ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள்

பயான் குறிப்புகள்: கொள்கை

ஃபாத்திமாவின் குர்ஆனில் பதினேழாயிரம் வசனங்கள்

சீர் கெட்ட ஷியாக்களின் சிந்தனையும் நிலைபாடும்

(உண்மையான தவ்ஹீது கொள்கையுடைய) சுன்னத் வல் ஜமாஅத்திற்கும், வழிகெட்ட ஷியாவிற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் முக்கியமானது குர்ஆன் தொடர்பான நம்பிக்கையாகும்.

இறைவனிடமிருந்து  இறக்கப்பட்ட வேதங்களில் இறுதியான வேதம் குர்ஆன் தான். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வேதம் இது வரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பது மட்டுமல்லாமல் இறுதி நாள் வரை அது எந்த மாற்றத்திற்கும் ஒரு போதும் உள்ளாகாது. அல்ஃபாத்திஹாவிலிருந்து அந்நாஸ் வரையில் உள்ள அந்தத் திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்திருக்கின்றான்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன்: 15:9)

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

(அல்குர்ஆன்: 75:16-19)

لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ ۖ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.

(அல்குர்ஆன்: 41:42)

இந்த உறுதியும் உத்தரவாதமும் இதற்கு முந்தைய வேதங்களான இப்ராஹீம் (அலை), மூஸா (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்களுக்கோ, தாவூத் (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்ட சபூர், ஈஸா (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்ட இன்ஜீல் இன்னும் இதர வேதங்களுக்கோ அளிக்கப்படவில்லை.  அதனால் அவை அந்த இறைத்தூதர்கள் இறந்த பிறகு கூடுதல், குறைவு என்ற குறைபாடுகளை விட்டும் பாதுகாப்புப் பெறவில்லை என்பது தான் குர்ஆன்  தொடர்பாக ஒவ்வொரு தூய முஸ்லிமின்  நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

மாற்றுதல், திரித்தல் போன்றவற்றிலிருந்து குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று யாராவது நினைத்தால் நிச்சயமாக அவர் குர்ஆனை  மறுக்கின்றார். ரசூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் தவறிருக்கின்றது என்று கருதுகின்றார் என்பது தான் அதன் பொருளாகும்.

இவர்களுக்குக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் அந்தச்  சந்தேகம் தொக்கி நிற்கும்.  எப்போது சந்தேகம் வந்து விடுகின்றதோ அங்கு உறுதிப்பாடு அடிப்பட்டுப் போய் விடும்.

உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைவது தான் இறை நம்பிக்கையாகும்.  இந்த நம்பிக்கையை இழந்தவர் இறை நம்பிக்கையை இழந்தவராவார். இது தான் குர்ஆனைப் பற்றிய உண்மையான முஃமின்களுடைய  நம்பிக்கையாகும்.

காணாமல் போன குர்ஆன் வசனங்கள் (?)

ஷியாக்களைப் பொறுத்தவரையில் மக்களின் கைகளில் இருக்கின்ற, அல்லாஹ்வால் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட  இந்தக் குர்ஆனில் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இந்தக் குர்ஆன் தொடர்பாக வருகின்ற அத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் புறந்தள்ளி விடுகின்றார்கள். அது தொடர்பான அறிவுப்பூர்வமான வாதத்தையும் அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதில்லை.

அகம்பாவம், ஆணவத்தின் காரணத்தால் உண்மையை உண்மை என்று ஒப்புக் கொள்ள மறுக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலக மக்கள் அனைவருக்கும்  எடுத்துச் சொல்லிச் சமர்ப்பித்தார்களே அது தான் உண்மையான குர்ஆன். அந்தக் குர்ஆனை மறுப்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மறுப்பதாகும். ஆனால் இவர்களோ இந்தக் குர்ஆனை மறுக்கின்றார்கள். இது நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள அடிப்படையான கருத்து  வேறுபாடாகும்.

இப்போது குர்ஆன் தொடர்பான ஷியாக்களின் அபத்தமான, ஆபத்தான ஆதாரங்களை அவர்களது நூல்களிலிருந்து பார்ப்போம்.

முஹம்மத் பின் யஃகூப் அல்கலீனி என்பவர் ஷியாக்களின் நம்பகமான இமாம் ஆவார். ஷியாக்களின் ஹதீஸ்கலை அறிஞரும் ஆவார்.  நாம் இமாம் புகாரியை மதிப்பது போன்று அவர்கள் கலீனியை மதிக்கின்றார்கள். அவர் அல்காஃபி ஃபில் உஸூல் என்ற நூலில் இமாம் ஜஃபர் சாதிக்கிடமிருந்து  ஹிஷாம் வாயிலாக, ‘முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் (அலை)  கொண்டு வந்த குர்ஆன் 17 ஆயிரம் வசனங்கள் கொண்டதாகும்’ என்று அறிவிக்கின்றார்.

இதற்குரிய அரபி மூலம்:

عن هشام بن سالم عن أبي عبد الله عليه السلام قال: إن القرآن الذي جاء به جبرئيل عليه السلام إلى محمد صلى الله عليه وآله سبعة عشر آلف آية” (الكافي في الأصول” كتاب فضل القرآن)

குர்ஆனின் மொத்த வசனங்கள் ஆறாயிரத்துச் சொச்சம் தான். ஷியாக்களின் குர்ஆன் விரிவுரையாளரான அபூ அலி அத்தப்ரஸீ என்பவர் ‘அத்தஹ்ர்’ என்ற 76வது அத்தியாயத்தின் விளக்கவுரையில் ‘குர்ஆனுடைய வசனங்கள்  ஆறாயிரத்து முப்பத்து ஆறு வசனங்கள்’ என்று குறிப்பிடுகின்றார். அவர்களுடைய அறிஞரான  இவர் ஒப்புக் கொள்கின்ற எண்ணிக்கை ஆறாயிரத்து சொச்சம் எனும் போது அதை ஏற்றுக் கொள்ளாமல் பதினேழாயிரம் என்று சொல்வது பெரும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

ஷியாக்கள் கூறுகின்ற இந்தக் கருத்துப்படி, குர்ஆனில் மூன்றில் இரண்டு பகுதி இப்போது இல்லை என்றாகின்றது. இதை வலியுறுத்தும் விதமாக அல்காஃபியில் இன்னொரு செய்தியும் பதிவாகிவுள்ளது. அபூபஸீர் என்பார் தெரிவிக்கின்றார்.

நான் அபூஅப்தில்லா (ஜஃபர் சாதிக்) இடம் சென்று சலாம் சொன்னேன் என்று சொல்லி, அவர் கூறும் உரையாடல் இதோ:

‘நான் பேசுவதைச் செவியுறுகின்ற வகையில்  உங்களுடன் வேறு யாரும் உள்ளனரா?’  என்று கேட்டேன். அப்போது அபூஅப்தில்லாஹ் அவருக்கும் இன்னொரு வீட்டிற்கும் மத்தியில் இருந்த திரையை அகற்றினார்.  பிறகு அங்கு பார்த்து விட்டு (யாரும் இல்லை என்றதும்)

ஜஃபர் சாதிக்: என்னிடம் நீ விரும்பியதைக் கேள்.

அபூபஸீர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி)க்குக் கல்வியின் ஒரு வாசலைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த ஒரு வாசல் மூலம் ஆயிரம் வாசல்கள் திறக்கப்படும் என்று உங்களுடைய  ஷியாவினர் பேசிக் கொள்கின்றார்களே!

ஜஃபர் சாதிக்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி)க்குக் கல்வியின்  ஒரு வாசலைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த ஒரு வாசல் மூலம் ஆயிரம் வாசல்கள் திறக்கப்படும். (என்பது உண்மைதான்)

அபூபஸீர்: அல்லாஹ்வின் மீது ஆணையாக  அது கல்வி தான்!

ஜஃபர் சாதிக்: (கொஞ்சம் நேரம் கழித்து) அது ஒரு கல்வி தான். அது மட்டுமல்ல.  அபூமுஹம்மதே! நம்மிடம் அல்ஜாமிஆ இருக்கின்றது. ஜாமிஆ என்றால் என்னவென்று மக்களுக்குத் தெரியுமா?

அபூபஸீர்: நான் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். ஜாமிஆ என்றால் என்ன?

ஜஃபர் சாதிக்: அது ஓர் ஏடு. அதன் நீளம் ரசூல் (ஸல்) அவர்களின்  முழங்கைக்கு எழுபது முழங்கைகள் ஆகும்.  ரசூல் (ஸல்) அவர்கள் வாய் திறந்து சொல்ல அலீ (ரலி) தன் வலது கையால் எழுதினார்கள். அதில் ஹலால், ஹராம்  சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும், கொலையுண்டவருக்குக் கொடுக்கக் கூடிய  நஷ்ட ஈடு உட்பட மக்களுக்குத் தேவையான  ஒவ்வொரு விஷயமும் இருக்கின்றது.

(என்று கூறிவிட்டு, என்னைத் தனது கையால் ஓர் அடி அடித்து)

ஜஃபர் சாதிக்:  அபூமுஹம்மதே! உன்னைக் கொஞ்சம் கிள்ளிக் கொள்ளவா?

அபூபஸீர்: நான் தான் உங்களுக்கு அர்ப்பணமாகி விட்டேனே! நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

ஜஃபர் சாதிக்: (ஏதோ கோபப்பட்டவர் போன்று அவர் தன்னுடைய கையால் என்னைக் கிள்ளி விட்டு)  இந்த கிள்ளலுக்குரிய தண்டனை கூட அதில் கூறப்பட்டிருக்கின்றது.

அபூபஸீர்: அப்படியானால் அது ஒரு கல்வி தான்!

ஜஃபர் சாதிக்: இது ஒரு கல்வி தான்.  அது மட்டுமல்ல!

(கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தார். பிறகு)

நம்மிடம் ஜிஃப்ர் இருக்கின்றது. ஜிஃப்ர் என்றால் மக்களுக்குத் தெரியுமா?

அபூபஸீர்: ஜிஃப்ர் என்றால் என்ன?

ஜஃபர் சாதிக்: அது ஒரு  தோல் பை. அதில் நபிமார்கள், வஸிய்யத் செய்யப்பட்டவர்கள், இஸ்ரவேலர்களிலிருந்து சென்று விட்ட அறிஞர்களின் கல்வி அதில் அடங்கியிருக்கின்றது.

அபூபஸீர்: அப்படியானால் அது ஒரு கல்வி தான்.

ஜஃபர் சாதிக்: அது கல்வி தான். அது மட்டுமல்ல!

(கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு, பிறகு)

நம்மிடத்தில் ஃபாத்திமாவின் முஸ்ஹஃப் இருக்கின்றது. ஃபாத்திமாவின் முஸ்ஹஃப் என்னவென்று மக்களுக்குத் தெரியுமா?

அபூபஸீர்:  ஃபாதிமாவின் முஸ்ஹஃப் என்றால் என்ன?

ஜஃபர் சாதிக்: முஸ்ஹஃப் என்றால் அதில் தான் உங்களுடைய குர்ஆனைப் போன்ற மூன்று மடங்கு அடங்கியிருக்கின்றது. உங்களுடைய குர்ஆனிலிருந்து ஓர் எழுத்துக் கூட அதில் இல்லை.

இதற்குரிய அரபி மூலம்:

قال: مصحف فيه مثل قرآنكم هذا ثلاث مرات، والله ما فيه من قرآنكم حرف واحد” الخ (“الكافي في الأصول” كتاب الحجة،)