவியல் பூர்வமானது என்ற அடிப்படையிலேயே சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். எவரும் மறுமணத்திற்கு உரிமை தராத ஒரு காலத்தில் இஸ்லாம் அதற்கு அனுமதியும் ஊக்கமும் வழங்கியதுடன், இத்தகைய ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளது.

அதேபோன்று, கணவன் விவாகரத்து செய்த பிறகும் ஒரு பெண் அடுத்த நாளே திருமணம் செய்துவிடக் கூடாது. மூன்று மாதவிடாய் காலங்கள் அவள் காத்திருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. கணவன் விவாகரத்து செய்து அவனிடமிருந்து முழு விடுதலை பெற்றுவிட்டாலும், உடனே திருமணம் செய்யக் கூடாது. மூன்று மாதவிடாய்கள் கழிந்த பிறகே அவள் திருமணம் செய்ய வேண்டும். அந்த இடைவெளியில்தான் அவள் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவரும்.

விவாகரத்தான உடனே ஆண் திருமணம் செய்வதால் அவன் மணக்கும் பெண்ணுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு பெண் அவ்வாறு உடனடியாகத் திருமணம் செய்தால் அவள் மணக்கும் ஆணுக்கும், அவளது கருவில் இருக்கும் குழந்தைக்கும், ஏன் அவளது சொந்த வாழ்க்கைக்கே கூடப் பாதிப்பு ஏற்படக்கூடும். முதல் கணவனால் உண்டான கருவைச் சுமந்துகொண்டு, அடுத்தவனை ஏமாற்றி அவன் தலையில் கட்டிவிடக் கூடாது என்பதற்காகவே இஸ்லாம் இந்தச் சட்டத்தை வகுத்துள்ளது.

ஒரு வயோதிகத் தம்பதியை எடுத்துக்கொள்வோம். எழுபது வயதுக் கணவன், அறுபது வயது மனைவியை விவாகரத்து செய்கிறான். இந்த வயதில் விவாகரத்து செய்வது முறையற்றது என்றாலும், விவாகரத்து நிகழ்ந்துவிட்டால் அவளுக்கு மாதவிடாய் ஏற்படுவதில்லை. எனினும், அவள் மறுமணம் செய்ய விரும்பினால் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. எழுபது வயதானாலும் ஒரு பெண் மறுமணம் செய்ய விரும்பினால், அவளுக்கு வாழ்க்கைத்துணை தேவைப்பட்டால் அதற்கு இஸ்லாத்தில் முழு உரிமை உண்டு. அவள் மறுமணம் செய்ய நாடினால் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், மிக அரிதாகவோ அல்லது ஓர் அற்புதமாகவோ லட்சத்தில் ஒரு மூதாட்டி கருவுறும் சம்பவங்கள் உலகில் நடக்கத்தான் செய்கின்றன. அத்தகைய ஒரு சாத்தியக்கூறு இருந்துவிட்டால், முந்தைய கணவனின் குழந்தையைச் சுமந்து கொண்டு அடுத்தவனுக்கு வாழ்க்கைப்பட்டு விடக்கூடாது என்பதில் இஸ்லாம் கண்டிப்புடன் இருக்கிறது.

ஒரு சிறிய சாத்தியக்கூறு இருந்தால் கூட அடுத்தவரை ஏமாற்றிவிடக் கூடாது, அவரவருக்குரிய உரிமை அவரவருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதை விடுத்து, கணவன் இறந்த உடனோ அல்லது விவாகரத்து ஆன உடனோ அடுத்த நாளே பெண் திருமணம் செய்யலாம் என்று சமத்துவத்தின் பெயரால் சொல்வது நீதியான பார்வை அல்ல; அது ஒரு வரட்டுத் தத்துவம். நாம் பெறும் ஓர் உரிமை அடுத்தவரைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. பெண்கள் தங்கள் உடலமைப்பைப் புரிந்து கொண்டு, உரிய காலகட்டத்தைக் கடந்து திருமணம் செய்வதன் மூலமே யாருக்கும் மோசடி செய்யாத தூய்மையான வாழ்க்கையை வாழ முடியும்.

பெண்களின் உடற்கூறியல் ஆய்வுகள் இல்லாத அந்தக் காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது? அவர்கள் மருத்துவ நூல்களைப் படித்து இந்தச் சட்டத்தை இயற்றினார்களா என்றால், அவர்கள் எந்த ஒரு நூலையும் படித்தவர் அல்லர் என்பதை அல்லாஹ்வே திருக்குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.

وَمَا كُنتَ تَتْلُوا۟ مِن قَبْلِهِۦ مِن كِتَـٰبٍ
(இதற்கு முன்னால்) நீர் எந்த ஒரு புத்தகத்தையும் படித்ததில்லை.
(அல்குர்ஆன்: 29:48)➚

நவீன காலத்துச் சட்ட மேதைகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் கூடத் தோன்றாத இந்த நியாயமான முடிவு, எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரால் எவ்வாறு எட்ட முடிந்தது? இது நபி (ஸல்) அவர்களாகச் சுயமாகச் சொன்னது அல்ல என்பதே இதற்குரிய விளக்கமாகும். மனிதர்கள் சுயமாகக் கூறும் சட்டங்கள் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளில் செல்லாததாகி விடுகின்றன. ஆனால், நபி (ஸல்) அவர்கள் கூறியவை இறைவனிடமிருந்து வந்த காரணத்தால்தான் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கடந்த பிறகும் காலத்தை வென்று நிற்கின்றன.

பெண்கள் யார், அவர்களின் உடலமைப்பு என்ன, ஆண்கள் யார், ஒரு குழந்தை உருவாவதற்கு என்னென்ன காரணிகள் தேவைப்படுகின்றன என்பதெல்லாம் மனிதர்களைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். இந்த எதார்த்தங்களை கவனத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக சட்டங்களை வகுத்தால் பல குழப்பங்கள் ஏற்படும். இன்று உலக நாடுகள் இயற்றியுள்ள பல சட்டங்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினால், அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறும் ஆட்சியாளர்கள் அந்தச் சட்டங்களைத் திருத்தவும் முன்வருவதில்லை.

எழுதப் படிக்கத் தெரியாத நபி (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தந்தார்கள். அதே வேளையில், பெண்ணுரிமை என்ற பெயரில் வரம்பு மீறாமல் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டினார்கள். பொதுவாக உலகில் ஓர் ஆண் குற்றம் செய்தால் தண்டிப்பதையும், ஒரு பெண் குற்றம் செய்தால் சலுகை காட்டுவதையும் சிலர் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், குற்றங்களின் விடயத்தில் இஸ்லாம் இத்தகைய பாகுபாட்டை ஏற்பதில்லை. ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றமே என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது. திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்குப் பரிந்துரை செய்ய வந்தபோது, தன் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று கூறி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நபி (ஸல்) அவர்கள் நிலைநிறுத்தினார்கள்.

பெண்ணுரிமை என்ற பெயரில் ஆணுக்கு வழங்கப்படுவதையெல்லாம் எந்தவித அடிப்படையும் இன்றி பெண்ணுக்கும் வழங்கிவிட வேண்டும் என்று வாதிட முடியாது. நியாயமும் அவசியமும் இருக்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெண்களுக்குக் கட்டாயம் வழங்க வேண்டும். ஆனால் சில விடயங்களில் இருவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை வழங்குவது அநீதியாகவும், அறிவியலுக்கும் இயற்கைக்கும் முரணாகவும் அமையும்போது அதற்கு ஏற்றவாறுதான் முடிவெடுக்க வேண்டும். உணர்வுப்பூர்வமாக அணுகாமல் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால், பெண்களின் உடலமைப்பு மற்றும் இயல்புக்குத் தகுந்தவாறே சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பது புரியும். ஒருவருக்குக் கொடுக்கப்படும் உரிமை இன்னொருவரைப் பாதிக்கக் கூடாது என்பது உலகப் பொதுவிதியாகும்.

மனித இயற்கையையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை வகுத்திருப்பதன் மூலம் இஸ்லாம் காலத்தை வென்ற மார்க்கமாகத் திகழ்கிறது. இஸ்லாத்தின் எந்தவொரு சட்டத்திலும் குறை காணவோ, அதைவிடச் சிறந்த மாற்றுச் சட்டத்தை உருவாக்கவோ எவராலும் இயலாது.

மனித உடலியல் மற்றும் உலக எதார்த்தங்களுக்கு ஏற்ப ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய உரிமைகளையும் வரம்புகளையும் சமநிலையுடன் வழங்கி வழிகாட்டும் காலத்தை வென்ற நெறியே இஸ்லாம்.