08) எளிமை பேணிய நபிகளார்

நபிகளாரின் தனி தன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாட்டின் மாபெரும் தலைவராகவும் அல்லாஹ்வுடைய தூதராகவும் இருந்தபோதும் மக்களுடன் மக்களாக எப்படிப் பழகினார்கள், மக்களை எவ்வாறு மதித்தார்கள், அவர்களின் உரிமைகளைப் பேணி அவர்களுடைய நலனில் எவ்வாறு அக்கறை செலுத்தினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் போது, ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டும் பொறுப்பில் இருந்தவர்கள் செயல்பட்ட பொதுத் தண்ணீர்த் துறைக்கு வந்தார்கள். அங்கு ஜம்ஜம் கிணறு தவிர, பொதுமக்களின் அடிப்படை குடிநீர்த் தேவைக்காகத் தனியாகத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. யாருக்குத் தாகம் ஏற்படுகிறதோ அவர்கள் அங்கு சென்று நிர்வாகிகள் தரும் தண்ணீரைத் தங்கள் பாத்திரங்களிலும் தோல் பைகளிலும் வாங்கி அருந்துவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் தாகம் ஏற்பட்டபோது, மக்கள் அனைவரும் தண்ணீர் அருந்தும் அந்த இடத்திற்கு வந்தார்கள்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் அவர்கள், தம் மகன் ஃபள்லிடம், اذْهَبْ إِلَى أُمِّكَ فَأْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَابٍ مِنْ عِنْدِهَا (உன் தாயிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு அவரிடமிருந்து குடிக்கும் பானத்தைக் கொண்டு வா) என்று கூறினார். இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள், اسْقِنِي (எனக்குக் குடிக்கத் தாருங்கள்) என்று கூறி, மக்கள் குடிக்கும் அந்தத் தண்ணீரையே கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் அவர்கள், إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ (நிச்சயமாக அவர்கள் அதில் கைகளை விடுகிறார்களே) என்று கூறியபோதும், நபி (ஸல்) அவர்கள் மீண்டும் اسْقِنِي (எனக்கு அதையே தாருங்கள்) என்று கேட்டு, அனைவரும் அருந்திய அந்தப் பொதுத் தண்ணீரையே வாங்கி அருந்தினார்கள்.

பொதுவாகப் பலரும் கைகளை விட்டு எடுக்கும் பொதுத் தண்ணீர்த் துறைகளில் சாதாரண மக்கள்தான் தண்ணீர் அருந்துவார்கள்; தங்களை உயர்வாகக் கருதக்கூடியவர்கள் அத்தகைய தண்ணீரைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தமக்காகத் தம் பெரியம்மா வீட்டில் இருந்து தனியாகத் தண்ணீர் கொண்டு வரப்படுவதை விரும்பவில்லை. அவ்வாறு செய்தால், மற்ற மக்களை விடத் தாம் உயர்ந்தவர் என்றும், அவர்கள் மட்டமானவர்கள் என்றும் கருதுவதாகிவிடும் என்பதால், மக்கள் அருந்தும் தண்ணீரையே தாமும் அருந்தி, மக்களுடன் சமமாகத் திகழ்ந்தார்கள்.

அதன்பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் கிணற்றின் பகுதிக்கு வந்தார்கள். அப்போது அது கிணறாக இருந்ததால், மக்கள் அதில் வாளி போட்டுத் தண்ணீரை எடுத்துத் தோளில் சுமந்து சென்று விநியோகிக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், اِعْمَلُوْا فَإِنَّكُمْ عَلَى عَمَلٍ صَالِحٍ (நீங்கள் நற்செயலையே செய்கிறீர்கள், தொடர்ந்து செய்யுங்கள்) என்று ஊக்கப்படுத்தினார்கள். மேலும், لَوْلَا أَنْ تُغْلَبُوا (மக்கள் உங்கள் மீது நெருக்கடி ஏற்படுத்தி மிகைத்து விடுவார்கள் என்ற அச்சம் மட்டும் இல்லாவிட்டால்) நானும் இறங்கி வந்து தோளில் கயிற்றை மாட்டித் தண்ணீர் சுமந்து விநியோகிக்கும் பணியைச் செய்திருப்பேன் என்று கூறினார்கள். தாம் இதில் இறங்கினால் மக்கள் ஆர்வ மிகுதியால் நெருக்கடி ஏற்படுத்திவிடுவார்கள் என்பதாலேயே தவிர்த்தார்களே தவிர, பிறர் செய்யும் பணியைத் தாம் செய்யக் கூடாது என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த இரு நிகழ்வுகளும் புகாரியில் 1635-வது செய்தியாகப் பதிவாகியுள்ளன.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்காவின் தலைவர்களில் ஒருவராக இருந்த மஹ்ரமா என்பவர் வாழ்ந்தார். அவர் குரைஷிகளின் வரலாறுகளையும் முன்னோர்களின் சரித்திரங்களையும் நன்கு கற்றறிந்த அறிஞராக இருந்தார். மக்கா வெற்றியின் போது அவர் தம் மகன் மிஸ்வர் இப்னு மஹ்ரமாவுடன் இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்கு வந்தார். ஒருமுறை நபி (ஸல்) அவர்களுக்குச் சில ஆடைகள் அன்பளிப்பாக வந்திருப்பதை அறிந்து, தமக்கும் ஓர் ஆடை வேண்டும் என்று கருதி தம் மகனிடம், فَاذْهَبْ بِنَا إِلَيْهِ (நம்மை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்) என்று கூறினார்.

மகனுடன் நபி (ஸல்) அவர்களின் இல்லத்தின் வாயிலுக்கு வந்த மஹ்ரமா, உள்ளே சென்று அனுமதி கேட்காமல், வாசலில் நின்றுகொண்டே தம் மகனிடம், اُدْعُ لِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (நபி (ஸல்) அவர்களை எனக்காக வெளியே கூப்பிடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் நாட்டின் தலைவராகவும் அல்லாஹ்வுடைய தூதராகவும் இருக்கும்போது, அவர்களை வாசலில் நின்று அழைக்கச் சொல்கிறாரே என்று மகன் மிஸ்வர் தயங்கினார்.

அப்போது தந்தை மஹ்ரமா தம் மகனிடம், يَا بُنَيَّ إِنَّهُ لَيْسَ بِجَبَّارٍ (மகனே! நிச்சயமாக அவர்கள் கொடுங்கோலரோ, கர்வமுடையவரோ அல்லர்) என்று கூறினார். உலக மன்னர்களைப் போலத் தம்மைப் பெரிய மனிதராகக் காட்டிப் பிறரைத் தள்ளிவைக்கும் சுபாவம் நபி (ஸல்) அவர்களிடம் இல்லை என்பதையும், யார் அழைத்தாலும் முகம் சுளிக்காமல் வந்து சந்திக்கும் எளிமை அவர்களிடம் உண்டு என்பதையும் அவர் முழுமையாக உணர்ந்திருந்தார்.

“يَا بُنَيَّ إِنَّهُ لَيْسَ بِجَبَّارٍ (என் அருமை மகனே, நிச்சயமாக அவர் கொடுங்கோலர் அல்லர்)” என்று கூறி, நபி (ஸல்) அவர்களை அழைத்து வருமாறு தந்தை தன் மகனிடம் கூறுகிறார். மகனும் فَدَعَوْتُهُ (நான் அவர்களை அழைத்தேன்) என்பதற்கேற்ப நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தம் தந்தை வாசலில் நிற்பதாகவும் வெளியே வருமாறும் அழைக்கிறார். வந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறார். பொதுவாக எதையாவது கொடுக்க வந்திருந்தால் கூட வாசலில் இருந்து அழைக்கலாம்; ஆனால் இவர் அன்பளிப்பாக வந்த ஆடைகளில் தமக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டு வாங்குவதற்காக வந்தவர். அப்படிப்பட்ட சூழலிலும் கூட, நபி (ஸல்) அவர்களை வெளியே வந்து அழைக்குமாறு கூறுகிறார். மகனின் அழைப்பைக் கேட்டதும் فَخَرَجَ (அவர்கள் உடனே வெளியே புறப்பட்டு வந்தார்கள்) என்பதற்கேற்ப நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வருகிறார்கள். அப்போது தங்கம் முலாம் பூசப்பட்ட பட்டாடை ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அது பட்டு தடை செய்யப்படுவதற்கு முந்தைய காலமாகும்.

அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை நபி (ஸல்) அவர்கள் அவர் கேட்பதற்கு முன்பாகவே புரிந்து கொள்கிறார்கள். அன்பளிப்பாக வந்த ஆடைகளைப் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் தமக்கும் ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் வந்திருக்கிறார் என்பதை அறிந்து, வரும்போதே அந்த ஆடையை எடுத்து வந்து, “மஹ்ரமாவே, هَذَا خَبَأْنَاهُ لَكَ (இதை உனக்காகவே நாம் தனியாக எடுத்து வைத்திருக்கிறோம்)” என்று கூறுகிறார்கள். ஆடைகளைப் பங்கிட்டுக் கொடுக்கும் போதே நபி (ஸல்) அவர்கள் அவரை நினைவில் வைத்துத் தனியாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

அரபு சமுதாயத்தில் முதியவராகவும் வரலாறுகளை அறிந்த அறிஞராகவும் இருந்தவர் அவர். பொருட்களைப் பங்கிடும் போது நபி (ஸல்) அவர்கள், அவைக்கு வராதவர்களில் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும், யார் விடுபட்டிருக்கிறார்கள் என்று கவனித்து, தகுதியான சிலருக்குத் தனியாக எடுத்து வைத்திருந்தார்கள். இவர் கேட்க வருவதற்கு முன்பே, வந்தவர் பார்க்கும் விதமாக அந்த ஆடையைக் காட்டி, இது உனக்காகத்தான் தனியாக எடுத்து வைக்கப்பட்டது என்கிறார்கள். பொதுவாக உதவி கேட்டு வருபவர் வாசலில் நின்று ஒழுங்காகக் கேட்காமல் அழைத்தால், கொடுக்க நினைத்ததைக் கூட நாம் தர மறுத்துவிடுவோம். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அத்தகைய பெருமை துளியும் இருந்ததில்லை. தம்மை மற்றவர்களை விட உயர்வாகவோ மற்றவர்களைத் தாழ்வாகவோ அவர்கள் ஒருபோதும் கருதியதில்லை.

“நான் இறைத்தூதர், நான் சொல்வதைக் கேட்க வேண்டும்; உங்களுக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை” என்ற நபித்துவப் பொறுப்பில் மட்டுமே தங்களைத் தனித்துக் காட்டினார்கள். ஏனெனில் அது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கடமை. அதைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் தங்களை எல்லாரையும் போன்ற ஒரு மனிதராகவே கருதினார்கள்; அனைவரும் சமமானவர்களே என்று வாழ்ந்தார்கள். பொதுவாக ஓர் அன்பளிப்பு விநியோகிக்கப்படும் போது, வந்தவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். வராதவர்கள் விடுபட்டுப் போவார்கள். ஒரு பெரிய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வயது முதிர்ந்தவர்கள் யார், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் யார், விடுபட்டவர்கள் யார் என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்து, அவர்களுக்காகப் பொருளைத் தனியாக எடுத்து வைப்பது என்பது மிகச் சிறந்த ஒரு பண்பாகும். இந்தச் செய்தி ஸஹீஹுல் புகாரியில் 5862-வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

மேலும், இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட அந்த முதியவர் அழைத்தவுடனே நபி (ஸல்) அவர்கள் வெளியே வருகிறார்கள். மக்காவில் அவர் அந்தஸ்தோடு இருந்திருக்கலாம்; ஆனால் மதீனாவில் அவருக்கு எந்த அதிகாரமும் அந்தஸ்தும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதராக இருந்தபோதிலும், அவருக்குரிய மரியாதையையும் கண்ணியத்தையும் வழங்க வேண்டும் என்பதற்காக அவரது அழைப்பை ஏற்று நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் நபி (ஸல்) அவர்களை அணுகலாம் என்ற நம்பிக்கையை மக்களிடம் அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். மக்களோடு மக்களாக நபி (ஸல்) அவர்கள் எளிமையாக வாழ்ந்ததை இதன் மூலம் நாம் அறியலாம்.

அதேபோன்று, நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலை ஒட்டியிருந்த தம் இல்லத்தில் இருந்தபோது மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. கஅப் இப்னு மாலிக் என்பவரும் இப்னு அபீ ஹத்ரத் என்பவரும் பள்ளிவாசலில் நின்று சத்தமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் சண்டை சத்தம் நபி (ஸல்) அவர்களின் இல்லம் வரை கேட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து என்ன விவகாரம் என்பதை விளங்கிக் கொண்டார்கள். கஅப் என்பவர் கடன் கொடுத்தவர்; இப்னு அபீ ஹத்ரத் என்பவர் கடன் வாங்கியவர். குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பித் தராததால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றி சத்தம் எழுந்திருக்கிறது.

வீட்டிலிருந்து கவனித்த நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, கடன் கொடுத்தவரான கஅப் அவர்களை, “கஅப் அவர்களே!” என்று அழைக்கிறார்கள். அதற்கு அவர், “لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ (இதோ வந்துவிட்டேன் நபி (ஸல்) அவர்களே)” என்று கூறுகிறார். வாங்கியவரிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி தற்போது இல்லை என்பதையும், அவர் தமது இயலாமையை வெளிப்படுத்துவதையும் நபி (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள். கடன் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் மனிதர்கள் தங்கள் சக்திக்கு மீறி வாங்கிவிட்டு, பிறகு அதை அடைக்க முடியாமல் தவிப்பது மனித இயல்பு.

அந்த நபரின் நிலையை உணர்ந்த நபி (ஸல்) அவர்கள், “ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا (உன் கடனில் இவ்வளவு தள்ளுபடி செய்)” என்று பாதியைக் குறிக்கும் வகையில் சைகை செய்து கஅப் அவர்களிடம் தீர்ப்பளித்தார்கள். உடனே அவர், “لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ (நபி (ஸல்) அவர்களே, அவ்வாறே செய்துவிட்டேன்)” என்று ஏற்றுக்கொண்டார். பிறகு நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கியவரை அழைத்து, “மீதிப் பாதியைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அவரிடமும் பாதி கொடுக்கும் வசதி இருந்ததால், அதைச் செலுத்துமாறு பணித்தார்கள்.

பொதுவாக இருவர் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சண்டை போட்டுக் கொண்டால் நாம் அதில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவோம். விலக்கிவிடச் சென்றால் நம்மையும் சண்டைக்கு இழுத்து விடுவார்கள் என்று எண்ணுகிறோம். ஆனால் பிறர் சண்டையிட்டுக்கொண்டால் அவர்களின் காரணத்தைக் கேட்டு, அவர்களுக்கு மத்தியில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி வைப்பது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு கடமையாகும்.

நம் கண் முன்னால் இருவர் சண்டையிட்டுக் கொண்டால் நாம் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விலகிச் செல்லவோ, அல்லது சத்தம் போடுகிறார்களே என்று விரட்டிவிடவோ பார்ப்போம். ஆனால், மக்கள் மத்தியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்துக் காதுகொடுத்துக் கேட்பார்கள். அக்காலத்தில் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கடுமையாகப் பேசக்கூடிய மனிதர்களும் இருந்தார்கள்; நபி (ஸல்) அவர்களை எதிர்த்துப் பேசுவதற்கோ குறைகூறுவதற்கோ வாய்ப்புகள் இருந்தபோதும் நபி (ஸல்) அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் நலனையே முதன்மையாகக் கருதினார்கள்.

பள்ளியினுள் இருவர் கடன் விவகாரத்தில் கூச்சலிட்டுச் சண்டையிட்டுக் கொண்டபோது, அது பிறருக்கு இடையூறாக இருந்தபோதிலும் நபி (ஸல்) அவர்கள் அவர்களை விரட்டாமல், நேரில் வந்து பிரச்சினையைக் கேட்டறிந்தார்கள். ஒருவர் கடன் வாங்கியவர், மற்றொருவர் கடன் கொடுத்தவர் என்பதையும், வாங்கியவர் பாதியைத் திருப்பித் தரத் தயாராக இருக்க, கொடுத்தவர் அதை ஏற்க மறுக்கிறார் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமக்குரிய செல்வாக்கைப் பயன்படுத்தி, கடன் கொடுத்தவருக்கு அழகான ஓர் அறிவுரையை வழங்கி அப்பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து வைத்தார்கள். இதனால் அவர்களுக்கிடையேயான பகை நீங்கி, மீண்டும் சகோதரர்களாக வாழும் நிலை உருவானது. இவ்வாறு மக்களோடு மக்களாகப் பழகி, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளில் தலையிட்டுத் தீர்வு காண்பது நபி (ஸல்) அவர்களின் சிறந்த பண்பாக விளங்கியது.

அதேபோன்று, மக்கள் தங்களை உணவுக்கு அழைக்கும்போது நபி (ஸல்) அவர்கள் காட்டிய அணுகுமுறையும் போற்றுதலுக்குரியது. நம்மை ஒருவர் விருந்துக்கு அழைக்கும்போது, நமது விருப்பம் தெரியாமல் நமக்கு ஒவ்வாத உணவை அவர்கள் பரிமாறக்கூடும்; உப்போ எண்ணெயோ கூடியோ குறைந்தோ இருக்கலாம். அத்தகைய சூழ்நிலைகளில் உணவைச் சமைத்தவரின் மனம் புண்படாதவாறு நடந்துகொள்வது அவசியம். ஆனால் நாமோ, உணவில் உப்பு சரியில்லை, நெய் சேர்த்திருக்கலாம் என்றெல்லாம் குறை கூறி, ஆர்வத்தோடு சமைத்துப் பரிமாறியவர்களின் மனதை நோகடித்து விடுகிறோம். நபி (ஸல்) அவர்களோ தம் வாழ்நாளில் எந்தவொரு உணவிலும் குறை சொன்னதே இல்லை.

مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِلَّا تَرَكَهُ
நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் உணவில் குறை சொன்னதில்லை; விரும்பினால் உண்பார்கள், இல்லையென்றால் அதை விட்டுவிடுவார்கள்.
(புகாரி: 5409) ➚

விருந்தில் பல வகையான உணவுகள் வைக்கப்படும்போது, தமக்கு விருப்பமானதை மட்டும் உண்ண வேண்டுமே தவிர, பிடிக்காத உணவைப் பற்றிப் பேசிப் பரிமாறியவர்களை அவமதிக்கக் கூடாது. சில பெரிய மனிதர்களும் அறிஞர்களும் கூட, “இதை மனிதன் சாப்பிடுவானா? இதுதான் விருந்தா?” என்று நாகரிகமற்றுப் பேசுவதை நாம் காண்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அத்தகைய குணம் இருந்ததில்லை. ஒரு தையல்காரர் நபி (ஸல்) அவர்களைச் சுரைக்காய் குழம்பு வைத்து விருந்துக்கு அழைத்தபோது, அவருக்காகவே பாத்திரத்திலிருந்த சுரைக்காய் துண்டுகளைத் தேடித் தேடி நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்டார்கள். தாம் அளித்த உணவை நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்கிறார்கள் என்று அந்த எளிய மனிதர் மகிழ வேண்டும் என்பதற்காகவும், அவர் மனம் வருந்திவிடக் கூடாது என்பதற்காகவும் அவ்வாறு செய்தார்கள். அந்த அளவிற்கு அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவர்களாக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

பிறரின் அன்றாடப் பிரச்சினைகளைக் கனிவோடு தீர்த்து வைப்பதும், விருந்தோம்பலின் போது எளிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிலும் குறை காணாமல் வாழ்வதும் நாம் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து பெற வேண்டிய முக்கியமான படிப்பினைகளாகும்.

நபி (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்தபோதிலும், எளிய மக்களிடத்தில் அளப்பரிய அன்போடும் அக்கறையோடும் பழகினார்கள். அன்றைய காலகட்டத்தில் பள்ளிவாசலில் ஐந்து வேளைத் தொழுகைகளுக்கும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வர். நபி (ஸல்) அவர்களுக்குப் பல்வேறு ஆட்சிப் பொறுப்புகளும் சுfeedமைகளும் இருந்தபோதிலும், தொழுகைக்கு வருகின்ற ஒவ்வொருவரையும் முகமறிந்து நினைவில் வைத்திருந்தார்கள்.

தொழுகைக்கு வருகின்றவர்களில் எவரையேனும் தொடர்ந்து மூன்று நாட்கள் காணவில்லை என்றால், நபி (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி அக்கறையோடு விசாரிப்பார்கள். அவர் வெளியூர் சென்றிருந்தால் அவருக்காக துஆ செய்வார்கள்; உள்ளூரிலேயே இருந்தால் அவரைத் தேடிச் சென்று சந்திப்பார்கள்; அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் நலம் விசாரிக்கச் செல்வார்கள்.

إِذَا فَقَدَ الرَّجُلَ مِنْ إِخْوَانِهِ ثَلَاثَةَ أَيَّامٍ سَأَلَ عَنْهُ، فَإِنْ كَانَ غَائِبًا دَعَا لَهُ، وَإِنْ كَانَ شَاهِدًا زَارَهُ، وَإِنْ كَانَ مَرِيضًا عَادَهُ
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒருவரை மூன்று நாட்கள் காணாவிட்டால் அவரைப் பற்றி விசாரிப்பார்கள்; அவர் வெளியூர் சென்றிருந்தால் அவருக்காக துஆ செய்வார்கள்; அவர் உள்ளூரில் இருந்தால் அவரைச் சந்திப்பார்கள்; அவர் நோயுற்றிருந்தால் அவரை நலம் விசாரிப்பார்கள்.
(முஸ்னத் அபூ யஃலா)

அவ்வாறே ஒருமுறை மதீனாவைச் சேர்ந்த அன்சாரித் தோழர் ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிவாசலுக்கு வராததைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள், அவரைப் பற்றி மக்களிடம் விசாரித்தார்கள். அப்போது நபித்தோழர்கள், அவர் கடுமையான நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், முட்டையிலிருந்து வெளிவந்த பறவைக் குஞ்சைப் போல உடல் மெலிந்து, எழுந்து நிற்கக் கூட தெம்பின்றித் தளர்ந்து போயிருப்பதாகவும் கூறினர். மேலும், لَا يَدْخُلُ فِي رَأْسِهِ شَيْءٌ إِلَّا خَرَجَ مِنْ دُبُرِهِ (அவர் வாய்வழியாக உட்கொள்ளும் எதுவும் செரிக்காமல் உடனடியாக மலவாசல் வழியே வெளியேறிவிடுகிறது) என்றும், இதனால் அவர் பலவீனமடைந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், தாமே நேரில் சென்று அவரை நலம் விசாரிக்க முடிவெடுத்தார்கள். அபூபக்கர், உமர் உள்ளிட்ட சில தோழர்களுடன் அந்த நோயாளியின் இல்லத்திற்குச் சென்றார்கள். தோழர்கள் விவரித்தவாறே அவர் நலிவுற்றுக் கிடப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவருடைய உடல்நிலையைப் பற்றிக் கேட்டறிந்தார்கள். உணவு எதுவும் வயிற்றில் தங்காமல் வெளியேறிவிடுவதாக அவர் கூறினார். இந்த நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அவர் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் மறுமையின் நடுக்கத்தை விவரிக்கும் அல்-காரியா அத்தியாயத்தை ஓதித் தொழுவித்தார்கள். சுட்டெரிக்கும் நரக நெருப்பைப் பற்றிய அந்த எச்சரிக்கையைக் கேட்டு உள்ளம் நடுங்கிய அந்தத் தோழர், اَللّٰهُمَّ مَا كَانَ لِيْ مِنْ ذَنْبٍ أَنْتَ مُعَذِّبِيْ بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْ لِيْ عُقُوبَتِيْ فِي الدُّنْيَا (இறைவா, என்னுடைய பாவத்திற்காக நீ என்னை மறுமையில் தண்டிப்பதாக இருந்தால், அந்தத் தண்டனையை எனக்கு இம்மையிலேயே துரிதமாகத் தந்துவிடு) என்று துஆ செய்துள்ளார். மறுமை வேதனையைத் தாங்க முடியாது என்ற அச்சத்தினால் அவ்வாறு துஆ செய்த நாளிலிருந்தே தமக்கு இந்த நோய் ஏற்பட்டு உடல் தளர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், بِئْسَ مَا قُلْتَ (நீ மிக மோசமானதைக் கூறிவிட்டாய்) என்று அவரைக் கண்டித்து, ஒருபோதும் அவ்வாறு துஆ செய்யக் கூடாது என்று அறிவுறுத்திக் கூறினார்கள்:

فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
அல்லாஹ்விடத்தில், “எங்களுக்கு இம்மையிலும் நன்மையை வழங்குவாயாக, மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக, நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காத்தருள்வாயாக” என்று நீ கேட்டிருக்க வேண்டாமா?
(அல்குர்ஆன்: 2:201)➚

நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தவாறு அவர் துஆ செய்ததும், பிணைக்கப்பட்டிருந்த ஒட்டகம் அவிழ்த்துவிடப்பட்டால் எவ்வாறு துள்ளி எழுந்து சுறுசுறுப்பாக ஓடுமோ, அதுபோல முழுமையான குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார். அந்தத் தோழர் பெரிய தலைவரோ, பிரமுகரோ அல்லர்; பெயர்கூடக் குறிப்பிடப்படாத அளவுக்கு ஒரு சாதாரண மனிதர். ஆயினும், ஒரு பாமரத் தோழர் தொழுகைக்கு வரவில்லை என்பதைக் கூட மிகக் கவனமாகக் குறித்து வைத்து, நேரில் சென்று நலம் விசாரித்து, அவர் செய்த தவறான துஆவைச் சரிசெய்து வழிகாட்டினார்கள். தம்மிடம் வரக்கூடிய அனைத்து மக்களின் மீதும் சமமான அக்கறையும் நினைவாற்றலும் கொண்ட தலைவராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த சான்றாகும்.

அதேபோன்று, நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்றபோதும் மக்களின் சூழலை உணர்ந்து வழிநடத்தினார்கள். மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த நபித்தோழர்கள் பலரும் உணவிற்கும் உடைக்கும் வழியின்றி, பள்ளிவாசலின் திண்ணையிலேயே வாழ்ந்து வந்த மிகவும் நெருக்கடியான காலகட்டம் அது. பத்ருப் போரில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்ற நிலையில், ஒட்டுமொத்தப் படையிடமும் வெறும் முப்பது ஒட்டகங்கள் மட்டுமே இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு ஒட்டகத்திற்கு மூன்று பேர் என்று பங்கிட்டுப் பயணிக்க ஏற்பாடு செய்தார்கள்.

ஒட்டகத்தில் பொதுவாக இரண்டு பேர் பயணிக்கலாம். பலகைகள் கொண்டு பல்லக்கு போன்று சமப்படுத்தி அமைக்கப்பட்டால் மட்டுமே மூன்று பேர் வரை அமர முடியும். வெறும் முதுகில் ஏறிப் பயணிப்பதாக இருந்தால் இருவர் மட்டுமே செல்ல இயலும். பத்ருப் போரின்போது முந்நூறுக்கும் மேற்பட்ட தோழர்களுக்கு முப்பது ஒட்டகங்களே இருந்ததால், ஒரு ஒட்டகத்திற்கு மூன்று பேர் என்று முறை வைக்கப்பட்டது. இரண்டு பேர் ஒட்டகத்தில் ஏறிச் செல்ல, ஒருவர் நடைப்பயணமாக வர வேண்டும். குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு ஒட்டகத்தில் இருந்த ஒருவர் இறங்கி நடைப்பயணம் மேற்கொள்ள, நடந்து வந்தவர் ஒட்டகத்தில் ஏறிக்கொள்வார். இவ்வாறு மாறி மாறிப் பயணிக்கும் முறை வகுக்கப்பட்டது.

இப்பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் தமக்கெனத் தனி ஒட்டகத்தை ஒதுக்கிக் கொள்ளவில்லை; மாறாகத் தங்களோடு அலீ (ரலி) மற்றும் அபூ லுபாபா (ரலி) ஆகிய இருவரையும் இணைத்துக் கொண்டார்கள். அபூ லுபாபா (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்தில் மக்காவில் நபி (ஸல்) அவர்கள் இன்னல்களைச் சந்தித்துக்கொண்டிருந்த காலத்தில், மதீனாவிலிருந்து வந்து இஸ்லாத்தை ஏற்று, மதீனாவில் இஸ்லாம் பரவ அடித்தளமிட்ட தலைசிறந்த அன்சாரித் தோழர்களில் ஒருவராவார். நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி), அபூ லுபாபா (ரலி) ஆகிய மூவரும் ஒரு அணியாகப் பயணித்தார்கள்.

பயணத்தின்போது நபி (ஸல்) அவர்கள் சிறிது தூரம் ஒட்டகத்தில் பயணித்த பின், அவர்களின் நடைமுறைக்கான முறை வந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்திலிருந்து இறங்கி அடுத்தவரை ஏற்ற முற்பட்டபோது, அவ்விரு தோழர்களும் அதனை ஏற்க மறுத்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம், نَحْنُ نَمْشِي عَنْكَ (உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்) என்று கூறி, தாங்கள் இருவருமே நடந்து வருவதாகவும், நபி (ஸல்) அவர்களை ஒட்டகத்திலேயே தொடர்ந்து பயணிக்குமாறும் வேண்டிக்கொண்டார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வேண்டுகோளை ஏற்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை விட வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் உடல் வலிமையில் சளைத்தவர்களாக இருக்கவில்லை. தகுதியையோ தலைமையையோ காரணம்காட்டித் தமக்குச் சிறப்புச் சலுகை பெறுவதை அவர்கள் விரும்பவில்லை; தம்மால் இயலும்போது பிறர் அவ்வாறு சலுகை தருவதையும் ஏற்கவில்லை. அதேபோன்று, சிரமப்பட்டு நடந்து செல்வதன் மூலம் மறுமையில் கிடைக்கும் நன்மையை அடைவதில் பிறருக்கு விட்டுக்கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கவில்லை.

مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي وَلَا أَنَا بِأَغْنَى عَنِ الْأَجْرِ مِنْكُمَا
நீங்கள் இருவரும் என்னை விட உடல் வலிமை மிக்கவர்கள் அல்லர்; மேலும், உங்களை விட நன்மையில் தேவையற்றவனாகவும் நான் இல்லை.
(முஸ்னத் அஹ்மத்)

அனைவரையும் சமமாக மதிக்கும் மாண்பும், சகோதரத்துவமும், மறுமைப் பேறுகளை அடைவதில் காட்டிய ஆர்வமுமே நபி (ஸல்) அவர்களை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

இதேபோன்று மற்றொரு நிகழ்வும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பின்னரே இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏறத்தாழ அறுபது வயதிருக்கும். வயோதிகத்தின் காரணமாக நபி (ஸல்) அவர்கள் சிரமப்படக் கூடாது என்று கருதிய அப்பாஸ் (ரலி) அவர்கள், தோழர்களிடம் ஆலோசனை செய்தார். அப்பாஸ் (ரலி) அவர்கள், لَا أَدْرِي مَا بَقَاءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا (நபி (ஸல்) அவர்கள் நம்மிடையே இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை) என்று கூறி, அவர்கள் செல்லும் இடமெல்லாம் வெயில் படாமல் இருக்க ஒரு நிழல் குடையை அமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, لَوِ اتَّخَذْتَ عَرِيشًا يُظِلُّكَ (உங்களுக்கு நிழல் தரும் ஒரு குடையை நீங்கள் அமைத்துக்கொள்ளலாமே) என்று கூறினார்.

அரசர்களும் தலைவர்களும் தங்களுக்குத் தனி நிழற்குடையும் பரிவாரங்களும் வைத்துக்கொள்வதே உலக வழக்கம். ஆனால் நபி (ஸல்) அவர்களோ தமக்கென எந்தவொரு தனி அந்தஸ்தையோ சலுகையையோ நாடவில்லை. சாதாரண மக்களோடு மக்களாகவே இருக்க விரும்பினார்கள்.

لَا أَزَالُ بَيْنَ ظَهْرَيْهِمْ يَطَئُونَ عَقِبِي وَيُنَازِعُونِي رِدَائِي
மக்கள் என் குதிகால்களை மிதித்துக் கொண்டும், என் ஆடையை உரசிக்கொண்டும் நடக்கும் இந்த நிலையில்தான் நான் அவர்களிடையே நீடித்திருப்பேன்.
(முஸ்னத் அல்-பஸ்ஸார்)

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தோடு சென்றால், அதில் முதல் ஆளாகவோ கடைசி ஆளாகவோ நின்று தனித்துக் காட்டிக் கொள்ளாமல், அந்தக் கூட்டத்தில் ஒருவராகவே நடந்து செல்வார்கள். தோழர்கள் நபி (ஸல்) அவர்களை உயர்வாக வைத்து அழகுபார்க்க விரும்பியபோதும், நபி (ஸல்) அவர்கள் அத்தகைய உலகியல் பெருமைகளையும் தனி அந்தஸ்துகளையும் தமக்குரியதாக ஆக்கிக்கொள்ளவில்லை.

மற்றொரு முறை, நபி (ஸல்) அவர்கள் வீதியில் நடந்து சென்றபோது مَرَّ بِغُلَامٍ يَسْلَخُ شَاةً (ஓர் இளைஞர் ஆட்டை உரித்துக் கொண்டிருந்ததைக் கடந்து சென்றார்கள்). அந்த இளைஞருக்குச் சரியான முறையில் ஆடு உரிக்கத் தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், تَنَحَّ حَتَّى أُرِيَكَ (நான் உனக்கு உரித்துக் காட்டுகிறேன், சற்று விலகிக்கொள்) என்று கூறினார்கள்.

ஒருவர் தமது வியாபாரத் தேவைக்காக ஓர் ஆட்டை அறுத்து அதன் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற நபி (ஸல்) அவர்கள், அவர் தவறான முறையில் தோலை உரித்துக் கொண்டிருப்பதைச் சிறிது நேரம் கவனித்தார்கள். உடனே அவரிடம், تَنَحَّ حَتَّى أُرِيَكَ (நான் உனக்குக் காட்டும் வரை சற்று விலகி நில்) என்று கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அந்த இறைச்சிக்கும் தோலுக்கும் இடையில் தமது கையை அக்குள் வரை நுழைத்து, தோலை முழுமையாக உரித்தெடுத்துக் காட்டினார்கள். பின்னர், يَا غُلَامُ هَكَذَا فَاسْلَخْ (இளைஞனே! இவ்வாறுதான் உரிக்க வேண்டும்) என்று செயல்முறையாகக் கற்றுக் கொடுத்தார்கள். அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் புதிதாக உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்; இது அவ்வாறு செய்வது உளூவை முறிக்காது என்பதற்கான ஆதாரமாகவும் அமைந்தது.

அங்கு ஆடு உரித்துக் கொண்டிருந்தவர் ஓர் எளிய தொழிலாளி; சமூகத்தில் பெரிய பிரமுகரோ முக்கியத்துவம் வாய்ந்த மனிதரோ அல்ல. அத்தகைய ஒருவர் ஒரு வேலையைத் தவறாகச் செய்யும்போது, “இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்” என்று வாய்வார்த்தையாக வழிகாட்டிவிட்டுச் செல்வதே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் வெறும் அறிவுரையோடு நின்றுவிடாமல், நேரடியாகச் செயலில் இறங்கி விளக்கம் அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை எவ்வாறு செயல்முறையாகக் கற்றுக் கொடுத்தார்களோ, அதேபோன்று ஆடு உரிப்பதையும் செய்து காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் சிறுவயதில் கிராமப்புறச் செவிலித்தாயிடம் வளர்ந்து ஆடு மேய்த்த அனுபவம் கொண்டவர்களாக இருந்ததால், அவர்களுக்கு அந்த நுணுக்கங்கள் அனைத்தும் தெரிந்திருந்தன. அந்த அனுபவத்தைக் கொண்டு ஓர் எளிய மனிதருக்கும் நேரில் செய்து காண்பித்தார்கள்.

பிறருக்கு ஒரு காரியத்தைக் கற்றுக் கொடுக்கும்போது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல், எளிய மனிதர்களோடு கைகோர்த்து அதனைச் செயல்முறையாகச் செய்து காட்டுவதே நபி (ஸல்) அவர்களின் சிறந்த வழிகாட்டலாகும்.