மனித இதயத்திற்குள் ஒரு குட்டி மூளை உள்ளதா?

அறிவியல் உண்மைகள்

மனித உடலில் இரத்த ஓட்டத்திற்கு மிக முக்கியமான உறுப்பு இதயம். இந்த இதயத்திற்குள் ஒரு சிறிய மூளை போன்ற நரம்பு மண்டலம் இயங்கி வருவதை அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், இதயத்தைச் சுற்றி அமைந்துள்ள திசுக்களில் நரம்பணுக்களால் ஆன ‘உள் இதய நரம்பு மண்டலம்’ (intrinsic cardiac nervous system) செயல்படுவது தெரியவந்துள்ளது.

இந்த நரம்பணுக்கள் மூளையில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்காமல், தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. இவை இதயத் துடிப்பை முறைப்படுத்துவதோடு, உடலியல் மற்றும் மன அழுத்தத்தின்போது இதயத்தைப் பாதுகாக்கும் உள்ளூர் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகின்றன.

இந்த நரம்பு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பணுக்கள், இதயத் துடிப்பு மிக வேகமாக அதிகரிக்கும்போது, அதைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர உதவுகின்றன.

மனித இதயத்திலும் இதேபோன்ற நரம்பணு அமைப்புகள் இருப்பதால், இதய நோய்கள் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு புதிய மருத்துவச் சிகிச்சைகளைக் கண்டறிய இந்த கண்டுபிடிப்பு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

இறைவன் மனித உடலை எவ்வளவு நுட்பமாகவும், ஆச்சரியமாகவும் படைத்துள்ளான் என்பதை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது. ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள இந்த ஒழுங்கமைப்பும், செயல்பாடும் அவனது அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றன.

ஆதாரம்: தினத்தந்தி