Tamil Bayan Points

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்?

கேள்வி-பதில்: வியாபாரம்

Last Updated on November 23, 2020 by Trichy Farook

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்?

வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை.

விற்பவரும், வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் பொருந்திக் கொண்டால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் தான்.

நமது கடையில் விலை அதிகம் என்று ஒருவருக்குத் தெரிந்தால் நிச்சயம் அவர் நம்மிடம் வாங்க மாட்டார். அதே போல் பக்கத்துக் கடைக்காரரின் விலையை விடக் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்று கருதி லாபம் இல்லாமல் நாமும் விற்பனை செய்ய மாட்டோம்.

صحيح البخاري (3/ 58)
2079 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، – أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا “

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமல் இருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தி இருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),
நூல்: புகாரி 2079

வியாபாரி கூறும் விலையை வாங்குபவர் ஏற்றுக் கொண்டால் பொருளை வாங்கலாம். அந்த விலையில் உடன்பாடில்லை என்றால் அந்தப் பொருளை வாங்காமல் விட்டு விடலாம். இதில் இவ்வளவு தான் விலை வைக்க வேண்டும் என்று மார்க்கம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஆனால் அதே சமயம் மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுவது போல், குறைகளை மறைக்காமல், பொய் சொல்லாமல் விற்க வேண்டும்.

அதே போல் அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பதுக்கி வைக்கவும் கூடாது.

صحيح مسلم (3/ 1227)
129 – (1605) حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ، عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ، قَالَ: كَانَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، يُحَدِّثُ أَنَّ مَعْمَرًا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ»، فَقِيلَ لِسَعِيدٍ: فَإِنَّكَ تَحْتَكِرُ، قَالَ سَعِيدٌ: إِنَّ مَعْمَرًا الَّذِي كَانَ يُحَدِّثُ هَذَا الْحَدِيثَ، كَانَ يَحْتَكِرُ

‘யார் விலையை ஏற்றுவதற்காக வியாபாரம் செய்யாமல் பதுக்கி வைக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஃமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3281