10) மனித நேயம் காத்த நபிகளார்

நபிகளாரின் தனி தன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், மாபெரும் ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்த அதே வேளையில், மக்களிடம் எவ்வாறு பரிவோடும் மனிதநேயத்தோடும் பழகினார்கள், மக்கள் நலனில் எவ்வாறு அக்கறை செலுத்தினார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்தவுடன், மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் கட்டப்பட்ட வரலாற்றிலும் அவர்களுடைய இந்த மனிதநேயமும் சமூக அக்கறையும் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.

மதீனா வந்தடைந்த பிறகு, முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடித் தொழுவதற்கு ஒரு பள்ளிவாசல் தேவைப்பட்டது. அப்போது பேரீச்சம்பழங்களை உலர்த்தப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு திடல் பள்ளிவாசலுக்குப் பொருத்தமாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டது. அது யாருக்குச் சொந்தமானது என்று விசாரித்தபோது, தந்தை இறந்துவிட்ட சஹ்ல், சுஹைல் என்ற இரு அநாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. நபி (ஸல்) அவர்கள் அவ்விரு சிறுவர்களையும் அழைத்து, பள்ளிவாசலுக்காக அந்த இடத்தை விலைக்குத் தருமாறு கேட்டார்கள்.

அதற்கு அந்தச் சிறுவர்கள், பள்ளிவாசலுக்காக அந்த இடத்தை எவ்வித விலையும் பெறாமல் இலவசமாகவே தந்துவிடுவதாகவும், அதற்கான நன்மையை அல்லாஹ்விடமே எதிர்பார்ப்பதாகவும் கூறினார்கள். மதீனாவுக்கு அப்போதுதான் வந்து சேர்ந்த நபி (ஸல்) அவர்களுக்காக, தங்களின் சொத்தை அன்பளிப்பாக வழங்கும் அளவிற்கு அந்தச் சிறுவர்கள் உயர்ந்த மனப்பக்குவத்தைக் கொண்டிருந்ததன் பின்னணியில் ஒரு வரலாற்று அடித்தளம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோதே, மதீனாவிலிருந்து சென்ற எழுபது பேர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தால் தங்களின் உயிரைக் கொடுத்தாவது பாதுகாப்போம் என்று உறுதிமொழி அளித்த அந்த நல்லடியார்களில் அஸ்அத் இப்னு ஸுராரா என்பவரும் ஒருவர். மதீனாவில் மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கான அடித்தளத்தை அமைத்து, ஊருக்கு வெளியே முதன்முதலில் ஜும்ஆ தொழுகையையும் நடத்தியவர் அவரே. அந்த அஸ்அத் இப்னு ஸுராராவின் பராமரிப்பில்தான் இந்த அநாதைச் சிறுவர்கள் வளர்ந்து வந்தனர். அவர்களின் தந்தை இறந்த பிறகு, அவர்களின் சொத்துக்களைப் பாதுகாத்து அவர்களை நன்முறையில் வளர்த்தெடுத்தவர் அவரே. அந்த கொள்கைப் பிடிப்பும் தியாக உணர்வும் கொண்ட வளர்ப்பின் காரணமாகவே, கேட்ட மாத்திரத்தில் அந்தச் சிறுவர்கள் நிலத்தை இலவசமாகத் தர முன்வந்தார்கள்.

அனைவரும் பொருளாதாரச் சிரமத்தில் இருந்த அந்தச் சூழலில், பள்ளிவாசலுக்கு ஓர் இடம் இலவசமாகக் கிடைப்பதை எவரும் எளிதாக ஏற்றுக்கொள்வர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சிறுவர்களாகவும் அநாதைகளாகவும் இருக்கும் அவர்களின் நிலத்தை இலவசமாகப் பெற்றால், அது அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கவனித்தார்கள். எனவே, அவர்களின் தியாக உள்ளத்தைப் போற்றினாலும், இடத்தை அன்பளிப்பாகப் பெற மறுத்து, அதற்குரிய கிரயத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள்.

فابتاعه منهما
நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரிடமிருந்தும் அதனை விலைக்கு வாங்கினார்கள்.
(புகாரி: 3906) ➚

மக்கள் ஆர்வத்தோடு முன்வந்தாலும், அவர்களின் தகுதியையும் சூழலையும் ஆராய்ந்து, அவர்களின் உலக வாழ்வும் மறுமை வாழ்வும் பாதிக்கப்படாத வகையில்தான் நபி (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த சான்றாகும். மேலும், மஸ்ஜிதுந் நபவி அமைந்த அந்த இடம் மக்களிடம் வசூல் செய்யப்பட்டு வாங்கப்பட்டதல்ல. மக்காவில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து, ஹிஜ்ரத்தின்போது தங்களுடன் கொண்டு வந்த சொந்தப் பணத்தைக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தை வாங்கினார்கள். பொதுவாக வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களின் நிதியைக் கொண்டே கட்டப்படும் நிலையில், ஒரு ஆன்மீகத் தலைவர் தன் சொந்தப் பணத்தைக் கொண்டு இறையில்லத்திற்கான நிலத்தை வாங்கியது தனித்துவமான வரலாற்று நிகழ்வாகும்.

இதேபோன்று, மக்களின் விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய நீதியையும் அக்கறையையும் கஅப் இப்னு மாலிக் அவர்களின் வரலாற்றுச் சம்பவத்திலும் நாம் காணலாம். தபூக் போர் என்பது எதிரிகள் பெரும் எண்ணிக்கையிலும், முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலும் இருந்த, மிகுந்த சிரமமான காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போராகும். உடல் வலிமை உள்ள அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், பலவீனர்கள், நோயாளிகள் மற்றும் பெண்கள் தவிர எவரும் பின்தங்கக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள்.

அனைத்து நபித்தோழர்களும் போருக்குப் புறப்பட்ட நிலையில், நயவஞ்சகர்கள் மட்டும் பொய்யான காரணங்களைக் கூறிப் போருக்குச் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிட்டனர். அவர்களோடு சேர்ந்து கஅப் இப்னு மாலிக் உள்ளிட்ட வசதி படைத்த மூன்று நபித்தோழர்களும் புறப்படாமல் பின்தங்கிவிட்டனர். தங்களின் வேகமான குதிரைகளின் மூலம் பின்னர் விரைந்து சென்று படையில் இணைந்து கொள்ளலாம் என்றும், அப்போது பேரீச்சம்பழ அறுவடை காலம் என்பதால் அறுவடையை முடித்துவிட்டுச் செல்லலாம் என்றும் எண்ணி, ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்து இறுதியில் போருக்குச் செல்லாமல் விடுபட்டுப் போயினர்.

நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்பி வந்தவுடன், போருக்கு வராத நயவஞ்சகர்கள் வந்து உடல்நலக்குறைவு போன்ற பல்வேறு பொய்களைக் கூறி மன்னிப்புக் கோரினர். அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்று நபி (ஸல்) அவர்கள் அவர்களை விட்டுவிட்டார்கள். ஆனால், அந்த மூன்று நபித்தோழர்களும் மற்றவர்களைப் போன்று பொய் கூறாமல் உண்மையை ஒப்புக்கொண்டார்கள். தங்களுக்கு உடல்நலமும் வாய்ப்பும் வசதியும் இருந்தும், உலக ஆசையினாலும் அலட்சியத்தினாலுமே போருக்கு வரவில்லை என்று நபி (ஸல்) அவர்களிடம் தங்கள் தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் ஏதேனும் பொய் சொல்லியிருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வெளிப்படையான நிலையை வைத்து அவர்களை விட்டிருப்பார்கள்.

பொதுவாக ஒருவர் உடல்நலமில்லை என்றோ, வேறு ஏதேனும் ஒரு காரணத்தையோ வெளிப்படையாகக் கூறினால், அதை அப்படியே ஏற்றுக்கொள்வதைத் தவிர மனிதர்களின் உள்ளங்களைத் துருவி ஆராயும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கும் அத்தகைய அதிகாரம் இருக்கவில்லை. இதன் காரணமாகவே நயவஞ்சகர்கள் தங்களின் பொய்யான காரணங்களைக் கூறித் தப்பித்துக் கொண்டு, முஸ்லிம்களைப் போல் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தபூக் போரில் கலந்துகொள்ளாத அந்த மூன்று நபித்தோழர்களும் அவ்வாறு பொய் கூறித் தப்பிக்காமல், தகுந்த காரணமின்றிப் பின்தங்கிவிட்ட உண்மையை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார்கள். இதனால் நபி (ஸல்) அவர்கள் கடும் கோபமடைந்து, அவர்களுக்குச் சமூகப் புறக்கணிப்பை அறிவித்தார்கள். அந்த மூன்று பேரிடமும் யாரும் பேசவோ, சலாம் சொல்லவோ கூடாது என்றும், அவர்களது மனைவியரும்கூட அவர்களுடன் வசிக்காமல் தங்களின் பெற்றோர் வீடுகளுக்குச் சென்றுவிட வேண்டும் என்றும் கடுமையான உத்தரவிட்டார்கள். பள்ளிவாசலுக்கு வந்து சலாம் கூறினாலும் எவரும் பதில் கூறாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டனர். எவராலும் கண்டுகொள்ளப்படாமல், மனைவியரையும் பிரிந்து தனிமையில் வாடிய அந்த மூன்று தோழர்களும் தங்கள் நிலையை எண்ணி மிகவும் மனம் நொந்துபோயினர்.

இத்தகைய இக்கட்டான நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மூன்று பேரையும் அல்லாஹ் மன்னித்துவிட்டதாக வசனம் இறங்கியது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த மூன்று பேரையும் மன்னிப்பதற்கு முன்பாக, நபி (ஸல்) அவர்களையும், அந்தப் புறக்கணிப்பில் ஈடுபட்ட முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் அல்லாஹ் மன்னித்ததாகவே குறிப்பிடுகிறான். ஏனெனில் சலாம் கூறினால் பதில் சொல்லாமல் இருப்பதோ, ஊர் ஒதுக்கி வைப்பதோ இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. தவ்பா செய்யும்படி அறிவுறுத்தலாமே தவிர, இவ்வாறு சமூகப் புறக்கணிப்பு செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதை உணர்த்தும் விதமாகவே, நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் உத்தரவை ஏற்றுப் புறக்கணித்த தோழர்களையும் அல்லாஹ் முதலில் மன்னித்ததாகக் கூறுகிறான்.

لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِىِّ
அல்லாஹ் நபியையும், போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட அந்த மூன்று பேரையும் மன்னித்துவிட்டான்.
(அல்குர்ஆன்: 9:117)➚

இந்த மன்னிப்பு கிடைத்ததும், முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து அந்த மூன்று தோழர்களையும் கட்டி அணைத்து சலாம் கூறி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். சஹாபாக்களைப் பொறுத்தவரை மறுமை சார்ந்த நற்செய்திகளையே அவர்கள் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதினார்கள். நாம் கேட்கும் மன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டானா என்பது நமக்குத் தெரியாது; ஆனால் தங்களுடைய மன்னிப்பை அல்லாஹ்வே குர்ஆனில் வெளிப்படுத்திவிட்டான் என்பது அவர்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தந்தது. அந்த மூன்று பேரில் ஒருவரான கஅப் இப்னு மாலிக் அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட எழுபது முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர். வசதி வாய்ப்புகளும் பேரீச்சந் தோட்டங்களும் அதிகம் இருந்ததால்தான், விளைச்சல் காலத்தில் அவற்றை விட்டுப் பிரிய மனமின்றி அவர் போருக்குச் செல்லாமல் பின்தங்கியிருந்தார். இப்போது அல்லாஹ் தம்மை மன்னித்துவிட்ட மகிழ்ச்சிக்காக, தம்முடைய அனைத்துச் செல்வங்களையும் أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ (அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தர்மமாக ஒப்படைத்து விடுகிறேன்) என்று கூறி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து ஒப்படைத்தார்.

ஒரு வசதியான மனிதர் தன்னுடைய சொத்து முழுவதையும் தானமாகத் தரும்போது, பொதுவாக ஓர் ஆன்மிகத் தலைவரோ அல்லது ஒரு சங்கமோ அதை எளிதாகப் பெற்றுக்கொண்டு ஏழைகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறிவிடக்கூடும். நபி (ஸல்) அவர்களுக்கும் அப்போது பல தேவைகளும், வறுமையில் வாடும் தோழர்களும் இருந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஆன்மிகத்தை வைத்து ஆதாயம் அடைய நினைக்கவில்லை. கஅப் அவர்கள் பாவமன்னிப்புக் கிடைத்த ஆர்வத்திலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இந்த முடிவை எடுக்கிறார் என்பதையும், வசதியாக வாழ்ந்து பழகிய அவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டால் பின்னர் சிரமப்படுவார் என்பதையும், அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினரும் உறவினர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கவனத்தில் கொண்டார்கள். எனவே, அவருடைய எதிர்கால நலனைக் கருதி அந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

அَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ
உன்னுடைய செல்வத்தில் ஒரு பகுதியை உனக்கே வைத்துக்கொள்; அதுவே உனக்குச் சிறந்தது.
(புகாரி: 2757) ➚

நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவுரைக்குப் பிறகு, கைபரில் உள்ள தனது பங்கை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைத் தர்மம் செய்வதாக கஅப் கூறினார்; அவரிடம் ஒரு பகுதி எஞ்சியிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். இதிலிருந்து, மக்கள் ஆர்வத்தின் காரணமாக நல்லது என்ற பெயரில் தமக்கோ தங்கள் குடும்பத்திற்கோ சிரமத்தை ஏற்படுத்திக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்பதை நாம் அறியலாம். ஒரே ஒரு பெண் பிள்ளையை மட்டுமே வாரிசாகக் கொண்டவர் தன் சொத்து முழுவதையும் தர்மம் செய்ய முற்பட்டபோதும், அபூ தல்ஹா அவர்கள் தம்முடைய பைருஹா தோட்டத்தை வழங்க முன்வந்தபோதும் நபி (ஸல்) அவர்கள் இதேபோன்றுதான் தடுத்து, உறவினர்களுக்கே வழங்குமாறு வழிகாட்டினார்கள். மக்களின் உலகியல் நலனிலும் நபி (ஸல்) அவர்கள் எத்தகைய அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு இவை சிறந்த சான்றுகளாகும்.

இதேபோன்று மற்றொரு நிகழ்வும் நடந்தது. பத்ரு போருக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அனைத்துப் போர்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அபூ சுஃப்யானே தலைமை தாங்கி வழிநடத்தினார். இதனால் ஏற்பட்ட இழப்புகளும் காயங்களும் தோழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. பிற்காலத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்கு வந்தபோது, அவரது பழைய செயல்பாடுகளை நினைவில் வைத்திருந்த முஸ்லிம்கள் அவரை அங்கீகரிக்கவோ மதிக்கவோ இல்லை. அவர் அருகில் வருவதைக் கண்டாலே மக்கள் விலகிச் சென்றனர்.

كَانَ الْمُسْلِمُونَ لَا يَنْظُرُونَ إِلَى أَبِي سُفْيَانَ وَلَا يُقَاعِدُونَهُ
முஸ்லிம்கள் அபூ சுஃப்யானைப் பார்ப்பதும் இல்லை; அவரோடு அமர்வதும் இல்லை.
(முஸ்லிம்: 2490) ➚

மக்கள் இவ்வாறு தம்மைப் புறக்கணிப்பதைக் கண்ட அபூ சுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, மக்கள் தன்மீது கொண்டுள்ள வெறுப்பை நீக்குவதற்காகத் தனது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டினார். அதில் முதல் கோரிக்கையாக, நற்குடும்பத்தைச் சேர்ந்த தம்முடைய மகள் உம்மு ஹபீபாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அபூ சுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு, மக்கள் தம்மை ஒதுக்கி வைப்பதாக உணர்ந்து அந்த இடைவெளியைக் குறைக்க நபி (ஸல்) அவர்களிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவதாக, தம் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அதற்குச் சம்மதித்தார்கள். இதன் மூலம் இஸ்லாத்திற்குப் பெரும் எதிரியாக இருந்தவர் நபி (ஸல்) அவர்களுக்கு மாமனாராக மாறினார்.

இரண்டாவதாக, தம் மகன் முஆவியாவை வஹீ உள்ளிட்ட ஆவணங்களை எழுதும் எழுத்தராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரினார். அதையும் நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தம் மகன் நபி (ஸல்) அவர்களுக்கு எழுத்தராகப் பணியாற்றும் பொழுது மக்கள் தன் மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

மூன்றாவதாக, தான் எவ்வாறு முன்பு எதிர்த்துப் போரிட்டாரோ, அதற்குப் பிராயச்சித்தமாக இனி வரும் போர்க்களங்களில் இஸ்லாத்திற்காகத் தலைமை தாங்கும் தளபதியாகத் தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரினார். அந்தப் பொறுப்பையும் தருவதாக நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். இந்த நிகழ்வு முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

நபியவர்களின் மாமனார் என்ற உறவு, எழுத்தாளராக விளங்கும் மகன், போர்க்களத்தில் அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய படைத்தளபதி என்ற பொறுப்பு ஆகியவை அபூ சுஃப்யான் அவர்களுக்கும் மக்களுக்குமிடையே இருந்த கசப்புணர்வை முற்றிலும் நீக்கி நெருக்கத்தை ஏற்படுத்தின. அவர் சமுதாயத்தில் முக்கியமான தலைவராக இருந்தவர் என்பதை உணர்ந்து, அவருக்குரிய மரியாதையை வழங்கி அந்த மனக்கசப்பை நீக்கவே நபி (ஸல்) அவர்கள் இந்த மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார்கள். கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் வெறுப்பது நியாயம்தான் என்று கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் கைவிட்டுவிடவில்லை. மாறாக, உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர் விஷயத்திலும் மிகுந்த அக்கறை காட்டினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மனிதர்களின் கடந்த காலத்தைக் குத்திக் காட்டாமல், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து சமூகத்தில் அவர்களுக்குரிய கண்ணியத்தை மீட்டெடுப்பதில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அக்கறையும் உளவியல் அணுகுமுறையும் நாம் பின்பற்ற வேண்டிய மிகச் சிறந்த பாடமாகும்.