11) மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டும் இஸ்லாம்
பெண்கள் உடலமைப்பால் ஆண்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதால், அதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற சட்டங்களை இஸ்லாம் வழங்கியுள்ளதா, அல்லது அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை வழங்கி பெண்களுக்குக் கேடு விளைவித்துள்ளதா என்பதை ஆராய்ந்தால், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, ஆடை ஒழுக்கம், மறுமணம் போன்ற விவகாரங்களில் இஸ்லாம் கூறும் தீர்வுகளே உலகத்தின் பார்வைகளை விட மிகச் சிறந்ததாகவும் மனித இயல்புக்கு ஏற்றதாகவும் இருப்பதை அறியலாம். இவை மட்டுமின்றி, இஸ்லாம் கூறும் எந்தவொரு சட்டத்தையும் இந்த நவீன காலத்திற்குப் பொருந்தாது என்று எவராலும் நிராகரிக்க முடியாது.
பொதுவாக ஒரு மதத்தைப் பின்பற்றுவதன் நோக்கம், மனிதன் உலகில் நல்லவனாக வாழ்ந்து இறைவனின் அன்பையும் மறுமைப் பேற்றையும் அடைவதே ஆகும். மனிதன் பிறப்பிலிருந்து மரணம் வரை சந்திக்கும் பல்வேறு சூழல்களில் சரியானவற்றையும் தவறானவற்றையும் எதிர்கொள்கிறான். அவனுக்குக் கேடு விளைவிக்கும் தவறுகளை எச்சரித்துச் சீர்திருத்தும் போதனைகள் இருந்தால்தான் ஒரு மனிதன் பண்பட முடியும். ஆனால் பெரும்பாலான மதங்கள் கடவுளை வழிபடுவது, தியானம் செய்வது, மந்திரங்கள் ஓதுவது, சடங்குகள் மற்றும் காணிக்கைகள் செலுத்துவது ஆகியவற்றை மட்டுமே போதிக்கின்றன. வாரத்தில் ஒரு நாளோ அல்லது தினமும் ஒரு முறையோ செய்யப்படும் இத்தகைய வழிபாடுகளோடு மனிதனை விட்டுவிட்டால் அவன் நல்லவனாக வாழ்ந்துவிட முடியாது. மனித சமுதாயம் வெறுக்கும் அநீதிகளைத் தடுத்து நிறுத்தாமல் வெறும் சடங்குகள் மட்டுமே ஒருவனை இறைவனுக்கு நெருக்கமாக்கிவிடாது.
பெரும்பாலான மதங்களில் பிறப்பு, குழந்தை வளர்ப்பு, கல்வி, வணிகம், விவசாயம் போன்ற அன்றாட விவகாரங்களில் எவை தகும், எவை தகாதவை என்ற விரிவான வழிகாட்டல்கள் பெரிதாக இருப்பதில்லை. இதன் காரணமாகவே சிலர் கோடி கோடியாக லஞ்சம், ஊழல், மோசடி செய்துவிட்டு, அதில் ஒரு சிறு பகுதியை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டால் தங்கள் தவறுகள் மறைந்துவிடும் என்று தவறாக எண்ணுகிறார்கள். வாழ்க்கையில் அநியாயங்களும் நேர்மையற்ற சம்பாத்தியமும் செய்துகொண்டு, வெறும் சடங்குகளின் மூலம் பக்தனாகக் காட்டி இறைவனின் அன்பைப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறார்கள்.
ஆனால் இஸ்லாம் மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் தலையிட்டு வழிகாட்டுகிறது. திருமணம், கணவன் மற்றும் மனைவிக்குரிய கடமைகள், குடும்பம், குழந்தை வளர்ப்பு, கொடுக்கல் வாங்கல் என அனைத்திற்கும் தக்க ஒழுங்குமுறைகளை வழங்குகிறது. ஒரு தந்தை தன் குழந்தையின் அறியாமையையும் பலவீனங்களையும் உணர்ந்து, அவனது விருப்பங்களுக்கு மட்டுமே அடிபணியாமல் கண்டித்து நல்வழிப்படுத்துவது போல, மனிதனைப் படைத்த இறைவன் அவனது பலவீனங்களை அறிந்து அனைத்து விவகாரங்களிலும் சட்டங்களை வழங்கி நெறிப்படுத்துகிறான். அடுத்தவரின் உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு செயலையும் இடுக்கைப் பிடி போட்டுத் தடுத்து நிறுத்துகிறது.
இஸ்லாம் மனிதனின் அன்றாட வாழ்வின் மிக நுணுக்கமான விஷயங்கள் வரை வழிகாட்டுகிறது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம், உங்கள் நபி (ஸல்) அவர்கள் இயற்கை உபாதை கழிப்பது வரை கூடவா வழிகாட்டுகிறார் என்று வியப்புடன் கேட்டனர். ஆம், பொது இடங்களில் நின்று சிறுநீர் கழிப்பதையும், பாதைகளில் அசுத்தம் செய்வதையும், உடலில் அல்லது ஆடையில் அசுத்தம் படுவதைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் தடுத்து, இயற்கை உபாதையைக் கழிக்கும் முறையையும் சுத்தத்தையும் கூட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். தனக்கோ பிறருக்கோ கேடு விளைவிக்கும் எதையும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை; குடும்ப வாழ்க்கை முதல் பொது வாழ்க்கை வரை அனைத்திற்கும் தெளிவான எல்லைகளை வகுத்துள்ளது.
இஸ்லாம் அரசியலையோ, மருத்துவத்தையோ, கல்வியையோ ஆன்மீகத்திலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. மாறாக ஆன்மீகம், அரசியல், கல்வி, மருத்துவம், சுகாதாரம், தூய்மை, ஆடை ஒழுக்கம் என மனித வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் தன்னுள் உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாகவே திகழ்கிறது.
முடி வெட்டுவது, சவரம் செய்வது, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அக்குள் முடிகளை அகற்ற வேண்டும் என்பது போன்ற அன்றாட விஷயங்களைப் பற்றி கூட இஸ்லாம் வழிகாட்டுகிறது. மனிதனுக்கு நன்மையை போதிப்பதோடு, பிறருக்கு எந்தவிதக் கேடும் இன்றி வாழ வேண்டும் என்பதற்கான சட்டதிட்டங்களையும் இஸ்லாம் வகுத்துத் தருகிறது. எனவே எந்தவொரு விஷயமாக இருந்தாலும் இஸ்லாத்தில் அதற்குரிய தெளிவான கருத்து உண்டு. எதைப் பற்றியும் பேசாமல் கடந்து செல்லும் போக்கு இஸ்லாத்தில் இல்லை.
இறைவன் நமக்கு எதற்காகத் தேவை என்ற அடிப்படையை நாம் விளங்க வேண்டும். மனிதர்கள் எவ்வளவு அநியாயங்களைச் செய்துவிட்டு, லஞ்சம் கொடுத்து ஒரு மனிதனை சரிசெய்வது போல இறைவனையும் சரிசெய்து விடலாம் என்று கருதுகிறார்கள். ஊழல் செய்யும் ஒருவன், தன்னை விசாரிக்க வரும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிக்கு அதில் ஒரு பங்கைக் கொடுத்து நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய அதிகாரியே லஞ்சம் வாங்கிக் கொண்டு குற்றவாளியைத் தப்ப வைத்தால் அவனை நாம் ஒரு நல்ல மனிதனாக ஏற்போமா? நிச்சயமாக மாட்டோம். ஒரு மனிதனுக்கே இது தவறாக இருக்கும்போது இறைவனை எவ்வாறு அவ்வாறு கருத முடியும்?
நாம் என்ன தவறு செய்தாலும் இறைவன் மன்னித்து விடுவான், பத்துக் கொலைகளைச் செய்துவிட்டு அதற்குரிய காணிக்கையைச் செலுத்தி விடலாம், திருடியும் வழிப்பறி செய்தும் சம்பாதித்ததில் ஒரு பகுதியை உண்டியலில் போட்டுவிட்டால் போதும் என்ற இந்த தவறான நம்பிக்கையை இஸ்லாம் முதலில் தகர்க்கிறது. மனிதன் சக மனிதனுக்கு நல்லவனாக வாழ வேண்டும்; மனிதர்களுக்கு நல்லவனாக இல்லாமல் இறைவனை மட்டுமே துதித்து வழிபடுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.
மனிதன் செய்யும் தவறுகளை இஸ்லாம் இரு வகைகளாகப் பிரிக்கிறது. ஒன்று, இறைவனுக்குச் செய்யும் வழிபாடுகளில் ஏற்படும் தவறுகள்; மற்றொன்று, மனித குலத்திற்கு இழைக்கும் அநீதிகள். ஐவேளைத் தொழுகை, நோன்பு போன்ற இறைக்கட்டளைகளை ஒருவன் நிறைவேற்றத் தவறினால், அதனால் சக மனிதர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படுவதில்லை. இத்தகைய தவறுகளை உணர்ந்து, இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரும்போது அவன் தன் கருணையினால் மன்னிக்கிறான்.
ஆனால் மனிதர்களுக்குச் செய்யும் அநீதிகளைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கவே மாட்டான். வாங்கிய கடனைத் தராமல் ஏமாற்றுவது, அளவை நிலுவைகளில் மோசடி செய்வது, அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது, லஞ்சம் வாங்குவது, கலப்படம் செய்வது போன்ற செயல்களால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்குரிய பங்கை மட்டும் காணிக்கையாகக் கேட்க இறைவன் ஒருபோதும் லஞ்சம் வாங்கும் அதிகாரி அல்லன். மனிதர்களை நல்வழிப்படுத்துவதே இறைவனின் நோக்கம்; அவனுக்கு மனிதர்களின் பொருள் தேவையும் இல்லை.
எப்படி வேண்டுமானாலும் அநியாயங்கள் செய்துவிட்டு, வழிபாட்டுச் சடங்குகளை மட்டும் நிறைவேற்றினால் இறைவன் ஏற்றுக்கொள்வான் என்ற கருத்தை இஸ்லாம் முற்றிலும் நிராகரிக்கிறது. ஒரு நாள் இந்த உலகம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பின்னர் முதல் மனிதர் முதல் இறுதி மனிதர் வரை அனைவரையும் இறைவன் உயிர்கொடுத்து எழுப்புவான் என்ற மறுமை நம்பிக்கையை இஸ்லாம் போதிக்கிறது. மரணமே இல்லாத அந்த மறுமை வாழ்வில், மனிதன் செய்த நன்மைகளுக்குப் பரிசுகளும் தீமைகளுக்குத் தண்டனைகளும் வழங்கப்படும்.
மறுமை நாளில் ஒருவன் ஏராளமான நன்மைகளோடு இறைவனைச் சந்திக்க வருவான். இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம், திவாலானவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், காசு பணத்தை எல்லாம் இழந்துவிட்டவனே திவாலானவன் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவன் அல்ல திவாலானவன் என்று கூறிவிட்டு விளக்கமளித்தார்கள்.
ஒருவன் நிறைய நன்மைகளைச் செய்து, தொழுது, நோன்பு நோற்று, ஸகாத் கொடுத்து, ஹஜ் செய்து இறைவனிடம் வருவான். அதே நேரத்தில், அவன் பிறரைத் திட்டியிருப்பான், அடித்திருப்பான், கொலை செய்திருப்பான், பிறரின் பொருளைப் பறித்திருப்பான். அத்தகைய சூழலில் இறைவன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்து வழங்கி நியாயம் தீர்ப்பான். மறுமையில் பணம் செல்லுபடியாகாது; நன்மைகளே அங்கு கணக்கீடு செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இவனுடைய நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும். நன்மைகள் அனைத்தும் தீர்ந்துபோன பிறகும் பாதிக்கப்பட்டவர்களின் கணக்கு பாக்கி இருந்தால், அவர்களின் தீமைகள் இவன் மீது சுமத்தப்படும். இறுதியில் அவன் செய்த தொழுகை, நோன்பு போன்ற அனைத்து வழிபாடுகளும் பயனற்றுப் போய், அவன் நரகத்தில் தூக்கி எறியப்படுவான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.
எந்த அநியாயத்தையும் செய்துவிட்டு காணிக்கை செலுத்தித் தப்பித்துவிடலாம் என்ற போதனையை விட, சக மனிதனை ஏமாற்றினால் இறைவனிடம் தப்ப முடியாது என்ற இந்த அச்சமே மனிதனை நேர்வழியில் வாழ வைக்கும் சிறந்த போதனையாகும்.
ஒரு மனிதனை ஏமாற்றும் பொழுது, இது இறைவனுக்குச் செய்யும் துரோகம் என்ற அச்சம் மனிதனுக்கு வர வேண்டும். இதனை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனால் இதைச் சகித்துக் கொள்ள முடியாது, இதற்குரிய தண்டனையை அவன் வழங்குவான், இருபத்து நான்கு மணி நேரமும் தவத்தில் மூழ்கிக் கிடந்தாலும் பிறருக்குச் செய்த அநீதிக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்படுவதுதான் உலகிற்கு நன்மை பயக்கும். மாறாக, நீங்கள் என்ன குற்றங்களைச் செய்தாலும் கடவுளுக்குரிய காணிக்கையைச் செலுத்திவிட்டால் போதும் என்ற நிலை உருவானால் எந்த நன்மையும் விளையாது. இத்தகைய தவறான சிந்தனையினால்தான் ஆன்மிகவாதிகளாகக் காட்டிக்கொள்பவர்கள் பயங்கரவாதிகளாகவும் மாறுவதைப் பார்க்கிறோம். தங்களின் பக்தி செய்த குற்றங்களையெல்லாம் அழித்துவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், அநீதியை ஒருபோதும் பக்தி அழிக்காது என்று தெளிவாகக் கற்பித்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான். ஒரு மனிதன் மற்றொருவனுக்குப் பத்து பைசா அளவிற்குத் துரோகம் செய்திருந்தாலும் பாதிக்கப்பட்டவன் மறுமை நாளில் இறைவனிடம் முறையிடுவான். “இறைவா, இவன் உலகத்தில் கஷ்டப்பட்டான் என்று நான் பணம் கொடுத்தேன், ஆனால் இவன் என்னை ஏமாற்றிவிட்டான்; நல்ல பொருள் தருவான் என்று நம்பிச் சென்றபோது கலப்படப் பொருளைத் தந்து என்னை ஏமாற்றிவிட்டான்” என்று வாதிடுவான். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டிய பொறுப்பு இறைவனுக்கு இருக்கிறது. மறுமையில் பணம் செல்லுபடியாகாது என்பதால், அநீதி இழைத்தவனின் நன்மைகளைப் பறித்து பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுப்பதே அங்கு வழங்கப்படும் நீதியாகும்.
உலக மக்கள் அனைவரும் இந்த வாழ்க்கை நெறியை ஏற்றுக்கொண்டால் சமூகத்தில் குற்றங்கள் குறையும். தவறு செய்தாலும் உடனடியாகத் திருந்திக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். நீங்கள் யாருக்காவது பொருளாதார ரீதியாக அநீதி இழைத்திருந்தால், அந்த மறுமை நாள் வருவதற்கு முன்பாகவே அவரிடம் சென்று உரியதைத் திருப்பிக் கொடுத்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். திருப்பிக் கொடுக்க இயலாவிட்டால், உங்களுடைய இயலாமையைக் கூறி, “மறுமை நாளில் இறைவனிடம் என் மீது வழக்குத் தொடுத்து என்னை மாட்டிவிட்டுவிடாதே, என்னை மன்னித்துவிடு” என்று அவரிடம் மன்னிப்புப் பெற்றுக் கொள்ளுங்கள். அங்கு காசு பணமெல்லாம் உதவாது என்று கூறினார்கள்.
பிறருக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரம் என்பது பூஜைகளோ, புனஸ்காரங்களோ, மந்திரங்களோ கிடையாது. யாருக்கு அநீதி இழைக்கப்பட்டதோ அவருடைய உரிமையை அவரிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும். அல்லது அவரிடம் மன்றாடி மன்னிப்புப் பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை எத்தகைய வழிபாடுகளும் பயனளிக்காது. மக்களைச் சுரண்டிவிட்டு, ஊரையே அடித்து உலையில் போட்டுவிட்டு மதவாதி என்றோ பக்திமான் என்றோ காட்டிக்கொள்வது ஒருபோதும் சரியாகாது.
இஸ்லாத்தில் மிக உயர்ந்த அந்தஸ்து ‘ஷஹீத்’ எனப்படும் உயிர்த் தியாகிக்கு வழங்கப்படுகிறது. ஒரு சமூக அநீதியையோ கலப்படத்தையோ தட்டிக்கேட்கப் போய்க் கொல்லப்பட்டாலும் அல்லது போர்க்களத்தில் அநீதியை எதிர்த்து நின்று கொல்லப்பட்டாலும் அவர் உயிர்த் தியாகியாகக் கருதப்படுகிறார். தன்னுடைய வாழ்நாளைப் பற்றிக் கவலைப்படாமல் இறைவனுக்காகவும் நீதிக்காகவும் துணிந்து நின்ற காரணத்தினால் இஸ்லாம் அவருக்கு இந்த மகத்தான நிலையை அளிக்கிறது.
அத்தகைய உயிர்த் தியாகியைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلَّا الدَّيْنَ
உயிர்த் தியாகியின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன, கடனைத் தவிர.
(முஸ்லிம்: 1886) ➚
கொலை, கொள்ளை, மோசடி போன்ற கொடிய குற்றங்களுடன் ஒப்பிடும்போது கடன் என்பது பிறர் மனமுவந்து கொடுக்கும் ஒரு சிறிய விவகாரம்தான். ஆனால், அதைத் திருப்பிச் செலுத்த வழியிருந்தும் காலம் தாழ்த்திவிட்டு மரணித்தால், பாதிக்கப்பட்டவன் மறுமையில் வந்து நிற்கும்போது அந்த உயிர்த் தியாகத்தை இறைவன் பொருட்படுத்த மாட்டான். கடன் கொடுத்த மனிதனுக்கு நீதி கிடைக்காமல் உயிர்த் தியாகிக்கே மன்னிப்பு வழங்கப்படாது எனில், பிறருக்கு அநீதி இழைப்பவர்களின் நிலை என்னவாகும்? உயிரையே தியாகம் செய்தவருக்கும் மனித உரிமையை மீறிய குற்றத்திற்குத் தப்ப வழியில்லை எனும் பொழுது, வெறும் வழிபாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு இறைவனிடம் தப்பித்துவிட முடியாது. வாழ்நாளெல்லாம் பள்ளிவாசலில் தொழுது கிடந்தாலும், மனிதர்களுக்கு அநீதி இழைத்திருந்தால் அந்த நன்மைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவருக்கே போய்ச் சேரும்.
மனித உரிமைகளை ஆன்மிகத்தின் பெயரால் ஒருபோதும் பறித்துவிடக் கூடாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும். உலகப் பற்றை விட வேண்டும் என்று மக்களுக்குப் போதித்துவிட்டு, ஆன்மிகப் போர்வையைப் போர்த்திக்கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதிகளாக மாறும் போலி ஆன்மிகவாதிகளை உலகம் சகித்துக் கொள்கிறது. மக்களின் பணத்தைச் சுரண்டி ஆடம்பரத்தில் திளைக்கும் ஒருவன் இறைவனுக்கு நெருக்கமானவனாக ஆக முடியுமா என்ற அடிப்படைக் கூடப் பலருக்குப் புரிவதில்லை.
பிற மனிதர்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எந்த ஆன்மிகமும் வழிபாடும் பரிகாரமாகாது; பாதிக்கப்பட்டவரின் உரிமையை நிறைவேற்றி அவரிடம் மன்னிப்புப் பெறாத வரை இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது.