05) சுன்னத் (கத்னா) செய்வது

நூல்கள்: தனிமனித வாழ்வில் இஸ்லாம்

பாலூட்டியதற்குப் பிறகு குழந்தைக்கு மார்க்க ரீதியாகச் செய்ய வேண்டிய மற்றொரு காரியம் சுன்னத் (கத்னா) செய்வதாகும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

خَمْسٌ مِنَ الْفِطْرَةِ الْخِتَانُ وَالِاسْتِحْدَادُ وَنَتْفُ الإِبْطِ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ
ஐந்து காரியங்கள் இயற்கையான சுன்னத்தாகும்: விருத்தசேதனம் செய்தல், மர்ம உறுப்பின் முடிகளை அகற்றுதல், அக்குள் முடியைப் பிடுங்குதல், நகங்களை வெட்டுதல் மற்றும் மீசையைக் கத்தரித்தல்.
(புகாரி: 5889) ➚

இவை ஏன் இயற்கைச் சுன்னத் என்று அழைக்கப்படுகின்றன என்றால், இவை இப்ராஹீம் நபி அவர்கள் வழியாக மக்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட வழிமுறைகளாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள், இப்ராஹீம் நபி அவர்களின் ஓரிறைக் கொள்கையையே மாற்றிவிட்டனர்; கஃபாவை நிர்வாணமாக வலம் வந்தனர். எனினும் மனித இயல்பு மாறாதது போல, இந்த ஐந்து காரியங்களை மட்டும் அவர்கள் விடாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தனர். எத்தனையோ காட்டுமிராண்டித்தனங்களைச் செய்தவர்கள் கூட இந்த ஐந்து விஷயங்களை மட்டும் மாற்றாமல் சுபாவமாகவே கடைப்பிடித்த காரணத்தினால், நபி (ஸல்) அவர்கள் இவற்றை இயற்கைச் சுன்னத் எனக் குறிப்பிட்டார்கள்.

இந்த ஐந்தில் ஒன்றான கத்னா செய்வது என்பது ஒரு சுன்னத்தான செயலாகும்; அது கட்டாயக் கடமை அல்ல. ஒருவர் கத்னா செய்யவில்லை என்றால் அவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவார் என்றோ, அவருக்குத் திருமணம் செய்துவைக்கக் கூடாது என்றோ, அவர் பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது என்றோ நினைப்பது தவறாகும். நகம் வெட்டுவதும், மீசையை உதடு தெரியும்படி கத்தரித்துக் கொள்வதும் எவ்வாறு சுன்னத்தான காரியங்களோ, அவ்வாறே கத்னா செய்வதும் சுன்னத்தாகும்.

மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தான காரியம்தான் சுன்னத் (கத்னா) செய்தல் ஆகும். நடைமுறையிலும் மக்கள் இதனைச் ‘சுன்னத்’ என்றே அழைக்கிறார்கள். சுன்னத் என்றால் செய்தால் மிகுந்த நன்மையும், செய்யாவிட்டால் குற்றமும் இல்லாத காரியம் என்று பொருள்படும். இப்ராஹீம் நபியின் காலம் தொட்டே இருந்துவரும் இவ்வழக்கத்தை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அபூஜஹ்ல் உள்ளிட்ட அரபுகள் அனைவரும் கடைப்பிடித்து வந்தனர்.

இச்சுன்னத்தை எப்போது செய்ய வேண்டும் என்பதில் சிலர் குழந்தை பிறந்த ஏழாம் நாளிலேயே செய்துவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் பேரன்களான ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவருக்கும் ஏழாம் நாளில் சுன்னத் செய்தார்கள் என்று தப்ரானி மற்றும் பைஹகீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள ஒரு செய்தியை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

وَخَتَنَهُمَا لِسَبْعَةِ أَيَّامٍ
நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் ஏழாம் நாளில் சுன்னத் செய்தார்கள்.
தப்ரானி, பைஹகீ

ஆனால் இச்செய்தி ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில் இதனை அறிவிக்கும் முஹம்மது பின் அல்முத்தவக்கில் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது நம்பிக்கைக்குரிய செய்தி அல்ல. மாறாக, நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பருவ வயதை அடையும் போதுதான் சுன்னத் செய்யும் வழக்கம் இருந்தது என்பதை ஆதாரப்பூர்வமான பிற செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும்போது எந்தப் பருவத்தில் இருந்தீர்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, மக்கள் பருவ வயதை அடையும் வரை சுன்னத் செய்ய மாட்டார்கள் என்றும், நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது தாம் சுன்னத் செய்யப்பட்டிருந்ததாகவும், அதாவது பருவ வயதை அடைந்திருந்ததாகவும் விளக்குகிறார்கள்.

مِثْلُ مَنْ أَنْتَ حِينَ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَنَا يَوْمَئِذٍ مَخْتُونٌ وَكَانُوا لَا يَخْتِنُونَ الرَّجُلَ حَتَّى يُدْرِكَ
“நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது நீங்கள் எத்தகைய பருவத்தில் இருந்தீர்கள்?” என்று கேட்கப்பட்டதற்கு, “அந்நாளில் நான் சுன்னத் செய்யப்பட்டிருந்தேன்; அக்காலத்தில் ஒரு ஆண் பருவ வயதை அடையும் வரை மக்கள் அவருக்குச் சுன்னத் செய்ய மாட்டார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 6299) ➚

மேலும் மற்றொரு அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது தமக்கு பத்து வயது என்றும், தாம் சுன்னத் செய்யப்பட்டிருந்ததாகவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ عَشْرِ سِنِينَ وَأَنَا مَخْتُونٌ
நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது எனக்குப் பத்து வயது; நான் சுன்னத் செய்யப்பட்டவனாகவும் இருந்தேன்.
(அஹ்மத்: 2470) ➚

எனவே சுன்னத் செய்வதை ஏழாம் நாள்தான் செய்ய வேண்டும் என்றோ குறிப்பிட்ட வயதிற்குள்தான் செய்ய வேண்டும் என்றோ நபி (ஸல்) அவர்கள் எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. அன்றைய வழக்கப்படி பருவ வயதை அடையும் தருணத்தில் சுன்னத் செய்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். ஆகவே பருவ வயது அடைவதற்குள் எப்போது வேண்டுமானாலும் சுன்னத் செய்து கொள்ளலாம். பிறந்த உடனே செய்தால் விரைவாகக் குணமாகிவிடும் என்று கருதி அவ்வாறு செய்தாலும் குற்றமில்லை; மூன்று வயதிலோ, பத்து வயதிலோ அல்லது பருவ வயதை அடைவதற்கு முன்போ செய்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்காதபோது, இன்ன வயதில்தான் செய்ய வேண்டும் என்று நாமாக வரம்பு நிர்ணயிப்பது மார்க்கத்தில் தலையிடுவதாகிவிடும்.

அதேபோன்று, சுன்னத் செய்யாத சிறுவர்களைப் பள்ளிவாசலுக்குள் வரவிடாமல் விரட்டும் தவறான வழக்கம் சில ஊர்களில் காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் மரணித்த அந்த இறுதிக் கட்டத்தில்தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குச் சுன்னத் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே அவர்கள் நபி (ஸல்) அவர்களோடு சேர்ந்து இரவுத் தொழுகை தொழுதுள்ளார்கள்; நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுகையிலும் பங்கேற்றுள்ளார்கள். சுன்னத் செய்யவில்லை என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் அவர்களைத் தடுக்கவில்லை.

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் தமக்கு ஏழு வயதாக இருந்தபோதே தம் தந்தை தம்மை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார்கள். அக்காலத்தில் ஏழு வயதில் சுன்னத் செய்யும் வழக்கம் இல்லாதபோதும் அவர்கள் கஃபாவில் சென்று தொழுதுள்ளார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தபோது, ஒரு பெண்மணி தம் சிறு குழந்தையைக் காட்டி அவனுக்கு ஹஜ் உண்டா என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் உண்டு என்று பதிலளித்தார்கள்.

أَلِهَٰذَا حَجٌّ نَعَمْ وَلَكِ أَجْرٌ
“இச்சிறுவனுக்கு ஹஜ் உண்டா?” என்று கேட்டதற்கு, “ஆம், உனக்கும் நற்பலன் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்: 2377) ➚

சுன்னத் செய்தல் என்பது வலியுறுத்தப்பட்ட ஒரு வழமையாக இருந்தாலும், அது தொழுகையையோ நோன்பையோ தடுக்கக்கூடிய நிபந்தனை அல்ல. இஸ்லாத்தை ஏற்க வருபவர்களிடம் சுன்னத் செய்தால்தான் சேர முடியும் என்று கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது. சொல்லப்போனால் தாடி வைப்பதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தின் அளவிற்குக்கூட சுன்னத் செய்வதற்கு அவ்வளவு கடுமையான வலியுறுத்தல் இல்லை. சுன்னத் செய்யாத காரணத்தினால் ஒருவர் நிரந்தர நரகவாசியாகி விடமாட்டார்; ஆனால் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் நரகவாசியாகி விடுவார். எனவே, புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களிடம் இதனை ஒரு நிபந்தனையாக விதிக்கக்கூடாது. அவர்களாக மார்க்கத்தை உணர்ந்து அல்லாஹ்வை அஞ்சும்போது அதனைச் செய்து கொள்வார்கள். எனினும், பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குப் பருவ வயதை அடைவதற்குள் சுன்னத் செய்துவிட வேண்டும்.

அடுத்ததாக, சுன்னத் செய்வதற்காக நடத்தப்படும் விழாக்களைக் கவனிக்க வேண்டும். சில பகுதிகளில் ‘சுன்னத் கல்யாணம்’ என்ற பெயரில் சிறுவர்களைக் குதிரையில் ஏற்றி ஊர்வலம் விடுவதும், புத்தாடை அணிவித்து ஒரு திருமணத்தைப் போன்று பெரும் தொகையை வீண் விரயம் செய்வதும் வழக்கமாகிவிட்டது.

ஒரு திருமணத்திற்குரிய செலவைவிடப் பத்து மடங்கு அதிகமாக ஒரு சுன்னத் விசேஷத்திற்குச் செலவு செய்பவர்களை நாம் காண்கிறோம். ஒரு சிறுவனுக்கு சுன்னத் செய்வதற்காகப் பாடகர்களையும் இசையமைப்பாளர்களையும் அழைத்து வந்து இசைக்கச்சேரி நடத்தும் அவலங்களும் நிகழ்கின்றன. சுன்னத் என்பது மார்க்கத்தில் ஒரு விழாவா, அதற்கு விருந்தோ விசேஷமோ உண்டா என்றால், நிச்சயமாக இல்லை.

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பேரப்பிள்ளைகளான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோருக்கு எந்த ஹிஜ்ரி ஆண்டில், எந்த மாதத்தில் கத்னா செய்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் சிரிக்கும் விதம், சிரிக்கும்போது தெரியும் பற்களின் எண்ணிக்கை, விரல்கள் மற்றும் நகங்களின் அமைப்பு, நரைமுடியின் எண்ணிக்கை என அவர்களின் ஒவ்வோர் அசைவும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்க, தங்கள் குடும்பத்தில் நடந்த கத்னா நிகழ்ச்சிக்கு மக்களை அழைத்ததாகவோ, இன்ன தேதியில் கத்னா செய்ததாகவோ எந்தப் பதிவும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் தம் பேரக்குழந்தைகளுக்கு கத்னா செய்யவே இல்லை என்பது இதன் பொருளல்ல; செய்தார்கள், ஆனால் அதை ஊரறிய ஒரு விழாவாகவோ விசேஷமாகவோ அவர்கள் செய்யவில்லை. இன்னாருக்கு சுன்னத் செய்யப்போகிறேன் என்றோ அல்லது செய்துவிட்டேன் என்றோ ஒரேயொரு மனிதரிடமாவது நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருந்தால் கூட அது ஹதீஸ்களில் பதிவாகியிருக்கும். ஏழாம் நாளில் கத்னா செய்வது ஆதாரமற்ற செய்தி என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. எனவே, இன்ன நாளில் அல்லது இன்ன வருடத்தில் கத்னா செய்யப்பட்டது என்பதற்கான எந்தப் பதிவும் ஹதீஸ்களில் இல்லை என்பதே, மார்க்கத்தில் அதற்கு விசேஷமோ விழாவோ இல்லை என்பதையும், அதற்குப் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதையும் காட்டுகிறது.

இன்று சமுதாயத்தில் பல தொண்டு இயக்கங்கள் இலவச கத்னா முகாம்களை நடத்துகின்றன. கத்னாவை மக்கள் பணக்காரர்களுக்குரிய ஆடம்பரமாக மாற்றிவிட்டதால்தான் இத்தகைய முகாம்கள் தேவைப்படுகின்றன. நூறு அல்லது இருநூறு ரூபாயில் மிக எளிமையாக முடிக்க வேண்டிய ஒரு காரியத்தைப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகும் விவகாரமாக மாற்றிவிட்டார்கள். நம்முடைய ஆடம்பரம் ஏழைகளைப் பாதிக்கும் என்ற உணர்வுகூட இல்லாமல், ஒரு காலத்தில் சிறுவர்களை இரவு முழுவதும் குதிரையில் ஏற்றி, தங்க நகைகளும் கோட் சூட்டும் அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சுன்னத்துக் கல்யாணம் நடத்தினார்கள்.

இவையெல்லாம் இஸ்லாத்தில் இல்லாதவை. இதற்கு விழாவோ, விருந்தோ, விசேஷமோ, பாத்திஹாவோ, சடங்குகளோ எதுவும் கிடையாது. அக்காலத்தில் அதைச் செய்வதற்குத் தேர்ந்த சில நபர்கள் ஊர்களில் இருந்தார்கள், அவர்கள் மூலம் செய்தார்கள். இன்று மருத்துவர்கள் மூலமாகச் செய்ய முடிகிறது என்றால் செய்யலாம். இதைச் செய்வதற்கு மருத்துவரோ அல்லது அதைச் சரியாகச் செய்யத் தெரிந்தவரோ போதுமானதே தவிர ஊர்ப் பிரமுகர்களோ, உலமாக்களோ, புத்தாடைகளோ, அலங்காரங்களோ தேவையில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத இதுபோன்ற சடங்குகளைத் தவிர்த்துவிட்டு, அவரவர் வீடுகளில் எளிமையாக இதைச் செய்து முடிக்க வேண்டும்.

அடுத்ததாக, காயல்பட்டணம் போன்ற சில கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெண் பிள்ளைகளுக்கும் கத்னா செய்கிறார்கள். இது மார்க்கத்தில் இல்லாத, மிகவும் கொடூரமான ஒரு செயலாகும். இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான செய்திகளின் அடிப்படையில் பெண்களின் உடலமைப்பில் அவசியமான ஒரு பகுதியை அறுத்து எறிகிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட, காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

பெண்களுக்கு கத்னா செய்வதைக் குறிப்பிடும் செய்தி அபூதாவூத் நூலில் 4587-வது செய்தியாக இடம்பெற்றுள்ளது. அச்செய்தியைப் பதிவு செய்த இமாம் அபூதாவூத் அவர்களே لَيْسَ هُوَ بِالْقَوِيِّ (இது பலமானது அல்ல) என்று தெளிவுபடுத்திவிடுகிறார். மேலும் இதில் இடம்பெறும் முஹம்மத் இப்னு ஹஸ்ஸான் என்பவர் அறியப்படாதவர் (மஜ்ஹூல்) ஆவார். இது முஸ்னத் அஹ்மத் நூலிலும் இடம்பெற்றுள்ளது. ஃபத்ஹுல் பாரி பத்தாவது பாகம் 341-ஆம் பக்கத்தில் இப்னு ஹஜர் போன்ற அறிஞர்கள், இதன் அறிவிப்பாளரான ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் என்பவர் ஏற்கத்தக்கவர் அல்லர் என்றும், இச்செய்தி ஆதாரத்திற்குரியது அல்ல என்றும் கூறி நிராகரித்துள்ளனர். பல அறிஞர்கள் இதை நிராகரித்த பின்னரும், மத்ஹபு நூல்களில் இடம்பெற்றுள்ளது என்ற காரணத்திற்காக மக்கள் இக்கொடுமையைச் செய்கிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.