15) நக பாலீஷ், மருதானி, லிப்ஸ்டிக் கூடுமா?
அலங்காரப் பொருட்கள் மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை.
ஆனால் அலங்காரத்தை மஹ்ரம் அல்லாதவர்கள் முன்னால் வெளிப்படுத்தக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டு மென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
மருதானி, நகப்பாலிஷ் ஆகியவைகளை மேற்கண்டவர்கள் முன்னால் மட்டும் காட்டலாம். வெளியே செல்லும் அவசியம் ஏற்பட்டால் கை உரைகள் போட்டுக் கொண்டு அந்த அலங்காரத்தை மறைக்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போட்டு இருக்கும் போது வெளியெ செல்ல நேர்ந்தால் அதை அழித்து விட்டுச் செல்ல வேண்டும். அல்லது மாஸ்க் மூலம் மறைத்துக் கொள்ளலாம்.
அன்னிய ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவது அல்லாஹ்வின் கட்டளையை அப்பட்டமாக மீறுவதாகும்.
நகப் பாலிஷில் மற்றொரு விஷயமும் உள்ளது.
உளூ செய்யும் போது கழுவப்பட வேண்டிய உறுப்புக்கள் முழுவதிலும் அவசியம் தண்ணீர் பட வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.
இன்றைக்கு விற்கப்படும் நகப்பூச்சுக்கள் தண்ணீர் ஊடுருவுவதை தடுக்கக் கூடியவையாக உள்ளது. இவற்றைப் பூசிக்கொண்டு உளூச் செய்யும் போது நகங்களின் மீது தண்ணீர் படுவது தடுக்கப்படுகிறது. கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நகங்களில் தண்ணீர் படுவதை தடுக்கும்.
எனவே நகப்பாலிஷை வீட்டுக்குள்ளும் போடக் கூடாது. வெளியிலும் போடக் கூடாது.
தண்ணீர் ஊடுறுவுவதை தடுக்காத சாயத்தை நகங்களுக்கு தடவிக் கொண்டால் அதில் உளூவுக்கும், குளிப்புக்கும் எந்தத் தடையும் ஏற்படாது.
தண்ணீர் ஊடுருவதை தடுக்காத வகையில் நகப்பூச்சு கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.