பூமியில் பருவ காலங்கள் எப்படி ஏற்படுகின்றன?

அறிவியல் உண்மைகள்

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இந்தப் பயணப் பாதை ஒரு முழு வட்டமாக இல்லாமல், சற்று நீள்வட்ட வடிவில் இருக்கும். இதனால், பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் ஒரு புள்ளியும், மிகத் தொலைவில் செல்லும் ஒரு புள்ளியும் உண்டு.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள புள்ளியை பெரிஹீலியன் (Perihelion) என்றும், மிகத் தொலைவில் உள்ள புள்ளியை அஃபீலியன் (Aphelion) என்றும் அழைக்கிறார்கள். பூமி பெரிஹீலியன் பகுதிக்கு வரும்போது கூடுதல் வெப்பம் (கோடை) ஏற்படும் என்று சிலர் நினைக்கலாம்.

ஆனால், வட அரைக்கோளத்தில் (Northern Hemisphere) குளிர்காலம் நிலவும் ஜனவரி மூன்றாம் தேதி அன்றுதான் பூமி சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. அதாவது, வட அரைக்கோளத்தில் குளிர்கால ஜனவரியில் பூமி சூரியனுக்கு அருகிலும், கோடைக்கால ஜூலையில் தொலைவிலும் இருக்கும்.

பருவங்களை நிர்ணயிப்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் அல்ல. பூமியின் அச்சு சாய்வே (axial tilt) பருவங்களை உருவாக்குகிறது. பெரிஹீலியனுக்கும் அஃபீலியனுக்கும் இடையிலான தொலைவு வேறுபாடு சுமார் 50 லட்சம் கிலோமீட்டர். ஆனால், சூரியன் – பூமி சராசரி தொலைவான 15 கோடி கிலோமீட்டருடன் ஒப்பிடும்போது, இது ஒரு சிறிய வேறுபாடே.

பூமியின் சுழற்சி அச்சு 23.5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. இந்த அச்சின் சாய்வு, சூரிய ஒளி எந்தக் கோணத்தில் பூமியின் மீது விழுகிறது என்பதை மாற்றுகிறது. இதுவே கோடையையும் குளிர்காலத்தையும் நிர்ணயிக்கிறது.

ஒரு கைவிளக்கையும் ஒரு காகிதத்தையும் எடுத்துக்கொண்டால் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். விளக்கை நேராகக் காகிதத்திற்குச் செங்குத்தாகப் பிடித்தால், ஒளி ஒரு சிறிய, பிரகாசமான வட்டமாகத் தெரியும். இது சூரியன் நேரடியாகத் தலையின் மேல் இருக்கும் நிலையைப் போன்றது. இந்தக் கோடைக்காலத்தில், சூரிய ஒளி நேராக விழுவதால் பூமி அதிக வெப்பத்தைப் பெறுகிறது. பகல்கள் நீண்டிருக்கும்.

இப்போது விளக்கைச் சற்றே சாய்த்துப் பிடியுங்கள். ஒளி நீள்வட்டமாக ஒரு பெரிய பகுதியில் பரவும். இதனால் ஒவ்வொரு புள்ளியிலும் அதன் பிரகாசம் குறையும். இது குளிர்காலத்தில் சூரியன் குறைந்த உயரத்தில் இருப்பதைப் போன்றது. சூரியன் வானில் தாழ்வாக வரும்போது, அதன் கதிர்கள் சரிவாக விழுகின்றன. சாய்வாகக் கதிர்கள் விழுவதால் அதன் வெப்பச் செறிவு குறைந்து, அந்த இடத்திற்குக் கிடைக்கும் வெப்பமும் குறைகிறது. பகல்கள் குறுகி, இரவுகள் நீளும்.

ஓர் அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாயும்போது, மறு அரைக்கோளம் சூரியனில் இருந்து விலகி இருக்கும். எனவே ஓர் அரைக்கோளத்தில் கோடை என்றால், மறு அரைக்கோளத்தில் குளிர்காலம். அதனால்தான் இந்தியாவில் கோடைக்காலத்தின்போது ஆஸ்திரேலியாவில் குளிர்காலம் நிலவுகிறது.

இறைவன் இந்த பூமியையும் சூரியனையும் இவ்வளவு துல்லியமான ஒழுங்கில் படைத்து, பருவ காலங்களை மாற்றி மாற்றி வரச் செய்திருப்பது வியப்பானது. இந்த இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் இறைவனின் அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் நாம் காணலாம்.

ஆதாரம்: இந்து தமிழ் திசை