19) ஆண்களும், பெண்களும் தலைக்கு டை (சாயம்) அடிக்கலாமா?
தலைமுடி நரைத்தவர்கள் தலைக்குச் சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் அழகிற்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் சிலரிடம் இருக்கின்றது.
எனவே யாருக்கேனும் வெள்ளை நிறத்தில் முடி இருந்தால் அவர் அதன் நிறத்தை மாற்றுவது அவசியம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தாடிகளுக்கும் தலை முடிகளுக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
தலைமுடி நரைக்காமல் இருப்பவர்கள் அலங்காரத்துக்காக தலைக்குச் சாயம் பூசுகின்றனர். இவ்வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே நபிமொழிகளில் இதைப் பற்றி பேசப்படவில்லை.
ஆனால் இது தற்காலத்தில் அலங்காரமாக நவீனவாதிகளிடம் கருதப்படுகிறது. இதை வணக்கம் என்ற அடிப்படையிலோ, மதச் சடங்காகவோ இவர்கள் செய்யவில்லை.
வணக்கமாகவோ, மதச் சடங்காகவோ ஒருவர் ஒரு காரியத்தைச் செய்தால் அதற்குத் தான் மார்க்கத்தில் ஆதாரம் தேவை. ஆடை, அலங்காரம், காலாச்சாரம் போன்ற விஷயங்களில் மார்க்கத்திற்கு மாற்றமான அம்சம் இருந்தால் அதை நாம் தவிர்க்க வேண்டும். மார்க்கத்திற்கு முரணான அம்சம் இவற்றில் இல்லாவிட்டால் இவற்றைச் செய்தால் குற்றமில்லை.
நரைக்காத முடிக்குச் சாயம் பூசுவது அலங்காரம் என்ற வட்டத்துக்குள் வருவதால் இதற்கு மார்க்கத்தில் தடை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இச்செயல் மார்க்கத்திற்கு முரண்படவில்லை. எனவே நரைக்காத தலைமுடிக்கு டை அடிப்பது தவறல்ல.
கறுப்புச் சாயம் பூசக்கூடாது என்ற கருத்தில் இரு ஹதீஸ்கள் உள்ளன.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸ் முஸ்தக்ரஜ் அபீ அவானா, ஹாகிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இதற்கு மாற்றமான ஹதீஸும் வந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவை வந்தடைந்தார்கள். அபூபக்ர் அவர்கள் அதிக வயதுடையவராக இருந்தார்கள். எனவே அவர்கள் மருதானி மற்றும் கத்தம் ஆகியவைகளைக் கொண்டு தலைமுடிக்கு சாயம் ஏற்றி இருந்தார்கள்.
கதம் என்ற இலையை எழுதுவதற்கான மை தயாரிக்க பயன்படுத்துவார்கள். இந்த இலை கறுப்பு நிறம் கொடுக்கக் கூடியதாகும். இத்துடன் மருதானியையும் சேர்த்து அபூபக்ர் (ரலி) சாயம் ஏற்றினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சில நாட்கள் ஒன்றாகப் பயணித்து வரும் போது கறுப்புச் சாயம் ஏற்றியிருந்தார்கள் என்றால் நபிகளின் அங்கீகாரம் உள்ளது என்று தெரிகிறது.
கறுப்பைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கருப்பு சாயம் அடிக்கலாம் என்றும் இரு முரண்பட்ட ஹதீஸ்கள் உள்ளதால் கறுப்புக்கு தடை என்பது வலுவிழந்து விடுகிறது.
முரண்பட்ட இரு செய்திகள் வந்தால் இரண்டையும் விட்டு விட வேண்டும் என்ற பொதுவான விதியின் படி இரண்டையும் நிறுத்தி வைக்கலாம்.
அப்படியானால் கறுப்புக்கு தடையும் இல்லை. அனுமதியும் இல்லை என்று ஆகும்.
ஆனாலும் தடை இல்லாததால் சாயம் அடிக்கலாம் என்ற பொது அனுமதிக்குள் கறுப்புச் சாயமும் வந்து விடும்.
கறுப்புச் சாயத்தை தடை செய்து இன்னொரு ஹதீஸும் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
புறாவின் கழுத்தில் உள்ள (தூய கருப்பு நிறத்)தைப் போன்ற கருப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : நஸாயீ
இந்த ஹதீஸும் அறிவிப்பாளர்கள் சரியாக உள்ளனர். ஆயினும் இதில் கருத்துப் பிழை உள்ளது.
கடைசி காலத்தில் இப்படி ஒரு கூட்டம் தோன்றும் என்று இதில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் நபிகள் வாழும் காலத்திலேயே அபூபக்ர் அவர்கள் கறுப்பு சாயம் பூசி இருக்கும் போது கடைசி காலத்தில் தோன்றுவார்கள் என்று நபிகள் எப்படி சொல்லி இருப்பார்கள்?
மேலும் ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி), உஸ்மான் (ரலி), அப்துல்லாஹ் பின் ஜ அபர் (ரலி), உக்பா பின் ஆமிர் (ரலி), முகீரா பின் ஷுஃபா (ரலி) ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் கறுப்புச் சாயம் பூசுபவர்களாக இருந்துள்ளனர்.
இவர்கள் கடைசி காலத்தில் தோன்றியவர்களா? நபிகள் காலம் முதல் வழக்கத்தில் உள்ள ஒன்றை கடைசிக் காலத்தில் தோன்றுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்வார்கள்?
மேலும் புறாவின் வயிற்றில் உள்ள கருப்பு என்பதும் தெளிவற்றதாக உள்ளது. புறாக்களில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. எந்தப் புறா வகையின் வயிற்றுப் பகுதி என்று அறிய முடியாது.
இதன் காரணமாக இது நபிகளின் கூற்றாக இருக்க முடியாது என்பதால் எல்லா வண்ணச் சாயமும் தலைமுடிக்கும் தாடிக்கும் பூசலாமென்பதே சரியான கருத்தாகும்.