06) பெண் பிள்ளைகளுக்கான சடங்குகள்
ஆண் பிள்ளைகளுக்கு சுன்னத் விசேஷம் செய்வது போல, பெண் பிள்ளைகள் பருவமடைந்தவுடன் அவர்களுக்கும் ஒரு விழா நடத்துகிறார்கள். சடங்குகள், விழாக்கள், விருந்துகள் எனப் பல மூடப்பழக்கங்களை இதற்காகச் செய்கிறார்கள். ஒரு பெண் பருவமடைவது இஸ்லாத்தில் விழா எடுப்பதற்குரிய ஒன்றா? அதற்கு ஏதேனும் சடங்குகள் உண்டா? நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு வழிகாட்டியுள்ளார்களா என்றால், இதற்கு ஒரு பலவீனமான செய்தி கூடக் கிடையாது.
பெண் பருவமடைந்ததற்காகப் பத்திரிகை அடித்து, விருந்து வைத்து, உலகத்தில் நடக்காத ஒன்று நடந்துவிட்டதைப் போலப் பார்ப்பதற்குப் படையெடுத்துச் செல்லும் பழக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலோ, நபித்தோழர்களிடத்திலோ இருந்ததில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு ஜைனப், ருக்கய்யா, உம்மு குல்ஸூம், பாத்திமா ஆகிய நான்கு பெண் மக்கள் இருந்தார்கள். அவர்கள் நால்வரும் எந்த வயதில் பருவமடைந்தார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. நபி (ஸல்) அவர்களின் மகள்கள் பருவமடைந்தபோது புடவை எடுத்துக்கொண்டு போய்ப் பார்த்ததாகவோ, மஞ்சள் நீர் ஊற்றியதாகவோ எந்தவொரு வரலாற்றுப் பதிவும் இல்லை. அப்படியொரு விழாவோ அறிவிப்போ இல்லாத காரணத்தினால்தான் அது பதிவாகவில்லை. ஒரு பெண் பருவமடைவது அவளுடைய தாய் தந்தையருக்கு மட்டுமே தெரிய வேண்டிய விஷயமாகும். அதை ஊரறியப் பெரிய விவகாரமாக்கி, அப்பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் அச்சமூட்டுவதும் தேவையற்ற அனாச்சாரங்களாகும்.
இதுபோன்ற விழாக்கள் உருவாகக் காரணம் ‘மொய்’ வாங்கும் வழக்கம்தான். ஒருவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்குச் சென்று மொய் எழுதுவது அன்பளிப்பு அல்ல. மற்றொருவர் வீட்டு விசேஷத்தில் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடனாகச் செய்வதே மொய் ஆகும். அன்று ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளைப் பல வருடங்கள் கழித்துத் திருப்பிக் கொடுக்கும்போது அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். அதிகப் பிள்ளைகள் உள்ளவர்கள் பலமுறை வசூல் செய்துவிடுகிறார்கள்; குறைவான பிள்ளைகள் உள்ளவர்கள் காது குத்துதல், பருவமடைதல், திருமணம் என எல்லாவற்றையும் விழாவாக மாற்றி அதை வசூல் செய்ய முனைகிறார்கள். மார்க்கத்தில் மொய் வாங்குவது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.
الْعَائِدُ فِي الْهِبَةِ كَالْكَلْبِ الَّذِي يَقِيءُ ثُمَّ يَعُودُ
கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், வாந்தி எடுத்து அதைத் தானே சாப்பிடும் நாய்க்கு நிகரானவன்.
(புகாரி: 2622) ➚
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அன்பளிப்பை அன்போடு மட்டுமே கொடுக்க வேண்டும்; பிறரிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. கொடுத்ததை அவர்கள் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கொடுப்பது அன்பளிப்பே அல்ல. கொடுத்ததைத் திரும்பப் பெறுவதை நாய் வாந்தியைத் தின்பதோடு நபி (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுக் கண்டித்துள்ளார்கள். மொய் வாங்குவதற்காகப் பிற சமுதாயத்தினர் உருவாக்கிய இத்தகைய பழக்கங்களை முஸ்லிம்கள் தங்களின் வீடுகளில் கடைப்பிடிக்கக் கூடாது. பெண்கள் பருவமடைவதைச் சடங்காக்கி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுப்பது போன்ற வீண் சுமைகளை ஏற்படுத்தக்கூடாது.
பிறர் வீட்டுப் பெண் பருவமடையும் போது நாம் ஏதேனும் அன்பளிப்புச் செய்தால், நம் வீட்டுப் பெண் பருவமடையும் போது அவர்களும் அதைத் திருப்பித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கம் வசதியற்றவர்களுக்குப் பெரும் சுமையாக மாறுகிறது. சமூகத்தில் இது கடன் வாங்கவும், வட்டிக்குச் செல்லவும் வைக்கிறது. பலரைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிப் பொய் சொல்லவும், இத்தகைய நிகழ்வுகளைக் கேள்விப்பட்டுப் பணத்திற்கு அஞ்சி ஊரை விட்டே தற்காலிகமாக வெளியேறி ஒளிந்து கொள்ளவும் வைக்கிறது. எனவே, இது ஓர் இயல்பான உடல் மாற்றமே தவிர, இதற்காகப் பூப்பெய்தல் அல்லது புனித நீராட்டு விழா என்ற பெயரில் அழைப்பிதழ் அடித்து விழா நடத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. இது இஸ்லாமிய கலாச்சாரமும் அல்ல; நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எந்த ஒரு வழிமுறையையும் கற்றுத் தரவில்லை.
அடுத்து, குழந்தைகளுக்குக் காது, மூக்கு குத்தும் வழக்கம் நம் சமூகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து மதத்தவர்களிடமும் இந்த வழக்கம் இருக்கிறது. சில சமுதாயங்களில் ஆண் குழந்தைகளுக்கும், சிலவற்றில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் காது குத்துகிறார்கள். ஆனால் அரபு நாடுகளிலோ, அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற உலக நாடுகளிலோ இத்தகைய வழக்கம் பெரும்பாலும் இல்லை. அழகுக்காகவே இதைச் செய்வதாகக் கூறுகிறார்கள். உண்மையில் ஒரு விஷயத்தைப் பார்த்துப் பழகிவிட்டதாலேயே அது அழகாகத் தெரிகிறது; நமது பழக்கம்தான் அதற்குக் காரணம்.
இந்த வழக்கம் குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது என்பதைத் திருமறைக்குர்ஆனிலிருந்து நோக்கலாம். இப்லீஸை அல்லாஹ் வெளியேற்றியபோது, அவன் மனிதர்களை வழிகெடுப்பதற்காக மறுமை நாள் வரை அவகாசம் கேட்டான். மனிதர்களுக்குத் தவறான கட்டளையிட்டு, கால்நடைகளின் காதுகளை அறுக்க வைப்பேன் என்றும், அல்லாஹ் படைத்திருக்கும் இயற்கையான கோலத்தையே மாற்ற வைப்பேன் என்றும் அவன் கூறினான். இறைவன் நம்மை எந்தக் கோலத்தில் படைத்துள்ளானோ, அந்த அமைப்பில் மாறுதல் செய்வது ஷைத்தானின் தூண்டுதலால் ஏற்படுவதாகும்; அவ்வாறு செய்பவன் பெரும் நஷ்டமடைந்து விடுகிறான் என்று குர்ஆன் எச்சரிக்கிறது.
وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَـَٔامُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلْأَنْعَـٰمِ وَلَـَٔامُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ ٱللَّهِ ۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيْطَـٰنَ وَلِيًّا مِّن دُونِ ٱللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். “உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நட்டமடைந்து விட்டான்.
(அல்குர்ஆன்: 4:119)➚
மனிதனின் படைப்பு நிலைகளைப் பற்றிக் குறிப்பிடும் அல்லாஹ், தான் படைப்பாளர்களில் மிக அழகானவன் என்று கூறுகிறான்.
ثُمَّ خَلَقْنَا ٱلنُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا ٱلْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا ٱلْمُضْغَةَ عِظَـٰمًا فَكَسَوْنَا ٱلْعِظَـٰمَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَـٰهُ خَلْقًا ءَاخَرَ ۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحْسَنُ ٱلْخَـٰلِقِينَ
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கிய சாலியாவான்.
(அல்குர்ஆன்: 23:14)➚
ஆணுக்குரிய தனித்துவமான உடலமைப்பையும், பெண்ணுக்குரிய தனித்துவமான உடலமைப்பையும் அல்லாஹ் மிக நேர்த்தியாகப் படைத்துள்ளான். காதில் துவாரம் இருப்பதுதான் பெண்களுக்கு அழகு என்றால், அவளைப் படைக்கும்போதே அல்லாஹ் துவாரத்தோடு படைத்திருப்பான். பற்கள் நீட்டிக்கொண்டிருப்பது போன்ற தனிநபருக்கு ஏற்படும் குறைகளைச் சரிசெய்வது வேறு விஷயம். ஆனால் எந்தவொரு பெண்ணும் பிறக்கும்போதே காதில் துவாரத்தோடு பிறப்பதில்லை. காதிலும் மூக்கிலும் துவாரம் இருந்தால்தான் அழகு என்று கூறி அனைவரும் துளையிடுவது, அல்லாஹ் படைத்த அமைப்பில் குறை காண்பது போன்றதாகும்.
அல்லாஹ் தன் படைப்புகளை ஏனோதானோவென்று கவனக்குறைவாகப் படைக்கவில்லை; மிகக் கவனத்துடனேயே படைத்துள்ளான் என்பதை மற்றொரு வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.
وَمَا كُنَّا عَنِ ٱلْخَلْقِ غَـٰفِلِينَ
நாம் படைப்புகளைப் பற்றிக் கவனக்குறைவாக இருக்கவில்லை.
(அல்குர்ஆன்: 23:17)➚
அதேபோன்று, ஒவ்வொன்றையும் அதற்குரிய அளவோடு திட்டமிட்டுப் படைத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறான். ஆணுக்கு மீசை இருப்பது அழகு, பெண்ணுக்கு மீசை இல்லாமல் இருப்பது அழகு என்பது போல, எந்தெந்த உறுப்புகள் எவ்வகையில் அமைய வேண்டும் என்பதை அவனே அளவிட்டுத் தீர்மானித்துள்ளான்.
وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهُۥ تَقْدِيرًا
அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, அதனை ஒரு குறிப்பிட்ட அளவின்படி திட்டமிட்டமைத்தான்.
(அல்குர்ஆன்: 25:2)➚
இறைவன் அமைத்த இயற்கை அமைப்பிலும், படைப்பிலும் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும், அதுவே நேரான மார்க்கம் என்றும் கூறுகிறான்.
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ ٱللَّهِ ٱلَّتِى فَطَرَ ٱلنَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
(முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 30:30)➚
படைப்பாளர்களில் மிக அழகானவனான அல்லாஹ்வை விட்டுவிட்டு சிலைகளை வணங்குவதைக் கண்டிக்கும் விதமாக ஒரு நபி தம் மக்களிடம் கேட்டதையும் குர்ஆன் குறிப்பிடுகிறது.
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَـٰلِقِينَ
“அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு ‘பஅல்’ எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா? என்று தமது சமூகத்தாரிடம் அவர் கூறியபோது அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். அவர்கள் (நம்மிடம்) கொண்டு வரப்படுவார்கள்.
(அல்குர்ஆன்: 37:125)➚
மேலும், மனித உடல் உறுப்புகள் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் அதற்குரிய சரியான அளவோடும் திட்டத்தோடும் அல்லாஹ் படைத்துள்ளான்.
إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَـٰهُ بِقَدَرٍ
ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.
(அல்குர்ஆன்: 54:49)➚
அல்குர்ஆனின் 64-வது அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு வடிவம் தந்து, அந்த வடிவத்தை அழகுற அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறான்:
وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ
அவன் உங்களுக்கு உருவமைத்து, உங்கள் வடிவங்களை அழகாக்கினான்.
(அல்குர்ஆன்: 64:3)➚
படைத்த இறைவனுக்குத் தன் படைப்பைப் பற்றித் தெரியாதா என்று அல்லாஹ் 67-வது அத்தியாயத்தின் 14-வது வசனத்தில் கேட்கிறான்:
أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ
படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன்: 67:14)➚
அதேபோன்று 82-வது அத்தியாயத்தின் ஆறு மற்றும் ஏழாவது வசனங்களிலும் மனிதனைப் படைத்து, சீராக்கி, செம்மைப்படுத்திய தன் அருட்கொடையை அல்லாஹ் நினைவூட்டுகிறான்:
مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ ٱلَّذِى خَلَقَكَ
உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்திய உன் கண்ணியமிக்க இறைவனுக்கு மாறுசெய்யும்படி உன்னை ஏமாற்றியது எது?
(அல்குர்ஆன்: 82:6-7)➚
மேலும் 95-வது அத்தியாயத்தின் நான்காவது வசனத்திலும் மனிதப் படைப்பின் பூரண அழகை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்:
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
(அல்குர்ஆன்: 95:4)➚
மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் வடிவமே அழகு; அதற்கு மிஞ்சிய ஓர் அழகான வடிவம் இருக்க முடியாது. இந்த வசனங்களின் அடிப்படையில் சிந்திக்கும்போது, பெண்களுக்குக் காது குத்துவதும் மூக்கு குத்துவதும் ஒரு நோய்க்கான சிகிச்சையாகவோ மருத்துவத் தேவையாகவோ இருந்தால் அது விதிவிலக்கு. ஆனால், பெண் என்றால் காது குத்தியே ஆக வேண்டும் என்று கருதி, அதற்கென விழாக்களும் சடங்குகளும் நடத்தி, அதை மார்க்கத்தின் ஒரு கட்டாய அம்சம் போலக் கருதுவது அல்லாஹ்வின் படைப்பில் குறை காண்பதற்கு ஒப்பாகும். அனைவருக்கும் இது தேவை என்றால், படைத்த போதே அல்லாஹ் அந்தத் துவாரத்தை அமைத்திருப்பான். மாறாக, அனைவருக்குமே இது அவசியம் என்று கருதுவது அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைப்பதாகும்.
ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கிறார்கள்:
لَعَنَ اللَّهُ الْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ
அழகுக்காகப் பற்களுக்கிடையே இடைவெளி ஏற்படுத்தி, அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கிறான்.
(புகாரி: 4886) ➚
அழகுக்காக அல்லாஹ்வின் படைப்பை மாற்றுவதையே இச்செய்தி கண்டிக்கிறது. மாறாக, மருத்துவத் தேவைக்காகவோ அல்லது காது மடல் வளைந்து இருப்பதையோ, பல் நீட்டிக்கொண்டிருப்பதையோ சரிசெய்வதற்காக சிகிச்சை பெறுவது அல்லாஹ்வின் படைப்பில் குறை காண்பதாக ஆகாது; ஏனெனில் அவை இயல்பான அமைப்பிலிருந்து மாறுபட்ட குறைபாடுகள் என்பதால், நோய்க்குச் சிகிச்சை பெறுவது போன்றதாகும். ஆனால் இயல்பாக உள்ள அனைவருக்கும் காது மற்றும் மூக்கு குத்துவது என்பது, அல்லாஹ் படைத்த அமைப்பில் ஏதோ குறை இருப்பது போன்ற எண்ணத்தையே ஏற்படுத்தும். பெண்ணின் காதில் துவாரம் இருப்பது அவசியமென்றோ அல்லது அதுவே அழகு என்றோ இருந்தால், இறைவன் அவ்வாறே படைத்திருப்பான். எனவே அழகுக்காகக் காது குத்துவது மார்க்கத்தில் உள்ள ஒன்றல்ல.
இதற்கு ஆதாரமாகப் புகாரியில் இடம்பெற்றுள்ள ஒரு செய்தியைச் சிலர் குறிப்பிடுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்குப் பின் பெண்கள் பகுதிக்குச் சென்று தர்மம் செய்யுமாறு உபதேசம் செய்தபோது, பிலால் (ரழி) அவர்கள் ஒரு துணியை ஏந்தி நின்றார்கள். அப்போது பெண்கள் தம் வளையல்கள், மாலைகள், மோதிரங்கள் மற்றும் காது வளையங்களையும் கழற்றித் தர்மமாகப் போட்டார்கள் என்று அச்செய்தியில் வருகிறது. காது வளையத்தைக் கழற்றிப் போட்டார்கள் என்பதிலிருந்து அவர்கள் காது குத்தியிருந்தார்கள் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.
காது குத்தாமல் மாட்டக்கூடிய வளையங்களாகவும் அவை இருந்திருக்கலாம். அல்லது, அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே அறியாமைக் காலத்தில் காது குத்தியிருந்தவர்களாக இருந்திருக்கலாம். ஏற்கெனவே குத்தப்பட்டிருந்த காதுகளிலிருந்து வளையங்களைக் கழற்றியபோது நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுக்கவில்லை என்பதிலிருந்து, ஏற்கெனவே குத்தியவர்கள் அதற்காக அத்துவாரத்தை அடைக்க வேண்டியதில்லை என்றும், அதில் வளையம் அணிவது குற்றமாகாது என்றும் விளங்கலாமே தவிர, புதிதாகக் காது குத்தலாம் என்பதற்கு அது ஆதாரமாகாது.
நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மகள்களான பாத்திமா, ஜைனப், உம்மு குல்தூம், ருகைய்யா ஆகியோருக்கோ அல்லது ஆயிஷா (ரழி) அவர்களுக்கோ காது குத்தியதாக எந்த ஓர் அறிவிப்பும் இல்லை. அறியாமைக் காலத்தில் செய்துவிட்டதை இஸ்லாம் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அழகுக்காக அல்லாஹ்வின் படைப்பை மாற்றக் கூடாது என்ற பொதுவான வழிகாட்டலின் அடிப்படையில், புதிதாகப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்குக் காது குத்துவதைத் தவிர்ப்பதே பேணுதலான வழியாகும்.