02) பெண்ணுரிமையை உலக்குக்கு கற்றுக்கொடுத்த மார்க்கம்

நூல்கள்: காலத்தை வென்ற இஸ்லாம்

இஸ்லாத்தினுடைய சட்டங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் அதன் வணக்க வழிபாடுகள் அனைத்தும் காலத்தைக் கடந்து, எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடியவையாக விளங்குகின்றன.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
(அல்குர்ஆன்: 108:1)➚

فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
(அல்குர்ஆன்: 108:2)➚

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
(அல்குர்ஆன்: 108:3)➚

இந்தியாவில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக ஒரு விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெண்களை இழிவுபடுத்தும் மதக் கோட்பாடுகளை விமர்சித்து ஒரு தரப்பினர் பேசும்போது, அதற்குப் பதிலாக பிற மதங்களை நோக்கி விரல் நீட்டி, இஸ்லாத்திலும் பெண்ணுரிமைக்கு எதிரான நிலைப்பாடுகள் இருப்பதாகக் கூறி விவாதத்தைத் திசைதிருப்ப சிலர் முயல்கின்றனர். இந்தச் சூழலில், பெண் உரிமை தொடர்பாக இஸ்லாம் முன்வைக்கும் சட்டங்கள் காலத்தை வென்று நிற்கின்றனவா என்பதை நடுநிலையோடு ஆராய்வது அவசியமாகிறது.

பெண்கள் உரிமையில் மிக முக்கியமான ஒன்று பெண்களின் மறுமண உரிமை. இல்லற வாழ்க்கை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இயல்பான தேவையாகும். அந்த இல்லற சுகத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும்தான் ஒரு பெண் தன் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் உற்றார் உறவினர்களையும் பிரிந்து கணவன் வீட்டுக்குச் செல்கிறாள். இந்த உணர்வும் மகிழ்ச்சிக்கான தேவையும் ஆணுக்கு மட்டுமே உரியதல்ல; அது பெண்ணுக்கும் சமமாக உரியது. ஆணுக்கு மட்டும் அந்த உரிமை உண்டு, பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தோடு அது முடிந்துவிட்டது என்று கூறுவதை விடப் பெரிய அநீதி இருக்க முடியாது.

ஆனால் உலக வரலாற்றைப் பார்த்தால், பெண்களுக்கு இந்த இல்லற சுகமும் மறுமண உரிமையும் மிகக் கடுமையாக மறுக்கப்பட்டே வந்தன. ஒரு பெண் ஒரு முறை மட்டுமே திருமணம் செய்து வாழ வேண்டும்; கணவன் அவளை விவாகரத்து செய்துவிட்டாலோ அல்லது கணவன் இறந்துவிட்டாலோ அவள் மறுமணம் செய்யவே கூடாது என்பதுதான் உலகெங்கும் எழுதப்படாத சட்டமாக இருந்தது. இளம் வயதிலேயே கணவனை இழந்த பெண்கள் வாழத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டு வாழாவெட்டி என்றும், விதவை என்றும் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர். அறிவியல் ரீதியாக உடலின் இயற்கை உணர்வுகளும் தேவைகளும் உள்ள அந்தப் பெண்களுக்கு இல்லற உரிமையை மறுப்பது கற்பனை செய்ய முடியாத கொடுமையாக நீடித்தது.

இத்தகைய சூழலில்தான் இஸ்லாம் ஒரு புரட்சிகரமான சட்டத்தை உலகிற்கு அறிவித்தது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி, கணவனை இழந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு முழு உரிமை உண்டு என்று இஸ்லாம் பிரகடனம் செய்தது. கணவன் இறந்த பெண்களுக்கு மட்டும், முந்தைய கணவனின் கர்ப்பம் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக நான்கு மாதங்கள் பத்து நாட்கள் என்ற காலக்கெடுவை நிர்ணயித்துவிட்டு, அதன்பின் அவர்கள் மறுமணம் செய்வதை எவரும் தடுக்கக் கூடாது என்று கட்டளையிட்டது.

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்துகொள்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறும் இறைவன், فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ (அவர்கள் தங்கள் கணவன்மார்களைத் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள்) என்று எச்சரிப்பதோடு, இதனைப் பின்பற்றுவதுதான் உண்மையான இறைநம்பிக்கை என்றும் சுட்டிக்காட்டுகிறான்.

ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ
உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவோருக்கு இது உபதேசிக்கப்படுகிறது.
(அல்குர்ஆன்: 2:232)➚

அல்லாஹ்வையும் இறுதித் தீர்ப்பு நாளையும் நம்பக்கூடியவர்களுக்கு மட்டுமே இந்த அறிவுரை பயனளிக்கும் என்று கூறி, ஒரு பெண்ணின் மறுமண உரிமையை எவரேனும் தடுத்தால் அவன் இறைநம்பிக்கையாளனாகவே இருக்க முடியாது என்ற மிகக் கடுமையான நிலைப்பாட்டை இஸ்லாம் முன்வைக்கிறது.

அதேபோன்று கணவனை இழந்த பெண்களின் மறுமண உரிமையையும் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ بِٱلْمَعْرُوفِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன்: 2:234)➚

இன்றைய காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்களும் விவாகரத்து பெற்ற பெண்களும் மறுமணம் செய்து கொள்வது இயல்பான உரிமையாகத் தெரியலாம். கடந்த ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளாகத்தான் எல்லா மதங்களைச் சேர்ந்த பெண்களும் மறுமணம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த உரிமையை அந்தந்த மதங்களின் கோட்பாடுகள் வழங்கவில்லை; மாறாக அந்த மதங்களின் பிற்போக்குச் சட்டங்களை எதிர்த்துப் போராடியே இந்த உரிமைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டன.

பாரம்பரிய மத சித்தாந்தங்கள் பெண்களின் மறுமணத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாகவே நின்றன. கணவன் இறந்தால் மனைவியும் அவனது சிதையிலேயே விழுந்து சாக வேண்டும் என்ற உடன்கட்டை ஏறும் வழக்கம் திணிக்கப்பட்டது. வாழ்ந்தால் இனி எந்தச் சுகமும் இல்லை, ஆபரணங்கள் அணிய முடியாது என்று மூளைச்சலவை செய்யப்பட்டு பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். விதவைகள் சபைகளில் சேர்க்கப்படக் கூடாத தீய சக்திகளாகச் சித்தரிக்கப்பட்டனர். கணவன் குடிகாரனாகவோ தொழுநோயாளியாகவோ இருந்தாலும் அவனோடுதான் வாழ வேண்டும், இல்லாவிட்டால் உணவு, உடை, படுக்கை இன்றி விலக்கி வைக்க வேண்டும் என்று போதித்த சித்தாந்தங்களுக்கு மத்தியில், இஸ்லாம் மட்டுமே ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் மறுமண உரிமையை இறைச்சட்டமாக நிலைநாட்டியது.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உடல் தேவைகளும் உணர்வுகளும் உண்டு என்பதை நவீன அறிவியல் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக இல்லற வாழ்வை அனுபவித்த இளம் பெண்களுக்கு இயல்பான ஹார்மோன் சுரப்புகளால் உணர்ச்சித் தூண்டுதல்கள் ஏற்படுவது இயற்கை. அந்தத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள மறுமணம் செய்ய அனுமதிக்காமல் தடுத்து வைப்பது அவர்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும்; அவர்களை நடைப்பிணங்களாக வாழ வைப்பதற்குச் சமமாகும் என்பதே அறிவியல் உண்மையாகும்.

உடற்கூறியல் சார்ந்த எந்த மருத்துவரிடமும் விஞ்ஞானியிடமும் கேட்டாலும், பெண்களுக்கு இந்த இயற்கை உரிமை மறுக்கப்படக் கூடாது என்பதுதான் அவர்களின் உடற்கூறு ரீதியான முடிவாக இருக்க முடியும். மனைவியோடு வாழும்போது, அவள் அடையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் அன்பையும் கணவனாக இருக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள். அவ்வாறிருக்க, தனக்குப் பிறகு அந்த மகிழ்ச்சி அவளுக்குக் கிடைக்கக் கூடாது என்று நினைப்பது எந்த வகையில் நியாயமாகும்? இருவருக்கும் பொதுவான ஒரு நடைமுறையாக இருந்தால் கூட, அதை ஒரு தியாகம் என்று கருதலாம். ஆனால், மனைவி இறந்துவிட்டால் கணவன் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொள்கிறானா? வாழ்த்தும் போது ‘ஈருடல் ஓருயிர்’ என்று கூறிவிட்டு, நடைமுறையில் அவ்வாறு செய்வதில்லை. மனைவி இறந்த உடனே மற்றொரு திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு எந்தத் தடையும் இருப்பதில்லை. ஆண் மட்டும் மறுமணம் புரிந்து கொள்ள சட்டம் அனுமதித்துவிட்டு, பெண்களுக்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பது அப்பட்டமான அநீதியாகும்.

இன்று முஸ்லிமல்லாத பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த மறுமண உரிமை, அவர்களைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிம்களைப் பார்த்ததன் விளைவாகவே கிடைத்தது. நபி (ஸல்) அவர்கள் கி.பி. 610-இல் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனப்படுத்திய காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் பெண்களை உலகம் கவனித்து வந்தது. கணவன் இறந்தால் சில மாதங்களிலேயே அவர்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள்; விவாகரத்து பெற்றால் அடுத்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அந்த மகிழ்ச்சியை எளிதாக அடைந்து விடுகிறார்கள் என்பதை உலக மக்கள் பார்த்து வந்தனர். தமக்கும் அத்தகைய வாழ்வுரிமை வேண்டும் என்ற கோரிக்கையும் புரட்சியும் அவர்களுக்குள் வெடித்ததன் பின்னரே, காலத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற சித்தாந்தங்கள் தோல்வியடைந்தன.

காலமெல்லாம் வழிபாட்டிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டும் என்று கூறிப் பெண்களை அடிமைப்படுத்திய சூழல் உலகெங்கும், குறிப்பாக இந்தியாவிலும் நிலவியது. கணவன் இறந்த பிறகு அவனது மனைவி வாழவே கூடாது என்ற நிலை இருந்தது. மீறி வாழ்ந்தாலும் சிகையலங்காரம் செய்யாமல் மொட்டையடிக்கப்பட்டு, உடலின் ஆசைகளை அடக்க வேண்டும் என்பதற்காகப் புழக்கடையில் கூழாங்கற்களைப் பரப்பி அதில் படுக்க வைக்கும் கொடுமைகளும் அரங்கேறின.

அத்தகைய கொள்கைகள் பயனற்றுப் போன பின்னரே மறுமணம் செய்யலாம் என்ற நிலைக்கு வந்தார்கள். ஆனால், அந்த மாற்றம் அவர்கள் பின்பற்றிய மத சித்தாந்தங்களின் அடிப்படையில் வரவில்லை; மாறாக, இத்தனை காலம் சொன்னது தவறு என்று ஓரங்கட்டிவிட்டுப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலமே நிகழ்ந்தது. பிற சட்டங்களின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வந்ததால், அந்த மத சித்தாந்தங்கள் தோற்றுவிட்டன என்பது தெளிவாகிறது. ஆனால் இஸ்லாம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விதவைப் பெண்களுக்கு வழங்கிய மறுமண உரிமையின் பயனை அவர்கள் பல தலைமுறைகளாக அனுபவித்து வருகிறார்கள்.

இந்தியாவின் வரலாற்றை உற்று நோக்கினால் இந்த உண்மை புரியும். கணவன் இறந்தவுடன் எரியும் சிதையில் மனைவியைத் தூக்கி வீசும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்தியாவில் பரவலாக இருந்தது. அன்றைய வங்காள மாகாணத்தில் மட்டும் ஆண்டுக்கு 378 பெண்கள் வரை உடன்கட்டை ஏறி வந்தனர். கி.பி. 1818 வாக்கில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 839 ஆக உயர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகார பலமும், வில்லியம் கேரி மற்றும் ராஜாராம் மோகன்ராய் போன்றோரின் தீவிர முயற்சியும் இருந்த காரணத்தினால் மட்டுமே, 1829-ஆம் ஆண்டு உடன்கட்டை ஏறுதல் குற்றம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 600 முதலே முஸ்லிம் பெண்கள் கணவன் இறந்ததும் தம் உயிரை மாய்த்துக் கொள்ளாமல், இல்லறத்தில் முடங்கிக் கிடக்காமல், விரும்பினால் மறுமணம் செய்து வாழும் உரிமையைப் பெற்று வந்திருக்கிறார்கள். ஆனால், மற்ற பெண்களுக்கு வாழும் உரிமையே 1829-ல்தான் கிடைத்தது.

1829-இல் இயற்றப்பட்ட சட்டம் கூட மறுமணத்திற்கான சட்டம் அல்ல; மாறாக, உயிரோடு வாழும் உரிமையை மட்டுமே அது வழங்கியது. உயிரோடு இருந்தும் பிணமாக வாழும் விதவைப் பெண்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு, 1856-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதிதான் ஆங்கிலேயர் ஆட்சியில் ‘இந்து விதவைகள் மறுமணச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.

இன்று சாதாரணமாகக் கிடைக்கும் இந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தால், தன் மகள் அல்லது சகோதரியின் நிலையை எண்ணி எந்தப் பெற்றோரும் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு, இதை ஒரு பிரச்சனையாகவே கருதாத ஒரு காலக்கட்டத்தில், இஸ்லாம் பெண்கள் விஷயத்தில் புரட்சிகரமான தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்தது. இஸ்லாம் அன்றே இந்த வழியைக் காட்டியிருக்காவிட்டால், உலகம் முழுவதும் இந்த மாற்றம் வந்திருக்காது. முஸ்லிம்களின் இல்லங்களில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் புரிந்து மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டு, தங்களுக்கும் அது போன்ற வாழ்வுரிமை வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவியதன் விளைவாகவே சமுதாயம் இந்த உரிமையை வழங்க முன்வந்தது. காலத்தை வென்ற கொள்கை இஸ்லாமியக் கொள்கை மட்டுமே என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

இவ்வாறிருக்க, தற்காலத்தில் சிலர் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள். மனுஸ்மிருதி குறித்து முஸ்லிம்கள் கருத்து தெரிவிக்கும்போது, அதற்குப் பதிலளிப்பதாகக் கூறி சில குர்ஆன் வசனங்களைத் தவறாகச் சித்தரித்து இணையத்தில் பதிவுகளைப் பரப்பி வருகிறார்கள்.

சமூக ஊடகங்களில் இஸ்லாத்தின் பெண்ணுரிமை குறித்தும், விவாகரத்துச் சட்டங்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களும் வினாக்களும் எழுப்பப்படுகின்றன. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும்போது, அவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்த்து வைக்காமல் விவாகரத்து செய்ய இஸ்லாம் வழிகாட்டுகிறது. இருவரையும் சேர்த்து வைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, அவை தோல்வியடையும் போதுதான் விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது. மனைவி தன் தரப்பிலிருந்து விவாகரத்து கோரினால் அது உடனடியாக முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால், கணவன் விவாகரத்து செய்யும்போது உடனடியாக அனைத்துத் தொடர்புகளும் முறிந்துவிடுவதில்லை.

கோபத்திலோ அவசரத்திலோ விவாகரத்து கூறிவிட்ட கணவன், மனைவியின் அருமையைப் புரிந்து கொள்வதற்காக இஸ்லாம் மூன்று மாத கால அவகாசத்தை வழங்குகிறது. இந்த மூன்று மாத காலத்திற்குள் அவன் விரும்பினால் தன் மனைவியை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்; புதிய திருமண ஒப்பந்தம் தேவையில்லை. இந்த கால அவகாசம் முடியும் வரை அந்தப் பெண் வேறொருவரைத் திருமணம் செய்ய முடியாது; கணவன் மனைவி உறவும் முழுமையாக நீங்கிவிடுவதில்லை. ஒருவேளை மூன்று மாதங்கள் கடந்துவிட்டால் இருவருக்கும் இடையிலான திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிடும். எனினும், அதன் பிறகும் வேறொரு திருமணம் செய்யாமல் இருக்கும் இருவரும் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால், முறைப்படி புதிய மஹர் நிர்ணயித்து, சாட்சிகளுடன் புதிய திருமணம் செய்து கொண்டு வாழ இஸ்லாம் அனுமதிக்கிறது.

இவ்வாறு மீண்டும் இணைந்து வாழும் தம்பதியருக்குள் சில ஆண்டுகள் கழித்தோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகோ மீண்டும் பிணக்கு ஏற்பட்டு, கணவன் இரண்டாவது முறையாக விவாகரத்து கூறினாலும் இஸ்லாம் உடனடியாக உறவை முறித்துவிடுவதில்லை. இப்போதும் மூன்று மாத கால அவகாசம் உண்டு. அந்த மூன்று மாதங்களுக்குள் அவன் அவளைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் விவாகரத்துக் காலத்தில் பெண் கணவனின் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அவளை வெளியேற்றக் கூடாது என்றும், அவளும் வெளியேறிவிடக் கூடாது என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது. அவர்கள் ஒன்றாக இருக்கும்போது இணக்கம் ஏற்பட்டு, பிரிவை ரத்து செய்துவிட்டு மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை இஸ்லாம் திறந்து வைக்கிறது.

இதற்குப் பிறகும் இணைந்து வாழும் தம்பதியரிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு, கணவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்துவிட்டால், அதோடு அந்தத் திருமண பந்தம் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பிறகு முந்தைய இரண்டு முறைகளைப் போன்று அவளைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளவோ அல்லது புதிய திருமணம் செய்து கொள்ளவோ முடியாது. விவாகரத்தை ஒரு விளையாட்டாக மாற்றி தொடர்ந்து விவாகரத்து கூறிக்கொண்டே இருப்பதைத் தடுக்கவே இந்த இறுதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்குப் பிறகும் தம்பதியர் இணைவதற்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்கும் சட்டம் இஸ்லாத்தின் விவாகரத்து சட்டம் மட்டுமே.

மூன்றாவது விவாகரத்திற்குப் பிறகு அந்தப் பெண் சுதந்திரமானவள் ஆகிவிடுகிறாள். அவள் விரும்பினால் முறைப்படி வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம். அந்த இரண்டாவது கணவனுடன் வாழும் காலத்தில் அவனுக்கு மரணம் ஏற்பட்டாலோ அல்லது அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவன் அவளை விவாகரத்து செய்துவிட்டாலோ, அதன் பிறகு முதல் கணவனும் அவளும் விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதனைச் சிலர் தவறாகச் சித்தரித்து விமர்சிக்கிறார்கள். கணவனைப் பிரிந்த ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் தனித்து வாழ வேண்டும் என்று கருதாமல், அவளது தேவைகளையும் உணர்வுகளையும் மதித்து மறுமணம் செய்யும் உரிமையை இஸ்லாம் முழுமையாக வழங்குகிறது.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய விவாகரத்து மற்றும் மறுமணச் சட்டங்கள் பெண்ணின் சுயமரியாதையையும் உரிமைகளையும் பாதுகாக்கும் காலத்தை வென்ற சட்டங்களாகும்; விவாகரத்தைத் தடுத்து குடும்பங்களை இணைப்பதற்கே இஸ்லாம் முன்னுரிமை அளிக்கிறது.