10) குழந்தைகளை சபிக்க கூடாது
அடுத்ததாக, பிள்ளைகள் தவறு செய்யும்போது எவ்வாறு அணுக வேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தால் அறிவுரை கூறித் திருத்த வேண்டும். கண்டித்து வளர்ப்பதில் தவறில்லை; “ஏன் இப்படிச் செய்தாய்? ஒழுங்காகச் செய்ய வேண்டியதுதானே?” என்று கண்டித்துக் கேட்கலாம். ஆனால் பெற்றோர் பிள்ளைகளைச் சபிப்பது மிக மோசமான வழக்கமாகும். பெற்ற பிள்ளைகள் தவறு செய்யும்போது, “நாசமாய்ப் போ”, “உருப்படாமல் போ”, “ஒன்றுக்கும் உதவாமல் போ”, “பிச்சைக்காரனாகப் போ” என்று சபிக்கிறார்கள். பெண் பிள்ளைகளை நோக்கி, “தாலி அறுப்பாள்” என்று சர்வ சாதாரணமாகப் பேசுகிறார்கள். இஸ்லாத்தில் தாலி என்ற அமைப்பே இல்லாதபோதும், கணவன் இறந்துபோக வேண்டும் என்ற கொடூரமான அர்த்தம் கொண்ட இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
கண்டிப்பது வேறு, சாபம் இடுவது வேறு. “அறிவு இருக்கிறதா?” என்று கேட்பது கண்டிப்பு; ஆனால், “அறிவில்லாமல் போ”, “முட்டாளாகப் போ”, “அழிந்து போ” என்று கூறுவது ஒரு தீய பிரார்த்தனையைப் போன்ற சாபமாகும். இத்தகைய சாபங்களை மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், நரகவாசிகளை அல்லாஹ் தமக்குக் காட்டியதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்களாகப் பெண்களே இருந்ததாகவும் கூறினார்கள். அப்போது பெண்கள், “அது ஏன்?” என்று கேட்டார்கள்.
ஆண்களைவிடப் பெண்கள் நரகத்தில் அதிகமாக இருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய காரணங்களில் ஒன்று, تُكْثِرْنَ اللَّعْنَ (நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்) என்பதாகும்; மற்றொன்று கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக நடப்பது. இதில் அதிகமாகச் சபிப்பது நரகத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பெரும் காரணமாக அமைகிறது (புகாரி: 304) ➚.
ஒரு பயணத்தின்போது ஒருவரது ஒட்டகம் முரண்டு பிடித்ததால், அவர் அதனைச் சபித்து “நாசமாய்ப் போ” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், சபிக்கப்பட்ட அந்த ஒட்டகத்தோடு தங்களுடன் வர வேண்டாம் என்று கூறி அவரை இறங்கச் செய்தார்கள். தொடர்ந்து அவர்கள் பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்:
لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ لَا تُوَافِقُوا مِنَ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ فَيَسْتَجِيبُ لَكُمْ
உங்களுக்கு எதிராகவும், உங்கள் பிள்ளைகளுக்கு எதிராகவும், உங்கள் செல்வங்களுக்கு எதிராகவும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்; அல்லாஹ்விடம் கேட்கப்படும் ஒன்று வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் ஒரு நேரத்திற்கு அது ஒத்துப்போய்விட வேண்டாம்.
(முஸ்லிம்: 5328) ➚
அல்லாஹ்விடம் எது கேட்கப்பட்டாலும் அவன் அதை வழங்கிவிடும் ஒரு நேரம் இருக்கிறது. அது யாருக்கும் தெரியாது; மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நாம் சபிக்கும் வார்த்தை அத்தகையதொரு நேரத்தில் அமைந்துவிட்டால் அந்தப் பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும். எனவே, “தொலைந்து போ”, “நாசமாய்ப் போ” என்று தனக்குத் தானே சபித்துக்கொள்வதையோ, பிள்ளைகளை அவ்வாறு திட்டுவதையோ, கோபத்தில் பேனா, மின்விசிறி, கதவு போன்ற தனது உடமைகளையும் கால்நடைகளையும் சபிப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். “பேதியில் போ”, “கொள்ளையில் போ” என்று கொடிய நோய்களைக் குறிப்பிட்டுச் சபிப்பதும் ஒரு பிரார்த்தனையாகி விபரீதத்தை ஏற்படுத்திவிடும். கோபம் வரும்போது கண்டிப்பையோ முகக்கடுப்பையோ காட்டுவதில் தவறில்லை; ஆனால் சபிக்கும் வார்த்தைகளை ஒருபோதும் வாயிலிருந்து விட்டுவிடக் கூடாது.
பிரார்த்தனை எவ்வாறு பலிக்கிறது என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய ஜுரைஜ் என்பவரது வரலாறு சிறந்த உதாரணமாகும். முந்தைய சமுதாயத்தில் வாழ்ந்த ஜுரைஜ் என்பவர் தமது ஆசிரமத்தில் தொழுதுகொண்டிருந்தபோது அவரது தாயார் அவரை அழைத்தார். அவர் தொழுகையில் இருந்ததால் தாயாருக்குப் பதிலளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவரது தாய், விபச்சாரிகளின் முகத்தில் விழிக்காமல் நீ மரணிக்கக் கூடாது என்று அவரைச் சபித்துவிட்டார். ஜுரைஜ் எந்தத் தவறும் செய்யாத நல்லடியாராக இருந்தபோதிலும், தாயாரின் அந்தச் சாபம் அங்கீகரிக்கப்படும் நேரத்தில் அமைந்துவிட்டது. இதன் காரணமாக, ஒரு விபச்சாரி அவர் மீது தவறான பழி சுமத்தி, ஊர் மக்கள் திரண்டு வந்து அவரது ஆசிரமத்தை உடைக்கும் அளவிற்குப் பெரும் சோதனை ஏற்பட்டது. இறுதியில், ஒரு குழந்தையின் மூலமாக அல்லாஹ் அவரது நிரபராதித் தன்மையை வெளிப்படுத்தி அவரைக் காப்பாற்றினான் (புகாரி: 2482) ➚. எனவே, தாய் தந்தையர் பிள்ளைகளைக் கண்டிக்கும்போது வரம்புமீறி சபித்துவிடக் கூடாது.
பிள்ளைகளுக்காக எப்போதும் நல்ல பிரார்த்தனைகளையே செய்ய வேண்டும். இப்ராஹீம் நபி அவர்கள் وَمِن ذُرِّيَّتِي (என் வழித்தோன்றல்களிலிருந்தும்) என்று தமது சந்ததிகளுக்காக நன்மையை நாடிப் பிரார்த்தித்ததை(அல்குர்ஆன்: 2:124)➚மற்றும் 2:128➚ ஆகிய வசனங்களில் காணலாம். மேலும் அவர்கள் தொழுகையை நிலைநிறுத்தும் சந்ததிக்காகவும் பிரார்த்தித்தார்கள்:
رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى
இறைவா! என்னையும் என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுபவர்களாக ஆக்குவாயாக!
(அல்குர்ஆன்: 14:40)➚
குடும்பத்தினருக்காக நல்லடியார்கள் கேட்கும் அழகிய பிரார்த்தனையையும் குர்ஆன் கற்றுத்தருகிறது:
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன்: 25:74)➚
பிள்ளைகள் தவறு செய்யும்போதும் கூட, “நாசமாய்ப் போ” என்பதற்குப் பதிலாகக் கோபத்திலும்கூட “நல்லா இரு” என்று வாழ்த்தித் திட்டும் வழக்கம் சிலரிடம் உண்டு. அந்த வார்த்தை பிரார்த்தனை ஏற்கப்படும் நேரத்தில் அமைந்தாலும் நன்மைதான் விளையும். எனவே பிள்ளைகளைச் சபிப்பதை அடியோடு தவிர்த்து, அவர்களுக்கு நன்மையானதையே வேண்ட வேண்டும்.
குழந்தைகள் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய இன்னும் சில செய்திகளும் கடமைகளும் இருக்கின்றன.