06) எளிய மனித இயல்போடு நபிகளார்
நபி (ஸல்) அவர்கள் மக்களோடு எங்ஙனம் பழகினார்கள், மக்களுடைய உரிமைகளை எவ்வாறு மதித்தார்கள், அவர்களுடைய கண்ணியத்தை எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதைப் பார்க்கும்போது, ஹுனைன் போர் நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாகும். ஹுனைன் போரில் முஸ்லிம்களுக்குப் பல இழப்புகளும் கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டன; ஆயினும் ஆரம்பப் பின்னடைவுக்குப் பின் இறுதியில் முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றார்கள்.
வெற்றிக்குப் பிறகு எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட போர்க் கனீமத்துப் பொருட்களைப் பங்கீடு செய்வது அக்கால வழக்கமாக இருந்தது. அப்போரில் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்களும், மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள். ஆனால், அப்பொருட்களைப் பங்கீடு செய்யும்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகள் எவருக்கும் எதையும் வழங்காமல், மக்காவாசிகளுக்கே முழுமையாக வழங்கினார்கள். அக்ரஃ இப்னு ஹாபிஸ், உயைனா போன்ற முக்கிய அரபுப் பிரமுகர்களுக்கு தலா நூறு ஒட்டகங்கள் வீதம் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
இதைக் கண்ட அன்சாரித் தோழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அவர்களில் ஒருவர், இந்தப் பங்கீட்டில் நீதி செலுத்தப்படவில்லை என்றும், இது அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செய்யப்பட்டதும் அல்ல என்றும் விமர்சித்தார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதி செலுத்தவில்லை என்றால் வேறு யார் நீதி செலுத்த முடியும் என்று கேட்டுவிட்டு, மூஸா நபியவர்கள் இதைவிட அதிகமாகத் துன்புறுத்தப்பட்டபோதும் பொறுத்துக்கொண்டார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
وَاللَّهِ إِنَّ هَذِهِ الْقِسْمَةَ مَا عُدِلَ فِيهَا وَمَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ يَعْدِلِ اللَّهُ وَرَسُولُهُ رَحِمَ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்தப் பங்கீட்டில் நீதி செலுத்தப்படவில்லை; இது அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செய்யப்பட்டதும் அல்ல. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதி செலுத்தவில்லை என்றால் வேறு யார் நீதி செலுத்த முடியும்? மூஸாவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இதைவிட அதிகமாக அவர் துன்புறுத்தப்பட்டபோதும் பொறுத்துக்கொண்டார்.
(புகாரி: 3150) ➚
இந்த அதிருப்தி அந்த ஒருவரோடு நின்றுவிடாமல் அன்சாரித் தோழர்கள் அனைவரிடமும் பரவியது. தங்களை நபி (ஸல்) அவர்கள் பாரபட்சமாக ஒதுக்கிவிட்டார்களோ என்ற கவலை அவர்கள் மத்தியில் எழுந்தது. இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகள் அனைவரையும் ஒன்று கூட்டி, “அன்சாரிகளே! நீங்கள் வழிகேட்டில் இருந்தபோது அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? அவ்ஸ், கஸ்ரஜ் என்று பல கோத்திரங்களாகப் பிரிந்து கிடந்த உங்களை அல்லாஹ் என் மூலமாக ஒன்றுபடுத்தவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம், உண்மைதான்” என்று ஏற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து, தாம் அவ்வாறு பங்கீடு செய்ததற்கான நியாயத்தை நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு விளக்கலானார்கள்.
மக்கா வெற்றியைத் தொடர்ந்தே ஹுனைன் போர் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் பெரும் படையுடன் சென்றபோது எதிர்ப்புகள் ஏதுமின்றி மக்கா வெற்றிகொள்ளப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் அடைக்கலமும் பொதுமன்னிப்பும் வழங்கினார்கள். ஆனால், மக்காவை முஸ்லிம்கள் கைப்பற்றியதை மக்காவைச் சுற்றியிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் ஆகிய பலமிக்க அரபுக் கோத்திரங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்காவாசிகள் போரிடாமல் கோழைகளாகத் தோற்றுவிட்டார்கள் என்றும், கஃபாவை முஹம்மதிடம் விட்டுவிடக் கூடாது என்றும் அவர்கள் கருதினார்கள். எனவே பெண்களும் குழந்தைகளுமாகப் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு மக்காவில் உள்ள நபி (ஸல்) அவர்களைத் தாக்குவதற்காகப் புறப்பட்டார்கள். இக்கோத்திரத்தார் அருகில் வந்து வாளால் போரிடுவதை விடவும், தூரத்திலிருந்தே துல்லியமாக அம்பு எய்து தாக்கும் பேராற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள்.
கஃபாவின் புனித எல்லைக்குள் இரத்தம் சிந்தப்படக் கூடாது என்பதற்காக, அவர்கள் மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பே வழியிலேயே அவர்களை எதிர்கொள்ள நபி (ஸல்) அவர்கள் ஆலோசித்து முடிவெடுத்தார்கள். மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பலரையும் நபி (ஸல்) அவர்கள் தங்களது படையில் இணைத்துக் கொண்டார்கள். புதிதாக இணைந்தவர்களில் பலருக்கு உள்ளூர ஒரு தயக்கம் இருந்தது; கஃபாவைப் பாதுகாப்பதற்காகவே ஹவாஸின் கூட்டத்தார் வருகிறார்கள், அவர்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்ற மனக்கசப்பும் இருந்தது. அவர்கள் உளவியல்ரீதியாகப் போரில் ஈடுபடத் தயங்கிய காரணத்தால், இந்தப் போரில் வெற்றி பெற்றால் நல்ல முறையில் பங்கீடுகள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அளித்திருந்தார்கள்.
ஹுனைன் போர்க்களத்தில் முஸ்லிம்களின் படை எண்ணிக்கை எதிரிகளை விட மிக அதிகமாக இருந்தது. இந்த எண்ணிக்கை பலம் முஸ்லிம்களிடம் ஒருவித மமதையை ஏற்படுத்தியது. போரின் தொடக்கத்தில் முஸ்லிம்களே வெற்றி பெற்றார்கள். ஆனால், சிதறியோடிய எதிரிகளின் போர்ப் பொருட்களை முஸ்லிம்கள் சேகரிக்கத் தொடங்கியபோது, பதுங்கியிருந்த ஹவாஸின் படையினர் திடீரெனப் பின்னாலிருந்து சரமாரியாக அம்புகளை எய்து தாக்கினார்கள். எதிர்பாராத இத்தாக்குதலால் நிலைகுலைந்த முஸ்லிம்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ
ஹுனைன் (போர் நடந்த) நாளில், உங்களுடைய அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையை ஏற்படுத்தியபோது (அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான்).
(அல்குர்ஆன்: 9:25)➚
அந்தக் கடுமையான சூழலில், நபி (ஸல்) அவர்களோடு அபூபக்கர், உமர், இப்னு மஸ்ஊத், அப்பாஸ், அபூ சுஃப்யான் உள்ளிட்ட சுமார் எண்பது பேர் மட்டுமே உறுதியாக நின்றார்கள். ஆயிரக்கணக்கான எதிரிகளை எதிர்த்துத் தமது கோவேறு கழுதையில் அசையாமல் நின்ற நபி (ஸல்) அவர்கள், أَنَا النَّبِيُّ لَا كَذِبْ (நான் நபிதான், பொய் கிடையாது), أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ (நான் அப்துல் முத்தலிபின் பேரன்) என்று முழங்கி, பின்வாங்காமல் களத்தில் நின்றார்கள். பின்னர் அப்பாஸ் அவர்கள் மூலமாகச் சிதறி ஓடியவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அனைவரும் மீண்டும் ஒன்றுதிரண்டு போரிட்டு மாபெரும் வெற்றியை அடைந்தார்கள். இத்தகைய பெரும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றப்பட்ட கனீமத்துப் பொருட்களைப் பங்கீடு செய்தபோதுதான், நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர், அன்சாரி என்ற பாகுபாடின்றி மக்காவாசிகளுக்கே முன்னுரிமை கொடுத்து வழங்கினார்கள்.
ஹுனைன் போரின் வெற்றிப் பொருட்களைப் பங்கிட்டதில் நபி (ஸல்) அவர்கள் மக்காவாசி, மதீனாவாசி என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டவில்லை. ஆரம்ப காலத்தில் தங்கள் வீடு வாசல்களைத் துறந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்களுக்கும் அப்பொருட்களில் எதுவும் வழங்கப்படவில்லை; அன்சார்களுக்கும் வழங்கப்படவில்லை. மாறாக, மக்கா வெற்றியின் போதும் ஹுனைன் போரின் போதும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுப் போர்க்களத்திற்கு வந்தவர்களுக்கு மட்டுமே நபி (ஸல்) அவர்கள் அப்பொருட்களை வழங்கினார்கள்.
புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களின் உள்ளங்களை ஈர்ப்பதற்காக இவ்வாறு வழங்குவது அநீதியாகாது. ஒரு தகுந்த காரணம் இருக்கும்போது ஒருவருக்குக் கூடுதலாகக் கொடுப்பது நீதியே தவிர அநீதியாகாது. போதிய காரணமின்றி பாரபட்சம் காட்டினால் மட்டுமே அது அநீதியாகும். பலவீனமான நிலையில் இருப்பவருக்கு அதிகமாக வழங்குவதும், உறுதியான நிலையில் இருப்பவருக்குக் கொடுக்காமல் இருப்பதும் நியாயமானதே. அப்போதுதான் இஸ்லாத்தைத் தழுவிய அவர்களின் உள்ளங்களில் ஈமான் ஆழமாகப் பதியவில்லை; அவர்களது எண்ணங்களில் உலகியல் நோக்கங்களும் கலந்திருக்கக்கூடும். தங்கள் சொந்த மக்களையே எதிர்த்துப் போரிட்டு வந்துள்ள நிலையில், தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், முஹாஜிர்களும் அன்சார்களும் மறுமையை முதன்மையாகக் கொண்டவர்கள் என்பதால், இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள்.
எனினும் அன்சார்கள் மத்தியில் இது குறித்து வருத்தம் ஏற்பட்டதை அறிந்ததும், நபி (ஸல்) அவர்கள் அவர்களை அழைத்து விரிவாக விளக்கமளித்தார்கள். மக்கள் அனைவரும் ஆடுகளையும் ஒட்டகங்களையும் தங்களோடு ஓட்டிச் செல்லும்போது, அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களைத் தங்களோடு அழைத்துச் செல்வதே போதுமானது என்று கூறினார்கள். மேலும், உள்ளங்களை ஈர்ப்பதற்காக இவ்வாறு நிதிகளை வழங்குவதை அல்லாஹ்வும் மார்க்கத்தில் அங்கீகரித்துள்ளான் என்பதையும் சுட்டிக்காட்டினார்கள். அத்துடன் அவர்கள் மீது தாம் கொண்டுள்ள அளப்பரிய அன்பையும் வெளிப்படுத்தினார்கள்.
لَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الْأَنْصَارِ
ஹிஜ்ரத் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாகவே இருந்திருப்பேன்.
(புகாரி: 4330) ➚
மக்கள் அனைவரும் ஒரு பாதையிலும் அன்சார்கள் வேறு பாதையிலும் சென்றால், தான் அன்சார்களின் பாதையிலேயே செல்வதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். மற்றவர்கள் மேலாடையைப் போன்றவர்கள் என்றால், அன்சாரிகள் உடலோடு ஒட்டிய உள் அங்கியைப் போன்றவர்கள் என்று கூறி அவர்களது மேன்மையை உணர்த்தினார்கள். ஆரம்ப காலத்தில் மதீனாவுக்கு வந்த முஹாஜிர்களுக்குத் தங்கள் வீடுகளிலும் செல்வங்களிலும் சரிபாதியைத் தந்து அரவணைத்து, இஸ்லாம் தழைத்தோங்கத் தியாகம் செய்த அன்சார்களின் பேருதவியை நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் மறக்கவில்லை.
தான் ஓர் ஆட்சியாளராக இருந்தபோதும், நான் சொல்வதை நீங்கள் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரத்தைக் கொண்டு அவர்களை அடக்க நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை. மாறாக, அவர்களிடம் ஏற்பட்ட அதிருப்தியையும் தவறான புரிதலையும் நீக்கும் விதமாகத் தம் முடிவிற்கான நியாயங்களை விளக்கி, அவர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்த அணுகுமுறையைக் கண்டு நெகிழ்ந்த அன்சாரிகள், நபி (ஸல்) அவர்களின் முடிவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். மக்களிடம் அதிருப்தி ஏற்படும்போது அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், அதன் காரணத்தை விளக்கி அவர்களை அரவணைக்கும் பண்பே இதன் மூலம் வெளிப்படுகிறது.
அபூ மஸ்வூத் அவர்கள் அறிவிக்கும் மற்றொரு நிகழ்விலும் நபி (ஸல்) அவர்களின் எளிமையைக் காணலாம். நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு, ஒரு மன்னரைச் சந்திக்கப் போகிறோம் என்ற அச்ச உணர்வுடன் வெளியூரிலிருந்து ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வந்து அமர்ந்து பேசத் தொடங்கியபோது, பேரச்சத்தினால் அவருடைய தோள்பட்டைகள் நடுங்கின. நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக வாழும் எளிமை உள்ளூர் மக்களுக்குத் தெரிந்திருந்தது; ஆனால் அவரைப் போன்ற புதியவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை. அவரது நடுக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கனிவுடன் கூறினார்கள்:
هَوِّنْ عَلَيْكَ فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ
பதற்றப்படாமல் அமைதியாக இருங்கள்; நான் ஒரு மன்னர் அல்லன். உப்புக் கண்டம் உண்டு வாழ்ந்த ஒரு பெண்ணின் மகன்தான் நான்.
(இப்னு மாஜா: 3312) ➚
அன்றைய சூழலில் வசதி படைத்தவர்கள் அன்றாடம் புதிய இறைச்சியை வாங்கி உண்பார்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களோ ஒரு நாள் கிடைத்த இறைச்சியைக் காயவைத்து, உப்புக் கண்டமாக்கிப் பல நாட்களுக்கு வைத்து உண்பார்கள்.
வறுமையான சூழலில் காய்ந்த இறைச்சியை உண்டு வாழ்ந்த ஒரு தாயின் மகன்தான் தாம் என்பதை நினைவூட்டி, தம்மிடம் அச்சத்துடன் வந்த ஒரு மனிதரின் நடுக்கத்தை நபி (ஸல்) அவர்கள் போக்கினார்கள். நாட்டின் தலைவராகவும், மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள தூதராகவும் இருந்தபோதும் தம்மை ஓர் அரசனாக எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்று அம்மனிதரிடம் هَوِّنْ عَلَيْكَ (உன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்) என்று கூறினார்கள். மக்கள் மத்தியில் பழகும்போது அவர்களுடைய அச்சம், கவலை, சந்தேகம் அனைத்தையும் போக்கும் விதமாகவே நபி (ஸல்) அவர்களின் அணுகுமுறை எப்போதும் அமைந்திருந்தது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும்போது, ரக்அத்களைக் கூட்டியோ குறைத்தோ தொழுதுவிட்டார்கள். மார்க்கச் சட்டங்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் மூலமாகவே வருவதால், தொழுகையில் ஏதேனும் புதிய சட்டம் வந்துவிட்டதோ என்று எண்ணிய நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ (தொழுகையில் ஏதேனும் புதிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதா?) என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள், அத்தகைய மாற்றம் எதுவும் ஏற்படவில்லையே என்று கூற, நபித்தோழர்கள் صَلَّيْتَ كَذَا وَكَذَا (தாங்கள் இவ்வாறெல்லாம் தொழுதுவிட்டீர்கள்) என்று சுட்டிக்காட்டினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கித் திரும்பி அமர்ந்து, மறதிக்கான இரு சஜ்தாக்கள் செய்து ஸலாம் கொடுத்தார்கள்.
தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்தியபோது, ஒருவேளை தொழுகை முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதைத் தாமே முன்கூட்டியே அறிவித்திருப்பேன் என்று கூறினார்கள். தமக்கு மறதி ஏற்பட்டதை மறைக்கவோ, தமக்கு மட்டுமே ஏதோ தனிச் சலுகை கிடைத்தது போல சமாளிக்கவோ அவர்கள் முற்படவில்லை. மாறாக, தமக்கு ஏற்பட்ட மறதியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, தாம் ஒரு சாதாரண மனிதரே என்பதை உறுதிப்படுத்தினார்கள்:
إِذَا حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ أَنْبَأْتُكُمْ بِهِ، إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي
தொழுகையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் நானே உங்களுக்குத் தெரிவித்திருப்பேன்; மாறாக, நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதனே, நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறப்பேன், எனவே நான் மறந்துவிட்டால் எனக்கு நினைவுபடுத்துங்கள்.
(புகாரி: 401) ➚
நபி (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராக இருந்தபோதும், தமக்குத் தவறோ மறதியோ ஏற்படாது என்றோ, தாம் தெய்வாம்சம் பொருந்தியவர் என்றோ காட்டிக்கொள்ளவில்லை. தம்மை மனித வரம்பிற்கு அப்பாற்பட்டவராக மக்கள் கருதிவிடக் கூடாது என்பதற்காகவும், தங்களைச் சமநிலையில் வைத்துப் பழக வேண்டும் என்பதற்காகவுமே, தமக்கும் மறதி ஏற்படும் என்பதை உணர்த்தி, அவ்வாறு மறந்தால் அதைச் சுட்டிக்காட்டுமாறு மக்களுக்கு வழிகாட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அளப்பரிய அதிகாரமும் இறைத்தூதுப் பொறுப்பும் பெற்றிருந்த போதிலும், தம்மைத் தனித்துவமான தெய்வீகப் பிறவியாக முன்னிறுத்தாமல், எளிய மனித இயல்போடு மக்களோடு மக்களாகவே வாழ்ந்து காட்டினார்கள்.