பூமி வேகமாக சுற்றுகிறதா?
ஒரு நாள் என்பது பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம். இது பொதுவாக 24 மணிநேரம் என்று நாம் அறிவோம். ஆனால், பூமி சரியாக 24 மணிநேரத்தில் சுற்றுவதில்லை.
ஒவ்வொரு நாளும் பூமி தன்னைத்தானே சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் சில மில்லி வினாடிகள் (millisecond) மாறுபடும். அதாவது, 24 மணிநேரத்தைவிடச் சில மில்லி வினாடிகள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.
விஞ்ஞானிகள் 1960ஆம் ஆண்டு முதல் பூமியின் சுழற்சி வேகத்தைக் கணக்கிட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை 29, 2022 அன்று, பூமி வழக்கமான 24 மணிநேரத்தைவிட 1.59 மில்லி வினாடிகள் வேகமாகச் சுற்றி முடித்தது. இது இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகக் குறுகிய நாளாகும்.
2020ஆம் ஆண்டு முதல், பூமி வேகமாகச் சுற்றிய 28 நாட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஆய்வாளர்களைப் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருக்கிறதா என்று சிந்திக்க வைத்துள்ளது. ஜூலை 26, 2022 அன்று பூமி 1.50 மில்லி வினாடிகள் வேகமாகச் சுற்றி முடித்தது. இதற்கு முன், 1.47 மில்லி வினாடிகள் வேகமாகச் சுற்றியதுதான் சாதனையாக இருந்தது.
இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, அதன் சுழற்சியையும் இயக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமைத்துள்ளான். இந்த நுட்பமான மாற்றங்கள் அனைத்தும் அவனது அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆதாரம்: விகடன்