05) நபிமார்கள் உணவு உட்கொண்டனர்
இறைவன் தான் ஈஸா நபியவர்கள் பிறப்பின் அடிப்படையில் தான் மற்றவர்களை விட வித்தியாசப்படுகிறார்களே தவிர மனிதன் என்ற அடிப்படையில் எந்த மாற்றமும் அவர்களுக்கு ஏற்படவில்லை ஏன் என்றால் கடவுலாக இருந்தால் அவர் உண்ண மாட்டார் உண்ணவும் கூடாது. மனிதனாக இருந்தால் மாத்திரம் தான் உண்ண முடியும்.
இதன் அடிப்படையில் ஈஸா நபியவர்கள் மனிதன் தான் என்பதற்கான மேலதிக ஆதாரமாகவும் இந்த வசனம் விளங்குகிறது.அதே போல் இன்னொரு வசனத்தில் இறைவன் இப்படிக் குறிப்பிடுகிறான்.
உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.(அல்குர்ஆன்: 21:8) ➚
உலகில் இறைவனால் படைக்கப்பட்ட மனித இனத்தைப் பற்றிக் குறிப்பிடும் இறைவன் உணவு உட்கொள்ளக் கூடிய உடலாகத்தான் மனிதனின் உடலை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறான்.உணவு உட்கொள்ளாவிட்டால் மனிதனின் உடல் அதனைத் தாங்கிக் கொள்ளாது உயிர் வாழ முடியாது என்பதையும் மேற்கண்ட வசனம் தெளிவாக் குறிப்பிடுகிறது.
தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன். (அல்குர்ஆன்: 23:51) ➚
இந்த வசனத்தில் தூதர்களைப் பார்த்தே இறைவன் தூய்மையானவற்றை உண்ணும் படி கட்டளையிடுகிறான். ஏன் என்றால் அவர்களும் மனிதர்கள் தாம் அவர்களாலும் உண்ணாமல் உயிர்வாழ முடியாது என்பதே இதற்கான காரணம்.
நபிமார்களுக்கே உணவு இல்லாவிட்டால் வாழ முடியாது நபிமார்களாக இருந்தாலும் அவர்களும் உணவு உட்கொண்டே ஆக வேண்டும் என்பதே நியதி ஆக நபிமார்கள் மனிதர்கள் என்பது இன்னும் தெளிவாக நாம் அறிந்து கொள்ளும் சான்றுகளாக மேற்கண்ட வசனங்கள் இருக்கின்றன.
இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடு கிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர். (அல்குர்ஆன்: 25:7) ➚
இறைத் தூதர்கள் என்றால் உண்ணக் கூடாது, பருகக் கூடாது, கடை வீதிகளில் நடமாடாமல் இருக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் மனிதர்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது அதனால் தான் நபியின் காலத்தவரும் கூட இப்படிப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
இன்றும் கூட கடவுளின் பெயரால் ஏமாற்றும் சாமிமார்களையும், இஸ்லாமியப் பெயர் தாங்கித் தரீக்கா பக்தர்களையும் நம்பும் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கும் போது அந்த மக்கள் குறிப்பிட்ட நபர்களை நம்பியதற்கான காரணமாக சொல்லுவது அவர் குகையிலேயே இருக்கிறார், அவர் என்ன உண்ணுகிறார் என்ன செய்கிறார் என்பதே தெரியாது என்பதாகும்.இதனால் தான் நபியின் காலத்தவரும் கூட இது போன்ற கேள்விகளைக் கேட்கிறார்கள்.ஆக நபிமார்களும் மனிதர்கள் தாம் என்பதற்கு இதுவெல்லாம் தெளிவான ஆதாரங்களாகும்.