11) குழந்தைகளின் சிறுநீர்
தொழுகைக்குத் தூய்மை மிகவும் அவசியம். உடலும் உடையும் தொழும் இடமும் தூய்மையாக இருக்க வேண்டும். அசுத்தங்கள் பட்டிருந்தால் தொழுகை கூடாது. குழந்தைகளை மடியில் வைத்திருக்கும்போது சில நேரங்களில் அவை சிறுநீர் கழித்து விடுவதால் தூய்மை பாதிக்கப்படுகிறது. இது போன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த மார்க்க வழிகாட்டலை நாம் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் நமது வணக்க வழிபாடுகள் பாழாகிவிடும்.
குழந்தைகளின் சிறுநீர் மேனியிலோ ஆடையிலோ பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தெளிவான வழிகாட்டியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சிறுவன் கொண்டுவரப்பட்டபோது, அவனைத் தங்கள் மடியில் அமர்த்தினார்கள். அச்சிறுவன் அன்னாரது ஆடையில் சிறுநீர் கழித்ததும், நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் செய்து அதன் மீது தெளித்துக் கொண்டார்கள்; அதைக் கழுவவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ
அச்சிறுவன் அன்னாரது ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டான்; உடனே நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் செய்து, அதன் மீது தெளித்தார்கள்.
(புகாரி: 222) ➚
இதை மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு, சிறுவர்கள் சிறுநீர் கழித்தால் கழுவத் தேவையில்லை, தண்ணீர் தெளித்தால் போதும் என்ற பொதுவான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இதில் கூடுதல் விளக்கங்கள் உள்ளன. உம்மு கைஸ் (ரலி) அவர்கள் உணவு உட்கொள்ளத் தொடங்காத, தாய்ப்பால் மட்டுமே குடிக்கக்கூடிய தம்முடைய சிறு குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்த நிகழ்வு இதற்கு மேலும் தெளிவூட்டுகிறது.
بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ
உணவு உட்கொள்ளாத தன் சிறு குழந்தையை உம்மு கைஸ் அவர்கள் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவனைத் தங்கள் மடியில் அமர்த்தியபோது, அவன் அன்னாரது ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டான். உடனே நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் செய்து, அதன் மீது தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை.
(புகாரி: 223) ➚
சிறுவர்கள் சிறுநீர் கழித்துவிட்டால் கழுவ வேண்டியதில்லை என்ற சட்டம் பொதுவானது அல்ல. தாய்ப்பால் மட்டுமே குடிக்கக்கூடிய பருவம், தாய்ப்பாலோடு மற்ற உணவுகளையும் சேர்த்து உட்கொள்ளக்கூடிய பருவம் என இரு நிலைகள் உள்ளன. தாய்ப்பால் மட்டுமே அருந்தும் பருவத்துக் குழந்தையாக இருந்தால், அது சிறுநீர் கழிக்கும்போது ஆடைகளைக் கழற்றித் துவைக்க வேண்டிய அவசியமில்லை. ஆடையின் மீது தண்ணீரைத் தெளித்துவிட்டு அப்படியே தொழலாம். இது தந்தை, தாய் என இருவருக்கும் பொதுவான சட்டமாகும்.
தாய்ப்பால் தவிர்த்து மற்ற உணவுகளையும் உட்கொள்ளும் பருவத்தை அடைந்துவிட்டால், ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் சிறுநீர் பட்ட இடத்தை நிச்சயம் கழுவ வேண்டும். ஆனால், தாய்ப்பால் மட்டுமே அருந்தும் பருவத்தில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாடு உள்ளது. ஆண் குழந்தை சிறுநீர் கழித்தால் தண்ணீர் தெளித்தால் போதுமானது; பெண் குழந்தை சிறுநீர் கழித்தால் அதைக் கழுவ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ وَيُرَشُّ مِنْ بَوْلِ الْغُلاَمِ
பெண் குழந்தையின் சிறுநீரைக் கழுவ வேண்டும்; ஆண் குழந்தையின் சிறுநீரின் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
(நஸயீ: 302)
இதே கருத்தை விளக்கும் மற்றொரு நிகழ்வும் உள்ளது. அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோரின் மகனான ஹுசைன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மடியில் இருந்தபோது சிறுநீர் கழித்துவிட்டார். அப்போது அங்கிருந்த லுபாபா அவர்கள், ஆடையைக் கொடுத்தால் கழுவித் தருவதாகவும், வேறு ஆடையை மாற்றிக் கொள்ளுமாறும் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ
பெண் குழந்தையின் சிறுநீரைக் கழுவ வேண்டும்; ஆண் குழந்தையின் சிறுநீரின் மீது தண்ணீர் தெளித்தால் போதும்.
(அபூதாவூத்: 320) ➚
குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண், பெண் என்ற பாகுபாடா, சிறுநீரிலும் கூடவா வேறுபாடு என்று எண்ணி, இது பெண்களுக்கு எதிரானது என்றோ பிற்போக்குத்தனமானது என்றோ கருதிவிடக் கூடாது. இதற்குப் பின்னால் தெளிவான அறிவியல் உண்மை உள்ளது.
உடற்கூறியல் ரீதியாக ஆண்களை விடப் பெண்கள் விரைவாக முதிர்ச்சி அடைகிறார்கள். ஆண்களை விடப் பெண்கள் மிகச் சீக்கிரமாகவே பருவம் அடைகிறார்கள்; அவர்களின் உடலமைப்பும் முதிர்ச்சியும் மிக வேகமான மாற்றங்களைக் காண்கின்றன. ஆண் குழந்தை பிறந்து தாய்ப்பால் மட்டுமே அருந்தி சில மாதங்களுக்குப் பிறகு அடையக்கூடிய நிலையை, பெண் குழந்தை பிறக்கும்போதே அடைந்துவிடுகிறது. எனவே தாய்ப்பால் மட்டுமே அருந்தும் பருவத்திலும் பெண் குழந்தையின் சிறுநீரிலும் ஆண் குழந்தையின் சிறுநீரிலும் உள்ள தன்மைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.