07) அஹ்லுல் கிதாப் முறையாக அறுத்ததை உண்ணலாம்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் ஜீவராசிகள்

அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும். இதில் வேதம் கொடுக்கப்பட்டவர்களான யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு. திருக்குர்ஆனில் அஹ்லுல் கிதாப் என்று குறிப்பிடப்படுவது அவர்கள் இருசாராரையுமே ஆகும். ஓர் ஆட்டை ஒரு யூதரோ அல்லது கிறிஸ்தவரோ உரிய முறையில் அறுத்திருந்தால், அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறாவிட்டாலும் அது முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். இது ஆரம்ப காலத்தில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் தடை செய்யப்பட்டது என்று சிலர் கூறுவதும் தவறாகும். ஹஜ்ஜத்துல் விதாவின் போது الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ (இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு செய்துவிட்டேன்) என்ற வசனத்தை ஒட்டி, இறுதியாக இறங்கிய சூரத்துல் மாயிதாவின் ஐந்தாவது வசனத்தின் ஒரு பகுதியாகவே அல்லாஹ் இதை அனுமதிக்கின்றான்.

ٱلْيَوْمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَـٰتُ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ حِلٌّ لَّكُمْ
இன்றைய நாளில் நல்லவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும்.
(அல்குர்ஆன்: 5:5)➚

இங்கு உணவு என்று குறிப்பிடப்படுவது அரிசி, பருப்பு போன்றவற்றை மட்டுமே குறிக்கும் என்றும், அறுத்த பிராணிகளைக் குறிக்காது என்றும் சிலர் தவறாக விளக்கம் அளிக்கின்றனர். அரிசி, பருப்பு போன்ற உணவுகளாக இருந்தால் அவை இணைவைப்பாளர்களுடையதாக இருந்தாலும் கூட உண்பதற்குத் தடையில்லை; அதற்கு வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்ற நிபந்தனை தேவையில்லை. எனவே, இந்த வசனத்தில் உணவு என்று குறிப்பிடப்படுவது அவர்கள் முறைப்படி அறுத்தவற்றையே குறிக்கிறது. நடைமுறையிலும் கைபர் உடன்படிக்கையின்போது ஒரு யூதப் பெண் ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து விருந்தளித்தபோது, நபி (ஸல்) அவர்கள் அந்த ஆட்டிறைச்சியை உண்டிருக்கிறார்கள். அல்லாஹ் ஓர் அனுமதியை வழங்கியிருக்கும்போது, அதற்கு நாம் சுயமாகத் தவறான விளக்கங்களைக் கொடுக்கக் கூடாது.