Tamil Bayan Points

ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 23, 2023 by Trichy Farook

முன்னுரை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த உரையில்

1. ஸகாத் கட்டாயக் கடமை

2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள்

3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை

ஆகியவற்றைப் பற்றி காணவிருக்கின்றோம்.

ஸகாத் என்றால் என்ன?

ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான்.

இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான். ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும் திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

இஸ்லாத்தின் ஒரு தூண்

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.

அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி-8 

இறை நம்பிக்கையின் அடையாளம்

ஒருவன் அல்லாஹ்வை ஈமான் கொண்டுள்ளான் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்று ஸகாத்தை நிறைவேற்றுவதாகும். ஒருவனிடம் செல்வ வசதி இருந்தும் அவன் ஸகாத்தை நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயமாக அவனிடம் இறை நம்பிக்கை இல்லை என்பதற்கு அதுவே தெளிவான சான்றாகும். இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

قَالَ وَهَلْ تَدْرُونَ مَا الْإِيمَانُ بِاللَّهِ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَإِقَامُ الصَّلَاةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَتُعْطُوا مِنْ الْمَغْنَمِ الْخُمُسَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஸகாத் கொடுப்பதும், போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.

அறி: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-7556 

கட்டாயக் கடமை

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 9:60)

இவ்வவசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவதாகும். ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் “இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸகாத் மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ‌ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

(அல்குர்ஆன்: 98:5)

நபியவர்களின் உபதேசம்

ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவனுக்குத் தொழுகை எப்படி கட்டாயக் கடமையாகி விடுமோ அது போல் ஸகாத்தும் கட்டாயக் கடமையாகி விடும். அவன் கண்டிப்பாக தன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு வழங்கியாக வேண்டும். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பும் போது இந்த உபதேசத்தைச் செய்தே அனுப்பி வைக்கிறார்கள்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى الْيَمَنِ فَقَالَ ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدْ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக!

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள்.

அறி: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-1395 

ஸகாத் என்ற அற்புதக் கடமை வறுமை ஒழிப்பிற்குரிய ஒரு அற்புத ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித் தான் நபியவர்கள் வறுமையை விரட்டியடித்தார்கள். நபியவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் வறுமையை இல்லாமல் ஆக்கிக் காட்டினார்கள். ஸகாத்தின் முக்கியமான நோக்கம் வறுமையை இல்லாமல் ஆக்குவது தான் என்பதை முஆத் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் செய்த உபதேசத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

செல்வத்தில் ஸகாத் தவிர வேறு கடமையில்லை

நம்முடைய செல்வத்திலிருந்து நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மம் ஸகாத் மட்டும் தான். இதனை நிறைவேற்றாவிட்டால் அதற்குரிய தண்டனையை நாம் மறுமையில் அனுபவித்தாக வேண்டும். ஏனைய தான தர்மங்கள் நாம் நம்முடைய செல்வத்திலிருந்து விரும்பிச் செய்பவையாகும். செய்தால் நமக்கு இறையருள் அதிகம் கிடைக்கும். செய்யாவிட்டால் தண்டனை கிடைக்காது. ஆனால் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டனை உண்டு. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِيَامُ رَمَضَانَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

”நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள். அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர” என்றார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

அறி: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி),
நூல்: புகாரி-46 

ஸகாத் கொடுக்காதவரின் மறுமை நிலை

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ يَفِرُّ مِنْهُ صَاحِبُهُ فَيَطْلُبُهُ وَيَقُولُ أَنَا كَنْزُكَ قَالَ وَاللَّهِ لَنْ يَزَالَ يَطْلُبُهُ حَتَّى يَبْسُطَ يَدَهُ فَيُلْقِمَهَا فَاهُ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஸகாத் கொடுக்காமல் பூட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்ட) உங்கள் கருவூலம் மறுமை நாளில் கொடிய விஷமுள்ள பாம்பாக மாறும். அதனைக் கண்டு அதன் உரிமையாளரான நீங்கள் வெருண்டோடுவீர்கள். ஆனால், அது உங்களைத் துரத்திக்கொண்டே வந்து “நான்தான் உனது கருவூலம்” என்று சொல்லும். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உங்கள் கையை விரித்து அதன் வாய்க்குள் நுழைக்கும் வரை அது உங்களைத் துரத்திக்கொண்டே வரும்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-6957 

“பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும்.

இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் -(தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்)- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும்.

இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும்.

இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன)?” என்று கேட்கப்பட்டது. அதற்கு “குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:

குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும்.

குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.

குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல்வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு “அந்தப் பசும்புல்வெளியில்’ அல்லது “அந்தத் தோட்டத்தில்’ அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை.

அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; “எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (அல்குர்ஆன்: 99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-2371 , 2860, முஸ்லிம் 1803

நாம் நம்முடைய செல்வத்திற்கு முறையாக ஸகாத்தை நிறைவேற்றி மறுமையின் தண்டனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக!