03) பெண்களுக்கான சொத்துரிமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இஸ்லாம்
இஸ்லாத்தினுடைய கொள்கை கோட்பாடுகள், சட்ட திட்டங்கள், வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட அனைத்துமே காலத்தை வென்று, எக்காலத்தினாலும் தகர்க்க முடியாத வகையிலும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
(அல்குர்ஆன்: 108:1)➚
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
(அல்குர்ஆன்: 108:2)➚
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
(அல்குர்ஆன்: 108:3)➚
கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் இல்லை என்றும், அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் உலகம் கருதிய காலகட்டத்தில், அந்த நிலையை உடைத்து விதவைகளின் மறுமணத்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். அதை பெண்களுக்கான உரிமை எனப் பிரகடனம் செய்து, விதவைகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தம் தோழர்களையும் ஊக்கப்படுத்தினார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கிய பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான், பெண்களுக்கும் உணர்வுகளும் விருப்பங்களும் உண்டு என்பதை உணர்ந்து உலகம் மறுமணச் சட்டங்களை ஏற்றுக்கொண்டது.
அதேபோன்று, பெண்கள் விவகாரத்தில் இஸ்லாம் காலத்தை வென்று நிற்கிறது என்பதற்கு மற்றொரு சிறந்த சான்று பெண்களுக்கு அது வழங்கிய சொத்துரிமை ஆகும். பெண்கள் சுயமாகச் சொத்துக்களைச் சம்பாதித்து உரிமை கொண்டாடுவது, பெற்றோர் அல்லது கணவனின் மறைவுக்குப் பின் வாரிசுரிமை மூலம் சொத்துக்களைப் பெறுவது, திருமணத்தின்போது வழங்கப்படும் மஹர் மற்றும் சீர்வரிசைகளைத் தங்களுடைய சொந்த உடைமையாக வைத்துக்கொள்வது ஆகிய சொத்துரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியது.
இன்றைய மேற்கத்திய உலகில் ஆண்களைப் போன்றே பெண்களும் சொத்துக்களை ஈட்டவும் உரிமை கொண்டாடவும் முடிகிறது என்பதால், இது ஒரு புரட்சிகரமான விஷயமாகத் தெரியாமல் போகலாம். ஆனால், இந்த உரிமை பெண்களுக்கு மிகச் சமீப காலத்தில் தான் கிடைத்தது. 1830களில் அமெரிக்காவில் பெண்ணுரிமை இயக்கம் தோன்றி சொத்துரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தது. 1857-இல் நியூயார்க்கில் மாநாடு நடத்தப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகே, அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டங்கள் படிப்படியாகக் கொண்டுவரப்பட்டன. பெண்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகே இந்த உரிமையை அடைந்தார்கள்.
பெண்களுக்குச் சொத்துரிமை அளித்தால் அவர்கள் தவறான வழிகளில் செல்வார்கள் என்றெல்லாம் கூறி உலகமே பெண்களுக்குச் சொத்துரிமையை மறுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இஸ்லாம் அதை வழங்கியது. இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி சுமார் 1,250 ஆண்டுகளுக்குப் பின்னரே மேற்கத்திய உலகம் இந்த முடிவுக்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் இச்சட்டத்தைக் கொண்டுவந்தபோது, அது பிற்போக்குத்தனமானது என்று விமர்சித்தவர்கள், காலவோட்டத்தில் இஸ்லாம் சொன்னதே சரி என்ற நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் தங்களின் சொத்துரிமையைக் குர்ஆனின் அடிப்படையிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படியும் பெறுகிறார்கள். ஆனால், பிற சமுதாயப் பெண்கள் தங்களுக்குச் சொத்துரிமை மறுத்த தங்களின் மதக் கோட்பாடுகளையும் கலாச்சாரங்களையும் புறந்தள்ளி, அவற்றுக்கு எதிராகப் போராடியே இந்த உரிமையைப் பெற்றார்கள். தங்கள் பாரம்பரியக் கொள்கைகளில் அவர்கள் பிடிவாதமாக இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த உரிமை கிடைத்திருக்காது. எனவே, பிற சித்தாந்தங்கள் காலப்போக்கில் திருத்தப்பட வேண்டியிருந்த நிலையில், இஸ்லாம் காலத்தை வென்று நிலைத்து நிற்கிறது.
இந்தியாவிலும் பெண்களுக்குச் சொத்துரிமை மிகத் தாமதமாகவே கிடைத்தது. மேற்கத்திய உலகம் சொத்துரிமை வழங்கி நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1929-இல் தான் பெரியார் இதற்கான குரலை எழுப்பினார். நம் நாட்டில் 1937 வரை பெண்களுக்குச் சொத்துரிமையே கிடையாது. 1937-இல் இந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு சில உரிமைகள் வழங்கப்பட்டன. எனினும் தந்தையின் சொத்தில் மகள்களுக்குப் பங்கு மறுக்கப்பட்டு மகன்களுக்கே வழங்கப்பட்டது. பின்னர் 1956 இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு, 1989-இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, இறுதியாக 2005-ஆம் ஆண்டில்தான் பெண்களுக்கு வாரிசுரிமையில் முழுமையான சமபங்கு வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
பெண்களின் சொத்துரிமை குறித்துப் பேசும் நவீனச் சட்டங்கள் கூட பெரும்பாலும் மனைவியை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. ஆனால் இஸ்லாம் மனைவி மட்டுமின்றி தாய், மகள், சகோதரி என அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்களின் உரிமைகளையும் கருத்தில் கொண்டு விரிவான சட்டங்களை வகுத்துள்ளது.
மனைவி சம்பாதிப்பதும் கணவனுக்கே சொந்தம் என்ற ஆதிக்க மனப்பான்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்தெறிந்த இஸ்லாம், பெண் சம்பாதிப்பது பெண்ணுக்கும், ஆண் சம்பாதிப்பது ஆணுக்குமே உரியது என்று மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்தது.
لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبُوا۟ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبْنَ
ஆண்கள் சம்பாதித்தவற்றில் ஆண்களுக்குரிய பங்கும், பெண்கள் சம்பாதித்தவற்றில் பெண்களுக்குரிய பங்கும் உண்டு.
(அல்குர்ஆன்: 4:32)➚
பெண்கள் சுயமாகக் கைத்தொழில் செய்தோ அல்லது வேறு வழிகளிலோ உழைத்துச் சம்பாதிக்கும் சொத்துக்கள் அவர்களுக்கே சொந்தமானவை என்பதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.
وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبْنَ
பெண்கள் சம்பாதித்தவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு.
(அல்குர்ஆன்: 4:32)➚
அதேபோன்று திருமணத்தின் போது பெண்களுக்கு ஆண்கள் மஹ்ர் எனும் மணக்கொடையைக் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஒரு பெண் திருமணம் முடிக்கும்போது தனது இளமையையும் அழகையும் அர்ப்பணித்து பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறாள். எனவே, அவளது எதிர்காலப் பாதுகாப்பு நிதியாக அமைய வேண்டும் என்பதற்காகவே மஹ்ரை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது. கணவனிடமிருந்து பெறப்படும் அந்தத் தொகையை அப்பெண்ணின் தந்தை, சகோதரன், பாட்டன் என எவரும் அபகரிக்க முடியாது; அது அப்பெண்ணுக்கே முழுமையாகச் சொந்தமானது.
وَءَاتُوا۟ ٱلنِّسَآءَ صَدُقَـٰتِهِنَّ
பெண்களுக்கு அவர்களுடைய மஹ்ருத் தொகைகளை வழங்கிவிடுங்கள்.
(அல்குர்ஆன்: 4:4)➚
தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று பிரிய நேர்ந்தாலும், கணவன் தான் கொடுத்த மஹ்ரையோ சொத்துக்களையோ திரும்பக் கேட்க முடியாது. அவளுக்கு ஒரு பெரும் செல்வக் குவியலையே கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து எதனையும் அவன் திரும்பப் பெறக் கூடாது என்று மார்க்கம் மிகக் கடுமையாக எச்சரிக்கிறது.
وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
அவர்களில் ஒருவருக்கு நீங்கள் ஒரு பெரும் செல்வக் குவியலையே கொடுத்திருந்தாலும், அதிலிருந்து எதனையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்; அபாண்டமாகவும் வெளிப்படையான பாவமாகவும் அதனை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா?
(அல்குர்ஆன்: 4:20)➚
திருமண உறவு முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்காக மனைவியின் உடைமையாக்கப்பட்ட நகைகளையோ மஹ்ரையோ அல்லது வேறு எதனையுமோ திரும்பக் கேட்பது அநீதியும் பாவமும் ஆகும்.
وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا۟ مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ
அவர்களுக்கு நீங்கள் வழங்கியவற்றிலிருந்து எதனையும் நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.
(அல்குர்ஆன்: 2:229)➚
விவாகரத்துக்குப் பிறகு பெண்களே அதிகப் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்பதால், அவர்களை வெறுங்கையோடு அனுப்பிவிடாமல் அவர்களுக்கு ஒரு நஷ்டஈட்டுத் தொகையை அல்லது பாதுகாப்பு நிதியை வழங்குவதையும் இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கியுள்ளது.
وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَـٰعًۢا بِٱلْمَعْرُوفِ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ
வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது சக்திக்குத் தக்கவாறும் நியாயமான முறையில் ஒரு தொகையை வழங்கி அவர்களைப் பயனடையச் செய்ய வேண்டும்; இது நன்மை செய்வோர் மீது கடமையாகும்.
(அல்குர்ஆன்: 2:236)➚
பொதுவான நீதிமன்றங்களை விடவும் உள்ளூர் ஜமாஅத்தாருக்குத்தான் ஒரு குடும்பத்தின் உண்மை நிலவரமும் கணவனின் பொருளாதார நிலையும் நன்கு தெரியும். எனவே, விவாகரத்தின் போது ஜமாஅத்தார்கள் கணவனின் வசதிவாய்ப்புகளை ஆராய்ந்து, அவனுக்குப் பல வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை அவளுக்குக் கொடுக்கும்படியோ அல்லது அவளது வாழ்வாதாரத்திற்குத் தகுந்த தொகையைப் பெற்றுத் தரும்படியோ நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு பெண் சம்பாதித்த சொத்து, திருமணத்தின் போது பெற்ற மஹ்ர், விவாகரத்தின் போது கிடைக்கும் பாதுகாப்பு நிதி என அனைத்திலும் பெண்ணின் சொத்துரிமையை இஸ்லாம் முழுமையாகப் பாதுகாக்கிறது. உலகமே பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று மறுத்த காலத்தில் இஸ்லாம் இந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
அடுத்து, வாரிசுரிமையிலும் இஸ்லாம் பெண்களுக்கு உரிய பங்கை வழங்குகிறது. மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் பல நேரங்களில் ஒருவன் இறந்துவிட்டால் அவனது மனைவியின் உரிமையைப் பற்றி மட்டுமே பேசுகின்றனவே தவிர, அவனது தாயும் ஒரு பெண் என்பதை மறந்துவிடுகின்றன. ஆனால் இஸ்லாம் அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்களின் உரிமைகளைக் கணக்கில் கொள்கிறது.
கணவன் மரணித்து அவனுக்குக் குழந்தைகள் இருந்தால், அவனது சொத்தில் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு (12.5%) கிடைக்கும். அவனுக்குக் குழந்தைகள் இல்லையெனில், மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு (25%) கிடைக்கும். அதேபோன்று மனைவி மரணித்து அவளுக்குக் குழந்தைகள் இல்லையென்றால், கணவனுக்கு அவளது சொத்தில் சரிபாதி (50%) கிடைக்கும்; அவளுக்குக் குழந்தைகள் இருந்தால் கணவனுக்கு நான்கில் ஒரு பங்கு (25%) கிடைக்கும். மனைவியின் சொத்துக்களில் பெரும்பாலானவை கணவன் கொடுத்ததாகவே இருக்கும் என்பதாலும், ஆண்களுக்குரிய கூடுதல் பொறுப்புகளாலும் இந்த வேறுபாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்குச் சொத்தைப் பிரிக்கும் போது, ஆண் பிள்ளைக்கு இரு மடங்கும் பெண் பிள்ளைக்கு ஒரு மடங்கும் என்ற விகிதத்தில் பிரிக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. உதாரணமாக, ஒரு மகனும் நான்கு மகள்களும் இருந்தால் சொத்தை ஆறு பங்குகளாகப் பிரித்து, மகனுக்கு இரண்டு பங்குகளும் நான்கு மகள்களுக்குத் தலா ஒரு பங்கும் வழங்கப்பட வேண்டும். இருவருக்கும் சம உரிமை கொடுக்கலாமே என்று சிலர் கேட்கலாம். ஆனால் ஆண், பெண் இருவருக்குமான தனித்துவங்களையும் பொறுப்புகளையும் கவனத்தில் கொள்ளாமல் சமத்துவம் பேசுவது நடைமுறைக்கு உதவாத வரட்டுத் தத்துவமாகிவிடும்.
இஸ்லாமியச் சமூக அமைப்பில் குடும்பத்தின் அனைத்துப் பொருளாதாரச் சுமைகளையும் சுமக்க வேண்டிய கடமை ஆண்களுக்கே உரியது. மனைவியிடம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும், கணவன் ஏழையாக இருந்தாலும் கூட, அவளுக்கு உணவளித்து பராமரிக்கும் பொறுப்பு கணவனுக்கே உரியது; மனைவி தனது சொத்திலிருந்து செலவழிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
அதேபோல் குழந்தைகளைப் பராமரிப்பது, அவர்களுக்கு உணவும் உடையும் வழங்குவது, கல்வி புகட்டுவது, தொழிலுக்கு வழிகாட்டுவது என அனைத்துச் செலவுகளையும் தகப்பனே சுமக்க வேண்டும். தந்தைவழிச் சொத்திலிருந்து ஆணுக்கு இரு மடங்கு கிடைத்தால்தான் அவனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற முடியும். பெண் தனது சொத்திலிருந்து பிள்ளைகளுக்குச் செலவு செய்வது அவளது சொந்த விருப்பமே தவிர கடமையல்ல. வசதியான பெண்ணாக இருந்தாலும் கூட, தன் கணவன் தனக்குப் பராமரிப்புச் செலவு தரவில்லை என்று அவள் முறையிட்டால், கணவன் அவளுக்குச் செலவழித்தே ஆக வேண்டும் என்று கேட்கும் உரிமையை மார்க்கம் அவளுக்கு வழங்குகிறது. மேலும், பெற்றோரை இழந்து நிற்கும் சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் சமூகக் கடமையும் ஆண்களின் மீதே சுமத்தப்படுகிறது.
திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் சென்ற பிறகு ஒரு பெண், பிறந்த வீட்டில் இருக்கும் தன் உடன்பிறந்த தம்பி, தங்கைகளுக்காகப் பொருளாதார ரீதியாகப் பங்களிப்பது நடைமுறையில் மிகவும் அரிதானது. அங்குள்ள மூத்த மகனோ அல்லது மற்ற சகோதரர்களோதான் எஞ்சியிருக்கும் தம்பி, தங்கைகளின் தேவைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் செலவழிக்க வேண்டியுள்ளது. குடும்பச் சுமைகளும் செலவுகளும் ஆண்மகனின் தோள்களிலேயே சுமத்தப்பட்டிருக்கும்போது, சொத்துரிமையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு என்பது நியாயமாகாது.
ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு அவள் கணவனால் கைவிடப்பட்டால், அவள் மீண்டும் பிறந்த வீட்டிற்கே வருகிறாள்; அவளைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பும் மீண்டும் சகோதரனின் மீதே விழுகிறது. மேலும், ஒரு தந்தை தன் சொத்துக்களை வளர்த்துப் பெருக்குவதற்கு மகனே தந்தையுடன் சேர்ந்து உழைக்கிறான்; பெண்களின் உழைப்பு அதில் பெரும்பாலும் இருப்பதில்லை. பல குடும்பங்களில் சகோதரன் தன் இளமையைத் தொலைத்து, தங்கைகளின் திருமணத்தை முடித்து குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவே வெளிநாடுகளில் பல ஆண்டுகள் உழைத்து, முப்பத்தைந்து வயதில்தான் திருமணமே செய்துகொள்கிறான். தவிர, திருமணத்தின்போதும் அதற்கு முன்பாகவும் மகள்களுக்குப் பெற்றோர்கள் பெருமளவில் நகைகளையும் சீர்வரிசைகளையும் செலவு செய்கிறார்கள். ஆண்களுக்கு அத்தகைய செலவுகள் செய்யப்படுவதில்லை. இந்த நிதிச் சுமைகளை எல்லாம் சுமக்கும் ஆணையும், அத்தகைய சுமைகள் இல்லாத பெண்ணையும் சொத்துரிமையில் சமமாக நடத்துவது எவ்விதத்திலும் பொருத்தமாகாது.
இவ்வுண்மையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில், 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி தினமணி நாளிதழின் சென்னை பதிப்பில் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் “சொத்தில் சமபங்கு; கடமையில்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சொத்தில் சம உரிமை அளிக்கப்படும்போது கடமையிலும் பெண் குழந்தைகள் சரிசமமாகப் பங்கு கொள்கிறார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆண் பிள்ளைகளைப் போலவே பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து, பெருந்தொகை செலவழித்து நகைகள் பூட்டித் திருமணம் செய்து வைத்து, பேறுகாலச் செலவுகளையும் ஏற்கும் பெற்றோர், பின்னர் ஆண் பிள்ளைகளுக்குக் கொடுப்பது போல் சொத்திலும் சம பங்கு தருகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் பெற்றோர், தங்கள் முதுமைக் காலத்தில் பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி அவர்களின் பராமரிப்பில் இருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே என்று அக்கட்டுரை சுட்டிக்காட்டியது.
பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பு வரும்போது மட்டும் அது மகனின் கடமையாகவே சுருங்கிவிடுகிறது. தன் மனைவியின் வீட்டில் சொத்தை அனுபவிக்கும் ஒரு மருமகன், மாமனார் மாமியாரைத் தன் வீட்டில் வைத்துப் பராமரிக்க முன்வருவதில்லை. சொத்தில் மட்டும் சம உரிமை என்று சட்டம் இயற்றுபவர்கள், பெற்றோரைப் பராமரிக்கும் கடமையிலும் மகனும் மகளும் சரிபாதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டாமா? சொத்தில் சரிபாதியைப் பெற்றுச் சென்ற சகோதரியும் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்று சகோதரன் எதிர்பார்ப்பது இயல்பானது. சொத்தில் சம பங்கு தந்துவிட்டுப் பராமரிப்பில் சம பங்கு இல்லையென்றால், பெற்றோர் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்கள் பெருகும் அபாயம் ஏற்படும் என்று அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தது.
மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு இயற்றும் இத்தகைய சட்டங்கள் காலப்போக்கில் கடுமையான சமூகச் சீரழிவுகளையே ஏற்படுத்தும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளாலேயே பாரமாகப் பார்க்கப்பட்டு, புறக்கணிக்கப்படுவதும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படும் அவலமும் இதனால் உருவாகிறது. ஆனால், குடும்பத்திற்கான நிதிச் சுமைகளையும் பொறுப்புகளையும் ஆணின் தலையில் சுமத்தும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப சொத்துப் பங்கீட்டைத் தீர்மானிக்கும் இஸ்லாத்தின் சட்டமே காலத்தை வென்று நிற்கும் நீதியான சட்டமாகும். உலகம் இன்று சம உரிமை பேசினாலும், இறுதியில் இஸ்லாம் வழங்கிய இந்தத் தீர்வே சரியானது என்பதை மனித சமூகம் உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.
குடும்பப் பொறுப்புகளையும் நிதிச் சுமைகளையும் முழுமையாக ஆணே சுமக்க வேண்டும் என்ற எதார்த்தத்திற்கு ஏற்ப, சொத்துப் பங்கீட்டையும் நீதியுடன் வகுத்தளித்திருக்கும் இஸ்லாமியச் சட்டமே காலத்தால் அழியாத அறிவுப்பூர்வமான தீர்வாகும்.