விண்மீன்கள் எவ்வளவு காலம் வாழும்?

அறிவியல் உண்மைகள்

விண்மீன்கள் பிறந்து, வளர்ந்து, மூப்படைந்து, மடிகின்றன. நமது சூரியன் பிறந்து சுமார் 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அது நடுத்தர வயதை எட்டியுள்ளது. அது ஒரு சிவப்பு ராட்சச விண்மீனாக (red giant star) மாறி, பின்னர் வெள்ளைக் குள்ள விண்மீனாக (white dwarf star) மாற சுமார் 500 முதல் 600 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என மதிப்பிடப்படுகிறது.

பிரபஞ்சத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி விண்மீன்கள் பிறந்துள்ளன. இவற்றில் பல வாழ்ந்து மடிந்துவிட்டன. சில இன்னமும் உயிருடன் உள்ளன. சில சமீபத்தில்தான் பிறந்தவை. கணிசமான விண்மீன்கள் நம் சூரியனின் ஆயுள் முடிந்த பின்னரும் நீண்ட நாள் வாழும்.

ஒரு விண்மீனின் ஆயுள் அதன் நிறையைச் சார்ந்தது. கூடுதல் நிறை கொண்ட விண்மீன்களுக்குக் குறைவான ஆயுளும், குறைவான நிறை கொண்ட விண்மீன்களுக்கு நீண்ட ஆயுளும் உண்டு. எடுத்துக்காட்டாக, சூரியனை ஒத்த நிறையுடைய ஒரு விண்மீன், பிறப்பிலிருந்து அதன் மரணம் வரை சுமார் 1,200 கோடி ஆண்டுகள் வாழும்.

சூரியனைப் போல இருமடங்கு நிறை கொண்ட ஒரு விண்மீனின் ஆயுள் 150 கோடி ஆண்டுகள்தான். சூரியனைப் போலப் பத்து மடங்கு கூடுதல் நிறை கொண்ட விண்மீனின் ஆயுள் 2 முதல் 4 கோடி ஆண்டுகளே. சூரியனைப் போல பாதி நிறை கொண்ட விண்மீன், சூரியனின் ஆயுளைப் போல 8 மடங்கு கூடுதலாக வாழும்.

ஒரு விண்மீன், தன் சொந்த நிறையைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு உள்ளேயே அதிக அழுத்தத்தில் ஆற்றலை உருவாக்க வேண்டும். அதன் நிறை கூடுதலாக இருந்தால், கூடுதல் வேகத்தில் எரிபொருளைப் பயன்படுத்தி, கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், சிறிது காலத்திலேயே அதன் எரிபொருள் தீர்ந்து, மூப்படைந்து மடிந்துவிடும்.

குறைவான நிறை கொண்ட விண்மீன் என்றால், அது மிகக் குறைவான ஆற்றலை மட்டுமே வெளியிடும். இதனால், மிகக் குறைவான விகிதத்திலேயே எரிபொருள் செலவாகும். எனவே, அது நீடித்து வாழும்.

சூரியனைப் போல 100 மடங்கு நிறை கொண்ட ஒரு விண்மீன் 10 முதல் 20 லட்சம் ஆண்டுகளே வாழும். ஆனால், சூரியனைப்போல 10% நிறை மட்டுமே கொண்ட ‘2MASS J0523 1403’ என்கிற விண்மீன் 10,000 கோடி ஆண்டுகளுக்கும் மேல் வாழும். இப்படிக் குறைவான நிறை கொண்ட சிவப்புக் குள்ள விண்மீன்கள் (red dwarf stars) சுமார் 3,800 லட்சம் கோடி ஆண்டுகள் வரைக்கும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்க முடியும்.

மெதுசேலா (Methuselah) என அழைக்கப்படும் HD 140283 என்கிற விண்மீன்தான், இதுவரை நாம் இனம் கண்டுள்ள விண்மீன்களில் மிகவும் மூத்த விண்மீன். இதன் வயது சுமார் 1,200 முதல் 1,300 கோடி ஆண்டுகள். மறுபுறம், HH 211 என்கிற குழந்தை விண்மீனின் வயது 10,000 முதல் 13,000 ஆண்டுகள்தான். பிறந்த குழந்தை நிலையில் உள்ள Cha-MMS1 என்கிற விண்மீனின் வயது 2,000 முதல் 3,000 ஆண்டுகள்தான்.

இப்படி விண்மீன்களின் வாழ்நாளை இறைவன் மிக நுட்பமாக அமைத்துள்ளான். அவற்றின் நிறைக்கேற்ப அவற்றின் ஆயுளை நிர்ணயித்து, இந்தப் பிரபஞ்சத்தை அவன் சீராகப் படைத்துள்ளான். அவனது படைப்பின் ஆற்றலையும் ஞானத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆதாரம்: இந்து தமிழ் திசை