12) தாமாகச் செத்தவை ஹராம்
அடுத்ததாக, உண்ண அனுமதிக்கப்பட்ட ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாமாகச் செத்துவிட்டால் அவற்றின் இறைச்சி நமக்கு ஹராமாகி விடுகிறது. அதேபோல் நாய், பன்றி, கழுதை போன்ற பிராணிகளும் உண்பதற்கு ஹராமானவை. ஆயினும், செத்துப்போன ஒரு பிராணியின் தோலைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுகிறது. மைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஓர் ஆடு இறந்து கிடந்ததைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அதன் தோலை ஏன் வீணடித்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அது செத்ததாயிற்றே என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதன் இறைச்சியை உண்பதுதானே ஹராம், தோலைப் பதனிட்டுப் பயன்படுத்தலாமே என்று கூறினார்கள். அக்காலத்தில் தோல் மூலமே தண்ணீர் வைக்கும் குடங்களும் பாத்திரங்களும் செய்யப்பட்டன. எனவே, பயன் தரும் தோலை வீணாக்காமல் பதனிட்டுப் பயன்படுத்திக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ளது.
إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ
தோல் பதனிடப்பட்டு விட்டால் அது தூய்மையாகி விடுகிறது.
(முஸ்லிம்)
இதன்படி, எந்த ஒரு பிராணியின் தோலாக இருந்தாலும் அது பதனிடப்பட்டு விட்டால் தூய்மையாகி விடுகிறது. மருந்துகளையும் உப்பையும் இட்டுப் பதனிடப்பட்ட தோலைக் கொண்டு செருப்பு, பணப்பை, புத்தக அட்டை, குளிர்தாங்கும் ஆடைகள், தொப்பிகள் எனப் பல பொருள்களைச் செய்து கொள்ளலாம். நாய், பாம்பு, கழுதை போன்ற உண்ணத் தடுக்கப்பட்ட பிராணிகளின் தோலாக இருந்தாலும் கூட, பதனிடப்பட்டு விட்டால் அதைப் பயன்படுத்துவது குற்றமாகாது.
أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ
எந்தத் தோலாக இருந்தாலும் அது பதனிடப்பட்டு விட்டால் தூய்மையாகி விடுகிறது.
(ஹாகிம்)
எனவே, செத்துப்போன ஆடு, மாடுகளின் தோல்களை உரித்துப் பதனிட்டு விற்பனை செய்வதும் கூடும். எதைப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதோ, அதை வாங்கி விற்பதும் வியாபாரம் செய்வதும் ஆகுமானதே ஆகும். இறைச்சியைத்தான் விற்கக் கூடாதே தவிர, தோலைப் பதனிட்டுப் பயன்படுத்துவதையும் விற்பதையும் நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.