26) மனைவியிடம் சிறந்து விளங்கிய நபிகளார்
நபி (ஸல்) அவர்கள் உற்றார் உறவினர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை வழிகாட்டியது போலவே, ஒவ்வொருவரும் தம் மனைவியிடமும் குடும்ப வாழ்க்கையிலும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கும் மிகச் சிறந்த வழிகாட்டுதலைத் தந்துள்ளார்கள். உலகில் வேறு எந்த மார்க்கத்திலுமே குடும்ப வாழ்க்கை மற்றும் கணவன் மனைவி உரிமைகள் குறித்து இத்தகைய வழிகாட்டல்கள் கூறப்படவில்லை. மனைவியின் உரிமைகளைப் பேணி, அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி, அவர்களைக் கண்ணியமாக நடத்துவதில் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். பொதுவாக வெளியில் நல்லவர் என்று பெயர் எடுப்பதை விட, தம் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுபவரே உண்மையான சிறந்த மனிதராவார்.
خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لأَهْلِي
உங்களில் சிறந்தவர் தம் குடும்பத்தாருக்கு சிறந்தவரே; நான் என் குடும்பத்தாருக்கு உங்களில் மிகவும் சிறந்தவனாக இருக்கிறேன்.
(திர்மிதி 3895)
நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்ளே எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அவர்களின் மனைவிமார்கள் மட்டுமே அறிய முடியும். ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் இல்லற வாழ்க்கை குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர்கள் பல நடைமுறைகளை விவரித்தார்கள். அக்காலத்தில் கம்பளி ஆடைகளையே அதிகம் உடுத்தியதால், ஆடை அழுக்கடைந்தாலோ அல்லது பூச்சிகள் அண்டினாலோ வெயிலில் உலர்த்தி குச்சியால் தட்டித் தூசியைப் போக்குவார்கள். அத்தகைய பணிகளை நபி (ஸல்) அவர்கள் குடும்பத்தாரிடம் சுமத்தாமல் தாமே தம் ஆடைகளைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.
அதேபோன்று அன்றைய உணவிற்கு ஆட்டுப்பால் முக்கியமான ஒன்றாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் வீட்டின் ஆடுகளிலிருந்து பாலை மனைவியைக் கறக்கச் சொல்லாமல், ويحلب شاته (தம் ஆட்டின் பாலைத் தாமே கறப்பார்கள்) என்பதற்கேற்ப, தமக்கும் தம் மனைவியருக்கும் தாமே ஆட்டுப்பாலைக் கறந்து கொள்வார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ويخدم نفسه (தம் வேலையைத் தாமே செய்து கொள்பவர்களாக) விளங்கினார்கள்.
இன்றைய உலகில் கணவன்மார்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது கூட, அருகிலிருக்கும் பொருளைத் தாமே எடுப்பதற்கு மாறாக மனைவியை ஏவி எடுக்கும் அடிமைத்தனமான மனப்பான்மையைக் காண்கிறோம். வெளியில் பிறருக்குக் கீழ்ப்படிந்து பல வேலைகளைச் செய்யும் ஆண்கள், வீட்டில் எதையும் செய்யாமல் தம் சொந்தப் பணிகளையும் மனைவியின் தலையிலேயே சுமத்தி விடுகிறார்கள். வயோதிகம் அல்லது இயலாமை போன்ற காரணங்கள் இருந்தால் தவிர, சொந்தப் பணிகளைத் தாமே கவனித்துக் கொள்ள வேண்டும். மனைவியின் உரிமைகளையும் அவர்களின் மனமகிழ்வையும் உணர்ந்த நபி (ஸல்) அவர்கள், தம் தேவைகளைத் தாமே நிறைவேற்றிக் கொள்வதில் முன்மாதிரியாக இருந்தார்கள்.
பொருளாதார நெருக்கடி நிறைந்த அக்காலத்தில் செருப்போ அல்லது ஆடையோ பழுதடைந்தால் புதியதை வாங்காமல் சீரமைத்துப் பயன்படுத்துவதே வழக்கமாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் செருப்பு அறுந்துபோனால் அதை மனைவியிடம் கொடுக்காமல், يَخْصِفُ نَعْلَهُ (தம் செருப்பைத் தாமே தைத்துக் கொள்பவர்களாக) இருந்தார்கள். அதுபோலவே தம் ஆடை கிழிந்துவிட்டால், தாமே அதற்கு ஒட்டுப்போட்டுத் தைத்துக் கொள்வார்கள்.
தம் வேலைகளைத் தாமே செய்வது மட்டுமின்றி, வீட்டின் பொதுவான பணிகளிலும் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களுக்கு ஒத்தாசையாக இருந்தார்கள். வீட்டில் இருக்கும் நேரங்களில் காய்கறி நறுக்குதல், தண்ணீர் எடுத்துத் தருதல் போன்ற வீட்டு வேலைகளில் கணவன் பங்கெடுப்பது தம்பதியரிடையே அன்பையும் இணக்கத்தையும் வளர்க்கும். தொழிலும் வருமானமும் ஈட்ட வேண்டிய பொறுப்புகளைக் கைவிட்டுவிட்டு வீட்டில் முடங்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல; மாறாக, வீட்டில் இருக்கும் ஓய்வான நேரங்களில் மனைவியின் சிரமங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ
அவர்கள் தம் குடும்பத்தாரின் பணிகளில் ஒத்தாசையாக இருப்பார்கள்.
(புகாரி: 676) ➚
குடும்பங்களில் பெரும்பான்மையான பிணக்குகள் உணவு விஷயத்திலேயே ஏற்படுகின்றன. உணவு சுவையாக இல்லை என்றாலோ, உப்பு கூடினாலோ, அல்லது எதிர்பார்த்ததற்கு மாற்றமாகச் சமைத்தாலோ கோபமடைந்து குடும்பத்தில் சச்சரவுகளை உருவாக்குவோரையும், விவாகரத்து வரை செல்வோரையும் பார்க்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உணவு விஷயத்தில் காட்டிய அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது.
مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِلَّا تَرَكَهُ
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை; அதை விரும்பினால் உண்பார்கள், இல்லையெனில் விட்டுவிடுவார்கள்.
(புகாரி: 3563) ➚
பெண்களும் மனிதர்களே என்பதால் கவனக்குறைவாலோ அல்லது மறதியாலோ சமையலில் உப்பு கூடுவதோ அல்லது சோறு குழைந்து போவதோ இயல்பானது. நாமே சமைப்பதாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒரே சீராகச் சமைக்க முடிவதில்லை; வெளிநாடுகளிலோ வெளியூர்களிலோ தங்கி ஆண்களே சமைக்கும்போது குறைகள் இருந்தாலும் அதை சகித்துக் கொண்டு உண்கிறோம். எனவே, மனைவியிடம் ஏற்படும் இத்தகைய மனித பலவீனங்களைப் பெரிதுபடுத்தாமல் எளிதாகக் கடந்து செல்ல வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் சென்று வாழும் ஆண்கள், ஒரு அறையில் தங்கி முறை வைத்துத் தாங்களே சமைத்துக்கொள்கிறார்கள். அந்த உணவு ருசியாக இல்லாதபோதும், தாங்களே சமைத்ததால் அதைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதே மனப்பான்மையை மனைவியின் சமையலிலும் கடைப்பிடிக்க வேண்டும். சமையல் என்று வரும்போது குறைபாடுகள் ஏற்படத்தான் செய்யும். சமையலே தெரியாதவராக இருந்தால் இந்த முறையில் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கலாம். நன்றாகச் சமைக்கத் தெரிந்தவர்களுக்கும் சில வேளைகளில் தவறுகள் நேரலாம். அதற்காகக் கணவன்மார் குறை சொல்லிக்கொண்டே இருந்தால் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்படும்; அன்யோன்யமும் மகிழ்ச்சியும் குறைந்துவிடும்.
நபி (ஸல்) அவர்கள் எந்த ஓர் உணவையும் ஒரு நாளும் குறை சொன்னதே கிடையாது. விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் சாப்பிடாமல் விட்டுவிடுவார்களே தவிர, உணவை ஒருபோதும் இழிவாக விமர்சிக்க மாட்டார்கள் (புகாரி: 3563) ➚.
நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஆயிஷா (ரலி) அவர்கள் இளவயதினராக இருந்தார்கள். அந்த வயதிற்குரிய சிறுபிள்ளைத்தனமான சில செயல்கள் அவர்களிடம் இருக்கவே செய்தன. அவர்கள் தம் வயதொத்த தோழிகளோடு பொம்மைகளை வைத்து விளையாடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் வரும்போது அத்தோழிகள் வெட்கப்பட்டு மறைந்து கொள்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை ஒளிய விடாமல், மனைவியோடு சேர்ந்து விளையாடுமாறு அனுப்பி வைப்பார்கள். “இந்த வயதில் விளையாட்டு கேட்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கடிந்து கொள்ளவில்லை. அந்தந்த வயதிற்குரிய சுபாவத்தை இயல்பாக எடுத்துக்கொண்டார்கள் (புகாரி: 6130) ➚. ஆண்கள் வெளியில் நண்பர்களுடன் உரையாடுவது போல, பெண்கள் வீட்டில் தம் தோழிகளோடு பேசுவதை ஆண்கள் குறையாகப் பார்க்கக் கூடாது.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதி வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் வழக்கம் பல சமூகங்களில் இன்றும் நிலவுகிறது. மதீனாவில் வாழ்ந்த யூத சமூகமும் பெண்களை அவ்வாறே ஒதுக்கி வைத்தது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் மிகுந்த பாசத்தையும் நெருக்கத்தையும் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நேரத்திலும்கூட, அவர்களின் மடியில் தலைசாய்த்துப் படுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்கள் மனனம் செய்திருந்த குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள் (அபூதாவூத்). மேலும், மாதவிடாய் நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீர் குடித்துவிட்டு அந்தப் பாத்திரத்தைக் கொடுக்கும்போது, அவர்கள் வாய் வைத்த இடத்திலேயே தாமும் வாய் வைத்து நபி (ஸல்) அவர்கள் அருந்துவார்கள். இறைச்சியிலுள்ள எலும்பைக் கடித்துவிட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் தரும்போது, அவர்கள் வாய் வைத்த இடத்திலேயே தாமும் கடித்து உண்பார்கள். மாதவிடாயை அருவருப்பாகக் கருதி ஒதுக்காமல் பெண்களைச் சமமாக நடத்த வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்வின் மூலம் வழிகாட்டினார்கள்.
கணவன் மனைவிக்கு மத்தியில் நெருக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகக் கடமையான குளிப்பைக் கூட இருவரும் ஒன்றாகச் சேர்ந்தே நிறைவேற்றுவார்கள்.
كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து ஒன்றாகக் குளிப்போம்.
(புகாரி: 250) ➚
நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் சராசரி பெண்களைப் போன்றே சின்னஞ்சிறு விஷயங்களுக்குக் கோபப்படவும் வாதிடவும் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதனைப் பெரிதுபடுத்தாமல் மிகவும் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்கள். மக்காவில் வாழ்ந்த குறைஷி ஆண்கள் பெண்களை அடக்கி வைத்திருந்தனர்; பெண்கள் ஆண்களுக்கு முன்னால் பேசவே முடியாது. ஆனால் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தபோது, அங்குள்ள அன்சாரிப் பெண்கள் ஆண்களிடம் தங்களின் கருத்துக்களைப் பேசுவதையும், ஆண்கள் அதனைப் பொறுத்துக்கொள்வதையும் கண்டார்கள். இதனைக் கண்ட மக்கத்துப் பெண்களும் தைரியம் பெற்றுத் தம் கணவன்மாரிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கினார்கள்.
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியிடம் ஒரு விஷயத்தைக் கூறியபோது, அவரும் எதிர்த்துப் பேசினார். அதுவரை அவ்வாறு நடந்திராததால் வியப்படைந்த உமர் (ரலி) அவர்கள், “என்னை எதிர்த்துப் பேச உனக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என்று கேட்டார். அதற்கு அவருடைய மனைவி, “என்னை ஏன் கண்டிக்கிறீர்கள்? உங்களுடைய மகள் ஹஃப்ஸா உட்பட நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவருமே நபி (ஸல்) அவர்களிடம் வாதாடுகிறார்கள்; காலை முதல் இரவு வரை பேசாமல் கோபமாகக்கூட இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது என்னை ஏன் குறை கூறுகிறீர்கள்?” என்றார். நபி (ஸல்) அவர்கள் ஓர் இறைத்தூதர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருந்தபோதிலும், மனைவியரின் இந்த இயல்பான குணத்தை அவர்கள் கடினமாக எடுத்துக்கொள்ளாமல் மென்மையாகவே அணுகினார்கள்.
فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُرَاجِعْنَهُ وَإِنَّ إِحْدَاهُنَّ لَتَهْجُرُهُ الْيَوْمَ حَتَّى اللَّيْلِ
அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அவர்களிடம் எதிர்த்துப் பேசுகிறார்கள்; அவர்களில் ஒருவர் இரவு வரை நாள் முழுவதும் நபியவர்களிடம் பேசாமல் இருக்கவும் செய்கிறார்.
(புகாரி: 2468) ➚
பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கும்போது அவர்களுக்கு மத்தியில் இணக்கம் ஏற்படுவது அரிது. ஆனால் ஒரு கட்டத்தில், நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தம் போன்றதொரு முடிவை எடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் குடும்பச் செலவுக்குத் தரும் பொருளாதாரம் அடிப்படை வாழ்க்கைக்குப் போதுமானதாக இருந்தாலும், மற்றவர்களைப் போன்று சில அடிப்படை வசதிகளுடன் வாழ அது போதவில்லை என்று கருதிய அவர்களின் மனைவிமார்கள் ஒன்று கூடி முடிவெடுத்தார்கள். தங்களிடம் உள்ள வருமானத்திற்குத் தகுந்தவாறு நபி (ஸல்) அவர்கள் செலவுக்குக் கொடுத்து வந்த நிலையில், கூடுதல் செலவுத்தொகை கேட்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பெரும் நெருக்கடியையும் மன உளைச்சலையும் கொடுத்தார்கள்.
இந்தச் சூழ்நிலையைக் கண்டு, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்குத் தெளிவான ஒரு முடிவை அறிவிக்குமாறு அல்லாஹ் வஹியின் மூலம் கட்டளையிட்டான். அவர்கள் உலக வாழ்க்கையையும் அதன் கவர்ச்சிகளையும் விரும்பினால், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்கி அழகிய முறையில் அவர்களை விவாகரத்து செய்து விடுமாறும்; மாறாக, அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் மறுமையையும் அவர்கள் விரும்பினால், அவர்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியைத் தயார் செய்து வைத்திருக்கிறான் என்றும் கூறுமாறு அல்லாஹ் பணித்தான்.
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا وَإِن كُنتُنَّ تُرِدْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلدَّارَ ٱلْـَٔاخِرَةَ
நபியே! உம்முடைய மனைவியரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்புவீர்களானால் வாருங்கள்; உங்களுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்கி, அழகிய முறையில் உங்களை நான் விடுவித்து விடுகிறேன். நீங்கள் அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் மறுமை வீட்டையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயார் செய்து வைத்திருக்கிறான்.
(அல்குர்ஆன்: 33:28-29)➚
இறைக்கட்டளை வந்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்கள் ஒவ்வொருவரின் இல்லத்திற்கும் சென்று இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள். தங்களால் முறைகேடாகச் சம்பாதிக்கவோ, தங்களுக்குத் தடுக்கப்பட்ட ஜகாத் போன்ற பொருட்களை எடுத்துப் பயன்படுத்தவோ முடியாது என்பதால், தம்மிடம் உள்ள வசதியைக் கொண்டு இந்த எளிய வாழ்க்கையைச் சகித்து வாழ விரும்பினால் வாழலாம்; இல்லையெனில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாகப் பிரிந்து செல்லலாம் என்று தெளிவுபடுத்தினார்கள்.
மனைவிமார்களிடம் இதைக் கூறியபோது, ஆயிஷா அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا (நான் உனக்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறேன்), فَلَا عَلَيْكِ أَنْ لَا (நீ அவசரப்படாமல்) உன் பெற்றோரிடம் ஆலோசித்துவிட்டு முடிவைச் சொல் என்று குறிப்பிட்டார்கள். இளம் வயதினரான ஆயிஷா அவர்கள் அவசரப்பட்டு தவறான முடிவெடுத்துவிடக் கூடாது என்பதாலும், பெற்றோரிடம் ஆலோசனை கேட்டால் அவர்கள் நபி (ஸல்) அவர்களோடு இணைந்திருக்கவே வழிகாட்டுவார்கள் என்பதாலும் அவ்வாறு கூறினார்கள். ஆனால் ஆயிஷா அவர்களோ, இதில் பெற்றோரிடம் ஆலோசனை கேட்பதற்கு எதுவுமில்லை என்று கூறி, அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் மறுமை வாழ்வையுமே உடனடியாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உலக இயல்புக்கேற்ப சச்சரவு செய்து, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கும் அளவிற்கு நெருக்கடிகளைத் தந்தபோதிலும், நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒருபோதும் எந்த ஒரு மனைவியின் மீதும் கைநீட்டி அடித்ததே இல்லை. கைநீட்டி அடிக்கும் அளவிற்குத் தொந்தரவுகள் இருந்தபோதும், கோபப்படாமல் மிகவும் இணக்கமான முறையிலேயே அவர்களை அனுசரித்து இல்லறத்தை நடத்தினார்கள்.
குடும்ப வாழ்வில் பொருளாதார நெருக்கடிகளும் சச்சரவுகளும் எழும் சூழலிலும், மனைவிமார்களின் பலவீனங்களைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் மீது ஒருபோதும் வன்முறையைக் கையாளாமல் இணக்கமாக வழிநடத்துவதே நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெற வேண்டிய சிறந்த பாடமாகும்.
குடும்ப வாழ்க்கையில் மனைவியருடன் எவ்வாறு இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழிகாட்டலை வழங்கியுள்ளார்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்கள் தம் மனைவியரிடம் உரிய ஆலோசனை பெற்று, பல சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறார்கள்.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் விவரம் தெரியாதவர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே அணுகப்படுகிறார்கள். பெண்களுக்கு என்ன தெரியும் என்ற தவறான எண்ணத்தால், முக்கிய விவகாரங்களில் அவர்களைக் கலந்தாலோசிப்பதே இல்லை. ஆனால், நெருக்கடியான பல சூழல்களில் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்த தீர்வுகளை முன்வைக்கும் ஆற்றல் படைத்தவர்களாக விளங்குகிறார்கள். மற்றவர்களைப் பற்றிக் குறை கூறுவதில் மிகைப்படுத்தல்கள் இருந்தாலும், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறனை அல்லாஹ் பெண்களுக்கு இயல்பாகவே வழங்கியுள்ளான். ஒரு பெண் தனியாளாகப் புகுந்த வீட்டிற்குச் சென்று, அங்கிருக்கும் அனைத்துச் சூழல்களையும் சமாளித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலிருந்தே அவர்களின் ஆளுமைத்திறனைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிகழ்ந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையே சிறந்த சான்றாகும்.
மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டார்கள். பொதுவாக எவரும் மக்காவில் உம்ரா செய்யத் தடுக்கப்படுவதில்லை என்பதால், தமக்கும் எவ்விதத் தடையும் இருக்காது என்ற நம்பிக்கையோடு பெருந்திரளான மக்களோடு சென்றார்கள். ஆனால் மக்காவின் குறைஷிகளோ இதனைத் தங்களின் கௌரவப் பிரச்சினையாகக் கருதினார்கள். ஊரை விட்டு விரட்டப்பட்டவர்கள் இத்தனை பெரிய கூட்டமாக வந்து உம்ரா செய்து திரும்புவது தங்களுக்குப் பின்னடைவாகிவிடும் என்று கருதி, முஸ்லிம்களின் வழியை மறித்துப் போர் மூளும் சூழலை உருவாக்கினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தாங்கள் போரிட வரவில்லை என்றும், உம்ரா செய்யவே வந்ததாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வலுக்கட்டாயமாக மக்காவிற்குள் நுழைந்தால் போர் ஏற்பட்டுவிடும் என்பதால், இரத்தப் பெருக்கைத் தவிர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று விட்டுக்கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இதனைப் பயன்படுத்திக்கொண்ட குறைஷியர் சில கடுமையான நிபந்தனைகளுடன் உடன்படிக்கை செய்ய முன்வந்தார்கள்.
அவ்வுடன்படிக்கையின்படி, முஸ்லிம்கள் அந்த ஆண்டு உம்ரா செய்யாமல் திரும்பிச் செல்ல வேண்டும்; அடுத்த ஆண்டு வரும்போது எவரும் தடுக்க மாட்டார்கள்; மேலும் இடைப்பட்ட காலத்தில் மக்காவிலிருந்து யாராவது இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்கு வந்தால் அவர்களைக் குறைஷிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்; மாறாக முஸ்லிம்களில் எவரேனும் மதம் மாறி மக்காவிற்கு வந்தால் அவர்களைத் திருப்பியனுப்ப மாட்டார்கள் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. போரைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் நபி (ஸல்) அவர்கள் அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு முத்திரையிட்டார்கள்.
ஆனால் இந்த முடிவு நபித்தோழர்களுக்குப் பெரும் மனவேதனையையும் அதிருப்தியையும் தந்தது. இவ்வளவு வலிமையோடு வந்திருக்கும் நாம் ஏன் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இருக்கும்போது, நாம் ஏன் பணிந்து போக வேண்டும்? நமது சொந்த ஊருக்குள் நுழைந்து உம்ரா செய்வதைத் தடுக்க இவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக நாம் உம்ரா செய்வோம், ஆனால் இந்த வருடம் அல்ல; இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டேன்” என்று உறுதியாகக் கூறினார்கள். உடன்பாடு எட்டாத உமர் (ரழி) அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் சென்று முறையிட்டபோதும், நபி (ஸல்) அவர்கள் எடுக்கும் முடிவே சரியானது என்று அவர்கள் கூறினார்கள். இருப்பினும் ஏனைய தோழர்கள் யாருக்கும் இந்த சமரசத்தில் உடன்பாடு இருக்கவில்லை.
ஹஜ் அல்லது உம்ராவிற்குச் சென்று வழியில் தடுக்கப்பட்டுவிட்டால், தடுக்கப்பட்ட இடத்திலேயே பலிப்பிராணிகளை அறுத்து, தலையை மழித்தோ அல்லது முடியைக் குறைத்தோ உம்ராவை நிறைவு செய்துவிட்டுத் திரும்ப வேண்டும் என்பது மார்க்க சட்டமாகும். இச்சட்டத்தின்படி, தாங்கள் கொண்டுவந்த பலிப்பிராணிகளை அங்கேயே அறுத்துவிட்டுத் தலைமுடியை மழித்துக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
வழக்கமாக நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு உடனடியாகக் கீழ்ப்படியும் தோழர்களில் ஒருவர் கூட எழுந்து அக்காரியத்தைச் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறியும் எவரும் அசையாமல் அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீற வேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல; மாறாக நாம் தலைமுடியை மழிக்காமல் எதிர்ப்பைக் காட்டினால், நபி (ஸல்) அவர்கள் தம் முடிவை மாற்றி உடன்படிக்கையை ரத்துசெய்துவிட்டு மக்காவிற்குள் அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
தம் வாழ்நாளில் சந்தித்திராத இந்த அசாதாரணச் சூழலால் மிகுந்த மனக்கவலையடைந்த நபி (ஸல்) அவர்கள், தம் கூடாரத்திற்குள் வந்து மனைவி உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் நிகழ்ந்ததைக் கூறி வருந்தினார்கள். நிலைமையை ஆழமாகப் புரிந்துகொண்ட உம்மு ஸலமா (ரழி) அவர்கள், “நீங்கள் அவர்களிடம் மீண்டும் கட்டளையிட வேண்டாம்; நீங்கள் வெளியே சென்று யாரிடமும் எதுவும் பேசாமல் உங்கள் பலிப்பிராணியை அறுத்து, உங்கள் தலைமுடியை மழித்துக் கொள்ளுங்கள். உங்கள் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உங்கள் செயல் மூலம் கண்டவுடன், அவர்களும் தாமாகவே தங்களின் தலைமுடியை மழித்துக் கொள்வார்கள்” என்று ஆலோசனைக் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தலைமுடியை மழித்துவிட்டதைக் கண்ட தோழர்கள், இனி முடிவில் மாற்றமிருக்காது என்பதை உணர்ந்து, உடனே விரைந்து எழுந்து ஒருவருக்கொருவர் தலைமுடியை மழித்துக் கொண்டு பலிகளை நிறைவேற்றினார்கள்.
(புகாரி: 2731) ➚-வது செய்தியில் இடம்பெற்றுள்ள இந்நிகழ்வு, பெண்களின் நுண்ணறிவையும் மனித உளவியலை அவர்கள் புரிந்துகொண்ட விதத்தையும் மிகத் தெளிவாக உணர்த்துகிறது. நபித்தோழர்களின் தயக்கத்திற்கான உண்மையான உளவியல் காரணத்தை உணர்ந்து, நபி (ஸல்) அவர்களுக்கே வழிகாட்டக்கூடிய மிகச் சிறந்த தீர்வை ஒரு பெண்மணியான உம்மு ஸலமா (ரழி) அவர்களால் வழங்க முடிந்தது.
மக்கள் தம்மைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக முதலில் தாமே அந்தச் செயலைச் செய்ய வேண்டும் என்ற உம்ம ஸலமா (ரலி) அவர்களின் தீர்க்கமான ஆலோசனையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டு அதன்படியே நடந்தார்கள். “நீ ஒரு பெண், உனக்கு என்ன தெரியும்? நான் கவலையோடு இருக்கும்போது நீ எனக்கு ஆலோசனை சொல்வதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கவில்லை. சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெண்கள் ஆண்களை விடவும் சிறந்த ஆலோசனைகளை வழங்குவதுண்டு. பிரச்சினைகளைச் சமாளித்துத் தீர்வு காணும் அத்தகைய இயல்பை அல்லாஹ் பெண்களுக்கு வழங்கியிருக்கிறான். எனவே, பெண்களுக்கு என்ன தெரியும் என்ற கண்ணோட்டத்தில் அவர்களை நாம் நடத்தக்கூடாது என்பதற்கு இந்நிகழ்வு சான்றாகும்.
அதேபோன்று நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களுடன் மார்க்க விஷயங்களையும் கலந்துரையாடுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே மார்க்க உரையாடல் நிகழும்போது, நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாறாக மனைவிமார்கள் சில கருத்துகளை முன்வைத்தால் கூட, “என்னை எதிர்த்துப் பேசுகிறாயா?” என்று கோபப்படாமல் அதற்குரிய விளக்கத்தையே நபி (ஸல்) அவர்கள் வழங்குவார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மரத்தடியில் பைஅத் செய்தவர்களில் எவரும் நரகம் செல்ல மாட்டார்கள், அனைவரும் சொர்க்கவாசிகளே என்று நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள். அப்போது அவர்களின் மனைவி ஹஃப்ஸா (ரலி) அவர்கள், உங்களில் நரகத்திற்கு வராமல் எவரும் இருக்க முடியாது என்று குர்ஆனில் இருக்கும்போது, அவர்கள் நரகம் செல்ல மாட்டார்கள் என்று எவ்வாறு கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்கள்.
وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا
உங்களில் நரகத்திற்கு வராமல் எவரும் இருக்க முடியாது.
(அல்குர்ஆன்: 19:71)➚
குர்ஆனைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இருந்ததால்தான், நபி (ஸல்) அவர்களின் கூற்று குர்ஆன் வசனத்திற்கு முரணாகத் தோன்றிய உடனே ஹஃப்ஸா (ரலி) அவர்களால் இவ்வாறு கேள்வி கேட்க முடிந்தது. அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் கோபப்படாமல், அதற்கு அடுத்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமானால் நரகத்தின் மீதுள்ள பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்; சொர்க்கவாசிகளும் நரகத்தைக் கடந்துதான் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். அவ்வாறு கடக்கும்போது இறையச்சமுடையவர்களை அல்லாஹ் காப்பாற்றி விடுவான்; நரகவாதிகளை அங்கேயே தங்க வைத்துவிடுவான். எனவே, நரகத்திற்கு வருவது என்பது நரகத்தைக் கடந்து செல்வதையே குறிக்கிறது என்று கூறி, குர்ஆனின் பத்தொன்பதாவது அத்தியாயத்தின் எழுபத்திரண்டாவது வசனத்தை ஓதி நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
ثُمَّ نُنَجِّى ٱلَّذِينَ ٱتَّقَوا۟
பின்னர், இறையச்சமுடையோரை நாம் காப்பாற்றுவோம்.
(அல்குர்ஆன்: 19:72)➚
நபி (ஸல்) அவர்கள் ஒரு கருத்தைக் கூறும்போது கண்மூடித்தனமாகத் தலையசைக்காமல் சிந்திப்பதற்கும், தங்களுக்கு முரணாகத் தோன்றும் விஷயத்தில் நேருக்கு நேர் விவாதிப்பதற்கும் மனைவியருக்கு முழு உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது. இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆத்திரப்படாமல் புரியும் வகையில் விளக்கம் அளித்தார்கள். இந்தச் செய்தி முஸ்லிம் நூலில் பதிவாகியுள்ளது.
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒருவன் இறைவனால் கேள்வி கணக்கு கேட்கப்பட்டுவிட்டால் அவன் தண்டிக்கப்பட்டே தீருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதர்களை அல்லாஹ் துருவித்துருவி விசாரிக்கத் தொடங்கினால் எவராலும் தப்ப முடியாது. அல்லாஹ்வின் கருணையினால்தான் மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல முடியுமே தவிர, தம்முடைய செயல்களின் கணக்கைக் காட்டித் தப்பித்துவிட முடியாது. அல்லாஹ் கணக்குப் பார்த்து விசாரித்தால் அனைவரும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்பதே இதன் விளக்கமாகும்.
مَنْ حُوسِبَ عُذِّبَ
விசாரிக்கப்படுபவர் தண்டிக்கப்படுவார்.
(புகாரி: 103) ➚
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதும் ஆயிஷா (ரலி) அவர்கள், நல்லடியார்களிடம் லேசான முறையிலேயே விசாரிக்கப்படும் என்று குர்ஆனில் இருக்கும்போது, கேள்வி கணக்கு கேட்கப்பட்டாலே தண்டிக்கப்படுவான் என்று எவ்வாறு கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்கள்.
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.
(அல்குர்ஆன்: 84:8)➚
அதற்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளிக்கையில், எளிதான விசாரணை என்பது துருவித் துருவி செய்யப்படும் நுணுக்கமான விசாரணை அல்ல; அது செய்த தவறுகளை மேலோட்டமாகச் சுட்டிக்காட்டிவிட்டுக் கடந்து செல்வதாகும். எந்தக் குறையுமின்றி நூறு சதவீதம் சரியாக வாழும் மனிதர்கள் எவருமே இல்லை என்பதால், அல்லாஹ் ஒருவனைத் தீவிரமாக விசாரிக்க முற்பட்டால் அவன் அழிந்துபோவான்; மேலோட்டமாக விசாரித்தால்தான் மனிதன் தப்ப முடியும் என்று விளக்கினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியில் சந்தேகம் எழும்போதோ அல்லது அது குர்ஆனுக்கு முரணாக இருப்பது போல் தோன்றும்போதோ, நபி (ஸல்) அவர்களிடமே விளக்கம் கேட்கும் அளவுக்கு அவர்களுடைய மனைவிமார்களுக்கு முழு சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றோ, ஆண்களிடம் தங்கள் தொழில், கொடுக்கல் வாங்கல் போன்ற எந்த விஷயத்திலும் மனைவிமார்களைக் கலந்தாலோசிக்காமல் அவர்களை வெகு தொலைவில் ஒதுக்கி வைக்கும் போக்கு காணப்படுகிறது. குடும்ப உறவுகளுக்குள் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லும் போது பெண்களின் பேச்சில் மிகைப்படுத்தல்கள் இருக்கலாமே தவிர, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெண்கள் மிகத் தெளிவான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நீங்கள் எப்போது என் மீது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், எப்போது கோபமாக இருக்கிறீர்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன் என்று கூறினார்கள். அதை எப்படி அறிந்துகொள்வீர்கள் என்று ஆயிஷா (ரலி) கேட்டபோது, என் மீது பிரியமாக இருக்கும்போது பேசினால் முஹம்மதுடைய இறைவன் மீது ஆணையாக என்று சத்தியம் செய்வீர்கள்; என் மீது கோபமாக இருக்கும்போது இப்ராஹீமுடைய இறைவன் மீது ஆணையாக என்று என் பெயரைத் தவிர்த்து சத்தியம் செய்வீர்கள் என்று கூறினார்கள். தன் மீதான கோபத்தை மனைவி இவ்வாறு வெளிப்படுத்தியபோதும் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெரிதுபடுத்தி மனைவியை வெறுக்கவோ, திட்டவோ செய்யாமல் மிக இயல்பாகக் கையாண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பயணங்கள் புறப்படும்போது, தங்களுடன் எந்த மனைவியை அழைத்துச் செல்வது என்பதில் மனக்கசப்பு ஏற்படாமல் இருக்க சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அதில் யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தன்னுடன் அழைத்துச் செல்வார்கள்.
அப்படி ஒரு பயணத்தின்போது, ஆயிஷா (ரலி) அவர்கள் திருமணமான புதிதில் நபி (ஸல்) அவர்களோடு ஓட்டப்பந்தயம் வைத்து அதில் வெற்றியும் பெற்றார்கள். பல வருடங்கள் கழித்து, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உடல் எடை கூடியிருந்த ஒரு காலகட்டத்தில், மற்றொரு பயணத்தின்போது நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஓட்டப்பந்தயம் வைத்து அதில் வெற்றி பெற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், هَذِهِ بِهَذِهِ (அன்று நீ வென்றதற்கு இன்று நான் வென்றது சரியாகிவிட்டது) என்று குறிப்பிட்டார்கள். தோழர்கள் சூழ இருக்கும் பயணத்தின் மத்தியிலும் கூட மனைவியின் மனதை மகிழ்விப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்கள்.
பெருநாள் தினத்தில் மஸ்ஜிதுந் நபவியில் அபிசீனியத் தோழர்கள் ஈட்டி எறிந்து வீர விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த விளையாட்டைப் பார்க்க ஆயிஷா (ரலி) அவர்கள் ஆசைப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோள்பட்டையில் ஆயிஷா (ரலி) அவர்கள் சாய்ந்து கொள்ள அனுமதித்து, போதும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லும் வரை அவருக்காக நின்றுகொண்டே இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவிமார்களை சக மனிதர்களாக மதித்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, எல்லையற்ற அன்போடும் இணக்கத்தோடும் இல்லறத்தை நடத்தினார்கள்; மனைவியரின் மனமகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களது உணர்வுகளைப் புரிந்து நடப்பதே சிறந்த இல்லறமாகும்.
நபி (ஸல்) அவர்கள் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தது போல, குடும்ப வாழ்க்கையில் மனைவியரோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். ஒரு மனிதனுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், கோபமூட்டும் வகையிலும் மனைவியர் நடந்துகொள்ளும்போது கூட, நபி (ஸல்) அவர்கள் அதனை மிக மென்மையாகவும் பொறுமையாகவும் கையாண்டு நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மனைவியரில் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தபோது, மற்றொரு மனைவி நபி (ஸல்) அவர்களுக்காக ஓர் ஊழியர் மூலம் ஒரு தட்டில் உணவை அனுப்பி வைக்கிறார். நபி (ஸல்) அவர்கள் தம் இல்லத்தில் இருக்கும்போது மற்றொருவர் உணவு அனுப்பி வைத்ததைக் கண்டு கோபமடைந்த அந்த மனைவி, ஊழியரின் கையில் இருந்த உணவுத் தட்டைத் தட்டி விடுகிறார்; அது கீழே விழுந்து உடைந்து போகிறது. இயல்பாக எந்த ஒரு மனிதனுக்கும் தன் மனைவியின் இத்தகைய செயல் எல்லையற்ற ஆத்திரத்தை வரவழைக்கும். ஒரு நாட்டின் தலைவராகவும், கணவராகவும் கண்ணியத்திற்குரிய நிலையில் இருக்கும் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே, உணவைத் தட்டிவிட்டுப் பாத்திரத்தை உடைப்பது என்பது மிகக் கடுமையான கோபத்தை உண்டாக்கக்கூடிய சூழலாகும்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த ஊழியரை அங்கேயே அமர வைத்துவிட்டு, غَارَتْ أُمُّكُمْ (உங்கள் தாயார் ரோசப்பட்டு விட்டார்) என்று மட்டுமே கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவருக்கும் அன்னையர் என்ற அடிப்படையில் ஊழியரிடம் இவ்வாறு கூறிவிட்டு, கீழே சிந்திய உணவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் வைத்து உண்டார்கள். அதன் பிறகு, தம் வீட்டில் இருந்த நல்ல தட்டு ஒன்றை எடுத்து அந்த ஊழியரிடம் கொடுத்து, அதனை உணவு அனுப்பியவரிடம் கொண்டு போய்க் கொடுக்குமாறும், உடைந்த தட்டை உடைத்தவரே வைத்துக்கொள்ளட்டும் என்றும் கூறினார்கள். அடுத்தவர் உடைத்த பாத்திரத்திற்கு ஈடாகத் தம்முடைய நல்ல பாத்திரத்தைக் கொடுத்து நீதியை நிலைநாட்டினார்களே தவிர, எந்தக் கடுமையான வார்த்தைகளையும் பேசவில்லை; திட்டவோ, அடிக்கவோ இல்லை. பெண்களின் இயல்பான ரோச உணர்வை மென்மையாகக் கடந்து சென்று, உடைந்த பாத்திரத்திற்குரிய நீதியை மட்டுமே வழங்கினார்கள் (புகாரி: 2481) ➚.
பெண்கள் சில விஷயங்களில் ஆண்களைப் போல் சிந்திப்பதில்லை. ஆண்களின் நிலவரங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், தங்களின் மனநிலையிலிருந்தே யோசித்துச் சில காரியங்களைச் செய்யும்போது ஆண்களுக்குக் கடுமையான ஆத்திரம் வருவது இயல்பு. ஆனால் அந்த நேரங்களில் இச்சம்பவத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு கணவராகவும், நாட்டின் தலைவராகவும், இறைத்தூதராகவும் இருந்த நபி (ஸல்) அவர்களுக்கே இத்தகைய சூழலில் கோபம் வரவில்லை எனும் போது, சாதாரண மனிதர்களான நாம் நம் மனைவியரிடம் எவ்வளவு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்தபோது ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைக்கிறார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியைச் சுட்டிக்காட்டி, وَهَٰذِهِ (இவருமா?) என்று கேட்கிறார்கள். உணவு குறைவாக இருந்த காரணத்தினால் அவர், “இல்லை, நீங்கள் மட்டும் வாருங்கள்” என்கிறார். நபி (ஸல்) அவர்களோ தம் மனைவியை அழைக்காததால் விருந்தை ஏற்க மறுக்கிறார்கள். அவர் மீண்டும் மீண்டும் அழைக்க, நபி (ஸல்) அவர்களும் தம் மனைவியையும் அழைத்தால் மட்டுமே வருவதாகக் கூறுகிறார்கள். மூன்றாவது முறை அவர் இருவரையும் அழைத்த பின்னரே நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களோடு சென்று அந்த விருந்தில் பங்கேற்கிறார்கள் (முஸ்லிம்).
இன்று சமுதாயத்தில் ஆண்களை மட்டுமே விருந்துகளுக்கு அழைக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்களை மட்டும் அழைத்து விருந்தளிக்கும்போது, அவர்களுடைய மனைவியரின் உணர்வுகள் கவனிக்கப்படுவதில்லை. கணவன் மட்டும் சென்று நல்ல உணவை உண்டுவிட்டுத் திரும்பும்போது வீட்டில் இருக்கும் மனைவிக்கு மனரீதியாக ஓர் ஏக்கம் ஏற்படக்கூடும். அத்தகைய எண்ணம் மனைவிக்கு வரக்கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கவனமாக இருந்தார்கள். எனவே, ஆண்கள் மட்டுமே சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பது போல அவர்களை மட்டும் விருந்துகளுக்கு அழைப்பதற்குப் பதிலாக, குடும்பத்தோடு சேர்த்து விருந்துக்கு அழைப்பதே இஸ்லாம் காட்டும் வழியாகும்.
தம் இல்லத்தில் மனைவியோடு இருக்கும்போது ஒருவர் விருந்துக்கு அழைத்தால், மனைவியின் மனம் நோகும் வகையில் தனியாகச் செல்லாமல், மனைவியையும் அழைத்தால் மட்டுமே செல்வேன் என்று நபி (ஸல்) அவர்கள் அந்த விருந்தையே புறக்கணிக்கிறார்கள் என்றால், மனைவியின் உணர்வுகளுக்கு அவர்கள் எந்த அளவுக்கு மதிப்பளித்தார்கள் என்பதை அறியலாம். நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை வந்துகொண்டிருந்தபோது அன்சாரிப் பெண்கள் விருந்து ஒன்றிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உலகிலேயே தமக்கு மிகவும் விருப்பமானவர்கள் அன்சாரி மக்கள்தான் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். இவ்வாறு மனைவியர் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணமோ, தங்களுக்குக் கிடைக்காத நல்ல உணவு கணவருக்கு மட்டும் கிடைக்கிறது என்ற ஆதங்கமோ வந்துவிடாத அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் இல்லற வாழ்க்கையில்…
நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும், உலகத்தில் எவரும் காட்டிடாத மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்று பார்த்தால், அதுவே சரியான தீர்வாக அமைந்திருப்பதை நாம் காண முடிகிறது.