18) மன குழப்பத்திற்க்கு தீர்வு கூறிய நபிகளார்

நூல்கள்: நபிகளாரின் தனி தன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களுடைய பலவீனத்தைக் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்துவதற்குச் சாத்தியமான எளிமையான சட்டங்களை வழங்கி இருக்கிறார்கள். ஆன்மீகத்தின் பெயரால் மனிதர்கள் சிரமப்படக் கூடாது என்பதில் அவர்கள் கூடுதல் அக்கறை செலுத்தியுள்ளார்கள்.

செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், மனரீதியாகவும் மனிதர்கள் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். அல்லாஹ், வானவர்கள், சொர்க்கம் போன்ற மறைவான விஷயங்களை நாம் நம்பினாலும், கண்ணால் காணும் ஒன்றை நூறு சதவீதம் நம்புவது போன்ற மன அமைதி மறைவானவற்றின் நம்பிக்கையில் முழுமையாக ஏற்படுவதில்லை; மனிதர்களின் நிலைக்கு ஏற்ப அதில் ஒரு சிறு குறைவு இருக்கவே செய்யும். இதனால், நம்முடைய நம்பிக்கையில் குறைபாடு உள்ளதோ, இதனை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டானோ என்ற சந்தேகங்கள் தோன்றுவது இயல்பு. இத்தகைய மனரீதியான பலவீனத்தை எதிர்கொள்ளும் வகையிலும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். மூன்று நபிமார்களின் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அவர்கள் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறார்கள்.

முதலாவதாக, மனித குலத்திலேயே ஈமானுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்பவரும் அல்லாஹ்வின் உற்ற தோழருமான இப்ராஹீம் (அலை) அவர்களது வாழ்க்கையிலிருந்து ஒரு சான்றைக் குறிப்பிடுகிறார்கள். இறந்தவர்களை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் என்பதைத் தன் கண்களால் கண்டு தன் உள்ளம் அமைதி பெறுவதற்காக, அதைத் தனக்குக் காட்டும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

رَبِّ أَرِنِى كَيْفَ تُحْىِ ٱلْمَوْتَىٰ قَالَ أَوَلَمْ تُؤْمِن قَالَ بَلَىٰ وَلَـٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِى
“என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டுவாயாக!” எனக் கேட்டபோது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று அவன் கேட்டான்; அதற்கு அவர், “ஆம் (நம்புகிறேன்); ஆயினும் எனது உள்ளம் அமைதி பெறுவதற்காகவே (கேட்கிறேன்)” என்றார்.
(அல்குர்ஆன்: 2:260)➚

இறைவன் உயிர்ப்பிப்பான் என்பதை இப்ராஹீம் (அலை) அவர்கள் முழுமையாக நம்பியிருந்த போதிலும், நேரில் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மன அமைதிக்காகவே அவர்கள் அவ்வாறு கேட்டார்கள். ஈமானில் முதலிடத்தில் உள்ள இப்ராஹீம் (அலை) அவர்களுக்கே அத்தகைய சலனம் ஏற்பட்டிருக்கிறது என்றால் மற்ற மனிதர்கள் எம்மாத்திரம்? கண்ணால் காணாத வரை மனித உள்ளத்தில் இத்தகைய லேசான நடுக்கம் ஏற்படுவது இயல்பானதே என்பதை விளக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் தங்களையும் அவர்களோடு இணைத்துக் குறிப்பிட்டார்கள். உள்ளத்தில் அவ்வாறு தோன்றுவது ஈமானின் குறைபாடு கிடையாது என்பதை உணர்த்துவதற்கே நபி (ஸல்) அவர்கள் இதனைச் சுட்டிக்காட்டினார்கள்.

نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى
“என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியபோது ஏற்பட்டதை விட, சந்தேகப்படுவதற்கு நாமே அதிகத் தகுதியுடையவர்கள்.
(புகாரி: 3372) ➚

மனிதர்களின் இத்தகைய பலவீனத்தைப் பயன்படுத்தி ஷைத்தான் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவான். வானம், பூமி, சூரியன், சந்திரன் போன்ற ஒவ்வொன்றையும் யார் படைத்தது என்ற கேள்விகளை உள்ளத்தில் எழுப்பி, அதற்கு அல்லாஹ் என்று சரியான பதிலை மனிதன் கூறிவிடும்போது, ஷைத்தான் அடுத்த கட்டமாக இறைவனையே யார் படைத்தது என்ற கேள்வியை உள்ளத்தில் போட்டுவிடுவான். இத்தகைய ஊசலாட்டம் ஏற்படும்போது அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோர வேண்டும்; அவ்வாறு செய்தால் அந்த எண்ணம் விலகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ هَذَا مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ
உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, “இதைப் படைத்தவர் யார்? உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்பான்; அந்த நிலையை ஒருவர் எட்டும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்.
(புகாரி: 3276) ➚

மேலும், மனிதனால் தன் மனதை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாது என்பதாலும், உள்ளங்கள் அல்லாஹ்வின் வசத்தில் இருப்பதாலும், உள்ளத்தில் எழும் தவறான எண்ணங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அத்தகைய தவறான எண்ணங்களைச் செயல்படுத்தாத வரையிலும், அல்லது வாய் திறந்து பேசிவிடாத வரையிலும் இறைவன் அடியார்களைக் குற்றம் பிடிப்பதில்லை. எனவே, உள்ளத்தில் இறைவனைப் பற்றிய தவறான ஊசலாட்டங்கள் தோன்றி மறையுமானால், அதை நினைத்து ஈமானில் குறைவு ஏற்பட்டுவிட்டதாக அஞ்சத் தேவையில்லை; ஆனால் அந்த எண்ணங்களை வெளிப்படையாகப் பேசிவிடக் கூடாது.

إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَசَتْ بِهِ صُدُورُهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ
தன் உள்ளத்தில் எழும் தவறான எண்ணங்களைச் செயல்படுத்தாத வரையிலும், அல்லது வாய் திறந்து பேசாத வரையிலும், அல்லாஹ் என் சமுதாயத்தினருக்கு அவற்றை மன்னித்துவிட்டான்.
(புகாரி: 5269) ➚

ஒருமுறை நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ (வாய் திறந்து பேசுவதற்கே அஞ்சக்கூடிய அளவுக்கு மோசமான சில எண்ணங்கள் எங்கள் உள்ளங்களில் ஏற்படுகின்றன) என்று முறையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், قَدْ وَجَدْتُمُوهُ (அத்தகைய நிலையை நீங்கள் உண்மையில் உணர்கிறீர்களா?) என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் ذَاكَ صَرِيحُ الإِيمَانِ (அதுவே தெளிவான ஈமானாகும்) என்றார்கள்; மற்றோர் அறிவிப்பில், تِلْكَ مَحْضُ الإِيمَانِ (அதுவே தூய ஈமானாகும்) என்று வந்துள்ளது. உள்ளத்தில் குழப்பங்கள் தோன்றுவதை வைத்து ஈமானில் குறைவு ஏற்பட்டுவிட்டதாக எண்ணிவிடக் கூடாது. மனிதன் மறுமையில் இறைவனை நேரில் காணும்போதுதான் அவனது நம்பிக்கை நூறு சதவீதமாக முழுமை பெறும்; இவ்வுலகில் சிந்தித்து நம்பும்போது சிறு சலனங்கள் ஏற்படுவது இயல்பானதே. அந்த எல்லை வரை மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையே மார்க்கத்தில் அவனுக்குரிய முழுமையான ஈமானாகக் கருதப்படுகிறது.

இறைவனின் மார்க்கம் மனிதனின் படைப்புத் தன்மையை அறிந்து வழங்கப்பட்டிருப்பதால், ஈமான் விஷயத்தில் ஏற்படும் இத்தகைய மன ஊசலாட்டங்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளில் முதலாவது இப்ராஹீம் (அலை) அவர்களின் நிகழ்வாகும்; அடுத்ததாக லூத் (அலை) அவர்களின் நிகழ்வை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

லூத் நபி அவர்களின் சமுதாயம் ஓரினச்சேர்க்கையில் மூழ்கியிருந்தது. அவர் அவர்களுக்கு எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் திருந்தவில்லை. இறுதியில் அவர்களை அழிக்க அல்லாஹ் முடிவெடுத்து, அதற்காக சில வானவர்களை அழகான மனிதத் தோற்றத்தில் அனுப்பி வைத்தான். அவ்வூரை அழிக்க வந்த அவ்வானவர்கள், லூத் நபி அவர்களிடம் விருந்தினர்களாக வந்தார்கள். அவர்கள் வானவர்கள் என்பது தொடக்கத்தில் லூத் நபி அவர்களுக்குத் தெரியாது.

தன் ஊர் மக்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்பதால், அழகான ஆண்களாக வந்திருந்த அவ்விருந்தினர்களைக் கண்டு லூத் நபி அவர்கள் அஞ்சினார். அவர்களை அவ்வூர் மக்கள் விட்டுவைக்க மாட்டார்கள் என்பதையும், அவர்களைப் பாதுகாப்பதற்குத் தமக்கு உடல் வலிமையோ அல்லது தமக்கு ஆதரவாக நிற்பதற்கு ஒரு வலிமையான குலமோ கோத்திரமோ இல்லையே என்பதையும் எண்ணி அவர் கவலைப்பட்டார். உங்களை என்னால் காப்பாற்ற இயலாது என்ற அச்சத்தில், لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً (உங்களைத் தடுக்கும் வலிமை எனக்கு இருக்க வேண்டாமா?), அல்லது آوِي إِلَىٰ رُكْنٍ شَدِيدٍ (ஒரு பலமான ஆதரவின் பக்கம் நான் ஒதுங்க வேண்டாமா?) என்று அவர் கூறினார்.

அதன் பிறகே அந்த வானவர்கள், தாம் மனிதர்கள் அல்லர் என்றும், அவ்வூரை அழிக்க வந்த வானவர்கள் என்றும் கூறி, விடியற்காலையிலேயே அவர்களுக்கு அழிவு வந்துவிடும் என்பதால் அஞ்ச வேண்டாம் என்று லூத் நபி அவர்களிடம் தெரிவித்தனர். லூத் நபி அவர்கள் அவ்விருந்தினர்களைக் காப்பாற்ற முனையும்போது, அல்லாஹ்வின் உதவியை முதலில் வெளிப்படையாகக் கூறாமல், தமக்கு உடல் பலமோ அல்லது குடும்ப ஆதரவோ இல்லையே என்று மனித பலத்தை மட்டுமே குறிப்பிட்டார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில், يَأْوِي إِلَىٰ رُكْنٍ شَدِيدٍ (வலிமையான ஆதரவின் பக்கம் ஒதுங்க நினைத்த) லூத் நபி அவர்களுக்கு يَرْحَمُ اللَّهُ لُوطًا (அல்லாஹ் அருள் புரிவானாக) என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பொதுவாக நாமும் கூட சில நேரங்களில் அல்லாஹ்வின் உதவியை எண்ணாமல், இன்னாரின் ஆதரவு இருந்தால் வாழ்ந்துவிடலாம், ஜெயித்துவிடலாம் என்று நினைத்துவிடுவதுண்டு. இது ஈமானில் ஒரு பலவீனமாகத் தெரிந்தாலும், ஒருவரிடம் உதவி கோரும்போது, உங்கள் உதவியால்தான் நான் பிழைக்க வேண்டும் என்று மனிதர்கள் கூறுவது உலக இயல்பாகும். உள்ளத்தில் அல்லாஹ் மீதான நம்பிக்கை உறுதியாக இருக்கும் ஒருவர், சூழ்நிலை காரணமாக இவ்வாறு பேசுவதை அல்லாஹ் பெருங்குற்றமாகக் கருதுவதில்லை. அதனால்தான், லூத் நபி அவர்கள் அத்தகைய வார்த்தையைக் கூறியபோதும் அல்லாஹ் அதைக் குற்றமாகப் பிடிக்கவில்லை. மனித உள்ளம் பலவீனமானது என்பதை உணர்த்தவே இப்ராஹீம் நபி மற்றும் லூத் நபி ஆகியோரின் இத்தகைய நிலைகளை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அடுத்ததாக, இதே ஹதீஸில் யூசுப் நபி அவர்களின் வரலாற்றையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எகிப்து மன்னரின் மனைவி யூசுப் நபி மீது தவறான ஆசை கொண்டு, பின்னர் பல பெண்களைத் துணை சேர்த்துக்கொண்டு அவர் மீது ஒரு பொய்ப்புகாரைச் சுமத்தி சிறைக்கு அனுப்பினாள். இத்தகைய அநியாயப் பழியின் காரணமாக யூசுப் நபி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். குர்ஆனில் குறிப்பிடப்படும் بِضْعَ سِنِينَ (சில ஆண்டுகள்) என்ற சொல்லானது மூன்று முதல் ஒன்பது வரையிலான ஆண்டுகளைக் குறிக்கும். அந்த வகையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது அவர் சிறையில் கழித்திருக்க வேண்டும். மனிதனின் சுதந்திரத்தைப் பறித்து, மனதை உடைத்துப் போடும் தனிமையான சிறை வாழ்க்கையில் அவர் பொறுமையுடன் இருந்தார். அங்கு அவர் சிலரின் கனவுகளுக்கு விளக்கம் அளித்தார்; அவையும் பலித்தன.

பின்னர் நாட்டின் மன்னர், ஏழு கொழுத்த மாடுகளை ஏழு மெலிந்த மாடுகள் உண்பது போன்று ஒரு கனவைக் கண்டு, அதற்கு விளக்கம் தெரியாமல் தவித்தபோது, சிறைத் தோழர் மூலமாக யூசுப் நபி அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் செழிப்பும், அதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பஞ்சமும் வரும் என்று யூசுப் நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். அவரது அறிவாற்றலைக் கண்டு வியந்த மன்னர், அவரை விடுதலை செய்து அழைத்து வருமாறு ஆள் அனுப்பினான்.

ஆனால் யூசுப் நபி அவர்கள் உடனடியாக சிறையிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார். மன்னரின் கருணையினால் விடுதலையான குற்றவாளியாக வெளியேறாமல், தம் மீது பழி சுமத்திய பெண்களை விசாரித்து, தாம் நிரபராதி என்பதை நிரூபித்த பிறகே வெளியே வருவேன் என்ற உறுதியோடு நின்றார். அவர் மன்னரின் தூதரிடம், ارْجِعْ إِلَىٰ رَبِّكَ (உம்முடைய எஜமானனிடம் திரும்பிச் செல்லும்), مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ (தங்கள் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் நிலை என்னவென்று விசாரிக்கச் சொல்லும்) என்று கூறி அனுப்பினார். அதன்படியே விசாரிக்கப்பட்டு, அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமான பின்னரே விடுதலையாகி வந்தார்.

யூசுப் நபி அவர்களின் அளப்பரிய பொறுமையை நபி (ஸல்) அவர்கள் வியந்து போற்றினார்கள். அத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்த ஒரு மனிதர், விடுதலையாவதற்கு எத்தகைய சமரசத்திற்கும் உடன்பட்டு உடனடியாக வெளியேறவே முனைவார். ஆனால் யூசுப் நபி அவர்களோ, இன்னும் பல ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிட்டாலும் பரவாயில்லை, தம் மீது சுமத்தப்பட்ட பொய்ப்பழி நீங்கி, தாம் குற்றமற்றவர் என்பது நிரூபணமான பின்னரே வெளியே வருவேன் என்று நின்றார்கள். அத்தகைய நீண்ட காலம் சிறையில் தாம் இருந்திருந்தால், விடுதலைக்கான அழைப்பு வந்தவுடனேயே அதை ஏற்றுக்கொண்டு வெளியேறியிருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ مَا لَبِثَ يُوسُفَ لَأَجَبْتُ الدَّاعِيَ
யூசுப் சிறையில் கழித்த நீண்ட காலத்தைப்போன்று நான் சிறையில் கழித்திருந்தால், விடுதலைக்கு அழைத்தவரின் அழைப்பை ஏற்றிருப்பேன்.
(புகாரி: 3372) ➚

சிறையிலிருந்து வெளியேறுவதற்கான அழைப்பு தமக்கு வந்திருந்தால் அதை ஏற்று தாம் உடனே புறப்பட்டிருப்பதாகவும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பது தமக்கு அடுத்தபடியான விஷயமாகவே இருந்திருக்கும் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். சிறைவாசம் என்பது அவ்வளவு கொடியது என்பதால், மனித பலவீனத்தின் காரணமாக அந்தத் துயரத்திலிருந்து விடுபட்டால் போதும் என்ற நிலைக்கு மனிதன் வந்துவிடுவது இயல்பு. ஆனால் யூசுப் (அலை) அவர்களோ, சிறையில் இருக்கும் சிரமங்களை விடவும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்று நிரூபிக்கப்பட வேண்டும் என்பதிலேயே உறுதியாக நின்றார்கள். அத்தகைய கூடுதல் மன உறுதி அனைவருக்கும் இருப்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்திய நபி (ஸல்) அவர்கள், மனிதர்கள் உள்ளத்தால் பலவீனமானவர்கள் என்பதையும், தாங்க முடியாத சூழல்களில் அவர்களின் எண்ணங்களில் சில சலனங்களும் குழப்பங்களும் ஏற்படுவது ஈமானைப் பாதிக்காது என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.

ஒவ்வொரு மனிதருடனும் அவனுக்குத் தவறான எண்ணங்களை ஊட்டி, நன்மைகளைத் தடுத்து தீமைகளைத் தூண்டுவதற்காக ஒரு ஷைத்தான் நியமிக்கப்பட்டுள்ளான். தங்களுக்கும் அவ்வாறு ஷைத்தான் உண்டா என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவனுக்கு எதிராக அல்லாஹ் தமக்கு உதவி செய்துவிட்டதால் அவன் நன்மையைத் தவிர வேறெதனையும் தமக்கு ஏவுவதில்லை என்று தெளிவுபடுத்தினார்கள்.

مَا مِنْكُمْ إِلَّا وَقَدْ وُكِّلَ بِهِ قَرِينُهُ مِنَ الْجِنِّ وَإِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ إِلَّا أَنَّ اللَّهَ أَعَانَنِي عَلَيْهِ فَلاَ يَأْمُرُنِي إِلاَّ بِخَيْرٍ
உங்களில் எவராயினும் அவருடன் ஒரு ஜின் நியமிக்கப்படாமல் இருப்பதில்லை. நபி (ஸல்) அவர்களிடம், “உங்களுடனுமா?” என்று கேட்கப்பட்ட போது, “எனக்கும்தான்; ஆயினும் அவனுக்கு எதிராக அல்லாஹ் எனக்கு உதவி செய்துவிட்டதால் அவன் நன்மையைத் தவிர வேறு எதனையும் எனக்கு ஏவுவதில்லை” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்)

இவ்வாறு ஒவ்வொரு மனிதருடனும் ஷைத்தான் இணைக்கப்பட்டிருப்பதால், يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவது) என்ற தனது பணியின்படி மனித உள்ளங்களில் தவறான எண்ணங்களையும் கொள்கைக் குழப்பங்களையும் அவன் விதைத்துக் கொண்டே இருப்பான். உள்ளத்தில் இத்தகைய சலனங்கள் ஏற்படுவதால் மட்டுமே ஈமான் பலவீனமடைந்துவிட்டது என்று கருதிவிடக் கூடாது. அந்த எண்ணங்களை நாவினால் வெளிப்படுத்தாத வரை மனிதன் குற்றவாளியாக மாட்டான். மாறாக, இறைவனை யார் படைத்தது, அவன் உண்மையாகவே இருக்கிறானா என்பன போன்ற வழிகேடான எண்ணங்கள் தோன்றும் போது, أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். அவ்வாறு பாதுகாப்புத் தேடிய உடனே அந்த எண்ணங்கள் விலகிவிடும்; அந்த விலகுதலே அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குரிய அத்தாட்சியாகவும் அமைந்துவிடும். மனித உள்ளத்தின் பலவீனங்களையும் கருத்தில் கொண்டே இஸ்லாமியக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

ஷைத்தானால் மனித உள்ளங்களில் எழும் தேவையற்ற சலனங்களும் சந்தேகங்களும் ஈமானைப் பாதிக்காது; அத்தகைய சூழல்களில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி மன உறுதியோடு இருப்பதே இறைநம்பிக்கையாளரின் கடமையாகும்.