மனிதனை பக்குவப்படுத்தும் ஜும்மா தொழுகை
அல்லாஹ் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ள ஜும்ஆ தொழுகை இஸ்லாத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது. முஸ்லிம்கள் சமுதாயமாகத் தம் மார்க்க அடையாளத்தைத் தக்கவைத்து வாழ்வதற்கு இந்த வாராந்திரக் கூட்டு வணக்கமே பிரதான காரணமாக விளங்குகிறது. ஜும்ஆவின் மூலமாகவே வாரத்திற்கு ஒரு முறையாவது இறைவசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் செவிமடுத்து, மார்க்கப் பிடிப்பைப் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது. இத்தகைய தொடர்ச்சியான தொடர்பு மட்டும் இல்லாதிருந்தால் மக்கள் மார்க்கத்தை விட்டும் வெகுதூரம் விலகிச் சென்றிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலம் வரை அங்கு ஜும்ஆ தொழுகை நடைபெற்றதாகவோ அல்லது நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுததாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை. எதிரிகளின் கடுமையான கெடுபிடிகளும் அச்சமும் நிலவியதால் நபித்தோழர் அர்கம் என்பவரது வீட்டில் இரகசியமாகவே சந்திப்புகளும் வழிபாடுகளும் நடைபெற்று வந்தன. எனவே அச்சூழ்நிலையில் பகிரங்கமாக ஜும்ஆ தொழுகை நடத்தப்படவில்லை.
வரலாற்றில் முதலாவது ஜும்ஆ தொழுகை மதீனாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வருவதற்கு முன்பாகவே அங்கு ஜும்ஆ தொடங்கப்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தஃவாப் பணி செய்த காலத்தில், இப்ராஹீம் நபியின் வழிமுறைப்படி அறியாமைக் கால மக்களும் ஹஜ் செய்து வந்தனர். அந்தப் புனித மாதங்களில் யாருக்கும் இடையூறு செய்யக்கூடாது என்ற வழக்கத்தை மக்கத்து குறைஷிகள் கடைப்பிடித்தனர்; மேலும் வெளியூர் யாத்ரீகர்களைத் துன்புறுத்தினால் ஹஜ்ஜின் மூலம் கிடைக்கும் வியாபார வருவாய் பாதிக்கப்படும் என்ற அச்சமும் அவர்களுக்கு இருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, மக்காவுக்கு வருகை தந்த பல்வேறு ஊர் மக்களையும் சந்தித்து நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள்.
அவ்வகையில் மதீனாவிலிருந்து வந்த முக்கியப் பிரமுகர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்து மார்க்க அழைப்பு விடுத்தார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் பன்னிரண்டு பேர், நாற்பது பேர் எனப் பலரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மதீனா திரும்பினார்கள். அங்கு மக்காவில் நிலவியது போன்ற அச்சுறுத்தல்களோ உயிருக்கு ஆபத்தான அச்ச சூழலோ இருக்கவில்லை; இஸ்லாத்தை ஏற்றவர்கள் செல்வாக்குமிக்க கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். எனவே அமைதியான சூழல் வாய்த்ததும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் அங்கு ஜும்ஆ தொழுகையை நடத்தினார்கள்.
மதீனாவில் முதலாவது ஜும்ஆ தொழுகை அஸ்அத் இப்னு ஸுராரா என்பவரின் தலைமையில்தான் நடைபெற்றது. பத்ர் போரில் கலந்துகொண்ட மூத்த நபித்தோழரான கஅப் இப்னு மாலிக் தள்ளாத வயதை அடைந்து கண்பார்வை மங்கிய காலத்தில், அவரது மகன் அவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆ தொழுகைக்கு அழைத்துச் செல்வார். அப்போது ஜும்ஆவுக்கான பாங்கு சத்தம் கேட்டவுடன், கஅப் இப்னு மாலிக் அவர்கள் அஸ்அத் இப்னு ஸுராரா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக என்று பிரார்த்தனை செய்வார். பாங்கு சத்தம் கேட்டவுடன் அவரை நினைவுகூர்ந்து துஆ செய்வதற்கான காரணத்தை அவரது மகன் வினவியபோது, தாங்கள் இஸ்லாத்தை ஏற்று மதீனா திரும்பிய பின் தங்களுக்கு முதன்முதலாக ஜும்ஆ நடத்தியவர் அவர்தான் என்பதால் பாங்கொலி கேட்டதும் அவர் நினைவுக்கு வருவதாக விடையளித்தார்.
முதன்முதலில் ஜும்ஆ தொழுகை நடைபெற்ற இடம் ஒரு பள்ளிவாசலோ அல்லது வக்ஃப் செய்யப்பட்ட இடமோ அல்ல. மதீனா நகருக்கு வெளியே கற்கள் நிறைந்த வெட்டவெளிப் பகுதியிலேயே அவர்கள் கூடி ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினார்கள். ஜும்ஆவை பள்ளிவாசலில் மட்டும்தான் நடத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை இது காட்டுகிறது. மேலும், இந்த வணக்க முறையை அவர்கள் சுயமாக உருவாக்கவில்லை; நபி (ஸல்) அவர்களிடம் கற்றுக்கொண்டதற்கேற்பவே செயல்படுத்தினார்கள். இந்த முதல் ஜும்ஆ தொழுகையில் கஅப் இப்னு மாலிக் உள்ளிட்ட நாற்பது பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஜும்ஆ மக்காவிலோ அல்லது மதீனா நகரத்திலோ அமையாமல், நபி (ஸல்) அவர்கள் வருகை தருவதற்கு முன்பே, நபித்தோழர் அஸ்அத் இப்னு ஸுராரா அவர்களின் தலைமையில் மதீனாவுக்கு வெளியே ஒரு திறந்தவெளியில் சுமார் நாற்பது பேரைக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்தபோது, முதலாவதாக மதீனாவுக்கு வெளியே உள்ள குபா என்ற பகுதியில் தங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் தாயாரின் பூர்வீகம் மதீனாவாகவும், அவர்களது தாய்வழி உறவினர்கள் பனூ அம்ரு இப்னு அவ்ஃப் கோத்திரத்தாராகவும் இருந்தனர். உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி குபாவில் சில காலம் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள், அங்கே ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதுவே இஸ்லாத்தில் கட்டப்பட்ட முதலாவது பள்ளிவாசலான குபா பள்ளிவாசல் ஆகும். அங்கு தங்கியிருந்த காலத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைகளையும் ஜும்ஆ தொழுகையையும் நடத்தினார்கள். இறையச்சத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலை அல்லாஹ் தன் திருமறையில் போற்றிப் புகழ்கிறான்:
لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ
முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட பள்ளிவாசலே நீர் நின்று வணங்குவதற்கு மிகவும் தகுதியானது.
(அல்குர்ஆன்: 9:108)➚
அல்லாஹ் சிறப்பித்துக் கூறும் பள்ளிவாசல் குபா பள்ளிவாசலாகும். நபி (ஸல்) அவர்கள் அங்கு தங்கியிருந்தபோது தங்களின் முதல் ஜும்ஆ தொழுகையை நடத்தினார்கள். மதீனாவின் எல்லைக்கு வெளியே ஆரம்பத்தில் ஒருமுறை நடத்தப்பட்ட ஜும்ஆவிற்குப் பிறகு, வரலாற்றில் நடைபெற்ற இரண்டாவது ஜும்ஆ தொழுகை இதுவாகும்.
குபாவில் சில நாட்கள் தங்கியிருந்த பிறகு, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கும் மக்கள் தொடர்புக்கும் ஊரின் மையப்பகுதியே பொருத்தமாக இருக்கும் என்பதால், நபி (ஸல்) அவர்கள் இன்றைய மஸ்ஜிதுந் நபவி அமைந்துள்ள பகுதிக்கு வந்தார்கள். அங்கு அநாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான ஓர் இடத்தை அவர்கள் இலவசமாகக் கொடுக்க முன்வந்தபோதும் ஏற்காமல், நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொந்தப் பணத்தைக் கொடுத்து முறைப்படி விலைக்கு வாங்கினார்கள். அந்த இடத்தில்தான் மஸ்ஜிதுந் நபவி கட்டப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஜும்ஆவே வரலாற்றில் மூன்றாவது ஜும்ஆவாகும். முதல் ஜும்ஆ ஊருக்கு வெளியிலும், இரண்டாவது ஜும்ஆ குபாவிலும், மூன்றாவது ஜும்ஆ மஸ்ஜிதுந் நபவியிலும் நடைபெற்றன.
ஆரம்ப காலகட்டத்தில் முஸ்லிம்கள் மதீனாவிலும் குபாவிலும் மட்டுமே இருந்ததால், அவ்விரு இடங்களில் மட்டுமே ஜும்ஆ நடைபெற்று வந்தது. மதீனாவுக்கு வெளியே திறந்தவெளியில் ஆரம்பத்தில் தொழப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் கட்டப்பட்டதும் கைவிடப்பட்டு, பள்ளிவாசல்களில் மட்டுமே தொழுகை தொடர்ந்தது. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து, இஸ்லாத்தை ஏற்பதற்காகவும் தெரிந்துகொள்வதற்காகவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குழுக்கள் மதீனாவுக்கு வரத் தொடங்கின. அவ்வாறு முதன்முதலில் வெளியூரிலிருந்து மதீனாவுக்கு வந்தவர்கள் இன்றைய பஹ்ரைன் நாட்டின் ஜுவாஸா பகுதியைச் சேர்ந்த அப்துல் கைஸ் கோத்திரத்தார் ஆவர்.
தங்களுக்கும் மதீனாவுக்கும் இடையில் முதர் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்ததால் தங்களால் அடிக்கடி மதீனாவுக்கு வர முடியாது என்றும், எனவே தங்களுக்குப் போதுமான தெளிவான மார்க்கக் கட்டளைகளைக் கற்றுத் தருமாறும் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினர். நபி (ஸல்) அவர்களும் அவர்களுக்குரிய வழிகாட்டல்களை வழங்கினார்கள். அவர்கள் தங்களது ஊருக்குத் திரும்பிய பிறகு அங்கே ஜும்ஆ தொழுகையை நடத்தினார்கள். மதீனாவுக்கு வெளியே உலகிலேயே முதன்முதலாக நடைபெற்ற ஜும்ஆ தொழுகை, பஹ்ரைனில் உள்ள ஜுவாஸாவில் அப்துல் கைஸ் கூட்டத்தாரால் நடத்தப்பட்டதே ஆகும். அதன்பின் பஸ்ரா, கூஃபா என இஸ்லாம் பரவிய அனைத்துப் பகுதிகளிலும் ஜும்ஆ தொழுகை நிலைநாட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் இறுதிக் காலக்கட்டத்தில் இஸ்லாம் வேகமாகப் பரவியபோது ஜும்ஆ தொழுகையும் முஸ்லிம்கள் உள்ள அனைத்து இடங்களிலும் முக்கியமான வழிபாடானது.
எனினும், பிற்காலத்தில் வந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்களின் சுயநலத்திற்காக ஜும்ஆவின் மீது கட்டுப்பாடுகளை விதித்தார்கள். ஜும்ஆ உரை என்பது மக்கள் கூடும் இடமாக இருந்ததால், தங்களின் ஆட்சிக்கு எதிரான கருத்துகளோ அல்லது மக்கள் புரட்சியோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆட்சியாளர்கள் அதில் தலையிட்டனர். கிராமப்புறங்களில் ஜும்ஆ நடத்தக் கூடாது என்றும், பெருநகரங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும், ஆட்சியாளரின் பிரதிநிதியான அரசு அதிகாரிகள்தான் ஜும்ஆவை முன்னின்று நடத்த வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலுக்கும் உலக ஆதாயங்களுக்கும் கட்டுப்பட்டு சில மார்க்க அறிஞர்களும் மன்னரின் அனுமதி இல்லாமல் ஜும்ஆ நடத்தக் கூடாது என்று மனசாட்சிக்கு விரோதமாக ஃபத்வாக்களை வழங்கினர். எந்த ஓர் ஆட்சி அதிகாரமும் இல்லாத சூழலில்தான் வரலாற்றின் முதல் ஜும்ஆக்கள் நடத்தப்பட்டன என்பதற்கு மாற்றமாக இந்தத் தடைகள் உருவாக்கப்பட்டன.
இந்தியாவிலும் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்காலம் வரை இத்தகைய கட்டுப்பாடுகள் நீடித்தன. இன்றும் கூட பல அரபு நாடுகளில் ஜும்ஆ உரைகள் அரசின் கடுமையான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றன. அந்தந்த வாரத்தில் பேச வேண்டிய உரை அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு இமாம்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற அரசியல் விவகாரங்களோ சமகாலப் பிரச்சினைகளோ பேசப்படக் கூடாது என்ற தடைகளுடன் அந்த உரைகள் வரையறுக்கப்பட்டு, ஜும்ஆ மேடையின் சுதந்திரமான நோக்கம் முடக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரைகளில் ஒன்றைத்தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கி, மக்களுக்குச் சத்தியத்தை எடுத்துச் சொல்லக்கூடிய மிகச் சிறந்த சாதனமான ஜும்ஆ உரையைத் தவறான வழியில் பயன்படுத்தினார்கள். அதன் நன்மை மக்களைச் சென்றடைவதைத் தடுத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், நமது பகுதிகளில் கூட ஜும்ஆ உரையைத் தமிழில் நிகழ்த்தக் கூடாது, அரபியில்தான் நிகழ்த்த வேண்டும் என்று தடுத்து வந்தார்கள். பேசுபவருக்கும் அரபி சரளமாகப் பேசத் தெரியாது, கேட்பவர்களுக்கும் அது விளங்காது. ‘குத்பா கிதாப்’ என்ற புத்தகத்தை வைத்துக்கொண்டு, ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர் போன்ற மாதங்களுக்கு ஏற்ப அதில் அச்சிடப்பட்டிருந்த உரைகளை அப்படியே பார்த்து வாசிப்பார்கள்.
மக்களுக்கு எதுவும் விளங்கிவிடக் கூடாது, தங்களுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடக் கூடாது என்பதற்காகப் பள்ளிவாசல் முத்தவல்லிகளும் அரபியிலேயே வாசித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். குத்பா உரைகள் மூலமாக மக்கள் முறையாக மார்க்கத்தைக் கற்றிருந்தால், இன்று இணைவைத்தல் மற்றும் பித்அத்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நாம் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்திருக்காது. மக்கள் பள்ளிக்குச் செல்வதும், புரியாத மொழியில் எதையோ வாசிப்பதைக் கேட்டுவிட்டுத் திரும்புவதுமாக இருந்ததால் அவர்களுக்கு எந்த மார்க்க அறிவும் கிடைக்கவில்லை.
அவ்வாறு வாசிக்கப்பட்ட சில குத்பா புத்தகங்களில், மன்னர்களின் ஆட்சியைப் பலப்படுத்துமாறு துஆக்கள் இடம்பெற்றிருந்தன.
اللَّهُمَّ أَيِّدْ مُلْكَهُ وَسُلْطَانَهُ وَأَبِّدْ عَدْلَهُ وَإِحْسَانَهُ
யா அல்லாஹ்! இவருடைய ஆட்சியையும் அதிகாரத்தையும் பலப்படுத்துவாயாக! இவரது நீதியையும் நன்மையையும் நிலைத்திருக்கச் செய்வாயாக!
மன்னராட்சி இல்லாத இந்நாட்டிலும் கூட, தாங்கள் வாசிப்பதன் பொருள் என்னவென்றே தெரியாமல் இத்தகைய வரிகளைப் படித்து வந்தார்கள். தமிழ் மொழியில் குத்பா உரை நிகழ்த்தலாமா கூடாதா என்பதில் உலமாக்களிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவின. தவ்ஹீத் சிந்தனை பரவுவதற்கு முன்பு ராசகிரியில் உலமாக்கள் ஒன்றுகூடி, அரபியோடு தமிழிலும் உரை நிகழ்த்தலாம் என்று தீர்ப்பு வழங்கும் வரை, தமிழில் குத்பா நிகழ்த்துவது தடை செய்யப்பட்டிருந்தது. தமிழ் ஒரு மாற்றுமதத்தவரின் மொழி என்றும், அந்த மொழியில் மிம்பரில் பேசக் கூடாது என்றும் மக்களை மூளைச்சலவை செய்து, மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய சிறந்த வாய்ப்பைத் தடுத்து வைத்திருந்தார்கள்.
அதுமட்டுமின்றி, ஜும்ஆ தொழுகைக்குப் பெண்கள் வருவதையும் தடுத்து நிறுத்தினார்கள். பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது கட்டாயமில்லை என்றாலும், அவர்கள் விரும்பினால் அவர்களை அனுமதிக்க வேண்டும்.
لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ
அல்லாஹ்வின் அடியார்களான பெண்களை அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை விட்டும் தடுக்காதீர்கள்.
(முஸ்லிம்: 442) ➚
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஐந்து வேளைத் தொழுகைகளுக்கும் பெண்கள் வந்திருக்கிறார்கள். வசதி வாய்ப்புள்ளவர்கள் பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று உரையாற்றும் போது ‘காஃப்’ அத்தியாயத்தை ق وَالْقُرْآنِ الْمَجِيدِ (கண்ணியமிக்க இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக) அடிக்கடி ஓதுவதைக் கேட்டுத்தான் அதை மனனம் செய்ததாக ஒரு பெண்மணி குறிப்பிடும் செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் பெண்கள் ஜும்ஆ உரைகளைக் கேட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. பெண்களைப் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்காததன் விளைவாகவே, தங்களின் மார்க்க ஈடுபாட்டை வெளிப்படுத்த வழி தெரியாமல் பெண்கள் தர்கா வழிபாடுகளுக்குச் செல்லும் நிலை உருவானது.
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தும்போது அவர்களின் கண்கள் சிவக்கும்; குரல் உயரும்; ஒரு போர்ப்படைக்கு எச்சரிக்கை விடுத்துக் கட்டளையிடும் தளபதியைப் போன்று மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றுவார்கள். கேட்பவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழியும். அந்த அளவிற்கு உள்ளங்களைத் தைக்கும் விதமாக உரைகள் அமைந்திருந்தால் சமுதாயத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். புரியாத மொழியில் உரை நிகழ்த்தப்பட்டதால் மக்கள் தூங்குவதற்கும், தொழுகைக்கான இகாமத் சொல்லும் கடைசி நேரத்திற்கு மட்டுமே பள்ளிக்கு வருவதற்கும் பழகிவிட்டார்கள்.
பள்ளிவாசல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தகர்த்து, தவ்ஹீத் எழுச்சிக்குப் பிறகு இன்று குர்ஆனும் சுன்னாவும் மக்களுக்குப் புரியும் மொழியில் பேசப்பட்டு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை நாம் உறுதியாகப் பாதுகாக்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் பழைய நிலைக்குத் திரும்பிவிடாமல், உள்ளங்களைத் தொடும் விதமாகவும் இறையச்சத்தை ஊட்டக்கூடிய வகையிலும் ஜும்ஆ உரைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
ஜும்ஆவோடு நமது பணிகள் முடிந்துவிடுவதில்லை. பள்ளிவாசல் என்பது வாரத்தில் ஒரு நாள் கூடும் இடமாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. அங்குப் பெண்களுக்கு மார்க்க வகுப்புகள், ஆண்களுக்கான பயான்கள், சிறுவர்களுக்கான தீனிய்யாத் மற்றும் மக்தப் வகுப்புகள், தெருமுனைப் பிரச்சாரங்கள் போன்ற பல ஆக்கப்பூர்வமான பணிகளைத் திட்டமிட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி என்பது வெறும் தொழுகைக் கூடமாக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு தலைமைச் செயலகமாகத் திகழ்ந்தது. ஜகாத் பொருள்கள் சேகரிப்பு, போர்த் திட்டங்கள் வகுத்தல், வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்புகள், வழக்கு விசாரணைகள் மற்றும் சமூகத் தீர்வுகள் அனைத்தும் பள்ளிவாசலிலேயே நிகழ்ந்தன. எனவே, இப்பள்ளிவாசல் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும், வழிகாட்டக்கூடிய ஒரு உயிரோட்டமுள்ள மையமாகத் திகழ வேண்டும்.
ஜும்ஆ உரை என்பது மக்களுக்குப் புரியும் மொழியில் இறையச்சத்தை ஊட்டக்கூடியதாக அமைய வேண்டும்; பள்ளிவாசல்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வழிகாட்டும் தலைமைச் செயலகங்களாகச் செயல்பட வேண்டும்.