அலாஸ்காவில் ராட்சத காய்கறிகள் விளைவது ஏன்?

அறிவியல் உண்மைகள்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் மிக அதிக எடையுள்ள காய்கறிகள் விளைகின்றன. இங்கு 62.5 கிலோ எடையுள்ள முட்டைகோஸ், 30 கிலோ எடையுள்ள பூசணி, 15 கிலோ எடையுள்ள ப்ரோக்கோலி போன்றவை சாதாரணமாக விளைகின்றன. யார் அதிக எடையுள்ள காய்கறியை வளர்க்கிறார் என்று இங்கு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

அலாஸ்கா அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பனியால் சூழப்பட்டுள்ளது. வடக்கு முனையில் இருப்பதால், அலாஸ்காவில் கோடைக்காலத்தில் அதிக நேரம் சூரிய ஒளி கிடைக்கும். ஒரு நாளுக்கு 20 மணி நேரம் வரை சூரிய வெளிச்சம் இருக்கும்.

இந்த நிகழ்வை ‘நள்ளிரவு சூரியன்’ (Midnight Sun) என்று அழைக்கிறார்கள். அதிக சூரிய ஒளி கிடைப்பதால் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை (photosynthesis) அதிகமாக நடக்கிறது. இதனால் தாவரங்களுக்கு அதிக சத்துகள் கிடைத்து, காய்கறிகள் பெரிதாக வளர முடிகிறது.

முட்டைகோஸ் போன்ற இலைக்காய்கறிகள் ராட்சத அளவுகளில் வளர்கின்றன. உருவம் மட்டுமல்ல, அதிக சூரிய வெளிச்சம் கிடைத்தால் காய்கறிகள் மிகுந்த சுவையாகவும் இருக்கும். இங்கு விளையும் கேரட்டை சாப்பிடுபவர்கள் அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதாக நம்புவார்களாம்.

இத்தகைய ராட்சத காய்கறிகளை வளர்க்க சூரிய வெளிச்சத்துடன் சரியான விதைகளைத் தேர்வு செய்வதும் அவசியம். இயற்கை முறையில் ராட்சத காய்கறிகளை உருவாக்க வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

இறைவன் தனது படைப்பில் பல்வேறு அதிசயங்களை வைத்துள்ளான். அலாஸ்காவின் தனித்துவமான சூழல், தாவரங்கள் இவ்வளவு பெரிய அளவில் வளர வழிவகுக்கிறது. இது இறைவனின் அளவற்ற ஆற்றலையும், படைப்பின் நுட்பத்தையும் காட்டுகிறது.

ஆதாரம்: விகடன்