விண்மீன்கள் ஏன் கண் சிமிட்டுகின்றன?

அறிவியல் உண்மைகள்

சில புறக்கோள்களை (exoplanets) நேரடியாகத் தொலைநோக்கியில் பார்க்க முடியும். சில விண்மீன்கள் தலையாட்டி பொம்மை போலத் தள்ளாடும். இந்தத் தள்ளாட்டத்தை அதனைச் சுற்றிவரும் கோள் ஏற்படுத்தும். எனவே, ஒரு விண்மீனின் தள்ளாட்டத்தை வைத்து, அதனைச் சுற்றிவரும் புறக்கோள்களைக் கண்டறியலாம்.

ஆனால், விண்மீனைச் சுற்றிவரும் கோள் பூமியைப் போல நிறை குறைவாக இருந்தால், அது ஏற்படுத்தும் தள்ளாட்டம் மிகச் சிறியதாக இருக்கும். அதை நாம் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அதன் ‘கண் சிமிட்டலை’ நாம் படம் பிடித்து, அதன் வழியே கோளைக் கண்டறிய முடியும்.

ஒரு கோள் நமது பார்வைக் கோட்டில் அதன் தாய் விண்மீனுக்கு நேராகக் குறுக்கே சென்றால், அந்த நேரத்தில் விண்மீனின் ஒளி சிறிது மங்கும். இது ஒரு தெருவிளக்கின் முன் ஒருவர் நடந்து செல்லும்போது ஒளி மறைப்பதைப் போன்றது. கோள் குறுக்கிடும்போது விண்மீனின் ஒளி மங்கி, கோள் விலகிய பின் மீண்டும் இயல்பான பிரகாசத்துக்குத் திரும்பும்.

இந்தக் கண் சிமிட்டும் செயல், கோள் இருப்பதை நமக்குக் காட்டுகிறது. இதுதான் ‘குறுக்கீட்டு இடைமறிப்பு’ (transit) முறை. உறுதிப்படுத்தப்பட்ட புறக்கோள்களில் சுமார் 75 முதல் 77 சதவீதம் வரை இந்த முறையில்தான் கண்டறியப்பட்டுள்ளன.

எவ்வளவு ஒளி மறைக்கப்படுகிறது என்பது கோளின் அளவை நமக்குச் சொல்கிறது. இரண்டு ‘கண் சிமிட்டல்களுக்கும்’ இடையிலான காலம், கோள் அந்த விண்மீனைச் சுற்றி வர எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இந்த முறைக்கு ஒரு நிபந்தனை உண்டு. கோள் நமக்கும் விண்மீனுக்கும் நேராகக் குறுக்கே செல்ல வேண்டும். அப்போதுதான் விண்மீனின் ஒளி குறையும். நமது பார்வையில் விண்மீனை மேலும் கீழும் சுற்றிவரும் கோள்கள் குறுக்கிடாது. எனவே விண்மீன் ஒளியில் மாற்றம் ஏற்படாது. அவற்றை இந்த முறையில் கண்டறிய முடியாது.

மைய விண்மீனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்கள்தான் எளிதில் நமது நேர்கோட்டுப் பார்வைக்கு வரும். அவை குறுக்கிடும். விண்மீனிலிருந்து தொலைவில் சுற்றிவரும் கோள்கள் குறுக்கிடுவது கடினம். எனவே, ‘குறுக்கீட்டு இடைமறிப்பு’ முறை பெரும்பாலும் குறுகிய சுற்றுக்காலம் கொண்ட கோள்களையும், பெரிய கோள்களையும் எளிதில் கண்டறிகிறது.

இதுவரை 2,500க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் இந்த முறையில் கண்டறியப்பட்டுள்ளன. ‘தள்ளாட்டம்’ (radial velocity) அல்லது ‘கண் சிமிட்டல்’ (transit) முறைகளைக் கொண்டுதான் இதுவரை 94 சதவீதம் புறக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மீதமுள்ள புறக்கோள்கள் வேறு சில முறைகளில் கண்டறியப்படுகின்றன. நேரடி ஒளிப்படமெடுத்தல் (Direct Imaging) ஒரு முறை. நூற்றுக்கும் குறைவான கோள்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன. ஈர்ப்பு விசை ஒளிவிலகல் (Gravitational Microlensing) என்பது மற்றொரு முறை. ஒரு விண்மீன், அதற்கு வெகு தொலைவில் உள்ள மற்றொரு விண்மீனின் முன்னே செல்லும்போது, முன்னணி விண்மீனின் ஈர்ப்பு விசை, பின்னே உள்ள விண்மீனின் ஒளியை ஒரு லென்ஸைப் போல வளைக்கிறது. முன்னணி விண்மீனுக்கு ஒரு கோள் இருந்தால், இந்த ஒளிவிலகலில் ஒரு திடீர் உச்சம் தோன்றும். அப்போது பின்னணி விண்மீனின் ஒளி திடீரெனப் பிரகாசமாகும். இம்முறை மிகத் தொலைவில் உள்ள கோள்களையும், எந்த விண்மீனையும் சுற்றாமல் தனியாக மிதக்கும் கோள்களையும் கண்டறிய உதவும்.

விண்மீன் இருப்பிட அளவியல் (Astrometry) முறை கொண்டும் கோள்களைக் கண்டறியலாம். ஒரு விண்மீனின் இருப்பிடத்தை மிகத் துல்லியமாக அளந்து, அதன் சிறிய ‘தள்ளாட்டத்தை’ வானில் காண்பதுதான் இம்முறை. இதுவரை மிகச் சில கோள்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு புதிய புறக்கோள் கண்டறிதலும், நாம் தனியல்ல, இந்த அண்டத்தில் வேறு எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த அண்டத்தில் உள்ள விண்மீன்களும், அவற்றைச் சுற்றிவரும் கோள்களும் இத்தனை துல்லியமான இயக்கங்களைக் கொண்டிருப்பது இறைவனின் அளவற்ற ஆற்றலையும், ஞானத்தையும் காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் அவனது படைப்பின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

ஆதாரம்: இந்து தமிழ் திசை