07) மக்களின் உரிமைகளை பேணிய நபிகளார்

நபிகளாரின் தனி தன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக எவ்வாறு பழகினார்கள், மக்களின் உரிமைகளை எவ்வாறு மதித்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். ஹுனைன் போரில் வெற்றி பெற்று நபி (ஸல்) அவர்கள் திரும்பிய பிறகு, எதிர்த்துப் போரிட்டவர்கள் திருந்தி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது, போர்க்களத்தில் கைப்பற்றப்பட்ட தங்களது பொருள்களையும் போர்க்கைதிகளையும் தங்களிடமே திருப்பித் தந்துவிடுமாறு அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அதற்குள் போரில் கிடைத்த பொருள்கள் மற்றும் கைதிகள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

ஏற்கனவே பெற்றுக்கொண்ட மக்களிடம் அக்கைதிகளையும் பொருள்களையும் திருப்பித் தரும்படி உடனே கட்டளையிட்டால் அது அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு பொருளை ஒருவருக்குக் கொடுத்துவிட்ட பிறகு, தேவைக்காக அதை மீண்டும் திருப்பிக் கேட்கும்போது அதை எவராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நபி (ஸல்) அவர்கள் வந்தவர்களிடம், கைதிகள் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் திருப்பித் தர முடியாது என்றும், இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்கள். அவர்கள் ஆலோசித்துவிட்டு, கனீமத்துப் பொருள்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்; எங்களிடமிருந்து பிடித்துச் செல்லப்பட்ட கைதிகளை மட்டும் திருப்பித் தந்துவிடுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களை ஒன்றுதிரட்டி, தங்களின் சகோதரர்களான அவர்கள் தவ்பா செய்து திருந்தி வந்துவிட்டதால் அவர்களது கைதிகளை அவர்களிடமே திருப்பி ஒப்படைத்துவிட விரும்புவதாகக் கூறினார்கள்.

إِنَّ فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلَاءِ جَاؤُونَا تَائِبِينَ وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ
உங்கள் சகோதரர்களான இவர்கள் தவ்பா செய்து திருந்தியவர்களாக நம்மிடம் வந்திருக்கிறார்கள்; எனவே இவர்களுடைய கைதிகளை இவர்களிடமே திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
(புகாரி: 2607, 2608) ➚

அவ்வாறு கூறினாலும் நபி (ஸல்) அவர்கள் தோழர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. உங்களில் யார் மனப்பூர்வமாகத் திருப்பித் தர விரும்புகிறீர்களோ அவர்கள் கொடுத்துவிடுங்கள்; மனப்பூர்வமாகத் தர இயலாதவர்கள், அடுத்த முறை போரில் பொருள்கள் கிடைக்கும்போது முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் கடன் அடிப்படையில் இப்போது கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்கள். அப்போது தோழர்கள் அனைவரும் طَيَّبْنَا (நாங்கள் மனப்பூர்வமாக விட்டுக்கொடுக்கிறோம்), தங்களுக்கு எந்தப் பிரதிபலனும் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

ஆனால், ஒரு பொதுச் சபையில் அனைவரும் கூடி இருக்கும்போது, சபையின் அழுத்தத்தாலோ அல்லது பிறர் முன்னிலையில் ஏற்படும் தயக்கத்தாலோ தங்களின் உண்மையான விருப்பத்திற்கு மாறாகச் சிலர் சம்மதிக்கக் கூடும். அன்றைய அடிமைச் சந்தை மதிப்பீட்டின்படி ஒவ்வொரு கைதியும் பெரும் மதிப்புடையவர்கள். அவ்வளவு மதிப்புமிக்க ஒன்றை எவரும் மனப்பூர்வமின்றி இழக்க நேரிடக்கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கவனமாக இருந்தார்கள். எனவே, சபையில் சொன்னதை வைத்து முடிவு செய்ய வேண்டாம் என்றும், அவரவர் தலைவர்களோடு தனித்தனியாக ஆலோசித்து, யார் மனப்பூர்வமாக விட்டுத்தர விரும்புகிறார்களோ அவர்கள் மட்டும் தலைவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி அனுப்பினார்கள். தலைவர்களும் சென்று மக்களிடம் விசாரித்துவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் மனப்பூர்வமாகவே கைதிகளை விட்டுக்கொடுக்க சம்மதித்ததை உறுதிப்படுத்தினார்கள். அதன் பின்னரே அக்கைதிகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டார்கள்.

போர்க்களத்தில் கைப்பற்றப்பட்டு மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில், சட்டம் போட்டுத் திணிக்காமல் மக்களின் மனங்களை வென்றெடுத்து, அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த சான்றாகும். மக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும்போது, அவர்கள் அதை மனப்பூர்வமாகச் செய்கிறார்களா அல்லது தயக்கத்தோடு செய்கிறார்களா என்பதைக் கண்டறிந்து செயல்படும் உயர்ந்த பண்பை நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

அதேபோன்று, முஸ்லிம் அல்லாத ஊர்களிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மதீனாவிற்கு வரும் மக்களின் தேவைகளையும் நபி (ஸல்) அவர்கள் பொறுப்பேற்று நிறைவேற்றினார்கள். வெளியூர்களிலிருந்து தனிநபர்களாக இஸ்லாத்தை ஏற்று வருபவர்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத சூழல் நிலவியது. அவ்வாறு வருபவர்களைப் புறக்கணிக்காமல், அவர்கள் அங்கு வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நபி (ஸல்) அவர்கள் அக்கறையோடு செய்து கொடுத்தார்கள்.

அதுபோன்ற ஒரு நிகழ்வில், மதீனாவிற்கு வெளியே ஒரு வீட்டில் வேலை செய்துவந்த கறுப்பின அடிமைப் பெண்மணி ஒருவர் இருந்தார். அவரை அந்த வீட்டார் அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து, தங்களோடு ஒருவராக அன்போடு தங்க வைத்துக்கொண்டனர். ஒருநாள் அவ்வீட்டுச் சிறுமி ஒருத்திக்குத் தோலில் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட விலைமதிப்புமிக்க நகையை அணிவித்து வெளியே அனுப்பினார்கள். அந்தச் சிறுமி நகையைக் கழற்றி ஓரிடத்தில் வைத்துவிட்ட நிலையில், அது காணாமல் போனது. வீட்டில் அந்தப் பெண்மணியைத் தவிர வேறு யாரும் இல்லாததால், அவர்மீது சந்தேகம் கொண்டு அவரை நிர்வாணப்படுத்திப் பலவாறாகத் துன்புறுத்திச் சோதனையிட்டனர். ஆனால் அவரிடம் நகை கிடைக்கவில்லை. அப்போது, இறைச்சித் துண்டு என நினைத்து அந்த நகையைத் தூக்கிச் சென்ற ஒரு பருந்து, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அதை அங்கே கொண்டு வந்து போட்டது.

தன் மீதான அபாண்டமான பழியை அல்லாஹ் நீக்கியதும், இனியும் அங்கு இருக்க விரும்பாத அப்பெண்மணி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மதீனாவிற்குப் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவ்வாறு வெளியூரிலிருந்து வந்த அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியிலேயே தங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்று வந்த ஒரு பெண்ணுக்குப் புகலிடமோ, சொந்த பந்தங்களோ இருக்கவில்லை; திரும்பிச் செல்லவும் வழியிருக்கவில்லை. அவர் ஓர் அடிமையாகவும் இருந்தார். அவருடைய பூர்வீகமும் தெரியாத நிலையில், திக்கற்ற நிலையில் இருந்த அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவி வளாகத்தில் தங்குவதற்கு ஒரு கூடாரத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

மஸ்ஜிதுந் நபவி என்பது தொழும் பள்ளிவாசலை மட்டுமே குறிப்பதல்ல. பள்ளிவாசலை விடப் பல மடங்கு பரப்பளவு கொண்ட திறந்தவெளி இடங்கள் அதைச் சுற்றி பள்ளிவாசலுக்குச் சொந்தமாக இருந்தன. தொழுகைக்கான இடத்தைத் தவிர்த்து, எஞ்சிய வளாகத்தில் ஜகாத் பொருள்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும்; ஜகாத்தாக வந்த ஆடு, மாடு, ஒட்டகங்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும்; போர்க்கைதிகள் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள்; வழக்கு விசாரணைகள் நடத்தப்படும்; வீர விளையாட்டுப் பயிற்சிகளும் அங்குதான் நடைபெறும். இவ்வளவு பெரிய வளாகமாக அது இருந்ததால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்கு அங்கே ஒரு கூடாரத்தை அமைத்துக் கொடுத்து அவர் மரணிக்கும் வரை அங்கேயே தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்கள்.

வெளியூரிலிருந்து வரும் வீடற்ற மக்களுக்கு, தகுந்த காரணங்கள் இருக்கும் பட்சத்தில், பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடங்களில் வசிப்பிடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாகும். தம்மை நாடி வந்தவர்களின் நலனில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த அக்கறை செலுத்தினார்கள்; ஆட்களைச் சேர்ப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், அவர்களின் தேவைகளைத் தாமே முன்னின்று நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள் (புகாரி: 439) ➚.

அதேபோன்று, பஹ்ரைன் பகுதியிலிருந்து வசூலிக்கப்பட்ட பெருமளவிலான ஜகாத் பொருள்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தன. நபி (ஸல்) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு பகுதிகளுக்கு வரி வசூலிப்பாளர்களை நியமித்திருந்தார்கள். அவர்களில் பஹ்ரைனிலிருந்து கொண்டுவரப்பட்ட செல்வங்களே மதீனாவுக்கு வந்தவற்றிலேயே ஆகப் பெரிய அளவாக இருந்தன. பேரீச்சம்பழங்கள் உள்ளிட்ட பல்வேறு செல்வங்கள் வந்து குவிந்தபோது, انْثُرُوهُ فِي الْمَسْجِدِ (இதைப் பள்ளிவாசலில் கொட்டிப் பரப்புங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அந்தப் பொருள்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தொழுகைக்குச் சென்றுவிட்டார்கள்.

தொழுகை முடிந்ததும் அப்பொருள்களின் அருகே அமர்ந்த நபி (ஸல்) அவர்கள், ஆள் பார்த்துப் பிரித்துக் கொடுக்காமல், ஒவ்வொருவரும் தம்மால் எவ்வளவு தூக்க முடியுமோ அந்த அளவுக்கு அள்ளிச் செல்லலாம் என்று அனைவருக்கும் பொதுவான ஓர் அனுமதியை வழங்கினார்கள். மக்களும் தங்களால் இயன்ற அளவுக்கு அள்ளிச் சென்றனர்.

அப்போது நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ் அங்கு வந்து, தமக்கும் கொடுக்குமாறு வேண்டினார். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த பின்னரும், தமக்குக் கூடுதலாக வேண்டும் என்று அவர் கோரினார். பத்ருப் போரில் எதிரணியில் நின்று கைதியாகப் பிடிபட்டபோது, தமக்காகவும் தம் சகோதரர் மகன் அகீலுக்காகவும் பெருந்தொகையை ஈட்டுத்தொகையாகக் கொடுத்துத் தம் செல்வம் கரைந்துவிட்டதால், தமக்கு அதிக அளவில் தருமாறு காரணம் கூறினார்.

அன்று பத்ருப் போரில் அப்பாஸ் கைதியாகப் பிடிக்கப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை என்பதைக் கருத்தில் கொண்டு அவரை ஈட்டுத்தொகை ஏதுமின்றி விடுதலை செய்துவிடலாம் என்று சில நபித்தோழர்கள் பரிந்துரைத்தார்கள். ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிய நபி (ஸல்) அவர்கள், அவரிடமிருந்து ஒரு திர்ஹத்தைக் கூட விட்டுக் கொடுக்காமல் முழுமையான இழப்பீட்டுத் தொகையையும் வசூலித்த பின்னரே அவரை விடுவித்தார்கள்.

அந்தப் பழைய இழப்பைக் கூறி அப்பாஸ் செல்வத்தை அள்ளியபோது, தம் ஆடையிலேயே அளவுக்கதிகமாக அள்ளிச் சேர்த்ததால் அவரால் அதைத் தோளில் தூக்கி வைக்க முடியவில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம், இதைத் தம் தோளில் தூக்கி வைக்க யாரையாவது பணிக்குமாறு வேண்டினார். ஆனால் நபி (ஸல்) அவர்களோ, உம்மால் தூக்க முடிந்ததை மட்டுமே நீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி யாரையும் உதவிக்கு அனுப்ப மறுத்துவிட்டார்கள். நீங்களாவது தூக்கி வையுங்கள் என்று அவர் வேண்டியபோதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். மற்றவர்களுக்கு இல்லாத தனிச்சலுகையைத் தம் உறவினர் என்பதற்காக வழங்க நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை.

வேறு வழியின்றி அப்பாஸ் மூட்டையிலிருந்த பொருள்களைக் கொஞ்சம் குறைத்தார்; அப்போதும் தூக்க முடியவில்லை. மீண்டும் ஒரு முறை குறைத்துப் பார்த்தும் இயலவில்லை. இறுதியில் மூன்றாவது முறையாக மேலும் குறைத்த பின்னரே அவரால் அதைத் தூக்க முடிந்தது. தம்மால் சுமக்க முடியாத அளவுக்கு அவர் பேராசையுடன் செல்வத்தை அள்ளியதைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து எழுந்தபோது, வந்த செல்வத்தில் ஒரு பொருள்கூட எஞ்சியிருக்கவில்லை; அனைத்தும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டன (புகாரி: 421) ➚.

செல்வம் வந்து குவிந்த தருணத்தில் நபர்களைப் பார்த்துச் சலுகை காட்டாமல், தம்மால் சுமக்க முடிந்ததை எடுத்துக் கொள்ளலாம் என்று அனைவருக்கும் பொதுவான உரிமையை நபி (ஸல்) அவர்கள் வழங்கிய தாராளத் தன்மையை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. அதே வேளையில், தம் பெரிய தந்தை என்பதற்காகப் போர்க்கைதிக்கான இழப்பீட்டிலும் சலுகை காட்டவில்லை; மூட்டையைத் தூக்கித் தருவது போன்ற சிறிய உதவியைக் கூட மற்றவர்களை விடக் கூடுதலாகத் தம் உறவினருக்குச் செய்துவிடக் கூடாது என்பதில் நடுநிலையாக நின்றார்கள். தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழும் போது தமக்கென எதையும் மிச்சம் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் மக்களுக்கே முழுமையாகக் கொடுத்து முடித்தார்கள்.

தனிநபர்கள் தங்களின் எதிர்காலத் தேவைக்காகப் பணத்தைச் சேர்த்து வைக்கலாம். ஆனால் பொது நிதிகள் வந்து குவியும் பொழுது, அவற்றைச் சேர்த்து வைக்காமல் உடனுக்குடன் மக்களுக்கு விநியோகித்துவிட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஜகாத் பொருட்களை ஒருபோதும் இருப்பு வைக்காமல், வந்தவுடனேயே மக்களுக்கு வழங்கி வந்தார்கள். ஒருமுறை தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் விரைவாகத் தம் வீட்டிற்குச் சென்று திரும்பினார்கள். வீட்டில் விநியோகிக்கப்படாமல் எஞ்சியிருந்த ஒரு வெள்ளிக் கட்டி தம் மனதில் உறுத்திக்கொண்டே இருந்ததால், உடனே சென்று அதை விநியோகித்துவிட்டு வந்ததாகக் கூறினார்கள். ஜகாத் போன்ற பொதுச் சொத்துக்கள் மக்களுக்கே உரியவை என்பதால், அவற்றைச் சேர்த்து வைக்காமல் கேட்பவர்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் வாரி வழங்கினார்கள்.

அதேபோன்று, மனிதர்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போதும் நபி (ஸல்) அவர்கள் மிக நேர்த்தியான அணுகுமுறையைக் கையாண்டார்கள். இரண்டு நபர்களுக்கிடையிலான ஒரு வழக்கில் நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தபோது, பாதிக்கப்பட்ட நபர் அந்தத் தீர்ப்பு அநீதியானது என்று பள்ளிவாசலுக்கு வெளியே நின்று சத்தமிட்டார். நபி (ஸல்) அவர்கள் தம் அதிகாரத்தைக் கொண்டு அவரை அடக்காமல், அவரிடம் சென்று நிலைமையை விளக்கினார்கள்.

إِنَّمَا أَنَا بَشَرٌ وَإِنَّهُ يَأْتِينِي الْخَصْمُ
நான் ஒரு மனிதன்தான்; என்னிடத்தில் வழக்காடிகள் வருகிறார்கள்.
(புகாரி: 7181) ➚

எல்லா வழக்குகளுக்கும் வஹீ மூலம் தீர்ப்பு வருவதில்லை என்றும், மனிதன் என்ற அடிப்படையில் இரு தரப்பினரின் வாதங்களையும் ஆதாரங்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க முடியும் என்றும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ஒருவர் தம் சாமர்த்தியமான வாதத்தினால் பிறருக்குரிய பொருளைப் பெற்றுக்கொண்டால், அவர் நரக நெருப்புத் துண்டையே தமதாக்கிக் கொள்கிறார் என்று எச்சரித்தார்கள். இதன் மூலம் தவறாகப் பொருளை அடைந்தவருக்கு மறுமை அச்சமும், வழக்கில் தோற்றவருக்குத் தமக்கு அநீதி இழைக்கப்படவில்லை, தம் வாதத்தை முறையாக முன்வைக்காததே காரணம் என்ற தெளிவும் கிடைத்தது.

பொது நிதியை உடனுக்குடன் விநியோகிப்பதிலும், மனித வரம்புகளை உணர்த்தி நீதியை நிலைநாட்டுவதிலும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய பொறுப்புணர்வும் வெளிப்படைத்தன்மையும் தலைமைத்துவத்திற்கான சிறந்த வழிகாட்டலாகும்.

ஆரம்ப காலத்தில் மிகக் கடுமையான சூழலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களின் குடும்பத்தார் மீது நபி (ஸல்) அவர்கள் கூடுதல் அக்கறை செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு இஸ்லாத்தை ஏற்று போர்க்களங்களில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினரையும், அவர்களின் சந்ததிகளையும் மிகுந்த பரிவோடும் பாசத்தோடும் கவனித்து, அவர்களது நலன்களை விசாரித்து வந்தார்கள்.

அதற்குச் சிறந்ததோர் உதாரணம் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஆவார். அவருடைய தந்தை அப்துல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் மக்காவில் சிரமத்தோடு மார்க்கப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலத்திலேயே மதீனாவிலிருந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நற்பேறு பெற்றவர்களுள் ஒருவர். மதீனாவிலிருந்து வந்த பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, மதீனா முழுவதும் பிரச்சாரம் செய்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றபோது அங்கு அவர்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைக்க இந்த அடித்தளமே காரணமாக அமைந்தது. அத்தகைய ஆரம்ப காலத் தியாகிகளில் ஒருவரான அப்துல்லாஹ், பத்ருப் போரிலும் உஹதுப் போரிலும் பங்கேற்றார்.

உஹதுப் போரின் முதல் நாள் இரவில் அவர் தனது மகன் ஜாபிரை அழைத்து, தான் இப்போரில் உயிர்த்தியாகியாக மரணிக்கக்கூடும் என்று கூறினார். தீவிரமாகப் போராடி உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்ற உறுதியினால் அவர் அவ்வாறு கருதினார். மேலும், தனக்கு இருக்கும் கடனை அடைத்துவிடுமாறும், தனது பெண் பிள்ளைகளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுமாறும் மகனுக்கு அறிவுறுத்தினார். அவர் கூறியபடியே உஹதுப் போரில் உயிர்த்தியாகியாக மரணித்தார். நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழராக இருந்த அப்துல்லாஹ், தன் மகனை இளம் வயதிலேயே விட்டுச் சென்றுவிட்டதால், ஜாபிர் மீது நபி (ஸல்) அவர்கள் மிகுந்த அன்பும் பிரியமும் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களோடு ஒரு போருக்குச் சென்ற பயணத்தின்போது நடந்த ஒரு சம்பவத்தை ஜாபிர் குறிப்பிடுகிறார். அப்பயணத்தில் ஜாபிர் ஓட்டி வந்த ஒட்டகம் களைப்படைந்து நகர முடியாமல் சண்டித்தனம் செய்து நின்றது. மக்கள் அனைவரும் முன்னோக்கிச் சென்றுவிட, ஜாபிருடைய ஒட்டகம் மெதுவாக அடி எடுத்து வைத்து நின்றதால் அவர் மட்டும் கடைசியாகத் தங்கிவிட்டார். முன்னணியில் சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து, ஜாபிர் கடைசியில் பின்தங்கி வருவதைக் கவனித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்களே திரும்பி வந்து, மக்கள் அனைவரையும் கடந்து அவரிடம் சென்று நலம் விசாரித்தார்கள்.

பின்தங்கியிருப்பவருக்கு உதவி செய்யுமாறு மற்ற தோழர்களிடம் சொல்லாமல், தாமே நேரடியாக வந்து அவருக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி, தம்மிடம் இருந்த கைத்தடியால் அந்த ஒட்டகத்தைத் தட்டினார்கள். உடனே படுத்துக்கிடந்த அந்த ஒட்டகம் எழுந்து நின்றது. பின்னர் ஜாபிரை அதில் ஏறி அமரச் சொன்னார்கள். ஜாபிர் ஒட்டகத்தில் ஏறியதும், நபி (ஸல்) அவர்கள் அவருடன் சேர்ந்து பயணித்தவாறே அவரிடம் நலம் விசாரித்தார்கள்.

வெறுமனே ஒட்டகத்தை எழச்செய்து புறப்பட்டுவிடாமல், அவருடைய தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், تَزَوَّجْتَ (திருமணம் முடித்துவிட்டாயா?) என்று கேட்டார்கள். அதற்கு அவர் தாம் திருமணம் முடித்துவிட்டதாகக் கூறினார். கன்னிப் பெண்ணையா அல்லது விதவையா என்று கேட்டபோது, விதவையையே திருமணம் செய்ததாகக் கூறினார். ஒரு வாலிபராக இருக்கும் நீர் ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கலாமே என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜாபிர், தம் தந்தை பெண் பிள்ளைகளை விட்டுவிட்டுச் சென்றுள்ளதாகவும், தம் சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் கூறினார். இளம் பெண்ணைத் திருமணம் செய்தால் அவர்களைச் சரியாகக் கவனிக்க முடியாது என்பதால், தாய்மை உணர்வோடு தம் சகோதரிகளைப் பராமரித்துப் பேண வேண்டும் என்பதற்காகவே சற்று வயதான பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், சண்டித்தனம் செய்யும் அந்த ஒட்டகத்தை தமக்கு விற்றுவிடுமாறு கேட்டார்கள். ஜாபிருக்கோ இந்த ஒட்டகத்தை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நபி (ஸல்) அவர்களுக்கு அந்த ஒட்டகம் தேவை என்பதற்காக அல்லாமல், ஜாபிருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே, أَتَبِيعُ جَمَلَكَ (உன் ஒட்டகத்தை எனக்கு விற்கிறாயா?) என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் சம்மதித்தார். நாற்பது திர்ஹம்கள் கொண்ட ஒரு ஊக்கியா விலைக்கு அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்கள் வாங்கிக்கொண்டார்கள். பின்னர், “மதீனா சென்றடையும் வரை நீயே இந்த ஒட்டகத்தைப் பயன்படுத்திக் கொள்; மதீனா வந்ததும் பணத்தைப் பெற்றுக் கொள்” என்று அவரிடம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் விரைந்து சென்று முன்னதாகவே மதீனாவை அடைந்துவிட்டார்கள். ஜாபிர் தாமதமாக வந்து சேர்ந்தபோது, நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவரிடம், “இப்போதுதான் வருகிறாயா?” என்று கேட்டுவிட்டு, ஒட்டகத்தை விட்டுவிட்டு பள்ளிவாசலில் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுமாறு கூறினார்கள். அவ்வாறே அவர் தொழுதுவிட்டு வந்ததும், நாற்பது திர்ஹம்களை எடைபோட்டுக் கொடுக்குமாறு பிலால் அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். பிலால் அவர்கள் எடையில் فَأَرْجَحَ فِي الْمِيزَانِ (அதிகப்படுத்திக் கொடுத்தார்). பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஒட்டகத்தை விட்டுவிட்டு ஜாபிர் புறப்பட்டுச் செல்லும்போது, நபி (ஸல்) அவர்கள் ஜாபிரைத் திரும்ப அழைத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன்னை அழைத்ததும், இந்த ஒட்டகத்தை விற்றுவிட்டோம் என்று நினைத்தால், الآنَ يُرَدُّ عَلَيَّ الْجَمَلُ (இப்போது இந்த ஒட்டகம் என்னிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும்) என்று ஜாபிர் பதற்றமடைந்தார். பயணத்திற்குத் தகுதியற்ற இந்த பலவீனமான ஒட்டகத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் தனக்குச் சிரமமாகிவிடுமே என்று அவர் கலங்கினார். ஆனால் நபி (ஸல்) அவர்களோ, அவருக்கு உதவும் நோக்கிலேயே அவ்வாறு செய்திருந்தார்கள். ஜாபிர் அருகே வந்ததும், “இந்த ஒட்டகத்தையும் நீயே வைத்துக்கொள், அந்தப் பணத்தையும் நீயே வைத்துக்கொள்; இது உனக்கு அன்பளிப்பு” என்று கூறி இரண்டையுமே அவருக்கே வழங்கினார்கள். ஆரம்ப காலத் தியாகியின் மகன் என்ற முறையில், அவருடைய தேவையை அறிந்து, மறைமுகமாக உதவி செய்ய நினைத்து ஒட்டகத்தை வாங்கி, முடிவில் அதையும் பணத்தையும் அவரிடமே திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் அக்கறையும் கருணையும் வெளிப்பட்டது.

பின்னர் மற்றொரு சந்தர்ப்பத்தில் ஜாபிர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தம் தந்தை விட்டுச் சென்ற கடனைத் திருப்பித் தருமாறு கடன் கொடுத்தவர்கள் தம்மை நெருக்குவதாகவும், கடன் கொடுத்தவர்களிடம் பேசி கால அவகாசமோ அல்லது தொகையில் ஏதேனும் சலுகையோ பெற்றுத் தருமாறும் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினார். அது ஜாபிர் வாங்கிய கடன் அல்ல; உஹதுப் போரில் வீரமரணம் அடைந்த அவருடைய தந்தை அப்துல்லாஹ் வாங்கிய கடனாகும். மரணிக்கும் முன் கடனை அடைத்துவிடுமாறு அவர் வஸிய்யத்தும் செய்திருந்தார். அதற்காகவே அவர் நபி (ஸல்) அவர்களிடம் உதவி நாடி வந்தார். அவர் உதவி கேட்டு வந்த அந்த ஆரம்பக் காலம் முஸ்லிம்களுக்குப் பொருளாதார ரீதியாகச் செழிப்பான காலமாக இருக்கவில்லை. உஹதுப் போருக்குப் பின்னரே கஜானாவில் செல்வம் பெருகி, மக்களுக்கு வாரி வழங்கும் நிலை உருவானது.

உஹதுப் போர்க் காலம் முஸ்லிம்களுக்குப் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமமான ஒரு காலகட்டமாக இருந்தது. அரசாங்கக் கருவூலத்தில் நிதி இல்லாத ஒரு சூழ்நிலை அது. பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு ஏராளமான வெற்றிகளும் பொருளாதார வசதிகளும் வந்தபோது, யாராவது மரணித்துச் சொத்து விட்டுச் சென்றால் அது அவருடைய வாரிசுகளுக்கு உரியது என்றும், அவர் கடனை விட்டுச் சென்றால் அதனைத் தாமே அடைப்பதாகவும் நபி (ஸல்) அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஆனால், அதற்கு முந்தைய ஆரம்ப காலத்தில் ஒருவர் கடனாளியாக மரணித்து, அக்கடனை அடைப்பதற்குரிய வழியும் இல்லாதிருந்தால், வேறெவராவது அப்பொறுப்பை ஏற்கும் வரை அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை வைக்க மாட்டார்கள். ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தையுடைய கடன் பிரச்சனை நிகழ்ந்ததும் அத்தகைய ஒரு வறுமையான காலகட்டத்தில்தான்.

அரசாங்கத்திடம் நிதி வசதி இல்லாத காரணத்தினால், நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பண உதவி கேட்க முடியாத சூழலில், தமக்குக் கடன் கொடுத்தவர்களிடம் பேசி ஏதேனும் சலுகை பெற்றுத் தருமாறு ஜாபிர் (ரலி) அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். பொதுவாக ஒருவருக்காகப் பரிந்து பேசி சலுகை கேட்க நாம் தயங்குவோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தயங்காமல் கடன் கொடுத்தவர்களிடம் சென்று அவருக்காகப் பேசினார்கள். எனினும், மரத்தில் விளைந்திருக்கும் பேரீச்சம்பழத்தின் அளவை விடக் கடனின் அளவு அதிகமாக இருந்ததால், கடன் கொடுத்தவர்கள் எவ்விதத் தள்ளுபடியும் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், தோட்டத்தில் உள்ள பேரீச்சம்பழங்கள் அனைத்தையும் அறுவடை செய்து, ஒவ்வொரு வகைப் பழங்களையும் தனித்தனி குவியல்களாகப் பிரித்து வைக்குமாறும், பின்னர் தம்மை அழைக்குமாறும் கூறினார்கள். அதன்படி ஜாபிர் (ரலி) அவர்கள் செய்துவிட்டு அழைக்கவே, நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து அந்தப் பழக் குவியல்களுக்கு அருகில் அமர்ந்தார்கள். கடன் கொடுத்தவர்களை அழைத்து அவரவருக்குரிய பங்குகளை அளந்து கொடுக்குமாறு பணித்தார்கள். மரத்தில் இருந்தபோது குறைவாகக் கணிக்கப்பட்ட அந்தப் பேரீச்சம்பழத்தில், நபி (ஸல்) அவர்களின் மூலம் அல்லாஹ் நிகழ்த்திய அற்புதத்தினால் பரக்கத் ஏற்பட்டது. கடன் கொடுத்த அனைவருக்கும் முழுமையாகக் கொடுத்துக் கணக்கு நேர் செய்யப்பட்ட பிறகும், ஏராளமான பேரீச்சம்பழங்கள் மிச்சமிருந்தன. இஸ்லாத்திற்காகத் தியாகம் செய்து மரணித்தவர்களின் குடும்பத்தினர் மீது நபி (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு அக்கறை காட்டினார்கள் என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

அகழ் போரின்போதும் நபி (ஸல்) அவர்களின் இத்தகைய அக்கறையைக் காண முடிகிறது. சுற்றியிருந்த கூட்டமைப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து மதீனாவை முற்றுகையிட வந்த போர் அது. எதிரிகளின் படை பலம் பன்மடங்கு அதிகமாக இருந்ததால், அவர்களைத் திறந்த வெளியில் நேரடியாக எதிர்கொண்டால் அதிக இழப்புகள் ஏற்படும் என்பதைக் கணித்த நபி (ஸல்) அவர்கள், ஆலோசனை செய்து மதீனாவைச் சுற்றிப் பெரிய அகழியை வெட்டச் செய்தார்கள். எதிரிகளின் குதிரைகளோ ஒட்டகங்களோ உள்ளே நுழைய முடியாதவாறு இந்த அகழி தடுத்ததால், அவர்களால் தூரத்திலிருந்து அம்புகளை மட்டுமே எய்ய முடிந்தது. கடுமையான குளிரும் மழையும் எதிரிகளைத் தாக்கியதால் அவர்களால் நீண்ட நாட்கள் முற்றுகையிட முடியாமல் பின்வாங்கிச் சென்றுவிட்டார்கள்.

அந்தப் போரில் எதிரிகள் தூரத்திலிருந்து அம்பு எய்தபோது, ஸஃது (ரலி) அவர்கள் பலத்த காயமடைந்தார்கள். பொதுவாகப் போர்க்களத்தில் ஒருவர் காயமடைந்தால் அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அல்லாஹ்வுடைய பாதையில் காயமடைந்த அந்தத் தோழரைத் தமது நேரடிக் கண்காணிப்பில் வைத்து, தினமும் பலமுறை நலம் விசாரிக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிவாசலிலேயே அவருக்காக ஒரு கூடாரத்தை அமைத்தார்கள்.

فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْمَةً فِي المَسْجِدِ
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ஒரு கூடாரத்தை அமைத்தார்கள்.
(புகாரி: 463) ➚

அந்தக் கூடாரத்திலிருந்து இரத்தம் வெளியே வழியும் அளவிற்கு ஸஃது (ரலி) அவர்களின் காயம் மிகக் கடுமையானதாக இருந்தது. இறுதியில் அவர்கள் அந்தப் பள்ளிவாசலின் கூடாரத்திலேயே மரணித்தும் போனார்கள். உலகத் தலைவர்கள் காயமடைந்தவர்களை ஒருமுறை சம்பிரதாயத்திற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள், தமக்காகவும் மார்க்கத்திற்காகவும் துன்பங்களைச் சுமந்த தோழர்களைத் தங்களின் இல்லத்திற்கு அருகிலேயே வைத்துக்கொண்டு, அவர்களுக்கு மன வலிமையையும் ஆறுதலையும் தரும் விதமாக மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொண்டார்கள்.

தனது இல்லத்திற்கு அருகிலேயே பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு கூடாரத்தை அமைத்து, அதில் ஸஃது (ரலி) அவர்களைத் தங்க வைத்து, நபி (ஸல்) அவர்கள் அவரைத் தொடர்ந்து சென்று நலம் விசாரித்து வந்தார்கள். மக்கள் மத்தியில் ஒருவராக நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு இரண்டறக் கலந்திருந்தார்கள் என்பதற்கும், அவர்களது விவகாரங்களில் எந்த அளவிற்கு அன்போடும் அக்கறையோடும் ஈடுபட்டார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு சிறந்த சான்றாகும். ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த வரலாற்றுச் செய்தி(புகாரி: 2097) ➚மற்றும் 2127 ஆகிய ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கித் தூய்மை செய்யும் பணியை ஒருவர் செய்து வந்தார். அவர் ஒரு கறுப்பினப் பெண் அல்லது ஆண் என்று அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு நாள் இரவில் மரணித்துவிட்டதால், இரவு நேரத்து இருட்டின் காரணமாக நபி (ஸல்) அவர்களுக்குச் சிரமம் தர வேண்டாம் எனக் கருதி, நபித்தோழர்களே அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்துவிட்டார்கள். பொதுவாக ஒருவர் மரணித்தால் அவரது ஜனாஸா தொழுகையை நபி (ஸல்) அவர்களே முன்னின்று நடத்துவார்கள். தங்களின் பிரார்த்தனை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்களும் விரும்புவார்கள், மக்களும் அதனை ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.

மறுநாள் காலையில் அந்த நபரைக் காணாத நபி (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தார்கள். அவர் இரவிலேயே மரணித்து அடக்கம் செய்யப்பட்டுவிட்ட விபரம் கூறப்பட்டபோது, “அவருடைய அடக்கஸ்தலத்தை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். பின்னர் அவரது கப்ரடிக்குச் சென்று, அங்கு நின்றவாறு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். கப்ரடியில் நின்று இவ்வாறு தொழுகை நடத்துவது, தங்களின் பிரார்த்தனை அந்த அடியாருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு சிறப்பு நடைமுறையாகும். இந்நிகழ்வு(புகாரி: 458) ➚-வது ஹதீஸில் பதிவாகியுள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், நபி (ஸல்) அவர்களிடம் எளியவர், உயர்ந்தவர் என்ற எவ்விதப் பாகுபாடும் இருந்ததில்லை. பள்ளிவாசலைச் சுத்தம் செய்யும் ஓர் எளிய மனிதர் இறந்த செய்தி தெரிந்ததும், பெயரளவில் மட்டும் விசாரித்துவிட்டு அவர்கள் கடந்து செல்லவில்லை. தான் வாழும் காலத்தில் தன் சமூகத்தில் மரணிக்கும் எந்தவொரு மனிதரும் தனது பிரார்த்தனையை இழந்துவிடக் கூடாது என்ற உண்மையான உள்ளத்து அக்கறையோடு, அவரது கப்ருக்கே நேரில் சென்று தொழுதார்கள். அடித்தட்டு மக்களையும் சமமாக மதித்து, அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றிய உன்னதத் தலைவராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

மனிதர்களில் எளியவர், உயர்ந்தவர் என்ற பாகுபாடின்றி அடித்தட்டு மக்களையும் உளப்பூர்வமாக நேசித்து, அனைவரையும் சமத்துவத்தோடு அரவணைத்து வாழ்வதே நபி (ஸல்) அவர்களின் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் முக்கியப் படிப்பினையாகும்.