பென்சீன் என்றால் என்ன?
பென்சீன் (Benzene) என்பது உலகை மாற்றிய முக்கியமான வேதிப்பொருட்களில் ஒன்று. இது மருத்துவம், சாயங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சலவை, பூச்சிக்கொல்லிகள், நறுமணப் பொருட்கள், வெடிப்பொருட்கள் எனப் பலவற்றில் பயன்படுகிறது. நவீன கரிம வேதியியலின் (Organic Chemistry) வளர்ச்சிக்கும் பென்சீன் முக்கியப் பங்காற்றியுள்ளது.
மின்காந்தவியலின் தந்தை என்று அறியப்படும் மைக்கல் ஃபாரடே (Michael Faraday) 1825 ஆம் ஆண்டு பென்சீனைக் கண்டறிந்தார். அப்போது மின்சார விளக்குகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. பிரிட்டனில் வீடுகளும் வீதிகளும் நிலக்கரி மற்றும் திமிங்கில எண்ணெயை நம்பியே இருந்தன. திமிங்கில எண்ணெயைச் சூடாக்கி, அதிலிருந்து வரும் வாயுக்களை எரிபொருளாகப் பயன்படுத்தினர். இந்த வாயு உற்பத்தியின்போது சில எண்ணெய்க் கழிவுகள் உருவாகின.
அந்தக் கழிவுகளை ஃபாரடே ஆராய்ந்தபோது, அதிலிருந்து நிறமற்ற ஒரு ஹைட்ரோகார்பன் (hydrocarbon) பொருளைப் பிரித்தெடுத்தார். அந்தப் பொருளுக்கு ஒரு வித்தியாசமான வாசம் இருந்தது. கார்பனும் ஹைட்ரஜனும் இணைந்த சேர்மம் என்பதைக் குறிக்க, அதற்கு ‘பை-கார்புரெட் ஆஃப் ஹைட்ரஜன்’ (bi-carburet of hydrogen) என்று பெயரிட்டார். இதுவே பின்னர் பென்சீன் என்று அறியப்பட்டது. சார்லஸ் மேன்ஸ்ஃபீல்ட் (Charles Mansfield) என்பவர் நிலக்கரிக் கழிவான தாரில் இருந்து பென்சீனைப் பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கினார்.
19 ஆம் நூற்றாண்டில் சலவைத் தொழில் பெரிய அளவில் வளர்ந்தது. தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களின் துணிகளில் படிந்த எண்ணெய்ப் பசை, கொழுப்பு, மெழுகு போன்ற கறைகளை நீரில் அகற்ற முடியாது. ஆனால், பென்சீன் ஒரு கரைப்பானாகச் (solvent) செயல்பட்டு அந்தக் கறைகளை நீக்கியது. இதனால் சலவைத் தொழிலில் பென்சீன் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
1856 ஆம் ஆண்டு வில்லியம் ஹென்றி பெர்கின் (William Henry Perkin) என்பவர் மலேரியா சிகிச்சைக்குப் பயன்படும் குயினீனை (quinine) செயற்கையாக உருவாக்க ஆய்வு செய்தார். பென்சீன் குடும்பத்தைச் சேர்ந்த அனிலின் (aniline) போன்ற கரிமச் சேர்மங்களைப் பயன்படுத்தி குயினீனை உருவாக்க முயன்றார். அவரால் குயினீனை உருவாக்க முடியவில்லை. ஆனால், ஊதா நிறப் பொருள் ஒன்று உருவானது. இதற்கு ‘மோவீன்’ (mauveine) என்று பெயரிட்டார்.
இதுதான் வணிகரீதியாகத் தொழிற்சாலைகளில் பயன்பட்ட முதல் செயற்கைச் சாயம். அதுவரை விலங்குகள் மற்றும் தாவரங்களில் இருந்து கிடைத்த சாயங்களைத்தான் மக்கள் பயன்படுத்தினர். மோவீனின் கண்டுபிடிப்பு ஜவுளித் தொழில்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பென்சீன் குடும்பத்தைச் சேர்ந்த சேர்மங்கள் செயற்கைச் சாயங்கள் தயாரிப்பில் முக்கியத்துவம் பெற்றன.
பென்சீனின் மூலக்கூறு கட்டமைப்பு (molecular structure) பல காலம் புதிராகவே இருந்தது. பொதுவாக, ஹைட்ரோகார்பன்களில் கார்பனைவிட அதிக ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும். ஆனால், பென்சீனில் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்கள் சரிசமமாக ஆறுக்கு ஆறு என்ற விகிதத்தில் இருந்தன. பெல்ஜியத்தைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் ஆகஸ்ட் கெகுலே (August Kekulé) இதற்குப் பதிலைக் கண்டறிந்தார்.
கெகுலே ஒருநாள் கனவில் அணுக்களும் மூலக்கூறுகளும் நடனமாடுவதைக் கண்டார். அவை ஒன்றோடு ஒன்று இணைந்து பாம்பைப் போல உருவம் கொண்டன. பிறகு அந்தப் பாம்பு சுருண்டு தன் வாலையே கடித்தது. ஒரு வளையம் போன்ற காட்சி தோன்றியது. கெகுலே விழித்தெழுந்து, தனது கனவில் வந்த வளைய வடிவத்தில் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை இட்டு நிரப்பினார். அவர் தேடிய வேதியமைப்பு கிடைத்தது.
ஆகஸ்ட் கெகுலேவின் இந்தக் கண்டுபிடிப்பு, கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில் முக்கியமான முன்னேற்றமாக அமைந்தது. இது அரோமேட்டிக் வேதியியல் (aromatic chemistry) என்ற புதிய பிரிவுக்கு அடித்தளமிட்டது. பென்சீனை மாற்றி அமைப்பதன் மூலம் மருந்துகள், செயற்கை இனிப்பூட்டிகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் வேறு பல வேதிப்பொருட்களைத் தயாரிக்க முடிந்தது. சாக்ரின் (saccharin) போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டவையே.
கரிம வேதியியல் என்பது கார்பன் மூலக்கூறுகளை ஆராயும் வேதியியல் பிரிவு. பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் வேதியியலுக்கும் கார்பனே அடிப்படை. கார்பனைப் புரிந்துகொள்வது நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் அவற்றை உருவாக்கிய மூலக்கூறுகளை அறிந்துகொள்ள உதவுகிறது. இவ்வாறு பல விஷயங்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்ததாலேயே பென்சீனின் கண்டுபிடிப்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது.
இறைவன் தனது அளவற்ற ஞானத்தால், இந்த அணுக்களையும் மூலக்கூறுகளையும் இவ்வளவு துல்லியமாகப் படைத்து, அவை ஒன்றிணைந்து செயல்படும் விதத்தை அமைத்துள்ளான். இத்தகைய நுட்பமான படைப்புகளைக் காணும்போது, அவனது ஆற்றலையும் ஒழுங்கமைக்கும் திறனையும் நாம் வியக்காமல் இருக்க முடியாது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை