12) குழந்தைகளைக் கொஞ்ச வேண்டும்

நூல்கள்: தனிமனித வாழ்வில் இஸ்லாம்

அடுத்ததாக, குழந்தைகள் குறித்த நமது அணுகுமுறையிலும் சில பார்வைகளை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுவாக சிறுவர்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை; அவர்களோடு அமர்ந்து பேசுவதும் இல்லை. சொந்தக் குழந்தைகளாக இருந்தால் கொஞ்சுவதோடு சரிசெய்து விடுகிறோம்.

வழக்கமாக நாம் கைக்குழந்தையாக இருக்கும் வரை மட்டுமே குழந்தைகளைக் கொஞ்சுகிறோம். அவர்கள் சற்று வளர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டாலோ எட்ட நின்று விடுகிறோம்; அவர்களிடம் மெய்யான அன்பைக் காட்டுவதோ, அவர்களை ஒரு தனி மனிதராக மதிப்பதோ இல்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் பெரியவர்களை நடத்துவதைப் போன்றே சிறுவர்களையும் நடத்தினார்கள். சிறுவர்கள் தொடர்பாக நாம் நடைமுறைப்படுத்தத் தவறும் பல விஷயங்களை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

பொதுவாகத் தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது நாம் அவர்களைக் கடந்து சென்றால், அவர்களுக்கு ஸலாம் சொல்வதில்லை. அவர்கள்தான் பெரியவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டும் என்றும், சிறுவனுக்கு நாம் ஏன் ஸலாம் சொல்ல வேண்டும் என்றும் எண்ணுகிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணியாற்றிய அனஸ் (ரலி) அவர்கள், சிறுவர்களைக் கடந்து செல்லும்போது அவர்களுக்கு ஸலாம் கூறுபவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துவந்த காரணத்தினாலேயே தாமும் செய்வதாக அவர்கள் கூறினார்கள்.

فَمَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ
அவர் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் கூறினார்; நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு செய்துவந்தார்கள் என்றும் கூறினார்.
(புகாரி: 6247) ➚

அடுத்ததாக, நமக்குத் தெரிந்த பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டால் நாம் நலம் விசாரிக்கச் செல்கிறோம். ஆனால் ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்டால், அவனது பெற்றோரின் முகத்திற்காக அவர்களை ஆற்றுப்படுத்தச் செல்வோமே தவிர, குழந்தையை நலம் விசாரிப்பதற்காகப் பெரியவர்கள் செல்வதில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் பணிவிடை செய்துவந்த யூதச் சிறுவன் ஒருவன் நோய்வாய்ப்பட்டபோது, அவனது பெற்றோரை முன்னிட்டு அல்லாமல், அந்தச் சிறுவனை நலம் விசாரிப்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் அவனது வீட்டிற்குச் சென்றார்கள். அவனது தந்தை அருகில் இருக்கும்போதே, நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். தந்தை தனது மகனிடம் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுமாறு கூறவே, அச்சிறுவன் اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். அச்சிறுவனை நரகத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் திரும்பினார்கள் (புகாரி: 1356) ➚. எனவே சிறுவர்கள் நோய்வாய்ப்பட்டாலும் அவர்களை நேரில் சென்று நலம் விசாரிக்க வேண்டும் என்பதை இதிலிருந்து விளங்க முடிகிறது.

நபி (ஸல்) அவர்களின் அவைகளில் பெரியவர்களோடு சிறுவர்களும் சமமாக அமர்ந்திருந்தார்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவனும், இடப்பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது குடிப்பதற்குப் பால் கொண்டுவரப்பட்டது. எந்த ஒரு நற்காரியத்தையும் வலப்பக்கத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிகாட்டல். ஆனால், சமுதாயத்தில் மிகச் சிறந்தவரான அபூபக்கர் (ரலி) அவர்களுக்குக் கொடுக்காமல் சிறுவனுக்கு முதலில் கொடுத்தால் சங்கடமாகிவிடும் என்று கருதிய உமர் (ரலி) அவர்கள், அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ, வலப்பக்கம் அமர்ந்திருந்த அச்சிறுவனிடம், “உனக்குரிய பங்கை அபூபக்கருக்குக் கொடுக்க அனுமதி தருகிறாயா?” என்று அவனது உரிமையை மதித்துக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கின்ற பாக்கியத்தை விட்டுத்தர அச்சிறுவன் மறுத்துவிட்டதால், நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவனிடமே முதலில் கொடுத்தார்கள்; அதன் பின்னரே வரிசையாகச் சென்று கடைசியாக அபூபக்கர் (ரலி) அவர்களுக்குக் கிடைத்தது.

இதிலிருந்து இரண்டு முக்கியமான வழிகாட்டல்கள் கிடைக்கின்றன. முதலாவதாக, சபைகளில் சிறுவர்களது உரிமைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். இன்று பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சியோ வேறு உணவுகளோ பகிரப்படும்போது, பெரியவர்களுக்கும் முக்கிய நபர்களுக்கும் முதலில் கொடுத்துவிட்டுச் சிறுவர்களைப் பின்னுக்குத் தள்ளும் நிலை காணப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் பகிர்ந்தளிக்கும்போது மனிதர்களைப் பார்த்தோ, தகுதியைப் பார்த்தோ வழங்கக் கூடாது; வலப்பக்கத்திலிருந்து முறைப்படி வழங்க வேண்டும். வலப்பக்கத்தில் ஒரு சிறுவன் இருந்தாலும் அவனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, நபி (ஸல்) அவர்களின் அவைகளில் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடின்றி அனைவரும் சமமாக அமர்ந்தார்கள். இன்று மார்க்க உரைகள் நிகழும் சபைகளில் சிறுவர்கள் வந்து அமர்ந்தால், அவர்களை விரட்டியடிப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களை அவ்வாறு விரட்டாமல் அவர்களது உரிமையை மதித்துக் கண்ணியப்படுத்தினார்கள்.

அடுத்ததாக, வழிபாட்டுத் தலங்களிலிருந்து சிறுவர்களை விரட்டியடிக்கும் தவறான வழக்கம் நம்மிடையே பரவலாக உள்ளது. பள்ளிவாசலுக்கு வரும் சிறுவர்களைக் கடைசி வரிசைக்குத் துரத்துவதையும், பள்ளிக்குள் வரவிடாமல் தடுப்பதையும் காண்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவ்வாறு விரட்டியடிக்கப்படவில்லை. பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் அனுமதியைப் பெற்றிருந்தார்கள்; குழந்தைகளோடும் அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்கள். அந்த அனுமதி மறுமை நாள் வரை தொடர்கிறது. மார்க்க அறிவு இல்லாத காரணத்தினாலேயே சிலர் அவர்களைத் தடுக்கின்றனர்.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும்போது குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வருவதுண்டு. தொழும் வயதை எட்டாத தொட்டில் குழந்தைகளைக் கூட அழைத்து வருவார்கள். கணவனும் மனைவியும் பள்ளிவாசலுக்கு வந்து தொழ விரும்பும்போது, குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வர முடியாது; குழந்தையைக் காரணம் காட்டிப் பெண்கள் பள்ளிவாசலுக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை அழைத்து வந்தார்கள். பள்ளிவாசலின் ஒரு மூலையில் தொட்டிலைக் கட்டிவிட்டுப் பெண்கள் தொழுவார்கள்.

அவ்வாறு தொழும்போது குழந்தைகள் அழுவது இயல்பானது. ஒரு குழந்தை அழுதால் அதைப் பார்த்து மற்ற குழந்தைகளும் அழத் தொடங்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு சூழலில் நபி (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் தொழ வைக்க வேண்டும் என்று எண்ணி நின்றாலும், குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டவுடன் சிறிய அத்தியாயங்களை விரைவாக ஓதித் தொழுகையை முடித்துவிடுவார்கள்.

தொழுகையை முடித்த பின், நீண்ட நேரம் தொழ வைக்க நினைத்து நான் நின்றாலும், إِنِّي لَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ (நிச்சயமாக நான் குழந்தையின் அழுகைச் சப்தத்தைக் கேட்கிறேன்) என்று குறிப்பிட்டு, குழந்தையின் அழுகையைக் கேட்டு அதன் தாயின் உள்ளம் படும் வேதனையை எண்ணியே தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். விவரம் அறியாத கைக்குழந்தைகள் அழுது தொழுகைக்கு இடையூறு செய்த போதிலும், “குழந்தையை ஏன் பள்ளிவாசலுக்குத் தூக்கி வந்தீர்கள்? என் தொழுகையைக் கெடுத்துவிட்டீர்களே!” என்று நபி (ஸல்) அவர்கள் பெற்றோரிடம் கோபப்படவோ அவர்களை விரட்டியடிக்கவோ இல்லை.

குழந்தையின் அழுகை நபி (ஸல்) அவர்களின் கவனத்தை ஈர்த்துத் தொழுகையைச் சுருக்க வைத்த போதிலும், அவர்கள் பெற்றோரிடம் பள்ளிவாசலின் ஒழுக்கத்தைக் காரணம் காட்டிப் பேசவில்லை. ஒழுக்கம் என்பது விவரம் தெரிந்த பெரியவர்களுக்கு உரியதே தவிர, குழந்தைகளுக்கு உரியதல்ல; குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள். பொதுவாகப் பொது இடங்களில் பிறர் குழந்தை கத்தினால் சலிப்படையும் நாம், நம் சொந்தக் குழந்தை கத்தினால் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்களோ, பள்ளிவாசலில் இடையூறு ஏற்பட்ட போதும் கோபப்படாமல், அக்குழந்தையின் தாயின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு பரிவுடன் நடந்து கொண்டார்கள். எனவே பள்ளிவாசலுக்குச் சிறுவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது தவறாகும். ஆண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைப் போலவே பெண்களும் குழந்தைகளுடன் வரலாம். பெரியவர்கள்தான் சகிப்புத்தன்மையுடன் குழந்தைகளை அணுக வேண்டும்.

கைக்குழந்தைகள் மட்டுமல்லாமல், ஐந்து முதல் எட்டு வயது வரையிலான விவரம் தெரிந்த சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு வரும்போதும் அவர்களை விரட்டியடிக்கும் போக்கு பல இடங்களில் காணப்படுகிறது. சிறு வயதில் பள்ளிவாசலை விட்டு விரட்டப்படுவது அவர்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடுவதால், அவர்கள் பெரியவர்களான பிறகும் பள்ளிவாசலுக்கு வரத் தயங்குகிறார்கள். எனவே ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் சிறுவர்களை விரட்டாமல் ஊக்குவிப்பதே சரியான வழியாகும்.

இதனை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலிலிருந்தே நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், மதீனாவில் சில நூறு முஸ்லிம்கள் மட்டுமே இருந்த காலகட்டத்தில், ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை வெகுநேரம் வரை தாமதப்படுத்தினார்கள். அப்போது பள்ளிவாசலில் காத்திருந்த பெண்களும் சிறுவர்களும் தூங்கி விழும் நிலை ஏற்பட்டது.

حَتَّى قَالَ عُمَرُ نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ
இறுதியாக உமர் (ரலி) அவர்கள், “பெண்களும் சிறுவர்களும் தூங்கிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
(புகாரி: 566, 569, 862, 864) ➚

அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “இந்த பூமியில் உங்களைத் தவிர வேறு யாரும் இத்தொழுகைக்காகக் காத்திருக்கவில்லை” என்று கூறினார்கள். அன்று மதீனாவைத் தவிர வேறு எங்கும் இஸ்லாம் பரவியிருக்காததால் அவ்வாறு குறிப்பிட்டார்கள். இங்கு இஷா தொழுகை தாமதமான போது صِبْيَان (பருவமடையாத சிறுவர்கள்) பள்ளிவாசலில் தூங்கி விழுந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பருவமடையாத சிறுவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்கள் என்பதையும், அவர்கள் தடுக்கப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது. ஏழு வயதில் தொழுகையை ஏவுமாறும், பத்து வயதில் அடிக்குமாறும் வரும் செய்தி ஆதாரப்பூர்வமானதாக இல்லாத போதும், சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள் என்பதற்கு இத்தகைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.

இஸ்லாம் பரவிய காலக்கட்டத்தில் நடந்த மற்றொரு நிகழ்வும் இதற்குச் சான்றாக உள்ளது. அம்ரு இப்னு சலமா என்ற சிறுவரின் சமுதாய மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அச்சிறுவர், தன் பகுதியைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தொழும்போது ஓதுவதைக் கவனித்துக் குர்ஆனின் சில பகுதிகளை மனனம் செய்திருந்தார். அச்சமூகத்தார் இஸ்லாத்தை ஏற்றபோது நபி (ஸல்) அவர்கள், صَلُّوا صَلَاةَ كَذَا فِي حِينِ كَذَا (இன்ன தொழுகையை இன்ன நேரத்தில் தொழுங்கள்) என்று தொழுகையையும் நேரங்களையும் கற்றுத் தந்து பின்வருமாறு கூறினார்கள்:

فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا
தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் குர்ஆனை அதிகமாக அறிந்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்.
(புகாரி: 4302) ➚

அவர்கள் தங்களுக்குள் யாருக்குக் குர்ஆன் அதிகமாகத் தெரியும் என்று விசாரித்தபோது, அம்ரு இப்னு சலமா என்ற அச்சிறுவரே மற்ற எல்லோரையும் விட அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்திருந்தார். அதனால் அச்சிறுவரையே அவர்கள் தங்களுக்கு இமாமாக நியமித்தார்கள்.

فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي
அவர்கள் கவனித்துப் பார்த்தபோது, என்னை விடக் குர்ஆனை அதிகமாக அறிந்தவர் எவரும் அங்கு இருக்கவில்லை.
(புகாரி: 4302) ➚

அந்தச் சமுதாயத்தில் என்னைவிட அதிகமாகக் குர்ஆன் அறிந்தவர் எவரும் இல்லாததால், அவர்கள் என்னை இமாமாக முன்னிறுத்தித் தொழுகை நடத்தினார்கள்; وَأَنَا ابْنُ سِتٍّ أَوْ سَبْعِ سِنِينَ (அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்) என்று அம்ர் இப்னு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அக்காலத்தில் நிலவிய வறுமையின் காரணமாக, அவர் ஒரு போர்வையை மட்டுமே மேலாடையாகப் போர்த்தியிருந்தார். அவர் ஸஜ்தாச் செய்யும்போது ஆடை விலகி அவரது தொடைப்பகுதி தெரிய ஆரம்பித்தது. இதைக் கண்ட பின்வரிசையில் தொழுதுகொண்டிருந்த பெண்கள், இமாமின் பின்பகுதியை ஆடையால் மறைக்குமாறு கூறினர். உடனே அவருக்கு ஒரு சட்டை தைத்துக் கொடுத்தார்கள். அந்தச் சட்டை கிடைத்தபோது அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெப்போதும் தாம் அடைந்ததில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிகழ்ந்தது. மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றாக இது இருந்திருந்தால், வஹீ இறங்கிக்கொண்டிருந்த காலமாதலால் அல்லாஹ் அதை நிச்சயம் தடுத்து எச்சரித்திருப்பான். இமாமத் செய்பவர் இருபத்தைந்து வயது நிரம்பியவராக, பல ஆண்டுகள் பயின்றவராக, பெரிய தாடி வைத்தவராக, தலைப்பாகை அணிந்தவராக இருக்க வேண்டும் என்றோ அல்லது சுன்னத் செய்திருக்க வேண்டும் என்றோ எந்த நிபந்தனையும் இல்லை. அக்காலத்தில் பொதுவாகப் பருவமடையும் வயதிலேயே சுன்னத் செய்தார்கள் என்பதால், ஏழு வயதில் அவர் சுன்னத் செய்திருக்கவும் மாட்டார். குர்ஆனையும் தொழுகையின் சட்டங்களையும் அறிந்திருந்தால் சிறுவர்களும் தொழுகை நடத்தத் தகுதியானவர்களே என்பதையும், சுன்னத் செய்யாவிட்டாலும் பள்ளிவாசலுக்கு வரலாம், தொழுகை நடத்தலாம் என்பதையும்(புகாரி: 4302) ➚-வது ஹதீஸில் பதிவாகியுள்ள இந்த நிகழ்வு உணர்த்துகிறது. எனவே சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்கக் கூடாது.

அதேபோன்று ஜனாஸாத் தொழுகையிலும் சிறுவர்கள் பங்கேற்றுள்ளனர். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பத்து வயது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் இரவில் மரணித்து அடக்கம் செய்யப்பட்டார். அதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், தமக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டுவிட்டு, அவருடைய கப்ருக்குச் சென்று ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அப்போது فَصَفَفْنَا خَلْفَهُ وَأَنَا فِيهِمْ (நாங்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம்; அவர்களில் நானும் இருந்தேன்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஜனாஸாத் தொழுகையிலேயே சிறுவர்கள் கலந்துகொண்டிருக்கும்போது, அவர்களைப் பள்ளிவாசலை விட்டும் மார்க்க வழிபாடுகளை விட்டும் விரட்டக் கூடாது என்பதைப்(புகாரி: 1321) ➚-வது ஹதீஸ் காட்டுகிறது.

சிறு வயதில் உள்ளத்தில் பதியும் விஷயங்கள் பசுமரத்து ஆணி போல ஆழமாக நிலைத்து நிற்கும். ஆனால் இன்று சிறுவர்களைப் பள்ளிவாசலுக்கு வரவிடாமல் விரட்டி, பள்ளிவாசல் என்றாலே அச்சத்திற்குரிய இடம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். இது பிற்காலத்தில் அவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் செய்தபோது, பருவ வயதை நெருங்கிக்கொண்டிருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு பெண் கழுதையின் மீது வந்து, தொழுகையின் வரிசைகளுக்குக் குறுக்கே கடந்துசென்று கழுதையைக் கட்டிவிட்டு வரிசையில் இணைந்தார்கள். சிறுவன் செய்த இச்செயலை நபி (ஸல்) அவர்கள் فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ (என் மீது ஆட்சேபிக்கவில்லை). தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது என்ற ஒழுங்கு இருந்தபோதிலும், சிறுவர்கள் சிறுவர்களாகவே நடந்துகொள்வார்கள் என்பதால் அவர்களைப் பள்ளிவாசலிலும் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள் (புகாரி: 76) ➚.

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும்போது ஏழு வயதாக இருந்த ஸாயிப் இப்னு யஸீத் (ரலி) அவர்கள், தம் தந்தை தம்மை நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

حُجَّ بِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ
நபி (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்; அப்போது நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தேன்.
(புகாரி: 1858) ➚

பயண வசதிகள் இல்லாத அக்காலத்தில், கடும் வெயில், மழை, குளிர் என எத்தனையோ சிரமங்கள் இருந்தபோதிலும், வணக்க வழிபாடுகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக ஏழு வயதுச் சிறுவனையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

மேலும், ஹஜ்ஜின்போது ஒரு பெண் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களிடம் அக்குழந்தையைக் காட்டி, أَلِهَذَا حَجٌّ (இவனுக்கு ஹஜ் உண்டா?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், نَعَمْ (ஆம்), وَلَكِ أَجْرٌ (அதைச் சுமக்கும் உனக்கும் நற்கூலி உண்டு) என்று பதிலளித்தார்கள். புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமுக்கே கைக்குழந்தைகளையும் சிறுவர்களையும் அழைத்துச் சென்றிருக்கும்போது, சாதாரணப் பள்ளிவாசல்களுக்குச் சிறுவர்கள் வருவதை நாம் ஒருபோதும் தடுக்கக் கூடாது.

அபூ அல்ஹவ்ரா என்பவர் ஹஸன் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் எதை மனனம் செய்தீர்கள் என்று கேட்டபோது, صَلَوَاتِ الْخَمْسِ (ஐவேளைத் தொழுகையை) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும்போது சிறுவராக இருந்த ஹஸன் (ரலி) அவர்களுக்கே ஐவேளைத் தொழுகையைக் கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

சிறுவர்களை வழிபாடுகளிலிருந்தும் பள்ளிவாசல்களிலிருந்தும் விரட்டாமல், அவர்களின் குறைகளைப் பொறுத்துக்கொண்டு, சிறுவயதிலிருந்தே அவர்களைப் பள்ளிவாசலுக்கும் நற்செயல்களுக்கும் பழக்கப்படுத்துவதே நபிவழியாகும்.