06) உயிரினங்களை அறுக்கும் முறை
கால்நடைகளை உணவுக்காக அறுத்து உண்பது தொடர்பான சட்டதிட்டங்களில், அவற்றை எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான வழிகாட்டலாகும். உயிரினங்களை அறுக்கும்போது பயன்படுத்தும் ஆயுதம் மிகக் கூர்மையாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஒரு ஹஜ் பெருநாளில் குர்பானி கொடுப்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் கத்தி எடுத்து வரச் சொன்னார்கள். அவர் கொண்டு வந்த கத்தி போதிய கூர்மையுடன் இல்லாததால், அதைக் கல்லில் தீட்டி கூர்மையாக்கி எடுத்து வருமாறு கூறி, நன்கு கூர்மையாக்கிய பிறகே அதைக் கொண்டு அறுத்தார்கள். பிராணிகளை அறுக்கும்போது கழுத்து நரம்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டுவிட்டால் மூளைக்குச் செல்லும் வலி உணர்வு தடைபட்டு, வேதனை குறைகிறது. நவீன அறிவியலும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கும்போது பிராணிகள் வேதனையை உணர்வதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
فليحد شفرته وليرح ذبيحته
அவர் தனது கத்தியைக் கூர்மையாக்கிக் கொண்டு, அறுக்கப்படும் பிராணிக்கு நிம்மதியளிக்கட்டும்.
(ஸஹீஹ்(முஸ்லிம்: 3615) ➚
அல்லாஹ் அனைத்து விஷயங்களிலும் அழகிய முறையைக் கடைப்பிடிப்பதை விதியாக்கியுள்ளான் என்று குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள், உயிரை எடுக்கும்போதும் அறுக்கும்போதும் அழகான முறையைக் கையாள வேண்டும் என்று கூறினார்கள். கூர்மையற்ற ஆயுதத்தை வைத்து அறுக்கும்போது நரம்புகள் உடனடியாக அறுபடாமல் பிராணி நீண்ட நேரம் வேதனைப்படும். எனவே பிராணி துன்பத்தை உணராதவாறு விரைவாக நரம்பு அறுபடுமாறு கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அறுப்பதே அழகிய முறையாகும்.
إن الله كتب الإحسان على كل شيء فاحسنوا القتله وإذا ذبحتم فاحسنوا الذبحه
அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் அழகிய முறையைக் கடமையாக்கியுள்ளான். எனவே, நீங்கள் கொல்லும்போது அழகான முறையில் கொல்லுங்கள்; அறுக்கும்போதும் அழகான முறையில் அறுங்கள்.
(ஸஹீஹ்(முஸ்லிம்: 3615) ➚
அறுப்பதற்கு குறிப்பிட்ட ஒரு பொருளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. இரத்தத்தை ஓட்டக்கூடிய கூர்மையான கல், கூர்மையான வைரம் அல்லது கண்ணாடித் துண்டு என எதனைக் கொண்டும் அறுக்கலாம்; கூர்மை மட்டுமே இங்கு முதன்மையானது. ஆனால் நகத்தையோ பல்லையோ கொண்டு எதையும் அறுக்கக் கூடாது. நகம் கத்தி போன்று கூர்மையாக வளர்ந்திருந்தாலும் அதைக் கொண்டோ, பற்களால் கடித்தோ உயிரினங்களை அறுக்க அனுமதி இல்லை. அவ்வாறு கடித்துக் கொல்வதும் நகத்தால் கிள்ளிக் கொல்வதும் அறியாமைக் காலத்து அபீஸீனியர்களின் வழக்கமாக இருந்தது. அதேபோன்று கதவின் இடுக்கில் கோழியின் கழுத்தை வைத்துக் கதவைச் சாத்தி நசுக்கிக் கொல்வது போன்ற வேதனைப்படுத்தும் முறைகளும் கூடாது.
مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلْ لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ
இரத்தத்தை ஓட்டக்கூடிய, அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட எதனையும் உண்ணுங்கள்; பல், நகம் ஆகியவற்றைத் தவிர.
(ஸஹீஹ்(புகாரி: 3075) ➚
வேட்டைக்குச் செல்லும்போது கத்தி கிடைக்காத சூழல் ஏற்பட்டாலும், சிறிய பறவைகளைப் பிடித்து நகத்தால் கிள்ளிக் கொன்று உண்பதும் கூடாது; அத்தகைய பிராணிகள் உண்ணத் தகுதியற்றவை ஆகும்.
அரபு மொழியில் பொதுவாக உயிரினங்களை அறுப்பதற்கு ‘தபஹ’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒட்டகத்தை அறுப்பதற்கு ‘நஹ்ரு’ என்ற சொல் கையாளப்படுகிறது. தமிழில் எதை அறுத்தாலும் ‘அறுப்பது’ என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவோம்; ஆனால் அரபு மொழியில் அறுக்கும் முறைகளுக்கேற்ப தனித்தனிச் சொற்கள் உள்ளன.
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
(அல்குர்ஆன்: 108:2)➚
ஒட்டகத்தைப் படுக்கப் போட்டு அறுப்பது மிகவும் கடினமானது; ஒரு ஆட்டை அறுப்பதற்கே இருவர் தேவைப்படும் நிலையில், வலிமைமிக்க ஒட்டகத்தைப் படுக்க வைக்கப் பல ஆட்கள் தேவைப்படுவர். எனவே, ஒட்டகத்தை நிற்க வைத்த நிலையிலேயே அதன் தொண்டைக்குழிப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் கீழ்நோக்கிக் குத்தி இரத்த நாளங்களை அறுப்பார்கள். இதற்கு ‘நஹ்ரு’ என்று பெயர். பிற கால்நடைகளைப் படுக்க வைத்து அவற்றின் கழுத்து நரம்பை அறுப்பதற்கு ‘தபஹ்’ என்று பெயர்.
இவ்விரு முறைகளிலுமே பிராணியின் குரல்வளையும் கழுத்து நரம்புகளும் துண்டிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படையான விதியாகும். தோலை மட்டும் லேசாக அறுத்து இரத்தம் வடிந்து செத்துப் போனாலோ, அல்லது காலை வெட்டி இரத்தம் வெளியேறி இறந்தாலோ அதை மார்க்கம் அனுமதித்த அறுத்தல் எனக் கொள்ள முடியாது. தொண்டைக்குழியில் உள்ள குரல்வளையையும் இரத்த நாளங்களையும் அறுத்து உடனடியாக உயிரை எடுப்பதற்குப் பெயரே அறுத்தல் ஆகும்.
கசாப்புக் கடைகளில் பல ஆடுகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு ஆட்டை அறுக்கும் பழக்கம் காணப்படுகிறது. மற்ற ஆடுகள் இதைப் பார்த்து வேதனைப்படும் என்று சிலர் நினைத்தாலும், மனிதர்களுக்கு இருப்பதைப் போன்று சிந்தித்து வேதனைப்படும் வகையிலான பகுத்தறிவு பிராணிகளுக்கு வழங்கப்படவில்லை.
ஒரு பிராணியை அறுக்கும்போது மற்ற கால்நடைகளுக்குத் தெரியாமல் மறைத்து அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஹ்மதில் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது. ஆனால், இப்னு லஹீஆ என்ற பலவீனமான அறிவிப்பாளர் வழியாக வரும் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. அவ்வாறு மறைத்து அறுக்க வேண்டும் என்ற சட்டம் மார்க்கத்தில் கிடையாது. கண்முன்னே ஓர் ஆடு அறுக்கப்படும்போது, மற்றொரு ஆடு எதைப் பற்றியும் உணராமல் வழக்கம் போல் மேய்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது; அவற்றுக்கு அந்த அளவிற்கான அறிவு வழங்கப்படவில்லை. எனவே, மறைத்துத்தான் அறுக்க வேண்டும் என்பது தவறான புரிதலாகும்.