பூமிக்கு வெளியே ஒரு கிரகத்தில் நீர் இருக்கிறதா?

அறிவியல் உண்மைகள்

பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதைக் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (Hubble Space Telescope) கண்டறிந்துள்ளது.

இந்தக் கிரகம் பூமியை விட இரண்டு மடங்கு பெரியது. இதன் வளிமண்டலத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களில் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஜி.ஜே 9827டி (GJ 9827d) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் நீராவியும் கலந்துள்ளது. இதனால் அங்கு உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

நாசா விஞ்ஞானிகள், இந்தக் கிரகத்தில் பூமியில் உள்ள கடலை விட இரண்டு மடங்கு அதிகமாக நீராவி இருப்பதாகக் கூறுகின்றனர். இந்தக் கிரகம் வெள்ளி கிரகத்தைப் போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருக்கிறது.

மீனம் நட்சத்திர மண்டலத்தில் (Pisces constellation) இருக்கும் ஒரு குறு விண்மீனை (dwarf star) இந்தக் கிரகம் சுற்றி வருகிறது. இந்தக் கிரகம் தனது சூரியனைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் நிறமாலைத் தரவுகளின் (spectral data) அடிப்படையில், அதன் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகின்றன. அதன் அடிப்படையில் இந்தக் கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

97 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தைக் கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறுகள் மற்றும் ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள இந்தக் கிரகம் மிக அருகில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இறைவன் தனது படைப்பில் எவ்வளவு அதிசயங்களை வைத்துள்ளான் என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. அவன் படைத்த இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அவனது ஞானமும் ஆற்றலும் வெளிப்படுகின்றன. நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பல அற்புதங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன.

ஆதாரம்: புதிய தலைமுறை