03) சிறுவர்களுடன் நபிகளார்

நூல்கள்: நபிகளாரின் தனி தன்மைகள்

பருவமடையாத சிறுவர்கள்

குழந்தைகளுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் பருவமடையாத சிறுவர்கள் ஆவர். நம்முடைய பிள்ளைகளாக இருந்தாலும் சரி, பிறருடைய பிள்ளைகளாக இருந்தாலும் சரி, நாம் சிறுவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்குவதில்லை; அவர்களை மதிப்பதில்லை. பெரியவர்களைக் கண்டால் அஞ்சி ஓடும் நிலையில்தான் அவர்களை வைத்துள்ளோம்.

எத்தனையோ குடும்பங்களில் தந்தையைக் கண்டாலே பிள்ளைகள் பயந்து ஓடுவதைப் பார்க்கிறோம். இத்தகைய வெறுப்பு ஏற்படும்போதுதான் அவர்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்காதவர்களாக மாறுகிறார்கள். சிறுவர்களுடன் சகஜமாகப் பழக வேண்டும்; பெரியவர்களிடம் பேசுவது போல அவர்களது விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேச வேண்டும்; அவர்களைச் சமமாக நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குப் பெற்றோரின் மீது பாசம் பிறக்கும்; அவர்களின் வழிகாட்டலுக்குக் கட்டுப்படுவார்கள்.

சிறுவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள்

நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டிலுள்ள சிறுவர்களாக இருந்தாலும் சரி, வெளியிலுள்ள சிறுவர்களாக இருந்தாலும் சரி, அவர்களைச் சமநிலையில் வைத்து, பெரியவர்களிடம் பழகுவது போன்றே அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும்போது அவர்களுக்கு ஸலாம் கூறுபவர்களாக இருந்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (புகாரி: 6247) ➚.

பொதுவாக நாம் பெரியவர்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்களிலும் மக்தப்களிலும் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் சிறுவர்கள் வேண்டுமானால் பெரியவர்களுக்குச் சொல்லலாம் என்றும் கருதுகிறோம். பெரியவர்கள் சிறுவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால், ஆட்சித் தலைவராகவும் வயதில் மூத்தவராகவும் இருந்தபோதிலும் நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.

அதேபோன்று நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளான அன்சாரிகளின் பிள்ளைகளைத் தேடிச் சென்று சந்திப்பவர்களாக இருந்தார்கள். மார்க்கத்திற்காகத் தங்களின் வீடுகளிலும் சொத்துக்களிலும் தொழில்களிலும் பாதியை முஹாஜிர்களுக்குப் பிரித்துக் கொடுத்து அடைக்கலம் தந்தவர்கள் அன்சாரிகள். அவர்களின் தியாகங்களின் காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார்கள். அன்சாரிகளின் தெருக்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் இடங்களைத் தேடிச் சென்று அவர்களைச் சந்திப்பதையே நபி (ஸல்) அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஏதோ வழியில் செல்லும்போது தற்செயலாகப் பார்ப்பது என்றில்லாமல், அவர்களைச் சந்திப்பதற்காகவே செல்வார்கள்.

சிறுவர்களுக்காக துஆ செய்வார்கள்

يَزُورُ الْأَنْصَارَ وَيُسَلِّمُ عَلَى صِبْيَانِهِمْ وَيَمْسَحُ بِرُؤُوسِهِمْ وَيَدْعُو لَهُمْ
நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சந்திக்கச் சென்று, அவர்களின் சிறுவர்களுக்கு ஸலாம் கூறி, அவர்களின் தலைகளைத் தடவி, அவர்களுக்காக துஆ செய்பவர்களாக இருந்தார்கள். (நஸாயீ: 8291) ➚ (இப்னு ஹிப்பான்: 459) ➚

புழுதி படிந்த கிராமத்துச் சிறுவர்களின் தலையைத் தொடுவதற்கே நாம் முகம் சுழிக்கிறோம். தமக்கு சம்பந்தமில்லாத சிறுவர்களுக்கு ஸலாம் சொல்வதையோ, அவர்களை விசாரித்து துஆ செய்வதையோ நமது அந்தஸ்துக்குக் குறைவு என்று எண்ணுகிறோம்.

ஆனால், மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த நபி (ஸல்) அவர்கள் தமக்கென எந்தப் பெருமையும் பாராட்டாமல், சிறுவர்களிடம் அளவற்ற பணிவோடும் பாசத்தோடும் நடந்துகொண்டார்கள். நாமும் கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த அடக்கத்தை இதில் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்

ஸியாத் இப்னுல் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் சிறுவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக மதீனாவுக்குச் சென்றேன். மக்கள் பலர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த அவையில் சிறுவனாக இருந்த என்னைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ادْنُ مِنِّي (என்னிடம் நெருங்கி வா) என்று அழைத்தார்கள். நான் அருகில் சென்று அமர்ந்ததும், فَوَضَعَ يَدَهُ عَلَى ذُؤَابَتِهِ (அவர்கள் தம் கையை எனது முன்தலையில் வைத்தார்கள்), ثُمَّ أَجْرَى يَدَهُ (பிறகு தலையைத் தடவிவிட்டார்கள்), وَسَمَّتْ عَلَيْهِ (எனக்காக துஆவும் செய்தார்கள்). ((நஸாயீ: 5065) ➚

ஒரு சபையில் மக்கள் கூடும்போது சிறுவர்கள் இருந்தால், அவர்களைப் பின்னுக்குத் தள்ளாமல் முன்னால் அழைத்து அமர வைக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம். இச்சமூகத்திலும் மார்க்கத்திலும் நமக்கும் ஓர் இடமும் மதிப்பும் இருக்கிறது என்பதைச் சிறுவர்கள் இளம் வயதிலேயே உணர வேண்டும். அவ்வாறு வளர்க்கப்பட்டால்தான் அவர்களுக்கு மார்க்கத்திலும் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு ஏற்படும்.

மாறாக, சிறுவர்களை விரட்டியடித்தால் அவர்கள் பள்ளிவாசலுக்கே வராமல் போய்விடுவார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிவாசல்களில் சிறுவர்களை நிர்வாகிகள் விரட்டியடித்த காரணத்தால், அந்தத் தலைமுறையினர் பலர் முதுமை அடையும் வரை பள்ளிவாசல்களுக்கு வராமலேயே இருந்துவிட்டனர். எனவே நபி (ஸல்) அவர்களின் இத்தகைய அணுகுமுறைகளை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் இயற்கையான மார்க்கத்திலேயே பிறக்கிறார்கள்

அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம் (ரலி) என்ற சிறுவரை அவரது தாயார் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, بَايِعْهُ (இவரிடம் பைஅத் செய்யுங்கள்) என்று வேண்டினார். இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழி எடுப்பவர்களிடம் திருட மாட்டோம், கொலை செய்ய மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், அவதூறு கூற மாட்டோம், ஒப்பாரி வைக்க மாட்டோம் போன்ற நிபந்தனைகளுடன் நபி (ஸல்) அவர்கள் பைஅத் பெறுவது வழக்கம்.

ஆனால், சிறுவர்கள் பிறப்பிலேயே முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதால் அச்சிறுவரிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கவில்லை. இஸ்லாமிய சட்டப்படி, பருவ வயதை அடைவதற்கு முன்பாக இறந்துவிடும் குழந்தைகள்—அவர்கள் மாற்று மதத்தினரின் குழந்தைகளாக இருந்தாலும்கூட—சொர்க்கத்திற்கே செல்வார்கள்.

كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ
குழந்தைகள் அனைவரும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றனர்; அவர்களுடைய பெற்றோர்தான் அவர்களை யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ மாற்றுகின்றனர்.
(புகாரி: 1358) ➚

குழந்தைகள் அனைவரும் பிறக்கும்போதே இயற்கையான இஸ்லாமிய மார்க்கத்திலேயே பிறக்கிறார்கள் என்ற அடிப்படையில், அவர்களுக்கு பைஅத் என்பது கிடையாது. அவர்கள் பருவ வயதை அடையும் வரை முஸ்லிம்களாகவே கருதப்படுவார்கள். அவர்கள் கலிமாவை வாயால் மொழிந்திருக்காவிட்டாலும் கூட, பருவ வயதை அடையும் வரை முஸ்லிம்கள்தான்.

பருவமடைந்த பிறகே சுயமாக முடிவெடுக்கக்கூடிய உரிமையும் பொறுப்பும் மார்க்கத்தில் வழங்கப்படுகிறது. அல்லாஹ்வும் அவ்வாறே கேள்வி கேட்பான். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, பருவமடைவதற்கு முன் தொழுகை, நோன்பு போன்றவற்றைச் செய்யாத ஒரு சிறுவனிடம் அல்லாஹ் அதைப் பற்றிக் கேள்வி கேட்பதில்லை; ஏனெனில் அவை அவன் மீது கடமையாகவில்லை. கடமையாக்கப்பட்ட பின்னரே அதைப் பற்றி அல்லாஹ் கேள்வி கேட்பான்.

ஒருவர் தம் சிறு குழந்தையை அழைத்து வந்து நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்யக் கோரியபோது, நபி (ஸல்) அவர்கள் பைஅத் வாங்கவில்லை. அதே நேரம், பைஅத் எல்லாம் கிடையாது என்று வெறுமனே அனுப்பிவிடவும் இல்லை. சிறுவர்களைக் கண்டாலே நபி (ஸல்) அவர்களுக்குப் பாசம் பொங்கி வழியும். எனவே அச்சிறுவனின் தலையைத் தடவிக் கொடுத்து, அவருக்கும் பிறருக்கும் கேட்கும் விதமாக அழகிய முறையில் அவருக்காக துஆ செய்து அனுப்பி வைத்தார்கள் (புகாரி: 2501) ➚.

சிறுவர்களின் விளையாட்டை அனுமதித்த நபிகளார்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இள வயதில் நபி (ஸல்) அவர்களுடன் இல்லறம் நடத்திய காலத்தில், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் ஆயிஷா (ரலி) அவர்களின் வயதை ஒத்த தோழிகள் வீட்டிற்கு வந்து விளையாடுவது வழக்கம். நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் அச்சிறுமிகள் அஞ்சி ஓடுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அவர்களைத் தடுக்காமல், தொடர்ந்து விளையாடுமாறு அனுப்பி வைப்பார்கள்.

பொதுவாக சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டுகளில் ஆசையும் ஈடுபாடும் இருப்பது இயல்பானது. பெரியவர்களைக் கண்டால் குழந்தைகள் பயந்து ஓடும் நிலையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். விளையாடுவது தவறான காரியமல்ல; மாறாக அது அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானது.

நாம் சிறுவர்களாக இருந்தபோதும் விளையாடவே ஆசைப்பட்டோம் என்பதை உணர்ந்து, அவர்களின் இயல்பை ரசிக்க வேண்டும். தம் வீட்டுக்கு வந்து விளையாடும் சிறுமிகளின் உணர்வுகளை மதித்த நபி (ஸல்) அவர்கள், தம் வீட்டில் விளையாடுவதால் வேலை கெடுகிறது என்று ஒருபோதும் கடிந்து கொண்டதில்லை (புகாரி: 6130) ➚.

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை ஒரு விருந்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் அவர்களது பேரன் ஹுசைன் (ரலி) மற்ற சிறுவர்களோடு வீதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைப் பிடிப்பதற்காகச் செல்ல, சிறுவரான ஹுசைன் (ரலி) செல்லமாக அங்குமிங்கும் ஓடலானார்.

தாம் ஓர் ஆட்சித் தலைவர், இறைத்தூதர் என்றெல்லாம் பாராமல், ஒரு குழந்தையின் விளையாட்டுக்கு ஏற்ப நபி (ஸல்) அவர்களும் அவரைப் பிடிக்க அங்கும் இங்கும் ஓடி அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். குழந்தைகளுடன் இப்படி ஓடிப் பிடித்து விளையாடுவதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். இறுதியாக ஹுசைன் (ரலி) அவர்களைப் பிடித்துத் தூக்கி, அவரது வாயில் முத்தமிட்டு அரவணைத்தார்கள்.

حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ
ஹுசைன் என்னைச் சேர்ந்தவர்; நான் ஹுசைனைச் சேர்ந்தவன்.
(திர்மீதி 3775) (இப்னு மாஜா: 144) ➚

பொதுவாகப் பெரியவர்கள் தெருக்களில் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவதில்லை; சிறுவர்கள் தங்களைக் கண்டு ஓடினால் கோபப்பட்டுத் தண்டிப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்த்தார்கள். நாமும் சிறுவர்களாக இருந்தபோது எதையெல்லாம் விரும்பினோமோ, அதையே நம் குழந்தைகளும் விரும்புவார்கள் என்பதை உணர்ந்து அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டார்கள்.

சிறுவர்களிடம் அன்பை பொழிந்த நபிகளார்

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களோடு صَلَاةِ الْأُولَى (முதல் தொழுகையான ஃபஜ்ர் தொழுகை) தொழுதுவிட்டு, அவர்களது இல்லத்தை நோக்கி அவர்களுடன் சென்றேன். அப்போது எதிரே சில சிறுவர்கள் வந்தார்கள். வழியில் சிறுவர்களைக் கண்டால் பெரும்பாலானோர் அவர்களைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றுவிடுவார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களோ, அச்சிறுவர்கள் ஒவ்வொருவரையும் நிறுத்தி அவர்களது கன்னங்களைத் தடவிக் கொடுத்தார்கள். மற்ற பிள்ளைகளுக்குச் செய்துவிட்டுத் தமக்குச் செய்யவில்லையே என்று ஜாபிர் (ரலி) அவர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக, அவரையும் அழைத்து அவரது கன்னத்தையும் தடவிக் கொடுத்தார்கள். சிறுவர்களின் கன்னத்தையோ தலையையோ தடவிக் கொடுப்பதை அவர்கள் பெரிதும் விரும்புவார்கள். பெரியவர்கள் தம்மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் அடையாளமாக அது திகழ்கிறது.

فَجَعَلَ يَمْسَحُ خَدَّيْ أَحَدِهِمْ وَاحِدًا وَاحِدًا
அவர்களின் கன்னங்களை ஒவ்வொன்றாகத் தடவிக் கொடுத்தார்கள்.
(முஸ்லிம்: 2329) ➚

 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்குப் பணியாளர்கள் எவரும் இருக்கவில்லை. அப்பொழுது அனஸ் (ரலி) அவர்களின் தாயாரின் கணவரான அபூதல்ஹா (ரலி) அவர்கள், விவரம் தெரிந்த சிறுவராக இருந்த அனஸ் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, தங்களுக்குப் பணிவிடை செய்ய இவன் உங்களுடனேயே இருக்கட்டும் என்று விட்டுச் சென்றார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் எந்தச் சம்பளமும் எதிர்பாராமல், நபி (ஸல்) அவர்களுக்குச் சேவை செய்வதில் கிடைக்கும் மனநிறைவையும் மறுமை நன்மையையும் மட்டுமே நாடிப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தார்கள். சிறுவர்கள் பெரியவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்யும்போது அதில் குறைகளும் தவறுகளும் ஏற்படுவது இயற்கையே. அவ்வாறு ஏதேனும் குறை நேர்ந்தால் கோபமில்லாமல் அன்பாகக் கூட ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்பது மனித இயல்பு. ஆனால், அத்தனை ஆண்டுகளில் நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் ஒருமுறை கூட எரிந்து விழுந்ததோ, அவ்வாறு கேட்டதோ இல்லை என்று அனஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ் மீது சத்தியமிட்டுக் கூறுகிறார்கள்.

خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ مَا قَالَ لِي أُفٍّ قَطُّ وَلَا قَالَ لِشَيْءٍ لِمَ فَعَلْتَ كَذَا
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன்; அவர்கள் ஒருபோதும் என்னை ‘சீ’ என்று கூறியதில்லை, எந்த ஒரு காரியத்திற்கும் ‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டதுமில்லை.
(புகாரி)

தம்மிடம் பணியாற்றியவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் لِمَ فَعَلْتَ هَذَا (இதை ஏன் செய்தாய்?) என்றோ, هَلَّا فَعَلْتَ كَذَا (இதை இப்படிச் செய்திருக்கலாமே?) என்றோ கேட்டதில்லை. மனித சுபாவத்தின் காரணமாக ஊழியர்களிடம் தவறுகள் நடப்பது இயல்பு; அப்படிப்பட்ட சூழல்களில்கூட நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுத்திய அன்பையும் மென்மையையும் உலகில் எவரிடமும் காண முடியாது. கொள்கை எவ்வளவுதான் சரியானதாக இருந்தாலும், அதை வழிநடத்துபவர் கடுமை காட்டினால் மக்கள் அவரை விட்டும் விலகிவிடுவார்கள். நபி (ஸல்) அவர்களின் மென்மையான சுபாவமே மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது என்பதை அல்லாஹ்வும் சுட்டிக்காட்டுகிறான்.

فَبِمَا رَحْمَةٍ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلْقَلْبِ لَٱنفَضُّوا۟ مِنْ حَوْلِكَ
அல்லாஹ்வின் பேரருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக நடந்துகொள்கிறீர்; நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளமுடையவராகவும் இருந்திருப்பின் உம்மை விட்டும் அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 3:159)➚

சிறுவர்களிடமும் ஊழியர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் எப்போதும் அளவற்ற கனிவைக் காட்டினார்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களிடம் ஒரு வேலையைக் கொடுத்து அனுப்பினார்கள். சிறு பிள்ளைகளுக்குரிய இயல்பினால், “நான் போக மாட்டேன்” என்று கூறிவிட்டு, பின்னர் அந்த வேலையைச் செய்யப் புறப்பட்டார். வழியில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து, வேலையை மறந்து அங்கேயே வேடிக்கை பார்த்து நின்றார். பின்தொடர்ந்து வந்த நபி (ஸல்) அவர்கள், அவரது பிடரியைப் பிடித்து, வேலையை அன்போடு நினைவூட்டினார்களே தவிர, “வேலைக்குச் செல்லாமல் வேடிக்கை பார்க்கிறாயா?” என்று கடிந்துகொள்ளவோ கோபப்படவோ இல்லை.

நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களோடு மிக நெருக்கமாகப் பழகக்கூடியவர்களாக இருந்தார்கள்.

إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُخَالِطُنَا
நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் எங்களோடு இரண்டறக் கலந்து பழகுபவர்களாக இருந்தார்கள்.
(புகாரி: 6129) ➚

அனஸ் (ரழி) அவர்களின் சிறிய தம்பி அபூ உமைர் வளர்த்துவந்த சிறிய பறவை இறந்துவிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் சென்று, يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ (அபூ உமைரே! அந்தச் சின்னக் குருவி என்னவாயிற்று?) என்று ஆறுதலாக நலம் விசாரித்தார்கள். உலகளாவிய பெரும் பொறுப்புகளையும் பாரிய சமூக முடிவுகளையும் கையாள வேண்டிய நிலையிலும், ஒரு சிறு குழந்தையின் துயரத்தைக்கூட அலட்சியப்படுத்தாமல் கவனிக்கும் அளவிற்கே நபி (ஸல்) அவர்களின் கனிவு அமைந்திருந்தது.

மறுபுறம், மக்களாட்சியில் அரசின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில், உறுப்பினர்கள் விமர்சித்துப் பேசுவதைத் தடுக்கும் போக்கு நிலவுகிறது. மக்களவைச் செயலகம் சில சொற்களைப் நாடாளுமன்றத்திற்குப் புறம்பானவை என்று தடை செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஊழல், ஒட்டுக் கேட்டல், வாய்சாலம் காட்டுபவர், நாடகம், கண்துடைப்பு, வெட்கக்கேடு, துரோகம், சர்வாதிகாரி, பயனற்றது, பொய், போலித்தனம், ரவுடித்தனம் போன்ற விமர்சன வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்படுத்துகின்றனர்.

ஆட்சியாளர்களின் தவறுகளையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டவேண்டிய எதிர்க்கட்சிகளுக்கு இத்தகைய சொற்கள்தான் விமர்சனக் கருவிகளாக அமைகின்றன. ஒரு பொய்யைச் சுட்டிக்காட்ட ‘பொய்’ என்றோ ‘உண்மையல்ல’ என்றோ கூற முடியாது என்றால், மக்கள் மன்றத்தில் உண்மையை எவ்வாறு பதிவு செய்வது? குறைகளைச் சுட்டிக்காட்டவே முடியாத வகையில் விமர்சனங்களைத் தடுப்பது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் குரல்வளையை நெரித்து ஊமைகளாக்குவதற்கு ஒப்பானது. எதேச்சதிகாரமும் வரம்புமீறலும் அதிகரிக்கும்போது, அதற்கான வீழ்ச்சியை ஆட்சியாளர்கள் சந்தித்தே தீருவார்கள்.

அதிகார பலத்தால் விமர்சனங்களை ஒடுக்குவது ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்; நபி (ஸல்) அவர்கள் காட்டிய பரிவும் மென்மையான அணுகுமுறையுமே சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கான நிலையான வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் சிறுவர்கள் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடனும் அன்போடும் நடந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் வளர்ந்த உமர் இப்னு அபீ சலமா அவர்கள் கூறுகிறார்: “நான் நபி (ஸல்) அவர்களின் பொறுப்பில் வளர்ந்த ஒரு சிறுவனாக இருந்தேன். உணவு உண்ணும்போது எனது கை தட்டின் பல பகுதிகளிலும் அலைந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் எனக்கு உணவருந்தும் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.”

يَا غُلَامُ سَمِّ اللهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ

சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல்; உனது வலது கையால் சாப்பிடு; உனக்கு அருகிலிருப்பதை எடுத்துச் சாப்பிடு.

(புகாரி: 5376) ➚

அந்தச் சிறுவர் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லாமல் சாப்பிட்டது, வலது கையால் உண்ணாமல் இருந்தது, தட்டின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் உணவை எடுத்தது ஆகிய மூன்று தவறுகளைச் செய்தார். சிறு பிள்ளைதானே என்று விட்டுவிடாமல், அவர் தவறிழைத்த போதே அதைச் சுட்டிக்காட்டி நபி (ஸல்) அவர்கள் அவரை நல்வழிப்படுத்தினார்கள். சிறுவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் செலுத்திய அக்கறைக்கு இந்நிகழ்வு சான்றாகும்.

உமர் இப்னு அபீ சலமா என்பவர், ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற அபூ சலமா அவர்களின் மகன் ஆவார். மக்காவில் பத்தாவதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அபூ சலமா அவர்களும் அவரது மனைவியும், கொடுமைகள் தாங்க முடியாமல் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். மக்காவில் எதிர்ப்பு குறைந்துவிட்டது என்ற தவறான தகவலைக் கேட்டு அவர்கள் மக்கா திரும்பியபோது, கடுமையான துன்பங்களுக்கு உள்ளானார்கள். பின்னர் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்ட, முதன்முதலாக ஹிஜ்ரத் சென்றவர்களில் ஒருவராக அபூ சலமா திகழ்ந்தார். பத்ரு மற்றும் உஹுதுப் போர்களில் கலந்துகொண்ட தியாகியான அவர், உஹுதுப் போருக்குப் பின் மரணமடைந்தார்.

அபூ சலமா அவர்களின் மறைவுக்குப் பின், பெரும் தியாகங்களைச் செய்த அந்தக் குடும்பத்திற்கு வாழ்வளிக்கும் நோக்கில், அவரது மனைவியான உம்மு சலமா அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது உம்மு சலமா அவர்களுக்கு உமர், சலமா ஆகிய இரு ஆண் பிள்ளைகளும், ஸைனப், தர்ரா ஆகிய இரு பெண் பிள்ளைகளுமாக நான்கு குழந்தைகள் இருந்தனர். அந்நான்கு பிள்ளைகளையும் நபி (ஸல்) அவர்கள் தம்முடனேயே வைத்துப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இன்று ஒரு பெண்ணை மறுமணம் செய்யும்போது, அவளுக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களைத் தாய்வீட்டிலோ வேறு எங்கோ விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தும் சுயநலப் போக்கு பல ஆண்களிடம் காணப்படுகிறது. தாய்மையின் பாசத்தையும் குழந்தைகளின் உணர்வுகளையும் மதிக்காமல் தாயையும் பிள்ளையையும் பிரிக்கிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டினார்கள். மதீனாவில் அரசு கஜானாவிற்குப் பெருமளவு செல்வம் வந்தபோதிலும், பொதுச் சொத்திலிருந்தோ ஜகாத் மற்றும் சதகா நிதியிலிருந்தோ தமக்கோ தம் குடும்பத்தாருக்கோ ஒரு சிறிதும் பயன்படுத்தாமல் மக்களுக்கு வாரி வழங்கினார்கள். ஒரு சிறிய விவசாய நிலம் மற்றும் சில ஆடுகள் மூலம் கிடைத்த எளிய வருமானத்தைக் கொண்டே வாழ்ந்த நிலையிலும், மனைவியின் நான்கு பிள்ளைகளையும் தம் சொந்தப் பிள்ளைகளைப் போல அரவணைத்துப் பராமரித்தார்கள்.

இதனை நினைவுகூர்ந்துதான் உமர் இப்னு அபீ சலமா அவர்கள், كُنْتُ غُلَامًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (நான் நபி (ஸல்) அவர்களின் பொறுப்பில் வளர்ந்த ஒரு சிறுவனாக இருந்தேன்) என்று குறிப்பிடுகின்றார். தம்முடன் அமரவைத்து உணவளித்து, பாசத்தோடு ஒழுக்கங்களையும் கற்பித்தார்கள். மறுமணம் செய்யக் கூடியவர்கள், தாயையும் குழந்தைகளையும் பிரிக்காமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த அணுகுமுறை மிகச் சிறந்த முன்மாதிரியாகும்.

அடுத்ததாக, நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அபூதாலிபின் மகன்களில் அலி, ஜாஃபர், உகைல் ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். தம்பி முறை கொண்ட ஜாஃபர் அவர்கள் மீது நபி (ஸல்) அவர்கள் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். மூத்தா போர்க்களத்திற்குப் படை புறப்படும்போது, ஜைத் அவர்கள் தலைமை தாங்குவார் என்றும், அவர் கொல்லப்பட்ட பின் ஜாஃபர் அவர்கள் கொடியைப் பிடிப்பார் என்றும், அவரும் கொல்லப்படுவார் என்றும் நபி (ஸல்) அவர்கள் வஹீ மூலம் அறிந்து முன்கூட்டியே அறிவித்தார்கள். போர்க்களத்திற்குச் செல்வோர் வெற்றியோ அல்லது வீர மரணமோ அடைவோம் என்ற எதிர்பார்ப்பில்தான் செல்வார்கள். ஆனால் மரணம் நிச்சயம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்யத் துணிந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறே ஜாஃபர் அவர்கள் அப்போரில் வீரமரணமடைந்தார்கள். இச்செய்தி மதீனாவிற்கு வந்ததும், ஜாஃபர் அவர்களின் குடும்பத்தினரையும் குழந்தைகளையும் ஆற்றுப்படுத்துவதற்காக, நபி (ஸல்) அவர்கள் முதல் நாள் சென்று பார்த்தார்கள்; பின்னர் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.

ஜாஃபர் (ரலி) அவர்கள் மரணித்து மூன்று நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவர்களது வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே இருந்த ஜாஃபர் (ரலி) அவர்களின் பிள்ளைகளைத் தம்மிடம் கொண்டு வருமாறு கூறினார்கள். தந்தை இறந்துவிட்ட துயரத்தில் தாய் மூழ்கியிருந்ததால், எவ்விதப் பராமரிப்புமின்றிப் பரட்டைத் தலையோடு இருந்த அப்பிள்ளைகளைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முடி மழிக்க உத்தரவிட்டார்கள். தந்தை இறந்துவிட்டால் தலைமுடியை மழிக்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டம் அல்ல; மாறாக, கவனிப்பாரற்று இருந்த அப்பிள்ளைகளின் பராமரிப்பிற்காகவே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.

அப்பிள்ளைகளில் ஒருவரது பெயர் முஹம்மது, மற்றொருவரது பெயர் அப்துல்லாஹ். அவ்விருவரையும் அழைத்து, முஹம்மது தம் பாட்டனார் அபூதாலிபைப் போன்று இருப்பதாகவும், அப்துல்லாஹ் அச்சு அசலாகத் தம்மைப் போன்று இருப்பதாகவும் கூறி நபி (ஸல்) அவர்கள் பாராட்டினார்கள். மூன்று நாட்கள் கடந்துவிட்டதால் இனி யாரும் அழக் கூடாது என்று கூறி, ஜாஃபர் (ரலி) அவர்களின் குடும்பத்தாருக்கு நன்மையை வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.

அப்போது அப்பிள்ளைகளின் தாய் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, பிள்ளைகளின் தந்தை மரணித்துவிட்டதால் அனாதைகளாக இருக்கும் இச்சிறுவர்களை வைத்துக்கொண்டு வறுமையில் எவ்வாறு பராமரிப்பது என்று முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இப்பிள்ளைகளின் வறுமையைக் குறித்தா அஞ்சுகிறீர்கள் என்று கேட்டு, இம்மையிலும் மறுமையிலும் இவர்களுக்கு நானே பொறுப்பாளர் என்று கூறி அவர்களின் அனைத்துச் செலவுகளையும் தாமே ஏற்றுக்கொண்டார்கள்.

اَلْعَیْلَةَ تَخَافِیْنَ عَلَیْھِمْ وَاَنَا وَلِیُّھُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ

அவர்கள் விஷயத்தில் நீங்கள் வறுமையையா அஞ்சுகிறீர்கள்? இம்மையிலும் மறுமையிலும் நானே அவர்களுக்குப் பொறுப்பாளர்.

ஜாஃபர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் உடன் பிறந்த சகோதரர் அல்ல; பெரிய தந்தையின் மகன். உடன் பிறந்த சகோதரரின் பிள்ளைகளையே பாரமாக நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நபி (ஸல்) அவர்கள் ஒரு பெரிய செல்வந்தராக இருந்து இப்பொறுப்பை ஏற்கவில்லை. அடுத்த வேளைக்கு உணவோ, மாற்று உடைகளோ இன்றி, பேரீச்சம்பழத்தையும் தண்ணீரையும் மட்டுமே உண்டு வாழ்ந்த வறுமையான சூழலிலும், மனைவிமார்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் இப்பொறுப்பை ஏற்றார்கள். தந்தை இல்லாத சிறுவர்கள் கைவிடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தம்முடைய சொந்தக் குடும்பத்தினரைப் போன்றே அவர்களது பராமரிப்பையும் செலவுகளையும் தாமே சுமந்துகொண்டார்கள்.

தந்தை இல்லாத பிள்ளைகளே மார்க்கத்தின் பார்வையில் அனாதைகள் ஆவர். அவர்களுக்கு வீடு வாசல் போன்ற வசதிகள் இருந்தாலும், தந்தை இல்லை என்றால் அவர்கள் அனாதைகளே. ஆனால் இன்று நாம் அனாதை இல்லங்களுக்குச் சில உதவிகளைச் செய்வதோடு நம் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறோம். நம் குடும்பங்களிலும் உறவுகளிலும் எத்தனையோ அனாதைக் குழந்தைகள் ஆதரவின்றித் தவிக்கிறார்கள். அவர்களை அரவணைத்து, அவர்களது பொறுப்பில் நம்மால் இயன்ற ஒரு பகுதியை நாமும் சுமக்க முன்வந்தால் அவர்கள் நல்வாழ்க்கை வாழ முடியும். நபி (ஸல்) அவர்கள் வறுமையின் உச்சத்திலும் தம் உறவினரின் பிள்ளைகளுக்கான பொறுப்பை ஏற்றுச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஜாஃபர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ், அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன்களான குஸம், உபைதுல்லாஹ் ஆகியோர் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கே விளையாடிக்கொண்டிருந்த அப்துல்லாஹ்வைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவரைத் தம்மிடம் கொண்டு வரச் செய்து தம் வாகனத்தின் முன்பகுதியில் அமர்த்திக்கொண்டார்கள். குஸம் என்பவரைப் பின்பகுதியில் அமர்த்திக்கொண்டார்கள். ஏதோ பெயரளவில் செலவு செய்வதோடு ஒதுங்கிவிடாமல், ஒரு தந்தை தன் சொந்தக் குழந்தையை அரவணைப்பது போன்ற உண்மையான அன்போடு அவர்களை நடத்தினார்கள்.

اللَّهُمَّ اخْلُفْ جَعْفَرًا فِي أَهْلِهِ

இறைவா! ஜாஃபருடைய குடும்பத்தாருக்கு நீயே பொறுப்பாளனாக ஆகுவாயாக!

பொறுப்பேற்றுக்கொண்ட சிறுவர்கள் மீது பணத்தை வாரி வழங்குவது மட்டுமே போதாது; அவர்கள் மீது உண்மையான அன்பையும் அரவணைப்பையும் செலுத்த வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காக இரு சிறுவர்கள் இருந்தார்கள். மதகுருமார்களுக்குச் செய்வது போன்று கை, கால் பிடித்துவிடும் பணிவிடைகளை நபி (ஸல்) அவர்கள் விரும்பியதில்லை; அப்படிப்பட்ட பணிவிடைகளும் அங்கு இருக்கவில்லை. வயோதிக காலத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்வதற்கும், வெளியே செல்லும்போது தேவையான பொருட்களை எடுத்துத் தருவதற்கும் மட்டுமே அவர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அனஸ் (ரலி) அவர்கள். புத்திசாலியான இச்சிறுவரைப் பணிவிடைக்காக வைத்துக்கொள்ளுமாறு கூறி அவரது வளர்ப்புத் தந்தை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கொண்டு வந்து விட்டார்கள்.

மற்றொருவர் ஒரு யூதச் சிறுவன். நபி (ஸல்) அவர்களிடம் மதவெறுப்பு துளியும் இருந்ததில்லை. மதீனாவில் யூதர்கள் பல வழிகளிலும் முஸ்லிம்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தபோதும், நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் வைத்துக் கொல்லத் துணிந்தபோதும், தனிநபர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையுமே நபி (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லை. அச்சிறுவன் எதிரிகளுக்கு உளவு சொல்லிவிடுவான் என்ற சந்தேகமோ தயக்கமோ இன்றி மனிதர்களை நபி (ஸல்) அவர்கள் நம்பினார்கள்.

ஒரு நாள் அந்த யூதச் சிறுவன் உடல்நலக்குறைவு காரணமாகப் பணிக்கு வரவில்லை. ஒரு மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்தபோதிலும் நபி (ஸல்) அவர்கள், அச்சிறுவன் பணியாளன் என்றோ, மாற்று மதத்தவன் என்றோ பாராமல் அவனது இருப்பிடத்திற்கே சென்று நலம் விசாரிக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்து பார்க்கும்போது, அச்சிறுவன் மரணத் தருவாயில் இருந்தான்.

அந்தப் பையன் சாதாரணத் தலைவலி, காய்ச்சல் போன்ற நோயினால் பாதிக்கப்படவில்லை; மாறாக, மரணத்தின் இறுதித் தருவாயில் இருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவனுடைய தலைமாட்டில் அமர்ந்து, أَسْلِمْ (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்) என்று கூறி, மறுமையில் வெற்றி பெறுவதற்காக இஸ்லாத்தை ஏற்குமாறு அழைத்தார்கள்.

ஆட்களைச் சேர்த்து எண்ணிக்கையைப் பெருக்குவதற்காகவோ, பெரும்பான்மையை அடைவதற்காகவோ நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறவில்லை. எண்ணிக்கையைக் கூட்டுவதே நோக்கமாக இருந்திருந்தால், அவர் ஆரோக்கியமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே கூறியிருக்கலாம். மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவரை இஸ்லாத்திற்கு அழைப்பதால் இம்மை ரீதியாக எந்த ஆதாயமும் இல்லை; ஏனெனில் அவர் உடனே இறந்துவிடப் போகிறார். எனவே, இதில் உலக ஆதாயமோ, எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோ நோக்கம் அல்ல; தன்னிடம் வேலை பார்த்த அந்த இளைஞன் நரகத்திலிருந்து தப்பித்துச் சொர்க்கம் செல்ல வேண்டும், அவனுடைய மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற உண்மையான அக்கறையே அதில் இருந்தது.

அப்போது அந்த யூதச் சிறுவனின் தந்தையும் அருகில் நின்றுகொண்டிருந்தார். தன் தந்தை யூதராக இருப்பதால் அவர் இதை ஏற்க மாட்டாரோ என்ற தயக்கத்துடன் அந்தச் சிறுவன், فَنَظَرَ إِلَى أَبِيهِ (தன் தந்தையைப் பார்த்தான்). வாயினால் பேசக் கூட இயலாத நிலையில் கண்களால் தந்தையின் சம்மதத்தைக் கோரினான். அப்போது அவனுடைய தந்தை, أَطِعْ أَبَا الْقَاسِمِ (அபுல் காஸிமுக்குக் கட்டுப்படு) என்றார்.

பொதுவாக மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பெயர் சொல்லி அழைக்காமல், மரியாதையின் நிமித்தமாகவும் செல்லமாகவும் ‘அபுல் காஸிம்’ என்றே அழைப்பார்கள். மக்காவில் கதீஜா (ரலி) அவர்களுக்குப் பிறந்த காஸிம் என்ற ஆண் குழந்தை இறந்த பிறகு, அவர்கள் நபி (ஸல்) அவர்களை ‘காஸிமின் தந்தை’ என்ற பொருளில் ‘அபுல் காஸிம்’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். இந்தப் புனைப்பெயர் பிற சமுதாயத்தினர் மத்தியிலும் பரவியது. யூதர்களும் நேரடியாகப் பெயரைக் குறிப்பிடாமல், இந்த மரியாதைக்குரிய புனைப்பெயரையே பயன்படுத்தினர். எனவேதான், அந்தத் தந்தை தன் மகனிடம், அபுல் காஸிம் சொல்வதற்குக் கட்டுப்படு என்று கூறினார். உடனே அந்தச் சிறுவன் கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். அப்பையனுடைய மறுமை நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது என்ற மகிழ்ச்சியுடன் நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ

“இவனை நரகத்திலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறியவாறு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்.

(புகாரி: 1356) ➚

பருவமடைந்த நிலையில் மரணித்த அந்தச் சிறுவன் இஸ்லாத்தை ஏற்காமல் மரணித்திருந்தால் நரகத்திற்குச் சென்றிருப்பான்; அல்லாஹ் அவனை அதிலிருந்து காப்பாற்றிவிட்டான் என்பதே நபி (ஸல்) அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

இந்த நிகழ்விலிருந்து நாம் பல படிப்பினைகளைப் பெறுகிறோம். மாற்று மதத்தவர் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் யாரிடமும் குரோதம் பாராட்டவில்லை; அவர்களை மனிதர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே அணுகினார்கள். நோய் விசாரிப்பது என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்று சிலர் கருதுகிறார்கள்; ஆனால் பழகிய மாற்று மதத்தவர் நோய்வாய்ப்பட்டாலும் அவர்களை நலம் விசாரிப்பது மார்க்கத்தின் வழிமுறையாகும். மேலும், பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடின்றி நபி (ஸல்) அவர்கள் நடந்துகொண்டார்கள். பொதுவாக மற்றவர்களின் சிறு பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டால் பெற்றோரிடம் விசாரிப்பதே வழக்கம். ஆனால், எந்த இரத்த பந்தமும் இல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து அவனுக்குக் கண்ணியம் அளித்தார்கள். அதேபோன்று, அவர் தன்னிடம் பணியாற்றிய காலத்தில் இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தாமல், மரணத்தின் வாயிலில் இருக்கும்போது அவனுடைய மறுமை வாழ்வின் நன்மையைக் கருத்தில் கொண்டே இஸ்லாத்திற்கு அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மீது அந்த யூதத் தந்தைக்கு இருந்த நன்மதிப்பும் இதில் தெளிவாகிறது; தாம் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும், நபி (ஸல்) அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் தன் மகனை அவர்களுக்குக் கட்டுப்படுமாறு கூறினார். அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களின் உள்ளங்களையும் வென்றெடுத்தார்கள். சிறுவர்கள் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய இத்தகைய கண்ணியமான அணுகுமுறைகள் இன்னும் பல உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மக்களுடன், குறிப்பாகச் சிறுவர்களுடன் எவ்வாறு பழகினார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். ஒரு சபையில் ஏதேனும் பொருளை விநியோகிப்பதாக இருந்தால், தங்களின் வலதுபுறத்தில் இருந்து கொடுப்பதே நபி (ஸல்) அவர்களின் வழக்கமாகவும் வழிமுறையாகவும் இருந்தது.

ஒருமுறை அனஸ் (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்ற நபி (ஸல்) அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அனஸ் (ரலி) அவர்கள் ஆட்டின் பாலைக் கறந்து, அதில் சிறிதளவு நீரைக் கலந்து நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தார்கள். அச்சமயம் அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) ஆகியோருடன் ஒரு கிராமவாசியும் அங்கு இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அருந்திய பிறகு மீதமிருந்த பானத்தை, தங்களின் வலதுபுறத்தில் அமர்ந்திருந்த கிராமவாசிக்குக் கொடுக்க முற்பட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், இடதுபுறத்தில் இருக்கும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு முதலில் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்காமல், அந்த கிராமவாசிக்கே முதலில் கொடுத்தார்கள். எவராயினும் வலதுபுறத்தில் இருப்பவருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டு, அவரிடமிருந்து மீதமானதை அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும், பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கும் வழங்கினார்கள். மேலும், எந்தப் பொருளை விநியோகிப்பதாக இருந்தாலும் விநியோகிப்பவரின் வலதுபுறத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்பதை ஒரு பொதுவான சட்டமாகவும் வழிகாட்டினார்கள்.

اَلْأَيْمَنُونَ فَالْأَيْمَنُونَ
வலப்பக்கத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை; அடுத்தடுத்து வலப்பக்கத்தில் உள்ளவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.
(புகாரி: 2571) ➚

எந்த ஒரு சபையாக இருந்தாலும், பெரியவர் அல்லது சிறியவர் என்ற பாகுபாடின்றி விநியோகத்தை வலதுபுறத்திலிருந்து தொடங்கி வழங்குவதே நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறையாகும். இந்த நடைமுறையைச் சிறுவர்கள் விஷயத்திலும் நபி (ஸல்) அவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றிப் பேணினார்கள்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு குடிபானம் கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து குடித்தார்கள். அப்போது அவர்களின் வலதுபுறத்தில் غُلَامٌ أَصْغَرُ الْقَوْمِ (அங்கிருந்தவர்களிலேயே மிக இளையவரான ஒரு சிறுவர்) இருந்தார். நபி (ஸல்) அவர்களின் இடதுபுறத்திலோ وَالْأَشْيَاخُ عَنْ يَسَارِهِ (முதியவர்கள்) அமர்ந்திருந்தார்கள். வலதுபுறத்தில் இருந்தவர் சிறுவர் என்பதால் அவரைப் புறக்கணிக்காமல், “நான் இவர்களுக்கு முதலில் கொடுக்க நீ எனக்கு அனுமதி தருகிறாயா?” என்று அந்தச் சிறுவரிடம் நபி (ஸல்) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், “தங்களிடமிருந்து கிடைக்கும் பாக்கியத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் உரிமையை மதித்து அவரிடமே முதலில் கொடுத்தார்கள்; அதன் பின்னரே மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு(புகாரி: 2351) ➚-வது செய்தியாகப் பதிவாகியுள்ளது.

சபையின் ஒழுங்கையும் நீதியையும் நிலைநாட்டுவதில் பெரியவர்களுக்கு முன்னுரிமை தந்து சிறுவர்களைப் புறக்கணித்துவிடக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கவனமாக இருந்தார்கள். வலதுபுறத்தில் கொடுக்க வேண்டும் என்ற விதியை வகுத்துவிட்டு, பெரியவர்கள் வந்தவுடன் அச்சிறுவரைப் புறக்கணித்தால், அந்தச் சிறுவரின் மனம் புண்படும்; மார்க்கத்தின் ஒழுங்குமுறைகள் மீதான பிடிப்பும் குறையக்கூடும் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவேதான், உரிமையுள்ள சிறுவர் மனமுவந்து விட்டுக் கொடுத்தால் மட்டுமே அடுத்தவருக்குத் தரலாம், இல்லையேல் வலதுபுறத்தில் இருக்கும் அந்தச் சிறுவருக்கே வழங்க வேண்டும் என்ற நீதியை நிலைநாட்டினார்கள்.

இதேபோன்று, மதீனாவில் இஸ்லாம் விரிவடைந்த காலகட்டத்தில் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கக் குழுக்களாக வந்தார்கள். அவ்வாறு பனூ ஸஅத் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை அறிந்துகொள்ள வந்தனர். அவர்களுடன் அதிய்யா என்ற சிறுவரும் வந்திருந்தார். பெரியவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, கொண்டுவந்த பயணப் பொதிகளைப் பாதுகாப்பதற்காக அந்தச் சிறுவரை வெளியே அமர வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

அவர்களுடன் உரையாடி முடித்த நபி (ஸல்) அவர்கள், “வந்தவர்களில் யாரேனும் விடுபட்டிருக்கிறார்களா?” என்று விசாரித்தார்கள். அதற்கு அவர்கள், “பொருட்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறுவனை மட்டும் விட்டு வந்திருக்கிறோம்” என்று அலட்சியமாகக் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள், அவரும் தம்மைச் சந்திக்கும் ஆசையோடுதானே ஊரிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, அந்தச் சிறுவரையும் அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள். அந்தச் சிறுவரின் மனமும் திருப்தியடைய வேண்டும் என்பதற்காக அவரைத் தனியாக வரவழைத்து நபி (ஸல்) அவர்கள் சில முக்கியமான அறிவுரைகளை வழங்கினார்கள். குறிப்பாக, தன்னம்பிக்கையோடும் சுயமரியாதையோடும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, مَا أَغْنَاكَ اللَّهُ (அல்லாஹ் உனக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ அதைக் கொண்டு நீ போதுமாக்கிக்கொள்; மனிதர்களிடம் எதையும் கேட்காதே) என்று அச்சிறு வயதிலேயே அவரிடம் போதித்தார்கள்.

அல்லாஹ் குறைவாகத் தந்தாலும் சரி, அதிகமாகத் தந்தாலும் சரி, எந்நிலையிலும் யாரிடமும் எதையும் கையேந்திக் கேட்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனுக்கு அறிவுரை கூறினார்கள். கொடுக்கும் கை எப்போதும் மேலேயும், வாங்கும் கை கீழேயும் இருக்கும் என்பதால், எப்போதுமே வாங்கும் கையாக இல்லாமல் கொடுக்கும் மேலான கையாகவே இருக்க வேண்டும் என்று ஓர் உவமையின் மூலம் அழகாகப் புரியவைத்தார்கள்.

فَلَا تَسْأَلِ النَّاسَ شَيْئًا فَاِنَّ الْيЕДَ الْعُلْيَا هُوَ الْمُعْطِيَةُ
மனிதர்களிடம் எதையும் கேட்காதே; நிச்சயமாக மேலிருக்கும் கைதான் கொடுக்கும் கையாகும்.
(ஹாக்கிம்)

ஒருவர் விடுபட்டுப் போய்விட்டார் என்று தெரிந்ததும், அவர் ஒரு சிறுவர்தானே என்று நபி (ஸல்) அவர்கள் அவரை அலட்சியப்படுத்திவிடவில்லை. அவரை வரவழைத்து, பெரியவர்களுக்குக் கொடுப்பது போன்றே அவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து அமரவைத்தார்கள். மேலோட்டமாக நலம் விசாரித்து அனுப்பிவிடாமல், அவருக்குப் பல அறிவுரைகளை வழங்கினார்கள். அதில் முதன்மையானதாக, யாரிடமும் கையேந்தாமல் அல்லாஹ் தந்ததைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற இந்த அறிவுரையைச் சொன்னார்கள்.

அரபு தேசத்தில் பல்வேறு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தனர். மக்கா, மதீனா உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் வாழ்ந்த மக்கள் தூய அரபி மொழியைப் பேசினர். அவர்களைச் சுற்றியிருந்த ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுக்கென ஒரு வட்டார வழக்கில் பேசிவந்தனர். தமிழில் கோவை, மதுரை, சென்னை எனப் பகுதிக்குத் தகுந்தாற்போல் வட்டார வழக்குகள் இருப்பது போலத்தான் அதுவும். நபி (ஸல்) அவர்களிடம் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வந்தாலும், அவர்களுக்குப் புரியும் வகையில் அவர்களுடைய பாணியிலேயே நபி (ஸல்) அவர்கள் பேசுவார்கள். பெரியவர்களுக்குப் பல வட்டார வழக்குகள் தெரிந்திருக்கலாம்; ஆனால் சிறுவர்களுக்குத் தங்கள் பகுதியின் பேச்சு வழக்கு மட்டுமே புரியும். எனவே, அந்தச் சிறுவனுக்கு எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தமது வழக்கமான பேச்சு நடையை மாற்றி, அந்தச் சிறுவரின் வட்டார வழக்கிலேயே பேசினார்கள். இதனை அந்தத் தோழர், كَلَّمَنِيْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلُغَتِنَا (நபி (ஸல்) அவர்கள் என்னிடம் எங்கள் வட்டார வழக்கு மொழியிலேயே பேசினார்கள்) என்று குறிப்பிடுகிறார். சிறுவர்கள் விஷயத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு அக்கறை காட்டி, இறங்கி வந்து வழிகாட்டினார்கள் என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

சிறுவர்கள் என்றும் பாராமல் மார்க்க ஒழுக்கங்களை அவர்களுக்கு உரிய நேரத்தில் பக்குவமாகக் கற்றுக்கொடுப்பதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். இதற்கு மற்றொரு நிகழ்வும் சான்றாக உள்ளது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி என்பது பல ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு பெரிய வளாகமாக இருந்தது. அந்த இடம் நபி (ஸல்) அவர்களால் சொந்தப் பணம் கொடுத்து வாங்கப்பட்டதே தவிர, மக்களிடம் வசூல் செய்து வாங்கப்பட்டதல்ல. தொழுகைக்கான இடம் அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்க, அதன் பரந்த வளாகத்தில் பல்வேறு தேவைகளுக்கான இடங்கள் இருந்தன. வீடற்ற திண்ணைத் தோழர்கள் தங்குவதற்கான திண்ணை, போர்க் கைதிகளைக் கட்டி வைக்கும் இடம், ஈட்டி எறிதல் மற்றும் அம்பு எய்தல் போன்ற போர் பயிற்சிகள் நடைபெறும் இடம், ஒட்டகங்களைக் கட்டி வைக்கும் பகுதி மற்றும் தண்டனைகளை நிறைவேற்றும் இடம் எனப் பலவும் அவ்வளாகத்திலேயே அமைந்திருந்தன.

மக்களிடமிருந்து ஜகாத்தாக வரக்கூடிய பேரீச்சம்பழங்கள் பள்ளிவாசல் வளாகத்தில் மூட்டை மூட்டையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும். தகுதியானவர்கள் எடுத்துச் செல்வதற்காக அது பொதுவெளியில் வைக்கப்பட்டிருக்கும். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் பேரக்குழந்தையான ஹசன் (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த பேரீச்சம்பழங்களில் ஒன்றை எடுத்துத் தம் வாயில் போட்டுவிட்டார்கள்.

அதைப் பார்த்துவிட்ட நபி (ஸல்) அவர்கள் உடனே அவரை அழைத்து, “கக், கக்” (துப்பு, துப்பு) என்று கூறி வாயிலிருந்த பழத்தைத் துப்பச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஜகாத் அல்லது சதகா பொருட்களை உண்பது மறுமை நாள் வரை தடுக்கப்பட்டுள்ளது; அன்பளிப்புகளை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

أَمَا شَعَرْتَ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ
நாம் சதகாவை உண்ண மாட்டோம் என்பதை நீ அறியவில்லையா?
(புகாரி: 1491) ➚

ஒரு சிறுவன் அறியாமல் பொதுவில் கிடந்த பழத்தை எடுத்து உண்பது இயல்பான ஒன்றுதான். பொதுவாகப் பலரும், “சின்னப் பிள்ளைதானே, அப்படித்தான் செய்வான்” என்று அறிவுரை கூறாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் செல்லம் கொடுப்பது என்ற பெயரில் மார்க்க வரம்புகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. சிறுவர்களையும் ஒரு மனிதராக மதித்து, அவர்களுக்குரிய முறையில் மார்க்கத்தின் சட்டங்களைப் புரியவைத்து பக்குவப்படுத்த வேண்டும் என்பதில் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

அதேபோன்று, நுஃமான் இப்னு பஷீர் என்றொரு தோழர் இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். முதல் மனைவிக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். இரண்டாவது மனைவி ஒரு சொத்தைக் காட்டி, “இந்தச் சொத்தை வந்து என்…”

ஒருவர் உயிருடன் இருக்கும்போதே தம்முடைய சொத்தைப் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்கலாம். அந்த அடிப்படையில், பஷீர் என்ற நபித்தோழரின் மனைவி, தனக்குப் பிறந்த மகனான நுஃமானுக்கு ஒரு குறிப்பிட்ட சொத்தை அல்லது இடத்தை வழங்குமாறு கணவரிடம் கோரினார். பஷீருக்கு மற்றொரு மனைவி மூலமாகவும் பிள்ளைகள் இருந்தனர். ஆனால், இந்த மகனுக்கு மட்டுமே அந்தச் சொத்தைக் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தான் ஏற்றுக்கொள்வேன் என்றும் அந்தத் தாய் வலியுறுத்தினார்.

அக்காலத்தில் பத்திரப்பதிவு முறைகளோ எழுத்துப்பூர்வ ஆவணங்களோ கிடையாது; மனித சாட்சிகளை வைத்தே சொத்துப் பரிமாற்றங்கள் உறுதி செய்யப்படும். எனவே, பஷீர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தம் மகனுக்கு அந்தச் சொத்தைக் கொடுக்க விரும்புவதாகவும், அதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக இருக்குமாறு தம் மனைவி கூறியதாகவும் தெரிவித்தார்.

ஒரு சிறு பிள்ளைக்குக் கொடுப்பதாகக் கூறியவுடனேயே ஒப்புக்கொள்ளாமல், நபி (ஸல்) அவர்கள் அக்குடும்பத்தின் நிலையை முழுமையாகச் சிந்தித்தார்கள். ஒரு பிள்ளைக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அவரிடம் أَلَكَ وَلَدٌ سِوَاهُ (இவரைத் தவிர வேறு பிள்ளை உனக்கு இருக்கிறதா?) என்று கேட்டார்கள். அவர், வேறு பிள்ளைகளும் இருப்பதாகக் கூறினார். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا (உன்னுடைய மற்ற பிள்ளைகளுக்கும் இதுபோன்று கொடுத்தாயா?) என்று வினவினார்கள். அதற்கு அவர், மற்ற பிள்ளைகளுக்கு அவ்வாறு கொடுக்கவில்லை என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

اتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளுக்கிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்.
(புகாரி: 2587) ➚

நபி (ஸல்) அவர்கள் மறுத்த பிறகு, பஷீர் தாம் கொடுக்க நினைத்த அந்தச் சொத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

ஒரு மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அந்த மனைவியின் பிள்ளைக்கு மட்டும் கொடுத்துவிட்டால், மற்றொரு மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவது, அவர்களுக்கும் அவர்தானே தந்தை, அவர்தானே பொறுப்பாளி என்பதை நபி (ஸல்) அவர்கள் கவனத்தில் கொண்டார்கள்.

இச்சட்டத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் பிள்ளைகளுக்குக் கொடுக்கும்போது நீதியாகவும் சமமாகவும் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தகுந்த காரணமின்றி ஒருவர் பாரபட்சமாக ஒருவருக்கு மட்டும் கொடுத்துவிட்டால், உலக சட்டப்படி அது செல்லுபடியாகிவிடும். உலகத்தில் அது செல்லும் என்பதால்தான், மறுமையில் அல்லாஹ்விடம் அதற்குரிய விசாரணை இருக்கிறது. உலகிலேயே அது செல்லாது என்றால் அல்லாஹ்விடம் கேள்வியே எழாது. மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் இதற்கு என்னைச் சாட்சியாக்காதே; வேறொருவரைச் சாட்சியாக்கிக்கொள்” என்று கூறியதும் அது செல்லுபடியாகும் என்பதையே காட்டுகிறது.

பிள்ளைகளுக்கு மத்தியில் நீதியாக நடக்க வேண்டும் என்பதன் பொருள், நியாயமான காரணமே இல்லாமல் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதே தவிர, தக்க காரணத்தோடு வித்தியாசப்படுத்துவது தவறாகாது. உதாரணமாக, ஒரு பிள்ளை உடல் பலவீனமான நோயாளியாக இருக்கலாம்; மற்றொரு பிள்ளை சுயமாக உழைக்கும் திரகாத்திரமானவனாக இருக்கலாம். நமக்குப்பின் இந்த பலவீனமான பிள்ளை சிரமப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவனுக்குச் சற்று அதிகமாகக் கொடுப்பதில் தவறில்லை. அதுபோல, ஒரு மகன் கல்லூரியில் படிக்கிறான் என்றால் அவனுக்குக் கல்விக் கட்டணம் அதிகமாகத் தேவைப்படுகிறது; மற்றொரு மகன் படிக்காமல் வேலைக்குச் செல்கிறான் என்றால், கல்லூரியில் படிக்கும் மகனுக்கு அதிகமாகக் கொடுப்பது நியாயமானது. மூன்று வயதுக் குழந்தை, பத்து வயதுச் சிறுவன், இருபது வயது இளைஞன் ஆகிய மூவருக்கும் நாம் ஒரே அளவிலான உணவையோ மீன், இறைச்சி போன்ற உணவுகளையோ கொடுப்பதில்லை; அவரவர் தேவைக்கேற்ப வித்தியாசப்படுத்தித் தருகிறோம். எனவே, தக்க காரணத்தோடு வித்தியாசப்படுத்துவது பாரபட்சம் ஆகாது; அதனை அல்லாஹ்வும் ஏற்றுக்கொள்வான். எவ்விதக் காரணமும் இன்றி அநியாயமான முறையில் பாரபட்சம் காட்டுவதே குற்றமாகும்.

சிறுவர்கள் தொடர்பான விவகாரங்களிலும் அவர்களின் குடும்ப நலம் மற்றும் எதிர்காலம் அனைத்திலும் நபி (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு அக்கறை செலுத்தினார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.