11) கால்நடைகளை வாங்கி விற்பது தொடர்பான சட்டங்கள்
கால்நடைகளை வாங்கி விற்பது தொடர்பாகவும் இஸ்லாத்தில் சில சட்டங்கள் உள்ளன. நாம் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை விற்கும் போது, அவற்றை வாங்குபவருக்கு நேரில் காண்பித்துதான் விற்க வேண்டும். அறியாமைக் காலத்தில் அரபிகளிடம் ஒரு தவறான வழக்கம் இருந்தது. தற்போது இருக்கும் ஒட்டகத்தை விற்காமல், இந்த ஒட்டகம் ஒரு குட்டி போடும், அந்தக் குட்டி வளர்ந்து இன்னொரு குட்டி போடும் அல்லவா, அந்தப் பேரன் குட்டியை உனக்கு விற்கிறேன் என்று கூறிப் பணம் வாங்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் ஒட்டகத்தின் வயிற்றைக் காட்டி, இதன் வயிற்றில் இருக்கும் குட்டியை உனக்கு விற்கிறேன் என்பார்கள். வயிற்றில் இருப்பது குட்டியா அல்லது கட்டியா, அது உயிருடன் பிறக்குமா, ஆணா பெண்ணா என்பது யாருக்கும் தெரியாது. இவ்வாறு பொருளைக் காட்டாமல் விற்பதை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துத் தடை செய்தார்கள். கால்நடைகளில் நோய் இருக்கிறதா, அதன் நிலை என்ன என்பதை நேரில் பார்த்துத் திருப்தியடைந்தே வாங்க வேண்டும்; கண்ணில் காட்டாமல் விற்கக் கூடாது என்று ஸஹீஹுல் புகாரியில் வரும் ஹதீஸ் வழிகாட்டுகிறது.