22) முகத்தைத் திறக்காமல் உளூ செய்ய முடியாது.

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

ஒரு பெண் தன்னை நபிக்கு அன்பளிப்பாக வழங்க முன் வந்தார். நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் அவரை கூர்மையாகப் பார்த்தார்கள்.(புகாரி: 5030) . அந்தப் பெண்ணை நான் மண்ந்து கொள்கிறேன் என்று ஒருவர் முன் வருகிறார்.

அப்பெண்ணின் முகம் மறைக்கப்பட்டு இருந்தால் யார் என்று தெரியாத ஒருவரை திருமணம் செய்ய முன்வர மாட்டார்.

முகத்தை மறைத்து இருந்தால் ஏறெடுத்து கூர்மையாகப் பார்ப்பதில் அர்த்தம் இல்லை.

கப்ருக்கு அருகில் அழுது கொண்டிருந்த பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறை கூறினார்கள். பிரிதொரு காலத்தில் ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு இந்தப் பெண் தான் நபிகளால் அறிவுரை கூறப்பட்ட பெண் என்று அனஸ் (ரலி) கூறினார்.(புகாரி: 7154)

இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்தப் பெண்ணை அனஸ் ரலி பார்த்துள்ளார்கள். அதனால் தான் இந்தப் பெண் தான் அவர் என்று கூற முடிந்தது. முகம் மறைத்து இருந்தால் இந்தப் பெண் தான் அந்தப் பெண் என்று சொல்ல முடியுமா?

அடிமைப் பெண்கள் தவிர வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் (மனைவிமார்களாக உள்ளவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதும் சரியே. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 33:52)➚

இவ்வசனத்தில் பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் இனி வேறு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடுகின்றான். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று சட்டம் இருந்திருந்தால் அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்த போதும் என்று கூறுவது பொருளற்றதாகி விடும்.

இதிலிருந்து நபியவர்களின் காலத்தில் பெண்களின் முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எதேச்சையாக (அந்நியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

(முஸ்லிம்: 4363)

பெண்கள் முகத்தை மறைப்பவர்களாக இருந்தால் அந்நியப் பெண்ணைப் பார்த்து பார்வையைத் திருப்பிக் கொள்ளுதலுக்கு தேவை இல்லை.

இந்தச் சான்றுகளில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டி இவர் தான் சொர்க்கவாசிகளில் ஒருவர் என்று இப்னு அப்பாஸ் சொன்னார்கள். இந்தப் பெண் தான் வலிப்பு நோயால் தனது ஆடை விலகுவதாக நபிகளிடம் முறையிட்டார். அவருக்கு சொர்க்கம் உண்டு என்று நபிகள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்.

(புகாரி: 5652)

நபிகள் நாயகத்திடம் அந்தப் பெண் முறையிட்ட போதும் அவரை இப்னு அப்பாஸ் பார்த்துள்ளார். பிரிதொரு காலத்தில் அவரைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்கிறார். அப்படியானால் இரு சந்தர்ப்பங்களிலும் அந்தப் பெண் முகம் மறைக்காமல் தான் இருந்துள்ளார்.

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர் களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 24:61)➚

இவ்வசனம் பிறர் வீட்டில் உண்பது பற்றிய ஒழுங்குகளைப் பற்றிப் பேசுகிறது. ஒரு மனிதன் மற்றொரு குடும்பத்தாரோடு கலந்து உண்ணலாமா என்ற கேள்விக்கு இவ்வசனம் விடையளிக்கிறது.

ஒரு மனிதன் தனது பெற்றோர் வீட்டில் அவர்களுடன் உண்ணலாம். அது போல் சகோதரர்கள், சகோதரிகள், தந்தையின் உடன் பிறந்தவர்கள், தாயின் உடன் பிறந்தவர்கள் போன்ற உறவினர்கள் வீட்டில் ஆண்கள், பெண்கள் அனைவரும் சேர்ந்தும், தனியாகவும் உண்ணலாம்.

அது போல் நெருங்கிய நண்பர்களாக இருந்தால் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து உணவு உட்கொள்வது குற்றமில்லை.

அது போலவே நெருங்கிய உறவினராகவோ, உற்ற நண்பராகவோ இல்லாத குருடரையும், ஊனமுற்றோரையும், நோயுற்றவர்களையும் நம்முடன் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது தான் இவ்வசனம் கூறும் தெளிவான கருத்தாகும்.

அன்னிய ஆண்களும், பெண்களும் தனித்திருப்பதைத் தடை செய்திருக்கும் இஸ்லாம் நெருங்கிய உறவினர்கள் கூட்டாகச் சேர்ந்து உண்ணலாம்; அது குற்றமாகாது என்று இங்கே கூறுகிறது. முகம் திறந்திருந்தால் தான் வாயில் உணவைக் கொண்டு செல்ல முடியும்.

பெண்களின் முகம் கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டியதென்றால் படைத்த அல்லாஹ் இதனை அனுமதித்திருக்க மாட்டான்.

முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்கக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

முஸ்லிமல்லாத பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு முகத்திரை போட்டு கண்டபடி சுற்றும் இளவட்டங்களில் சரிபாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்,

வேசித்தொழில் செய்யும் முஸ்லிமல்லாத கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வது,

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது

இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதில் கேடு இல்லையோ அதைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்.