10) கொல்வதற்க்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்கள்
பொதுவாக எந்த ஓர் உயிரினத்தையும் உண்பதற்காகத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கொல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியாகும். ஆயினும் இதில் ஐந்து உயிரினங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை உண்பதற்காக அன்றி சாதாரணமாகவே கொல்லலாம். மனிதர்கள் வாழும் பகுதிகள், வீடுகள், தெருக்கள் ஆகியவற்றில் மட்டுமன்றி, பொதுவாக வேட்டையாடுவதோ அல்லது புற்பூண்டுகளைக் கிள்ளுவதோ கூட தடை செய்யப்பட்ட புனித மக்கா எல்லைக்குள்ளும் (ஹரம்), இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையிலும் கூட அந்த ஐந்து உயிரினங்களைக் கொல்ல மார்க்கத்தில் அனுமதி உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ
ஹரமிலும் ஹரமுக்கு வெளியிலும் கொல்லப்பட வேண்டிய ஐந்து தீங்கிழைக்கும் உயிரினங்கள் உள்ளன.
(ஸஹீஹ் முஸ்லிம்)
அந்த ஐந்து உயிரினங்கள்: பாம்பு, அண்டங்காக்கை, எலி, வெறிநாய் மற்றும் பருந்து ஆகியவையாகும். இஹ்ராம் அணிந்திருந்தாலும் சரி, புனித ஹரமுக்குள் இருந்தாலும் சரி, பாம்பைக் கண்டால் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் அதைக் கொல்ல வேண்டும். இரண்டாவதாக, உடலளவில் பெரியதும் மிகுந்த கருமை நிறமும் கொண்ட அண்டங்காக்கை. மூன்றாவதாக, நாட்டிற்கும் வீட்டிற்கும் மனிதர்களுக்கும் பொருளாதார ரீதியாகப் பெரும் சேதங்களை விளைவிக்கக்கூடிய எலி. நான்காவதாக, மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வெறிநாய். ஐந்தாவதாக, பருந்து. இந்த ஐந்து உயிரினங்களையும் புனித ஹரமிற்குள்ளும் அதற்கு வெளியிலும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மேலும், ஒருவர் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் போது பாம்பையோ தேளையோ கண்டால், தொழுகையை நிறுத்திவிட்டேனும் அவற்றைக் கொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். தொழுகையை முடிக்கும் வரை தாமதித்தால் அவை பிறருக்குத் தீங்கு விளைவிக்கவோ அல்லது எங்காவது மறைந்துவிடவோ வாய்ப்புள்ளது என்பதால் இத்தகைய வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.
வீடுகளில் பாம்பைக் கண்டால் அதனுடன் பேச வேண்டும் என்று சமுதாயத்தில் ஒரு தவறான செய்தி கூறப்படுகிறது. தாவூத் நபியின் மகன் சுலைமான் நபியிடமும், நூஹ் நபியிடமும் செய்த உடன்படிக்கையைக் கூறி, தங்களுக்குத் தொந்தரவு தராமல் சென்றுவிடுமாறு பாம்புக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், அதன் பிறகும் அடுத்த நாள் அது வந்தால் அதைக் கொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் ஒரு செய்தி காணப்படுகிறது. ஆனால் இச்செய்தியை அறிவிக்கும் இப்னு அபீ லைலா என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் ஒருமனதாகப் பலவீனமானவர் என முத்திரை குத்தப்பட்டவராவார். அவர் நம்பகமான அறிவிப்பாளர் அல்ல என்பதால் இந்த ஹதீஸை அறிஞர்கள் எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. புற்பூண்டுகளைக் கூட கிள்ளக்கூடாது என்றும், ஒரு கொலையாளியே தஞ்சம் புகுந்தாலும் அவனைக் கொல்லக்கூடாது என்றும் கூறப்படும் புனித ஹரமிற்குள்ளேயே பாம்பைக் கொல்ல நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது, வீடுகளில் பாம்பைக் கண்டால் அதனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். எனவே அறிவிப்பாளர் தொடர் மற்றும் கருத்து ஆகிய இரண்டு அடிப்படைகளிலும் இச்செய்தி ஏற்புடையதல்ல. ஆகவே வீடுகளில் பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்றுவிட வேண்டும்.
அடுத்து, பல்லியைப் பற்றி சமுதாயத்தில் சில தவறான செய்திகள் உலவுகின்றன. முதல் அடியில் பல்லியைக் கொன்றால் இன்னென்ன நன்மைகள், இரண்டாவது அடியில் கொன்றால் சற்று குறைவான நன்மைகள், மூன்றாவது அடியில் கொன்றால் இன்னென்ன நன்மைகள் என்று ஸஹீஹ் முஸ்லிமில் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதற்கு நஸயீயில் கூறப்படும் காரணம் என்னவென்றால், இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் தூக்கிப் போட்டபோது மற்ற உயிரினங்கள் அனைத்தும் அந்த நெருப்பை அணைக்க முயன்றதாகவும், பல்லி மட்டும் நெருப்பை ஊதி வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இக்காரணம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முற்றிலும் முரணானதாகும். இப்ராஹீம் நபியை நெருப்பில் போட்ட உடனேயே நெருப்பை சாந்தியாக மாறுமாறு அல்லாஹ் உத்தரவிட்டுவிட்டதாகத் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
قُلْنَا يَـٰنَارُ كُونِى بَرْدًا وَسَلَـٰمًا عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
“நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம்.
(அல்குர்ஆன்: 21:69)➚
அல்லாஹ்வின் உத்தரவினாலேயே நெருப்பு குளிர்ச்சியானது; எந்தப் பிராணியும் அதை ஊதி அணைக்கவுமில்லை, வளர்க்கவுமில்லை. மேலும் மனிதனே நெருங்க முடியாத அளவுக்கு மூட்டப்பட்ட அந்தப் பெரும் நெருப்புக் குண்டத்தின் அருகே ஒரு பல்லி சென்று ஊதுவது என்பது சாத்தியமற்ற ஒன்று; அவ்வாறு சென்றிருந்தால் அது கருகிப் போயிருக்கும். தவிர, விலங்குகளுக்கோ பிராணிகளுக்கோ நல்லது கெட்டதைப் பகுத்தறியும் அறிவு கிடையாது. இவர் இப்ராஹீம் நபி, இவன் நம்ரூத் என்றெல்லாம் அவற்றுக்குத் தெரியாது. அவற்றுக்குத் திட்டமிட்டு பாவம் செய்யும் ஆற்றலும் இல்லை. மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் மட்டுமே நன்மை, தீமை, சொர்க்கம், நரகம், கேள்வி கணக்கு ஆகியவை உள்ளனவே தவிர, விலங்கினங்களில் நல்ல மூஃமினான பிராணி என்றோ கெட்ட காஃபிரான பிராணி என்றோ எதுவும் கிடையாது. பாம்பு, தேள், எலி போன்றவற்றை நாம் கொல்வது அவை இயல்பாகவே மனிதர்களுக்குத் தீங்கும் இழப்பும் ஏற்படுத்துகின்றன என்பதற்காகத்தானே தவிர, அவை ஏதோ திட்டமிட்டுத் தீமை செய்கின்றன என்பதற்காக அல்ல. எனவே பல்லி நெருப்பை ஊதிவிட்டது என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த ஹதீஸ் என்ற பெயரில் பரப்பப்பட்டவையாகும்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு உத்தரவிட்டிருந்தால் அதை அவர்கள் தம் வாழ்க்கையில் நிச்சயமாகச் செயல்படுத்தியிருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு நன்மையை ஏவினாலும் அதை மற்றவர்களை விடத் தம் வீட்டில் முதன்மையாகக் கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள். அவ்வாறிருக்க, பல்லியைக் கொல்வதற்கு இவ்வளவு நன்மைகள் உண்டு என்றால் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் பல்லியைத் தேடி அடித்திருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் இல்லத்தில் வாழ்ந்த அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள், وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ (அதை கொல்லுமாறு அவர்கள் கட்டளையிட்டதை நான் கேட்கவில்லை) என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்.
பல்லியை அடிக்கச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் என் காதால் ஒருபோதும் கேட்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இது ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ளது. பல்லி என்பது வெளிகளிலோ காடுகளிலோ வாழக்கூடியது அல்ல; வீடுகளுக்குள்தான் வசிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆயிஷா (ரலி) அவர்களோடு சுமார் பத்து ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்தினார்கள். பல்லியைக் கொல்வதில் அவ்வளவு நன்மைகள் இருந்திருந்தால், நபி (ஸல்) அவர்களே அதைச் செய்திருப்பார்கள்; தம் மனைவியரையும் அடிக்கச் சொல்லியிருப்பார்கள். ஆனால், அப்படி ஒரு கட்டளையைத் தாம் கேட்டதே இல்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் திட்டவட்டமாகக் கூறுவதிலிருந்து, பல்லியை அடிக்கச் சொல்லும் செய்தியில் ஏதோவொரு தவறு நுழைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கும் குர்ஆனுக்கும் ஒத்ததாக அமைந்திருக்கிறது.
பொதுவாக, நமக்குத் துன்பமும் தீங்கும் விளைவிக்கும் உயிரினங்களை நாம் கொல்லலாம். அரபு நாட்டில் இருந்த சில பிராணிகளைப் பற்றி மட்டுமே நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், நம் நாட்டில் சாக்கடைகளினால் உற்பத்தியாகி நம்மைக் கடிக்கும் கொசுக்கள், நட்டுவாக்கலி அல்லது உடலில் பட்டாலே கடுமையான நமைச்சலையும் வீக்கத்தையும் உண்டாக்கும் கம்பளிப்பூச்சி போன்ற தொந்தரவு தரும் உயிரினங்களை நாம் அழிக்கலாம். அவற்றை நாம் அழிப்பது உயிர்களைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல; அவற்றால் ஏற்படும் இடையூறுகளிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ஆகும்.
ஊருக்குள் ஒரு சிங்கம் நுழைந்துவிட்டாலோ அல்லது மதம் பிடித்த யானை ஒன்று மக்களை மிதித்துக் கொல்ல வந்தாலோ, ஹதீஸில் இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கக் கூடாது. உலகப் படைப்புகளிலேயே மிகச் சிறந்த படைப்பு மனிதப் படைப்பாகும். மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக அத்தகைய விலங்குகளை அழிக்க வேண்டியது அவசியமாகிறது. நம்மை ஒருவர் வெட்ட வரும்போது தற்காப்புக்காக அவரை நாம் எதிர்ப்பதைப் போல, நமக்கு ஆபத்து விளைவிக்கும் விலங்குகளை அழிப்பதற்கும் மார்க்கத்தில் நியாயம் உண்டு. நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வது என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வழிகாட்டலாகும்.
وَلَا تُلْقُوا۟ بِأَيْدِيكُمْ إِلَى ٱلتَّهْلُكَةِ
உங்களை நீங்களே அழிவில் தள்ளிக் கொள்ளாதீர்கள்.
(அல்குர்ஆன்: 2:195)➚
தமக்குத்தாமே அழிவைத் தேடிக்கொள்ளக் கூடாது என்பது குர்ஆனின் பொதுவான கட்டளையாக இருப்பதால், நமக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் தற்காப்புக்காக அழிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. அதில் எந்தத் தவறும் இல்லை.