03) வாயில்லா ஜீவன்களைச் சித்திரவதை செய்யக் கூடாது

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் ஜீவராசிகள்

 

தொழுகை, நோன்பு, தஸ்பீஹ் போன்ற வணக்க வழிபாடுகளுக்கும் மனிதர்களுக்குச் செய்யும் உதவிகளுக்கும் நற்கூலி உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கால்நடைகளுக்கும் பிராணிகளுக்கும் செய்யும் உதவிகளுக்கும் கூலி கிடைக்குமா என்று நபித்தோழர்கள் மீண்டும் ஆச்சரியத்துடன் வினவினார்கள்.

أَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لأَجْرًا
கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலுமா எங்களுக்குக் கூலி கிடைக்கும்?

அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:

فِي كُلِّ ذَاتِ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ
உயிருள்ள ஒவ்வொரு பிராணிக்குச் செய்யும் நன்மையிலும் நற்கூலி உண்டு.

உயிருள்ள ஒவ்வொரு பிராணிக்கும் செய்கின்ற உதவிக்கும் நற்கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தாகத்தால் தவித்த ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டிய காரணத்தால் ஒருவர் சொர்க்கம் சென்றதும், பூனையைச் சிறைவைத்துத் துன்புறுத்திய காரணத்தினால் ஒரு பெண் நரகத்திற்குச் சென்றதும் நாம் அறிந்ததே. எனவே உயிரினங்களிடம் நாம் எவ்வாறு கருணையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் எந்த நோக்கத்திற்காக ஓர் உயிரினத்தை நமக்கு வசப்படுத்திக் கொடுத்தானோ, அதற்காக மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். குதிரை, ஒட்டகம் போன்ற பிராணிகள் பயணம் செய்வதற்காகவே வசப்படுத்தித் தரப்பட்டுள்ளன. பயணம் முடிந்த பிறகும் அவற்றின் மீது சாய்ந்து ஓய்வெடுப்பதோ அல்லது நாற்காலியைப் போன்று அவற்றின் மீது அமர்ந்துகொண்டிருப்பதோ கூடாது. சாய்வதற்கும் அமர்வதற்கும் சுவர்களும் மரங்களும் இருக்கையில், பிராணிகளை வீணாகச் சிரமப்படுத்தக் கூடாது. அதேபோன்று மாட்டு வண்டியில் பயணம் முடிந்த பிறகும் மாடுகளை அவிழ்த்து ஓய்வு கொடுக்காமல், வண்டியிலேயே பூட்டிவைத்து அதன் மேல் படுத்துத் தூங்குவதும் தவறாகும். இவ்வாறு கால்நடைகளை நாற்காலிகளைப் போன்று பயன்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

اِرْكَبُوا هَذِهِ الدَّوَابَّ سَالِمَةً وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ
நீங்கள் இந்தக் கால்நடைகளில் நல்ல முறையில் ஏறிச் செல்லுங்கள்; அவற்றை நாற்காலிகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்.

ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாட்டைச் சுற்றி வளைத்துத் துன்புறுத்துவதும் கொடுமையான செயலாகும். தற்காப்புக்காகவும் பயத்தினாலும் அது முட்டித் தள்ளுவதை வீரம் என்று கருத முடியாது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஒரு பிராணியின் திமிலையும் கொம்பையும் பிடித்து வதைப்பது, உயிரினங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல், ஈட்டி எறிதல் போன்ற பயிற்சிகளின் போது ஓர் இலக்கு தேவைப்படுகிறது. அத்தகைய பயிற்சிகளுக்கு மரம், கல், காகிதம் போன்ற உயிரற்ற பொருட்களை மட்டுமே இலக்காக வைக்க வேண்டுமே தவிர, உயிருள்ள எந்தவொரு பிராணியையும் பயன்படுத்தக் கூடாது. சிட்டுக்குருவி, கழுதை, பன்றி என எந்த உயிரினமாக இருந்தாலும், மார்க்கம் அனுமதித்த வேட்டையாடுதல் நோக்கமின்றி, வெறும் பயிற்சிக்காக அவற்றைக் குறிபார்த்து அடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

لَا تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا
உயிர் உள்ள எதனையும் இலக்காக ஆக்கிக்கொள்ளாதீர்கள்.
(முஸ்லிம்)

இப்னு உமர் (ரலி) அவர்கள் குரைஷி வாலிபர்களைக் கடந்து சென்றபோது, அவர்கள் ஒரு பறவையைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். மார்க்க விஷயங்களில் எவரிடமும் சமரசம் செய்துகொள்ளாத இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டதும் அந்த வாலிபர்கள் பயந்து ஓடினர். அப்போது அவர்கள், مَنْ فَعَلَ هَذَا (இதைச் செய்தது யார்?) என்று கேட்டுவிட்டு, لَعَنَ اللهُ مَنْ فَعَلَ هَذَا (இப்படிச் செய்தவனை அல்லாஹ் சபிப்பானாக!) என்று கூறினார்கள். உயிருள்ள பிராணிகளைப் பயிற்சிக்கு இலக்காகப் பயன்படுத்துபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்திருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தார்கள்.

إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ مَنِ اتَّخَذَ شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا
உயிர் உள்ள எதனையும் இலக்காக ஆக்கிக்கொள்பவரை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
(முஸ்லிம்)

கால்நடைகளைத் தங்களுக்குரியவை என்று அடையாளம் காண்பதற்காக, நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய தகரங்கள் அல்லது கம்பிகளைக் கொண்டு அவற்றின் உடலில் சூடு போடுவதோ, குறிப்பிட்ட நாட்களில் குட்டி போட்டது என்பதற்காக அவற்றின் காதுகளை அறுப்பதோ கூடாது. இவ்வாறாகப் பிராணிகளைச் சிதைத்து, அவற்றின் இயற்கையான தோற்றத்தை விகாரப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُمَثَّلَ بِالْبَهَائِمِ
கால்நடைகளை உறுப்புச் சிதைவு செய்து விகாரப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
(இப்னு மாஜா)

மாடுகளுக்குக் கொம்பு முளைக்கும் இடத்தைப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சுட்டு, கொம்பே முளைக்காமல் ஆக்கும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. மாடு முட்டிவிடும் என்ற அச்சத்தால் அதன் பாதுகாப்பிற்காக இப்படிச் செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால், கொம்பை அல்லாஹ் அவசியத்திற்காகவே படைத்திருக்கிறான். அல்லாஹ் படைத்த இயற்கையான அமைப்பை மாற்றி, விலங்குகளைக் கோரப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் ஆற்றலால், பெரிய கொம்புகள் கொண்ட பயங்கரமான தோற்றமுடைய மாடுகள்கூட மனிதனுக்குப் பணிந்து அடங்கி நடக்கின்றன. அவ்வாறிருக்க, விலங்குகளின் காதுகளை அறுப்பது, மூக்கை அறுப்பது, சூடு போடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

அதேபோன்று, கால்நடைகள் ஏதேனும் சேட்டை செய்துவிட்டாலோ, பால் கறக்கும்போது உதைத்துவிட்டாலோ, அவற்றை அடக்குகிறோம் என்ற பெயரில் பல நாட்கள் தீவனமும் தண்ணீரும் கொடுக்காமல் பட்டினி போட்டு வதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். விலங்குகளைப் பட்டினி போட்டுத் தண்டிப்பதும், அவற்றை அம்பெறிவதற்கு இலக்காகப் பயன்படுத்துவதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இது புகாரியில் 5513-வது செய்தியாகப் பதிவாகியுள்ளது.

ஒருமுறை, முகத்தில் சூடு போடப்பட்ட ஒரு மிருகத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அதைக் கடுமையாகக் கண்டித்தார்கள். விலங்கின் முகம் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். அதில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போடுவது கடுமையான வேதனையைத் தரக்கூடியது.

لَعَنَ اللهُ الَّذِي وَسَمَهُ
இதன் முகத்தில் சூடு போட்டவனை அல்லாஹ் சபிக்கிறான்.
(முஸ்லிம்: 2117) ➚

எனவே, வாயில்லா ஜீவன்களைச் சித்திரவதை செய்யவோ, அவற்றின் உறுப்புகளைச் சிதைக்கவோ, வேட்டையாடும் இலக்காகப் பயன்படுத்தவோ அனுமதி இல்லை.