02) குழந்தைக்குரிய சட்டங்கள்

தனிமனித வாழ்வில் இஸ்லாம்

மனித வாழ்வின் தொடக்கமான குழந்தைப் பருவத்திலிருந்து இதனை அணுகும்போது, குழந்தைக்குரிய சட்டங்களை விட அக்குழந்தை தொடர்பாகப் பெற்றோரும் குடும்பத்தாரும் செய்ய வேண்டியவை எவை என்பதே முதன்மையானது. இதில் குழந்தைப்பேறு இல்லாத நிலை, பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலை, குழந்தை பிறந்து இறந்துவிடும் நிலை, குழந்தை நல்ல முறையில் வாழும் நிலை எனப் பல சூழல்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. இவற்றை ஒரு முஸ்லிம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிவதற்கு முன்னால், மனித வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளையும் குறித்த ஒரு முஸ்லிமின் பார்வை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஒரு இறைநம்பிக்கையாளருக்கு எது நடந்தாலும் அது அவனுக்கு நன்மை பயக்கக்கூடியதே ஆகும். உலக ஆதாயத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட மனிதனுக்குத் துன்பம் வரும்போது அது இழப்பாகவே தெரிகிறது. ஆனால் மறுமை வெற்றியை இலக்காகக் கொண்ட ஒரு இறைநம்பிக்கையாளருக்கு மகிழ்ச்சி ஏற்படும்போது நன்றி செலுத்துகிறான்; அது அவனுக்கு நன்மையாகிறது. துன்பம் நேரும்போது பொறுமை காக்கிறான்; அதுவும் அவனுக்கு நன்மையாகவே முடிகிறது.

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
இறைநம்பிக்கையாளரின் நிலை வியப்புக்குரியது; அவருடைய எல்லாக் காரியங்களும் நன்மையாகவே இருக்கின்றன. இந்த நிலை இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு எவருக்கும் அமைவதில்லை. அவருக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டால் அவர் நன்றி செலுத்துகிறார்; அது அவருக்கு நன்மையாகி விடுகிறது. அவருக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அவர் பொறுமை காக்கிறார்; அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது.
(ஸஹீஹ்(முஸ்லிம்: 2999) ➚

எனவே குழந்தை பிறப்பதோ, பிறக்காமல் இருப்பதோ, ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, அல்லது பிறந்த குழந்தை இறந்துவிடுவதோ எதுவாயினும் மறுமையை நோக்கமாகக் கொண்ட ஒரு இறைநம்பிக்கையாளருக்கு எல்லாமே நன்மையாகவே முடிகிறது. இந்த அடிப்படைப் புரிதலுடன் குழந்தை தொடர்பான மார்க்க வழிகாட்டல்களை அணுக வேண்டும்.

ஒரு முஸ்லிமுக்குக் கவலை தரக்கூடிய நிகழ்வுகளும் ஏற்படலாம். அனைவருக்கும் அல்லாஹ் குழந்தைப் பாக்கியத்தை வழங்கிவிடுவதில்லை; குழந்தை இல்லாமல் சிலர் இருக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்: ஒருவருக்குக் குழந்தை இல்லை என்பது ஒரு துன்பமே. அந்தத் துன்பத்தின் மூலம் அல்லாஹ் அவருடைய தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்கிறான். மறுமையில் குற்றங்களுக்கான தண்டனையைக் குறைத்து, சில பாவங்களை அழிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வுலகில் ஒரு துன்பத்தை வழங்குகிறான். இது கடுமையான பெரும் துன்பங்களுக்கு மட்டுமல்ல, ஒரு முள் தைப்பது போன்ற சிறிய துன்பத்திற்கும்கூடப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

مَا مِنْ مُصِيبَةٍ تُصِيبُ الْمُسْلِمَ إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا عَنْهُ حَتَّى الشَّوْكَةِ
ஒரு முஸ்லிமுக்கு முள் தைப்பது உட்பட எந்தத் துன்பம் ஏற்பட்டாலும், அதன் மூலம் அல்லாஹ் அவருடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.
(புகாரி: 5640) ➚

ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் சோர்வு, நோய், கவலை, சோகம், துன்பம், மன உளைச்சல் என எதுவாயினும், அதன் மூலமும் அவருடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தம் கிடைக்கிறது என்றும் நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.

مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ
ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் சோர்வு, நோய், கவலை, சோகம், துன்பம், மன உளைச்சல் எதுவாயினும் அதன் மூலம் அவனது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
(புகாரி: 5642) ➚

அல்லாஹ் யாருக்காவது ஒரு நன்மையை நாடிவிட்டால் அவரைச் சோதிக்கிறான்; அவருக்கு ஒரு துன்பத்தைக் கொடுக்கிறான். ஒரு மனிதனுக்கு உண்மையான நன்மை என்பது மறுமையில் வெற்றி பெறுவதே ஆகும். இவ்வுலகில் அல்லாஹ் தரும் துன்பத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்; ஆனால் மறுமையின் தண்டனையோ பல மடங்கு கடுமையானது, அதனைத் தாங்க முடியாது. எனவே ஓர் அடியானுக்கு நன்மையை நாடும்போது அல்லாஹ் அவனைத் துன்பத்திற்கு உள்ளாக்குகிறான். குழந்தை இல்லை என்று கவலைப்படுபவர்கள், அல்லாஹ் தமக்கு ஒரு நன்மையை நாடியிருக்கிறான் என்றும், மறுமையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தமக்கு எளிதாகிறது என்றும் கருத வேண்டும். அந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதன் மூலம் சொர்க்கத்திற்கான பாதை எளிதாகிறது.

مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ
அல்லாஹ் எவருக்கு நன்மையை நாடுகிறானோ, அவரைச் சோதனைகளுக்கு உள்ளாக்குகிறான்.
(புகாரி: 5645) ➚

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் அடிக்கடி மயங்கி விழுவதாகவும், அப்போது தம் ஆடை விலகி விடுவதால், அது குணமாக அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறும் வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் இதனைப் பொறுத்துக் கொள், உனக்குச் சொர்க்கம் உண்டு; நீ விரும்பினால் உனக்குக் குணமாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி, “நான் பொறுத்துக் கொள்கிறேன்; ஆனால் ஆடை விலகாமல் இருப்பதற்கு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே துஆ செய்தார்கள்.

إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ
நீ விரும்பினால் பொறுமையாக இரு, உனக்குச் சொர்க்கம் உண்டு.
(புகாரி: 5652) ➚

ஒரு மனிதனின் இரு கண்களையும் பறித்துவிட்ட நிலையில், அவன் அதனைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டால், அவனுக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறு பிரதிபலன் இல்லை என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, குழந்தைப் பருவத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் குழந்தையைப் பற்றிய நம்முடைய பார்வையைச் சரி செய்து கொள்ள வேண்டும். அல்லாஹ் குழந்தை பாக்கியத்தைத் தந்தால் அல்ஹம்துலில்லாஹ். தராவிட்டால் அதனையும் இறைவனுக்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்குச் செல்வத்தைக் கொடுப்பான், மற்றொருவருக்கு அதனைப் பறிப்பான்; ஒருவருக்கு நோயைக் கொடுப்பான், மற்றொருவருக்கு ஆரோக்கியத்தை வழங்குவான்; ஒருவரை அழகாகப் படைப்பான், மற்றொருவரை அவ்வாறு படைப்பதில்லை. அதுபோலவே ஒருவருக்குக் குழந்தையைக் கொடுக்கிறான், மற்றவருக்குக் குழந்தை இல்லாமல் ஆக்குகிறான். எனவே குழந்தை இல்லாத நிலையை அல்லாஹ்வுக்காகப் பொறுத்துக் கொண்டால் அது மறுமையில் வெற்றியைத் தரும்.

அவ்வாறு பொறுமை காப்பதோடு, குழந்தைப் பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் முறையிடுவதையும் அதற்கான முயற்சிகளையும் விட்டுவிடக் கூடாது. குழந்தை இல்லை என்பதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்வது பொறுமையின்மை ஆகாது. ஒருவன் வறுமையைப் போக்கக் கேட்பது அவனது பொறுமையின்மையைக் காட்டாதது போலவே இதுவும் அமையும்.

பொறுமைக்குச் சிறந்த இலக்கணமாகத் திகழ்பவர்கள் இறைவனால் தேர்வு செய்யப்பட்ட நபிமார்கள் ஆவர். எத்தகைய துன்பங்களையும் அவர்களால் மட்டுமே முழுமையாகப் பொறுத்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட பல நபிமார்களுக்கே இறைவன் நீண்ட காலமாகக் குழந்தைப் பாக்கியத்தை வழங்காமல் சோதித்துள்ளான்.

ஜக்கரிய்யா (அலை) அவர்கள் தள்ளாத முதிர்ந்த வயதை அடையும் வரை அவர்களுக்குக் குழந்தை இல்லை. அப்போது அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். “இறைவா, إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي (என் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன); وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا (தலை நரையால் வெளுத்துவிட்டது); என் மனைவியும் மலடியாக இருக்கிறாள்; எனவே எனக்கு ஒரு வாரிசைத் தந்தருள்வாயாக!” என்று வேண்டினார்கள்.

يَرِثُنِى وَيَرِثُ مِنْ ءَالِ يَعْقُوبَ ۖ وَٱجْعَلْهُ رَبِّ رَضِيًّا
அவர் எனக்கும், யாகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.)
(அல்குர்ஆன்: 19:6)➚

அவ்வாறு அவர் பிரார்த்தனை செய்தபோது அல்லாஹ் அவரிடம் பொறுமையைக் குறித்துக் குறை கூறவில்லை; மாறாக, அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு குழந்தையை வழங்கினான்.

வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்திக்க வேண்டும் என்பதையே ஜக்கரிய்யா (அலை) அவர்களின் வாழ்வு காட்டுகிறது. எவ்வளவு வயதானாலும் இல்லாத நிலையைப் பொறுத்துக் கொண்டு, அதே சமயம் அல்லாஹ்விடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

وَزَكَرِيَّآ إِذْ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرْنِى فَرْدًا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ
“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.
(அல்குர்ஆன்: 21:89)➚

ஜக்கரிய்யா (அலை) அவர்கள் தளர்ந்து ஓய்ந்து போகும் வரை நீண்ட காலம் குழந்தைப் பேறு இன்றி இருந்தபோதும், அல்லாஹ்விடம் தொடர்ந்து துஆ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥ ۖ قَالَ رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
(அல்குர்ஆன்: 3:38)➚

இறுதியில் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவருக்கு யஹ்யா என்ற குழந்தையைக் கொடுப்பதாக அல்லாஹ் நற்செய்தி கூறினான்.

يَـٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَـٰمٍ ٱسْمُهُۥ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُۥ مِن قَبْلُ سَمِيًّا
“ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை” (என இறைவன் கூறினான்)
(அல்குர்ஆன்: 19:7)➚

நபிமார்களே அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்டுப் பிரார்த்தித்திருக்கிறார்கள் என்பதால், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது தவறல்ல; மாறாக, அது அவசியமான ஒன்றாகும். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யாதவர்கள் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ
யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்.
(திர்மிதி: 3373)

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வதும், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. “அல்லாஹ்வே, உனது முடிவை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்; எனினும் எனக்குக் குழந்தைப் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!” என்று கேட்க வேண்டுமே தவிர, குழந்தை இல்லை என்பதற்காக இறைவனைக் குறை கூறிவிடக் கூடாது.

குழந்தை இல்லாதவர்கள், உலகமே இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொன்னாலும் அல்லாஹ் நினைத்தால் அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையோடு அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் எதுவும் நடக்கும். ஜகரிய்யா நபிக்கு வழங்கியது போலவும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ மக்களுக்கு நாம் நம் கண்கூடாகப் பார்ப்பது போலவும் அல்லாஹ் இன்றும் குழந்தை பாக்கியத்தை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறான்; என்றும் வழங்குவான். அவ்வாறு அவன் தராவிட்டால் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை நல்லது நடந்தாலும் நன்மைதான்; ஒரு விஷயம் கிடைக்காவிட்டாலும் நன்மைதான். குழந்தை இல்லாதவர் பொறுமை காப்பதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். அதே நேரத்தில் குழந்தை இருப்பதும் ஒருவரைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். இரண்டையும் முரண்பாடாகப் பார்க்காமல், இரண்டுமே இருவேறு வகையான நன்மைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ فَيَقُولُ يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ فَيَقُولُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ
நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு நல்லடியானின் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அவன், “என் இறைவனே! இது எனக்கு எவ்வாறு கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குப் பின்னால் உனது பிள்ளை உனக்காகப் பாவமன்னிப்புக் கோரியதால்” என்று கூறுவான்.
(அஹ்மத்: 10202) ➚

குழந்தை இல்லாத காரணத்தினால் பொறுமையிழந்து அல்லாஹ்வை நிந்தித்தால் ஒருவன் நரகத்திற்குச் சென்றுவிடுவான். அதேபோன்று, குழந்தை இருக்கிறது என்ற மமதையில் பெருமையடித்தாலும் நரகத்திற்குச் சென்றுவிடுவான். எனவே, குழந்தை என்பது அல்லாஹ் தரும் பாக்கியம் என்பதை உணர்ந்து, அதைச் சரியான முறையில் அணுக வேண்டும். ஒரு மனிதன் மரணித்த பிறகும் அவனுக்கு நன்மையைச் சேர்க்கும் வழிகளில் குழந்தையும் ஒன்று என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ صَدَقَةٍ جَارِيَةٍ وَعِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ
ஒரு மனிதன் மரணித்துவிட்டால் மூன்று காரியங்களைத் தவிர அவனுடைய அமல்கள் அனைத்தும் நின்றுவிடுகின்றன: நிலையான தர்மம், பயனளிக்கக்கூடிய கல்வி, அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை.
(முஸ்லிம்: 1631) ➚

பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்தால் அது நம்மைச் சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும் காரணியாக அமையும். அதே நேரத்தில் குழந்தை இல்லை என்பதற்காக விரக்தியடைந்துவிடாமல், அல்லாஹ்விடம் தொடர்ந்து கேட்க வேண்டும். அத்துடன் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஏதேனும் மருத்துவக் குறைபாடுகள் இருந்தால் அதற்குரிய சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும். நோயைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லும் மார்க்கம், அதற்கான மருத்துவம் செய்வதையும் சேர்த்துதான் வழிகாட்டுகிறது.

تَدَاوَوْا فَإِنَّ لِكُلِّ دَاءٍ دَوَاءً
மருத்துவம் செய்துகொள்ளுங்கள்; நிச்சயமாக ஒவ்வொரு நோய்க்கும் மருந்து இருக்கிறது.

மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்றாலும் நம்பிக்கையிழந்துவிடக் கூடாது. ஜகரிய்யா நபியின் காலத்தில் மருத்துவப் பரிசோதனை செய்திருந்தால், அவர்களது முதுமையின் காரணமாகக் குழந்தை பிறக்காது என்றுதான் சொல்லியிருப்பார்கள். ஆனால், அல்லாஹ் அனைத்தையும் கடந்து ஒரு குழந்தையை உருவாக்கினான். எனவே, குழந்தை பாக்கியத்தை விரும்பவும் வேண்டும், அதற்காக அல்லாஹ்விடம் கேட்கவும் வேண்டும்; அவன் தராவிட்டால் பொறுமை காக்க வேண்டும்.

அடுத்ததாக, பெண் குழந்தைகள் பற்றிய பார்வை மாற வேண்டும். சிலர் குழந்தைக்காக அழுது பிரார்த்திப்பார்கள்; ஆனால் ஆண் குழந்தையை மட்டுமே எதிர்பார்த்துக் கேட்பார்கள். அல்லாஹ் பெண் குழந்தையைக் கொடுத்தால் வெறுப்படைவார்கள். அறியாமைக் காலம் தொட்டே பெண் பிள்ளைகளை வெறுக்கும் வழக்கம் மனிதர்களிடம் இருந்து வருகிறது. குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறந்தால் அதனை வெறுக்கத்தக்க ஒன்றாகக் கருதுகிறார்கள். அல்லாஹ் ஆண், பெண் இருவரையுமே அருட்கொடை என்று குறிப்பிடுவதுடன், பெண் குழந்தைகளையே முதலாவதாகக் கூறுகிறான்.

لِّلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَآءُ ۚ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَـٰثًا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
(அல்குர்ஆன்: 42:49)➚

இரண்டிற்குமே அல்லாஹ் அருட்கொடை என்ற பொருள்படும் சொல்லையே பயன்படுத்தியுள்ளான். எனவே, பெண் குழந்தை பிறப்பதற்காக மனம் தளர்ந்துவிடக் கூடாது. பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டவுடன் வெறுப்படைவது இறைமறுப்பாளர்களின் பண்பாடு என்று திருமறைக் குர்ஆன் கண்டிக்கிறது.

وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِٱلْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَٰرَىٰ مِنَ ٱلْقَوْمِ مِن سُوٓءِ مَا بُشِّرَ بِهِۦٓ
அவர்களில் ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் கறுத்துவிடுகிறது; தனக்குக் கூறப்பட்ட அச்செய்தியின் கெடுதியினால் அவன் மக்களிடமிருந்து மறைந்து வாழ்கிறான்.
(அல்குர்ஆன்: 16:58-59)➚

இவை அனைத்தும் அறியாமைக் காலத்து மக்களின் பழக்கவழக்கங்கள் ஆகும். நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் சந்தித்த மக்கா கால அறியாமைக்கால மக்கள், வானவர்களை அல்லாஹ்வின் பெண் குழந்தைகள் என்று கூறிவந்தார்கள். ஆனால், ரஹ்மானுக்கு எதனை அவர்கள் இணையாகக் கூறினார்களோ அத்தகைய பெண் குழந்தை தங்களுக்குப் பிறந்ததாகக் கூறப்படும்போது தங்களது முகம் கறுத்துப் போய்விடுவதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَـٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُۥ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
அளவற்ற அருளாளனுக்கு எதனைக் கற்பனை செய்தார்களோ அது (பெண் குழந்தை) குறித்து அவர்களில் ஒருவருக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருத்து விடுகிறது. அவர் கோபம் கொண்டவராகி விடுகிறார்.
(அல்குர்ஆன்: 43:17)➚

வானவர்களை அல்லாஹ்வின் பெண்மக்கள் என்று கூறியவர்களிடம், அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டதாக நற்செய்தி கூறப்பட்டால் அவர்களது முகம் கறுத்துவிடுவதாக அல்குர்ஆனில் (43:17➚) அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான். தனக்குப் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பது அறியாமைக் காலத்து மக்களின் பழக்கமாகும்; அது ஒருபோதும் முஸ்லிம்களின் பண்பாக இருக்க முடியாது.

பொதுவாக மனித இயல்பின்படி ஒரு பெண் குழந்தையை யாரும் வெறுப்பதில்லை; ஆனால் இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கும்போதுதான் வெறுப்பு ஏற்படுகிறது. அல்லாஹ் பெண் குழந்தைகளைத் தந்தால் அதனை வெறுக்காமல், இதிலும் நமக்கு நன்மை இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டு, அவர்களைப் பருவ வயதை அடையும் வரை பொறுப்புடன் வளர்த்து ஆளாக்குபவர் மறுமை நாளில் தம்முடன் மிக நெருக்கமாக இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளார்கள்.

مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ وَضَمَّ أَصَابِعَهُ
இரண்டு பெண் குழந்தைகளைப் பருவ வயதை அடையும் வரை யார் வளர்த்து ஆளாக்குகிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி இருப்போம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
(முஸ்லிம்: 4765) ➚

ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு ஒரு பெண்மணி தன் இரு பெண் குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வந்தார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரேயொரு பேரீச்சம்பழம் மட்டுமே இருந்தது. அதனை அப்பெண்ணிடம் கொடுத்தபோது, அவர் அதனைத் தான் உண்ணாமல் இரண்டாகப் பிட்டு தன் இரு குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் இல்லத்திற்கு வந்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த நிகழ்வைக் கூறினார்கள். அப்போது பெண் குழந்தைகளை அழகிய முறையில் பராமரிப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

مَنِ ابْتُلِيَ مِنْ هَذِهِ الْبَنَاتِ بِشَيْءٍ فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ
இந்தப் பெண் குழந்தைகள் மூலமாக யார் சோதிக்கப்பட்டு, அவர்களுக்கு அழகிய முறையில் உபகாரம் செய்கிறாரோ, அவருக்கு அக்குழந்தைகள் நரக நெருப்பிலிருந்து தடுக்கும் கேடயமாக இருப்பார்கள்.
(புகாரி: 1418) ➚

தன் பெண் குழந்தைகளையோ அல்லது சகோதரிகளையோ பொறுப்பேற்றுப் பராமரிப்பவருக்கும் இதே போன்ற பெரும் அந்தஸ்து உண்டு என்பதை நபி (ஸல்) அவர்கள் மற்றோர் அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

مَنْ عَالَ ابْنَتَيْنِ، أَوْ ثَلَاثَ بَنَاتٍ، أَوْ أُخْتَيْنِ، أَوْ ثَلَاثَ أَخَوَاتٍ، حَتَّى يَمُتْنَ أَوْ يَمُوتَ عَنْهُنَّ، كُنْتُ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى
யார் தன்னுடைய இரண்டு புதல்விகளை அல்லது மூன்று புதல்விகளை, அல்லது இரண்டு சகோதரிகளை அல்லது மூன்று சகோதரிகளை அவர்கள் மரணிக்கும் வரையோ அல்லது தான் மரணிக்கும் வரையோ பொறுப்பேற்றுப் பராமரிக்கிறாரோ, அவரும் நானும் இவ்வாறு இருப்போம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் தம் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டினார்கள்.
(அஹ்மத்: 12041) ➚

எனவே பெண் குழந்தைகள் பிறந்தால் நமது பார்வை மாற வேண்டும். குழந்தைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம், எவ்வாறு ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே மறுமையின் வெற்றி அமைகிறது. பெண் குழந்தை பிறந்துவிட்டது என்பதற்காக அதனை அழிக்க நினைப்பதும், கருவிலேயே சிதைக்கத் திட்டமிடுவதும் மிகுந்த எச்சரிக்கையோடு தவிர்க்கப்பட வேண்டிய கொடிய பாவங்களாகும். வரதட்சணைக் கொடுமைகளின் காரணமாகப் பெற்ற தாயே தன் குழந்தையைக் கொல்லும் கொடூரம் சமுதாயத்தில் ஆங்காங்கே நிகழ்வதைப் பார்க்கிறோம். அத்தகைய கொடிய எண்ணங்கள் நமக்கு வந்துவிடாதவாறு மனங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். பல தெய்வங்களை நம்பக்கூடிய இணைவைப்பாளர்களுக்கே தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வது ஓர் அழகான செயலாகத் தென்படும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ ٱلْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَـٰدِهِمْ شُرَكَآؤُهُمْ
இவ்வாறே இணைவைப்பாளர்களில் பலருக்கு, தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்களுடைய இணை தெய்வங்கள் அழகாக்கிக் காட்டிவிட்டன.
(அல்குர்ஆன்: 6:137)➚

அறிவில்லாமல் மடத்தனமாகத் தங்கள் குழந்தைகளைக் கொல்பவர்கள் அடைந்த நஷ்டத்தையும் அவர்களின் வழிகேட்டையும் அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான்.

قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ افْتِرَاءً عَلَى اللَّـهِ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்து, அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டார்கள்; அவர்கள் வழிகெட்டுவிட்டார்கள், நேர்வழி பெற்றவர்களாகவும் அவர்கள் இல்லை.
(அல்குர்ஆன்: 6:140)➚

இறைவன் தடுத்த விலக்கப்பட்ட காரியங்களை மக்களுக்கு எடுத்துரைக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதில் இணைவைப்பும் பெற்றோருக்கு மாறு செய்வதும் தடுக்கப்பட்டிருப்பது போன்றே, வறுமையின் காரணமாகக் குழந்தைகளைக் கொல்வதும் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

قُلْ تَعَالَوْا۟ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًٔا وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَـٰدَكُم مِّنْ إِمْلَـٰقٍ نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: வாருங்கள், உங்கள் இறைவன் உங்களுக்குத் தடுத்துள்ளவற்றை நான் ஓதிக்காட்டுகிறேன்; அவனுக்கு எதனையும் நீங்கள் இணையாக்காதீர்கள், பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.
(அல்குர்ஆன்: 6:151)➚

வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொல்வது சாதாரண குற்றமல்ல, மாறாக அது பெரும் குற்றம் என்பதையும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அல்லாஹ்வே பொறுப்பேற்றுள்ளான் என்பதையும் அல்லாஹ் மற்றோர் இடத்திலும் எச்சரிக்கிறான்.

وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَـٰدَكُمْ خَشْيَةَ إِمْلَـٰقٍ ۖ نَّحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ ۚ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْـًٔا كَبِيرًا
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.
(அல்குர்ஆன்: 17:31)➚

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பைஅத் எனப்படும் உறுதிமொழி எடுக்க வந்தபோதும், குழந்தைகளைக் கொலை செய்யக்கூடாது என்ற நிபந்தனையை முன்வைக்குமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டான்.

يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِذَا جَآءَكَ ٱلْمُؤْمِنَـٰتُ يُبَايِعْنَكَ عَلَىٰٓ أَن لَّا يُشْرِكْنَ بِٱللَّهِ شَيْـًٔا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَـٰدَهُنَّ
நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்குவதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதில்லை என்றும் உறுதிமொழி அளித்தால், அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக!
(அல்குர்ஆன்: 60:12)➚

பிறந்த குழந்தையைக் கொன்று புதைக்கும் பழக்கம் நம்மிடம் இல்லாவிட்டாலும், அதனைத் தாயின் கருவிலேயே அழிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. நவீனப் பரிசோதனைகள் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்துவிட்டு, அது பெண் குழந்தை என்பதற்காகக் கலைத்துவிட முற்படுவதும் கொலைக்கு ஒப்பானதேயாகும். குழந்தை உருப்பெற்று, மார்க்கம் சொல்லக்கூடிய கால எல்லையை அடைந்து, அதற்கு உயிர் ஊதப்பட்ட பிறகு செய்யப்படும் எந்தவொரு கருக்கலைப்பும் குழந்தையைக் கொலை செய்யும் குற்றமாகவே அமையும்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு நான்கு மாதங்களில் உயிர் ஊதப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்தக் கட்டத்திற்குப் பிறகு எந்தக் காரணத்திற்காகக் கருக்கலைப்பு செய்தாலும் அது கொலையாகவே கருதப்படும். இத்தகைய பாவமான காரியத்தை நாம் முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகப் பெண் குழந்தை பிறக்கும்போதுதான் சிலருக்கு இத்தகைய விபரீத எண்ணம் ஏற்படுகிறது; ஆண் குழந்தை பிறக்கும்போது அவ்வாறு நினைப்பதில்லை. மார்க்கம் இதைத் தடுத்துள்ளது, இது தவறு என்ற விழிப்புணர்வை ஆரம்பத்திலிருந்தே ஊட்ட வேண்டும். அவ்வாறு சரியான முறையில் போதித்து வளர்த்தால், எத்தனை பெண் குழந்தைகள் பிறந்தாலும் அவர்களைக் கொல்லும் அளவுக்கு யாரும் செல்ல மாட்டார்கள். இன்றைய முஸ்லிம்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு இந்த மார்க்க அறிவுரையே காரணமாகும்.

குழந்தைகளைப் பற்றிய அடுத்த கண்ணோட்டம் என்னவென்றால், சிலருக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுத்துவிட்டுப் பின்னர் திரும்ப எடுத்துக்கொள்கிறான். குழந்தை பிறக்காமல் இருப்பதை விட, பிறந்த குழந்தையைப் பறிகொடுப்பது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏழையாகவே வாழ்ந்து பழகியவனுக்கு வறுமை பெரிய பாதிப்பாகத் தெரிவதில்லை. ஆனால், அனைத்து வசதிகளுடன் வாழ்ந்த ஒருவனிடமிருந்து திடீரென செல்வம் பறிபோனால் அவன் அனைத்தையும் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறான். அது பெரும் வேதனையைத் தரும். அதுபோலவே, குழந்தையே இல்லாதவருக்கு ஓர் எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும். ஆனால், குழந்தையைக் கொடுத்துப் பின்னர் அல்லாஹ் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் சிரிப்பு, அழுகை, கொஞ்சிய நினைவுகள் எனப் பத்து நாட்களே வாழ்ந்த குழந்தையாக இருந்தாலும் அதன் நினைவுகள் உள்ளத்தை வதைத்துக் கொண்டிருக்கும்.

நம்முடைய பார்வை சரியாக இருந்தால் இந்த இழப்பையும் நன்மையாக மாற்றிக்கொள்ள முடியும். அல்லாஹ் கொடுத்த குழந்தையை அவனே திரும்ப எடுத்துக்கொண்டான் என்றால் அது கெட்டது அல்ல; பொறுமையோடு அதை எதிர்கொண்டால் நாம் சொர்க்கம் செல்வதற்கான வழியாகவும் அது அமையும்.

ஒருமுறை பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எப்போதும் தங்களைச் சுற்றி ஆண்களே அமர்ந்திருப்பதால் தங்களால் மார்க்க விஷயங்களைக் கேட்க முடிவதில்லை என்றும், தங்களுக்குப் பயனுள்ள அறிவுரைகளைக் கூறுவதற்காகத் தனியாக ஓர் அமர்வை ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களும் பெண்களுக்கென பிரத்யேகமான விஷயங்கள் இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு, فواعدهن يوما (அவர்களுக்கு ஒரு நாளை வாக்களித்தார்கள்). அந்த நாளில் பெண்கள் ஒன்றுதிரண்ட இடத்திற்குச் சென்று அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ஒரு பெண் தன் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்துப் பொறுமையுடன் இருந்தால், அப்பிள்ளைகள் அவளுக்கு நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, واثنتين (இரண்டு குழந்தைகளா?) என்று கேட்டபோது, இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்தாலும் இதே நன்மை கிடைக்கும் என்று தெரிவித்தார்கள். கொடுக்கவும் திரும்ப எடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு என்பதை உணர்ந்து, பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்கும்போது அது நரகத்திற்கு எதிரான கேடயமாக அமைகிறது.

إِلَّا كَانَ حِجَابًا مِنَ النَّارِ
அது நரகத்திலிருந்து பாதுகாக்கும் திரையாகவே நிற்கும்.
(புகாரி: 102) ➚

அபூஹஸ்ஸான் என்பவர் நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்து, தாம் தம்முடைய இரண்டு ஆண் பிள்ளைகளையும் இழந்துவிட்டதாகவும், மனதிற்கு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டிருந்தால் தமக்குக் கூறுமாறும் கேட்டார். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், சிறுவயதில் மரணித்த குழந்தைகள் சொர்க்கத்தில் தம் பெற்றோருக்காகக் காத்திருந்து, அவர்களைச் சொர்க்கத்தில் சேர்க்கும் வரை விடமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்கள்.

نَعَمْ صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يَتَلَقَّى أَحَدُهُمْ أَبَاهُ أَوْ قَالَ أَبَوَيْهِ فَيَأْخُذُ بِثَوْبِهِ أَوْ قَالَ بِيَدِهِ كَمَا آخُذُ أَنَا بِصَنَفَةِ ثَوْبِكَ هَذَا فَلَا يَنْتَهِي حَتَّى يُدْخِلَهُ اللَّهُ وَأَبَاهُ الْجَنَّةَ
ஆம், அவர்களின் சிறுபிள்ளைகள் சொர்க்கத்தின் வண்டுகளாவர். அவர்களில் ஒரு குழந்தை தன் தந்தையை (அல்லது பெற்றோரை) சந்திக்கும் போது, நான் இப்போது உங்கள் ஆடையின் ஓரத்தைப் பிடித்திருப்பது போல், அவருடைய ஆடையை (அல்லது கையை) பிடித்துக்கொள்ளும். அல்லாஹ் அவனையும் அவன் தந்தையையும் சொர்க்கத்தில் சேர்க்கும் வரை அது விடாது.
(முஸ்லிம்: 2635) ➚

ஒரு மனிதர் தம்முடைய மகனை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் அடிக்கடி வருவார். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அவரிடம், أَتُحِبُّهُ? (இவனை அதிகம் நேசிக்கிறீரா?) என்று கேட்டார்கள். அதற்கு அவர், நபி (ஸல்) அவர்களே, “أَحَبَّكَ اللَّهُ كَمَا أُحِبُّهُ” (நான் இவனை நேசிப்பது போல் அல்லாஹ் தங்களை நேசிப்பானாக!) என்று கூறி தன் அளவற்ற அன்பை வெளிப்படுத்தினார். சில நாட்களுக்குப் பின் அவர் மட்டும் தனியாக வந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், مَا فَعَلَ ابْنُ فُلَانٍ? (அந்தப் பிள்ளை என்ன ஆனான்?) என்று விசாரித்தார்கள். அக்குழந்தை இறந்துவிட்டதாகத் தோழர்கள் கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் அத்தந்தையை நோக்கி, நீர் சொர்க்கத்தின் எந்த வாசலில் நுழைய முற்பட்டாலும் إِلَّا وَجَدْتَهُ يَنْتَظِرُكَ (உமக்காக அங்கே உன் குழந்தை காத்திருப்பதை நீர் காண்பீர்) என்று ஆறுதல் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, أَلَهُ خَاصَّةً أَمْ لِكُلِّنَا? (இது அவருக்கு மட்டுமா அல்லது நம் அனைவருக்கும் பொதுவானதா?) என்று கேட்டார். பிள்ளையைப் பறிகொடுத்து அல்லாஹ்வுக்காகப் பொறுமை காக்கும் எவருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

பருவ வயதை அடைவதற்கு முன்பே மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்துப் பொறுமை காக்கும் எந்தவொரு முஸ்லிமுக்கும், அக்குழந்தைகளின் மீது அவர் கொண்ட பாசத்தின் காரணத்தினால் அல்லாஹ் சொர்க்கத்தை வழங்குகிறான்.

إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ
அக்குழந்தைகள் மீது அல்லாஹ் கொண்ட கருணையின் காரணத்தால் அவரைச் சொர்க்கத்தில் நுழைக்காமல் இருப்பதில்லை.
(புகாரி: 1248) ➚

குழந்தைகளை இழக்கும்போது நாம் கலங்கிவிடக் கூடாது. நபி (ஸல்) அவர்களும் தம்முடைய வாழ்க்கையில் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் இழந்துள்ளார்கள். அவ்வாறான சூழல்களில் அவர்கள் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மகளார் ஒருவரின் குழந்தை மரணத் தருவாயில் இருந்தபோது, தம் தந்தையை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் பதற்றமடையாமல், வந்தவரிடம் ஸலாம் கூறி அனுப்பினார்கள்.

فَأَرْسَلَ يُقْرِئُ السَّلَامَ
அவர்கள் ஸலாம் கூறி அனுப்பி வைத்தார்கள்.
(புகாரி: 1284) ➚

அத்தோடு, அல்லாஹ்வின் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பொறுமை காக்குமாறு ஆறுதல் கூறி அனுப்பினார்கள்.

وَيَقُولُ إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى
அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே, அவன் கொடுத்ததும் அவனுக்குரியதே; ஒவ்வொன்றும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையைக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.
(புகாரி: 1284) ➚

அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் அவனுக்குரியதே; அவன் கொடுத்திருப்பதும் அவனுக்குரியதே. ஒவ்வொன்றுமே அவனிடம் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவோடுதான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, فَلْتَصْبِرْ (அவள் பொறுமை காக்கட்டும்), وَلْتَحْتَسِبْ (நன்மையை எதிர்பார்க்கட்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் தம் மகளுக்குச் செய்தி அனுப்பினார்கள். ஆனால் அவரது மகள், நபி (ஸல்) அவர்கள் நேரில் வந்தே தீர வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியனுப்பியதால், நபி (ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப், ஸைத் இப்னு ஸாபித் உள்ளிட்ட தோழர்களுடன் அங்கு சென்றார்கள். மரணத் தறுவாயில் மூச்சிரைத்துக் கொண்டிருந்த குழந்தையை நபி (ஸல்) அவர்களின் கையில் கொடுத்தபோது, அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அதைக் கண்ட ஸஅத் (ரலி) அவர்கள், مَا هَذَا؟ (இது என்ன?) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவர்கள் விளக்கமளித்தார்கள்.

هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ
இது ஓர் இரக்க உணர்வு; அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் இதை ஏற்படுத்தியிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுள்ளவர்களுக்கே இரக்கம் காட்டுகிறான்.
(புகாரி: 1284) ➚

குழந்தை இறந்துவிட்டால் கல்லாக அமர்ந்திருக்க வேண்டும் என்பது பொறுமையின் பொருள் அல்ல. இழப்பின் துயரத்தால் அழுவதற்கும் கண்ணீர் வடிப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு; அது பொறுமைக்கு முரணானது அல்ல. மாறாக, விதியை எதிர்த்துக் கேள்வி கேட்பதும், அல்லாஹ்வை நிந்தித்து ஒப்பாரி வைத்துப் பேசுவதுமே பொறுமையற்ற செயலாகவும் குற்றமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் பிறரது குழந்தைகளையோ ஆதரவற்ற குழந்தைகளையோ எடுத்து வளர்க்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய அடிப்படையில், ஒரு குழந்தையை எடுத்து வளர்ப்பதால் அது சொந்தப் பிள்ளையாகவோ, வளர்ப்பவர் அக்குழந்தைக்குத் தந்தையாகவோ மாறிவிட முடியாது. அவ்வாறு அழைப்பதையும் திருக்குர்ஆன் கண்டிக்கிறது.

وَمَا جَعَلَ أَدْعِيَآءَكُمْ أَبْنَآءَكُمْ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَٰهِكُمْ وَٱللَّهُ يَقُولُ ٱلْحَقَّ وَهُوَ يَهْدِى ٱلسَّبِيلَ
நீங்கள் எடுத்து வளர்ப்பவர்களை அல்லாஹ் உங்கள் பிள்ளைகளாக ஆக்கவில்லை; இது உங்கள் வாய்களால் கூறும் வெறும் சொல்லாகும். அல்லாஹ்வோ உண்மையையே கூறுகிறான்; அவனே நேரான வழியைக் காட்டுகிறான்.
(அல்குர்ஆன்: 33:4)➚

எடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளை அவர்களின் பெற்ற தந்தையின் பெயரைக் கொண்டுதான் அழைக்க வேண்டும். ஒருவேளை பெற்ற தந்தை யார் என்று தெரியாத சூழ்நிலையிலும் கூட, அவர்களைத் தன் சொந்தப் பிள்ளை என்று கூறாமல், மார்க்கச் சகோதரர்கள் என்றே அழைக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.

ٱدْعُوهُمْ لِـَٔابَآئِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ ٱللَّهِ فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟ ءَابَآءَهُمْ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ
அவர்களை அவர்களின் தந்தையரின் பெயரைக் கொண்டே அழையுங்கள்; அதுவே அல்லாஹ்விடத்தில் மிகவும் நீதியானது. அவர்களுடைய தந்தைமார்களை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள்.
(அல்குர்ஆன்: 33:5)➚

நபி (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை எடுத்து வளர்த்தபோது, தொடக்கத்தில் மக்கள் அவரை ‘முஹம்மதின் மகன் ஸைத்’ என்றே அழைத்து வந்தனர். இத்திருவசனம் அருளப்பட்ட பின்னரே அந்த நடைமுறை மாற்றப்பட்டது.

أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كُنَّا نَدْعُوهُ إِلاَّ زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ
நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஸைத் பின் ஹாரிஸா என்பவரை, “அவர்களை அவர்களின் தந்தையரின் பெயரைக் கொண்டே அழையுங்கள்; அதுவே அல்லாஹ்விடத்தில் நீதியானது” என்ற குர்ஆன் வசனம் இறங்கும் வரை, முஹம்மதின் மகன் ஸைத் என்றே நாங்கள் அழைத்து வந்தோம்.
(புகாரி: 4782) ➚

இழப்பின்போது உள்ளம் கசிந்து கண்ணீர் விடுவது இரக்கத்தின் வெளிப்பாடே தவிர பொறுமையின்மை அல்ல; அதேபோன்று, பிறரது குழந்தைகளை எடுத்து வளர்த்தாலும் அவர்களின் அடையாளம் உண்மைத் தந்தையோடு மட்டுமே இணைக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.