அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவோம் !

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

அல்லாஹ்வின் கருணையும் அவனது நற்பாக்கியங்களும் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக.

وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
அல்லாஹ்வின் கருணையும் அவனது பாக்கியங்களும் உண்டாவதாக.

அல்லாஹ்வின் பேரருளால், அவன் நமக்கு அருட்கொடையாக வழங்கிய இரண்டு பெருநாட்களில் ஒன்றைக் கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இஸ்லாத்தில் இந்த இரண்டு பெருநாட்களை வழங்கிய இறைவன், அவற்றின் முதன்மையான நோக்கம் என்ன என்பதைத் திருமறைக்குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான். நோன்புப் பெருநாளைக் குறிப்பிடும்போதும், ஹஜ் பெருநாளைக் குறிப்பிடும்போதும், இறைவன் நமக்கு நேரான வழியைக் காட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதையே பெருநாட்களின் இலக்காகக் குறிப்பிடுகிறான்.

لِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا
உங்களுக்கு அவன் நேரான வழியைக் காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்த வேண்டும்.
(அல்குர்ஆன்: 22:37)➚

உலகில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் தங்களுடைய பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் வழிகாட்டுதல் எத்தகையது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொதுவாகப் பண்டிகைகள் என்ற பெயரில் மக்கள் தங்களுக்கே கேடு விளைவிக்கக்கூடிய காரியங்களையும், பிறருக்குத் துன்பம் தரக்கூடிய விஷயங்களையும் கொண்டாட்டம் என்ற பெயரில் செய்வதைப் பார்க்கிறோம்.

ஆனால், இஸ்லாமியப் பெருநாட்களில் நாம் பட்டாசுகளை வெடிப்பதில்லை; அதனால் தீ விபத்துகளோ, காற்று மாசுபாடோ ஏற்படுவதில்லை. நோயாளிகளுக்கோ, கல்வி கற்கும் மாணவர்களுக்கோ எந்தவிதத் தொந்தரவும் உண்டாவதில்லை. நமக்கும் பிற சமுதாய மக்களுக்கும் எவ்வித இடையூறும் இன்றி, புத்தாடை அணிந்து, சுவையான உணவுகளை உண்டு, இறைவனைத் தொழுது அமைதியான முறையில் பெருநாளைக் கொண்டாடுகிறோம். பிறருக்கு அச்சமும் பாதிப்பும் தராதவனே உண்மையான முஸ்லிம் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ
மனிதர்கள் தங்களுடைய உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் யாரிடமிருந்து பாதுகாப்பாக உணர்கிறார்களோ அவரே உண்மையான முஃமின் ஆவார்.
(திர்மிதி: 2627)

மற்றவர்கள் பண்டிகைகளின் போது வரம்புகளை மீறுவது போன்று நாம் மீறுவதில்லை. கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனங்களோ, கும்மாளங்களோ, மது அருந்திவிட்டு விருந்து வைப்பதோ நம்மிடம் கிடையாது. இந்த நாள் முழுவதுமே அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதற்காகவே அமைந்திருக்கிறது. பெருநாள் தொழுகையிலேயே வழக்கத்திற்கு மாறாகப் பன்னிரண்டு தக்பீர்கள் கூடுதலாகக் கூறி, அல்லாஹ் மிகப் பெரியவன் என்பதைப் பறைசாற்றுகிறோம். இத்தகைய தூய்மையான வழிகாட்டுதலை இறைவன் நமக்குத் தந்திருப்பதற்காக அவனை எவ்வளவு போற்றினாலும் தகும்.

கொண்டாடும் முறையைத் தாண்டி, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உற்றுநோக்கினால், இந்த அகிலத்தைப் படைத்துப் பராமரிக்கும் ஓரிறைக் கொள்கையை அது நமக்கு வழங்கியிருக்கிறது. அந்த உன்னதமான ஓரிறைக் கொள்கை நம்மிடம் இருப்பதால், பாமரனாக இருக்கும் ஒரு முஸ்லிம் கூடக் கடவுள் யார், கடவுள் அல்லாதது எது என்பதை மிகத் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்கிறான்.

இந்த வழிகாட்டுதல் மட்டும் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால், நாம் எவ்வளவு பெரிய பட்டதாரிகளாக, நீதிபதிகளாக, பிரதமர்களாக, விஞ்ஞானிகளாக ஆகியிருந்தாலும் கல்லையும், சூரியனையும், சந்திரனையும் கடவுள் என்று வணங்கியிருப்போம். சாணத்தையும், ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களையும் கடவுள் என்று கருதும் மூடநம்பிக்கையில் வீழ்ந்திருப்போம். ஆனால், இஸ்லாம் நமக்குக் கொடுத்திருக்கும் தெளிவின் காரணமாகக் கல்லைக் கல்லாகவும், மண்ணை மண்ணாகவும், மனிதனை மனிதனாகவும் எதார்த்தத்தோடு நோக்குகிறோம். பகுத்தறிவு பேசியவர்களே சிலைகளுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்யும் நிலைக்குச் சென்றபோது, இஸ்லாம் சுயமரியாதையையோ அறிவையோ பாழ்படுத்தாத கொள்கையை நமக்குத் தந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் படித்தவர்களால் கூட விளங்க முடியாத பேருண்மையைச் சாதாரண முஸ்லிம்களும் விளங்கும் பாக்கியத்தை இறைவன் தந்துள்ளான். இதற்காகவே இறைவன் தன் திருமறையில் நினைவூட்டுகிறான்.

لِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا
உங்களுக்கு அவன் நேரான வழியைக் காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்த வேண்டும்.
(அல்குர்ஆன்: 22:37)➚

நம்முடைய வணக்க வழிபாடுகளையும் இறைவன் மிகச் சிறந்த முறையில் அமைத்துத் தந்திருக்கிறான். தொழுகைக்காக நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு, எவ்வித மூடநம்பிக்கைகளுக்கும் இடமின்றி, இறைவனை மட்டுமே மனதில் நிறுத்தித் தொழுகிறோம். அங்கு ஏழை, பணக்காரன், கருப்பன், வெள்ளையன் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரும் சமமாக அணிவகுத்து நிற்கிறோம். இறைவனை வழிபடுவதற்குத் தனி வரிசையோ, கட்டணச் சீட்டுகளோ, ஆட்சியாளர்களுக்கோ அதிகாரிகளுக்கோ முதல் மரியாதையோ கிடையாது; யார் முதலில் வருகிறாரோ அவரே முதல் வரிசையில் நிற்கிறார். வழிபாட்டுத் தலங்களும் வீடுகளை விடத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன், மக்கள் இறை இல்லத்தின் அருகே ஆடல், பாடல், கூச்சல் குழப்பங்களையே வழிபாடாகக் கொண்டிருந்தார்கள். இதனைத் திருமறைக்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِندَ ٱلْبَيْتِ إِلَّا مُكَآءً وَتَصْدِيَةً
இறை இல்லத்தின் அருகே அவர்களுடைய தொழுகை சீட்டியடிப்பதும் கைதட்டுவதும் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன்: 8:35)➚

அப்படிப்பட்ட அறியாமையில் மூழ்கியிருந்த சமுதாயத்தை, ஒரு ராணுவக் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இறைவனை வணங்கும் சமுதாயமாக நபி (ஸல்) அவர்கள் மாற்றிக் காட்டினார்கள். இந்த நேர்வழி நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால், உடம்பில் அலகு குத்துவது, அந்தரத்தில் தொங்குவது, தரையில் உருள்வது, மண் சோறு உண்பது போன்ற உடலை வருத்தும் செயல்களையே வழிபாடாக நாமும் செய்திருப்போம். ஆனால், இறைவன் நமக்கு எந்தச் சிரமத்தையும் தராமல், அமைதியாக நின்று, குனிந்து வணங்கிச் செல்லும் அறிவுப்பூர்வமான வழிபாட்டு முறையைத் தந்துள்ளான். இத்தகைய எளிய, அழகான வழியைக் காட்டிய இறைவனை الله اكبر (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

வணக்கம் என்ற பெயரில் உடலை வருத்துவதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் நிழல் இருந்தும் வேண்டுமென்றே வெயிலில் நிற்பதைக் கண்டார்கள். அவர் ஏன் அப்படி நிற்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் விசாரித்தபோது, வெயிலில் நிற்பதாகவும், யாரிடமும் பேசாமல் மௌன விரதம் இருப்பதாகவும், உட்காராமல் நிற்பதாகவும் அவர் நேர்ச்சை செய்திருப்பதாக மக்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், இத்தகைய சிரமங்கள் இறைவனுக்குத் தேவையில்லை எனக் கூறி, அவரை நிழலில் வந்து அமரவும், பேசவும் உத்தரவிட்டார்கள். கடவுள் வழிபாட்டின் பெயரால் மனிதர்கள் உருவாக்கிய மடமைகளை ஒழித்து, அறிவுக்குப் பொருத்தமான வழியை நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள்.

அதேபோன்று, கடவுளுக்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டதாகக் கூறும் சிலர் ஆடைகளைத் துறந்து நிர்வாணமாகத் திரிகிறார்கள்; ஆனால், பசியைத் துறக்க முடியாமல் உணவுக்காகத் திருவோட்டை ஏந்தி அலைகிறார்கள். உண்மையிலேயே துறப்பதாக இருந்தால் இச்சைகளையும் பேராசைகளையும் தான் துறக்க வேண்டுமே தவிர, மனித மாண்பைப் பாழ்படுத்தும் ஆடைகளை அல்ல.

ஆடையைத் துறப்பதால் அடுத்தவருக்கு அது ஒரு அருவருப்பாக இருக்குமே தவிர, அதனால் என்ன பக்குவம் கிடைத்துவிடும்? வீட்டைத் துறப்பதால் என்ன பக்குவம் வந்துவிடும்? உண்ணும் உணவைக் கொஞ்சம் கட்டுப்படுத்தினால் உள்ளத்தில் ஒரு பக்குவம் ஏற்படும். அதற்காகத்தான் ஒரு மாத காலம் இவ்வளவுதான் உன்னால் துறக்க முடியும் என்று மார்க்கம் வரம்பு வைக்கிறது. ஆடையையோ, மனைவி மக்களையோ, வீடு வாசல்களையோ துறக்கச் சொல்லவில்லை. பகல் நேரங்களில் வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் இருந்து சுயக்கட்டுப்பாட்டைப் பழகுமாறு பணிக்கிறது. இதற்காக உண்ணாமல் பருகாமல் இருந்து செத்துப்போகச் சொல்லவில்லை; உண்ணும் நேரத்தை மாற்றி அமைத்திருக்கிறது.

சாதாரண நாட்களிலும் இரவில் தூங்கும்போது நாம் பல மணி நேரம் பசியோடுதான் இருக்கிறோம். ஆனால் அந்தப் பசியை உணர்வதில்லை. நோன்பின்போது விழித்திருக்கும் நிலையில் பசி தெரிகிறது; உணவு வேண்டும் என்று மனம் கேட்கிறது; ஆனாலும் அதைக் கட்டுப்படுத்துகிறோம். தான் உழைத்துச் சம்பாதித்த உணவையே இறைவனின் கட்டளைக்காகச் சாப்பிடாமல் பழகிய ஒருவன், அடுத்தவன் உணவை அநியாயமாகச் சாப்பிடுவானா? அடுத்தவனை ஏமாற்றுவானா? மனித குலத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக நோன்பு என்ற இத்தகையதொரு அழகான தவத்தை இஸ்லாம் கற்றுத்தருகிறது. இறைச்சி, மீன் சாப்பிடாமல் இருந்துவிட்டு மோர், பழச்சாறு என மற்ற அனைத்தையும் அருந்திக்கொண்டிருப்பதற்குப் பெயர் கட்டுப்பாடல்ல. தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டேகூட ஒரு மனிதனால் வாழ்ந்துவிட முடியும். எதையுமே உட்கொள்ள மாட்டேன் என்று தடுத்து நிறுத்துவதில்தான் உண்மையான கட்டுப்பாடு பிறக்கிறது.

அடுத்து ஜகாத் எனும் கடமையை எடுத்துக்கொண்டால், மனிதன் சம்பாதித்த பணத்திலிருந்து மனித குலத்தின் நன்மைக்காக இரண்டரை சதவீதத்தைச் செலவழிக்கச் சொல்கிறது. இதில் இறைவனுக்கு என்ன பயன் இருக்கிறது? தொழுகையிலாவது அல்லாஹ்வுக்கென்று ஒன்றைச் செய்கிறோம்; நோன்பிலாவது அல்லாஹ்வுக்காக நம்மைத் தற்காத்துக் கொள்கிறோம். ஆனால் ஜகாத்தில் இறைவனுக்கு என்று எதுவுமில்லை, முழுக்க முழுக்க மனிதர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. ஜகாத்தின் தொகையைப் பள்ளிவாசலுக்கோ, அதன் பராமரிப்புப் பணிகளுக்கோ, உண்டியலிலோ போட்டால் அது செல்லாது. அல்லாஹ் குறிப்பிட்ட எட்டு வகையான காரியங்களுக்கு மட்டுமே அதைச் செலவிட வேண்டும்; அந்த எட்டுமே மனித குலத்திற்குப் பயனளிக்கக்கூடியவை.

பணத்தின் மீதான மனிதனின் ஆசையை முற்றிலுமாக அறுத்துவிட முடியாது. அதே நேரத்தில் அனைத்தையும் தனக்கே வைத்துக்கொள்ளவும் அனுமதிக்க முடியாது. எனவேதான் அவனைப் பாதிக்காத வகையில், நாற்பதில் ஒரு பங்கு என்ற இரண்டரை சதவீதத்தை ஒதுக்கி ஏழைகளுக்குக் கொடுக்குமாறு இஸ்லாம் கூறுகிறது. கம்யூனிசம் சொல்வது போல எல்லாவற்றையும் பறித்து அனைவரையும் ஏழைகளாக்கி விடுவதும் இல்லை; முழுவதையும் தானே வைத்துக்கொள்ள அனுமதிப்பதும் இல்லை. உனது செல்வத்தில் பிறரது உழைப்பும் இருக்கிறது, சமூகம் நன்றாக இருந்தால்தான் நீயும் நிம்மதியாக வாழ முடியும் என்ற சமூகப் பொறுப்பை அது ஊட்டுகிறது. எந்த ஓர் அரசாங்கத்தின் நிர்ப்பந்தமும் இல்லாமல், இறைவனுக்கு அஞ்சி மக்கள் சுயமாக இந்த இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலம் ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி ஏற்படுகிறது.

அல்லாஹ் நமக்குத் தந்த அருட்கொடைகளிலேயே மிகப் பெரிய கொடை இந்த இஸ்லாம் மார்க்கம்தான். நம்முடைய செல்வம், செல்வாக்கு அனைத்தையும் விட இந்த நேர்வழியைப் பெற்றதற்காகவே நாம் அதிகம் பெருமைப்பட வேண்டும். அதனால்தான், அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துங்கள் என்று திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

لِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا
அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துங்கள்.
(அல்குர்ஆன்: 22:37)➚

அடுத்ததாக ஹஜ் கடமையை நோக்கினால், ஐம்பது லட்சம் மக்கள் ஓரிடத்தில் கூடும்போது நிலவும் அந்த ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் உலகத்தில் எந்த நாட்டிலும் எந்தச் சித்தாந்தத்திலும் காண முடியாது. அவ்வளவு நெரிசலிலும் திருட்டு இல்லை, பிக்பாக்கெட் இல்லை, கலவரங்கள் இல்லை. வெள்ளை நிறத்தவன், கருப்பு நிறத்தவன், பல நாட்டுக்காரன், பல மொழி பேசுபவன் அனைவரும் ஒரே விதமான ஆடையை அணிந்துகொண்டு சமத்துவமாக நிற்கிறார்கள். நாகரிகத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறும் நாடுகளில் கூட நிறவெறியும், மொழிப் பாகுபாடும், ஏழை பணக்கார வித்தியாசமும் நிலவும் சூழலில், ஹஜ்ஜில் உலகளாவிய சகோதரத்துவம் நடைமுறையில் சாத்தியமாகிறது. சஜ்தா செய்யும்போது ஒரு கறுப்பினத்தவரின் பாதம் அடுத்த வரிசையில் இருக்கும் வெள்ளையரின் தலையில் உரசுவதை எந்தவித அருவருப்பும் இன்றி ஏற்கும் அந்தச் சமத்துவமே இஸ்லாத்தின் தனிச்சிறப்பு.

இஸ்லாத்தின் கொடுக்கல் வாங்கல், விவசாயம், குடும்ப வாழ்க்கை, அரசியல் சட்டம், குற்றவியல் சட்டம் என எந்த ஓர் அம்சத்தை எடுத்துப் பார்த்தாலும் அதற்கு நிகரான ஒரு வழிகாட்டல் உலகில் இல்லை. ஒரு பொறுப்புள்ள தந்தை தன் மகனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து அவனை நல்வழிப்படுத்துவது போல, மனிதனின் திருமணம், மரணம், வியாபாரம் என அனைத்திலும் ஒரு ஒழுங்குமுறையை இந்த மார்க்கம் கற்றுத்தந்திருக்கிறது.

இறைவனுக்காக நாம் அறுத்துப் பலியிடும் குர்பானியைப் பற்றிப் பேசும்போதும் இறைவன் இந்த நேர்வழியையே நினைவூட்டுகிறான்.

لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَـٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ ۗ وَبَشِّرِ ٱلْمُحْسِنِينَ
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன்: 22:37)➚

நாம் அறுக்கும் பிராணிகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை; மாறாக நம்மிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடைகிறது. ஓர் ஆட்டை அறுப்பது என்பது, மார்க்கத்திற்காகத் தேவைப்பட்டால் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார் என்பதன் அடையாளமே அன்றி வேறில்லை. பிற மதங்களில் கடவுளுக்குச் செய்யப்படும் காணிக்கைகள் இடைத்தரகர்களிடமும் பூசாரிகளிடமும்தான் போய்ச் சேரும். ஆனால் இஸ்லாத்தில் கடவுளுக்காக அறுப்பது என்பது அந்த இறைச்சியை ஏழை எளியவர்களுக்கு வழங்குவதையே குறிக்கும்.

எனவே, அல்லாஹ் நமக்கு இத்தகைய அழகான நேர்வழியைக் காட்டியதற்காக அவனைப் பெருமைப்படுத்துவதே பெருநாட்களின் அடிப்படை நோக்கம். புத்தாடை அணிவதும் சுவையான உணவுகளை உண்பதும் நமக்கான இரண்டாம் பட்ச விஷயங்கள் மட்டுமே. ஆனால் இன்றோ, பிறரைப் பார்த்துப் பெருநாளில் பட்டாசு வெடிப்பது போன்ற வீணான காரியங்களில் மக்கள் ஈடுபடுகிறார்கள்.

பெருநாள் தினத்தில் பட்டாசு வெடிப்பதும், புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன என்பதற்காகத் திரையரங்குகளுக்குச் செல்வதும் நம் சமுதாயத்தில் பலரிடம் காண முடிகிறது. அல்லாஹ் தன்னைப் பெருமைப்படுத்துமாறு கட்டளையிட்டிருக்க, திரையரங்குகளில் முஸ்லிம்கள் திரள்வதும், சிலர் மதுக்கடைகளில் வரிசையில் நின்று பெருநாள் கொண்டாடுவதும் வேதனைக்குரிய காட்சிகளாகும். இந்த மார்க்கத்தின் கண்ணியத்தையும் பெருநாளினுடைய மகிமையையும் உணராத நிலையையே இத்தகைய செயல்கள் காட்டுகின்றன.

மற்ற நாட்களில் ஒருவர் தீய செயல்களில் ஈடுபட்டிருந்தால்கூட, இந்நாளில் அவற்றையெல்லாம் முற்றிலுமாக விட்டுவிட வேண்டும். ஏனெனில், இது அல்லாஹ் நமக்குத் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி, கூடுதல் சுயகட்டுப்பாட்டோடு அவனது மகத்துவத்தைப் பறைசாற்ற வேண்டிய நாளாகும். எனவே, அல்லாஹ்வின் பெருமையை உணர்ந்து, நாவினால் இயன்றவரை அதிகமாக அல்லாஹு அக்பர் என்று கூறி அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய நன்மக்களாக நாம் திகழ வேண்டும்.

பெருநாள் என்பது கேளிக்கைகளிலும் பாவங்களிலும் மூழ்குவதற்கான நாளல்ல; மாறாக, தீமைகளை முற்றிலும் தவிர்த்து, அல்லாஹ்வின் மகத்துவத்தைப் போற்றி அவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய புனிதமான நாளாகும்.