17) சிரமங்களை குறைத்த நபிகளார்

நூல்கள்: நபிகளாரின் தனி தன்மைகள்

மார்க்கத்தின் பெயரால் மக்கள் எல்லை மீறும்போதும், தங்களைத் தாங்களே சிரமப்படுத்திக் கொள்ளும்போதும் நபி (ஸல்) அவர்கள் அதை உடனுக்குடன் கண்டித்துத் திருத்தி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு, புலம்பெயர்ந்து வந்த முஹாஜிர்களை உள்ளூர் அன்ஸாரிகளோடு இணைத்து சகோதரர்களாக்கினார்கள். வெளியூரிலிருந்து வந்த ஒவ்வொருவரையும் உள்ளூரில் இருப்பவர் பொறுப்பேற்று பராமரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி பாரசீகத்திலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த ஸல்மான் அல்ஃபார்ஸீ அவர்களையும், மதீனாவைச் சேர்ந்த அபூதர்தா அவர்களையும் சகோதரர்களாக இணைத்தார்கள்.

ஒருநாள் ஸல்மான் அல்ஃபார்ஸீ அவர்கள் அபூதர்தா அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது, அங்கே அபூதர்தா அவர்கள் இல்லை; அவருடைய மனைவி மட்டுமே இருந்தார். அவர் உலகப்பற்று அற்றவரைப் போல அழுக்கான ஆடையுடன் பராரி கோலத்தில் காட்சியளித்தார். இதைக் கண்ட ஸல்மான் அல்ஃபார்ஸீ அவர்கள், நீங்கள் ஏன் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், “أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا” (உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை) என்று பதிலளித்தார். அதாவது, அவர் தம்மை ஒரு துறவி போல ஆக்கிக்கொண்டு மனைவியைக் கவனிப்பதில்லை என்பதை ஸல்மான் அல்ஃபார்ஸீ அவர்கள் புரிந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் அபூதர்தா அவர்கள் வீட்டிற்கு வந்ததும், விருந்தினரான ஸல்மான் அல்ஃபார்ஸீ அவர்களுக்கு உணவளித்தார். ஸல்மான் அல்ஃபார்ஸீ அவர்கள் அபூதர்தா அவர்களையும் உண்ண அழைத்தபோது, தாம் நோன்பு நோற்றிருப்பதாகக் கூறினார். அதற்கு ஸல்மான் அல்ஃபார்ஸீ அவர்கள், “நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்” என்று கூறிவிடவே, வேறு வழியின்றி அபூதர்தா அவர்கள் நோன்பை விட்டுவிட்டு அவருடன் சேர்ந்து உண்டார். அன்று இரவு இருவரும் படுத்திருந்தபோது அபூதர்தா அவர்கள் தொழுகைக்காக எழுந்தார். அவரைத் தொழ விடாமல் தடுத்து தூங்க வைத்தார் ஸல்மான் அல்ஃபார்ஸீ. சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர் தொழ எழுந்தபோதும், “نُمْ” (தூங்குங்கள்) என்று சொல்லி அவரைப் படுக்க வைத்தார். இரவின் இறுதிப் பகுதியில், சுப்ஹுக்குச் சிறிது நேரம் இருக்கும்போது இருவருமாக எழுந்து இரவுத் தொழுகையைத் தொழுதார்கள்.

தம்முடைய வணக்கத்தையும் நோன்பையும் பாழாக்கிவிட்டாரே என்ற மனக்குறை அபூதர்தா அவர்களுக்கு ஏற்பட்டது. அப்போது ஸல்மான் அல்ஃபார்ஸீ அவர்கள், “إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا” (உமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமை உமக்கு இருக்கிறது), “وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا” (உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமை உமக்கு இருக்கிறது), “وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا” (உமது குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கிறது; எனவே ஒவ்வொருவருக்கும் உரிய உரிமையை வழங்கிவிடுங்கள்) என்று அறிவுரை கூறினார்.

அபூதர்தா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ஸல்மான் அவர்கள் செய்தவற்றையும் கூறிய அறிவுரையையும் பற்றி முறையிட்டார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “صَدَقَ سَلْمَانُ” (ஸல்மான் உண்மையையே கூறினார்) என்று அங்கீகரித்தார்கள். மார்க்கத்தில் ஈடுபாடு என்ற பெயரில் எல்லை மீறி, குடும்பக் கடமைகளைப் புறக்கணித்துவிட்டு எப்போதும் தொழுதுகொண்டும் நோன்பு வைத்துக்கொண்டும் இருப்பதற்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதையும், ஆன்மீகத்தின் பெயரால் குடும்ப வாழ்க்கையைப் பாழாக்கக் கூடாது என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

(புகாரி: 1968) ➚

அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மக்காவில் கஃபாவை தவாஃப் செய்துகொண்டிருந்தபோது ஒரு மனிதரைக் கண்டார்கள். அவர் தம் மூக்கில் கால்நடைகளுக்குப் போடுவது போல கடிவாளம் போன்ற கயிற்றைப் போட்டு, மற்றொருவர் கையில் கொடுத்து தன்னை இழுத்துச் செல்லுமாறு செய்து தவாஃப் செய்து கொண்டிருந்தார். தன்னை ஒரு மிருகத்தைப் போலத் தாழ்த்திக்கொண்டு வேதனைப்படுத்தினால் இறைவன் திருப்தியடைவான் என்ற அறியாமையினால் அவர் அவ்வாறு செய்தார். நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட காலத்தில் இத்தகைய மூடத்தனங்கள் மக்களிடம் காணப்பட்டன.

இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், உடனடியாக மனிதனின் மூக்கில் மாட்டப்பட்டிருந்த அந்தக் கயிற்றைத் துண்டித்துவிட்டார்கள். நடக்க முடியாத ஒருவராக இருந்தால் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தவாஃப் செய்ய வேண்டுமே தவிர, ஆடு மாடுகளைப் போல இழுத்துச் செல்லக் கூடாது என்று கண்டித்தார்கள்.

(புகாரி: 6703) ➚

இறைவனுக்காகத் தங்களைத் தாங்களே வேதனைப்படுத்திக் கொண்டால் அது அவனுக்குப் பிடிக்கும் என்றும், உடலை வருத்துவதுதான் ஆன்மீகம் என்றும் மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இஸ்லாம் அத்தகைய போலி ஆன்மீகத்தை அனுமதிக்கவில்லை. தாயை விடப் பல மடங்கு கருணையுள்ள இறைவன், தன் அடியார்கள் தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக் கொள்வதை விரும்புவானா என்ற விழிப்புணர்வை நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்.

ஒருமுறை ஒருவர் குர்பானிக்காக வாங்கிய ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு கால்நடையாகச் சென்றார். ஒட்டகம் என்பது மனிதர்கள் ஏறிச் செல்வதற்குரிய ஒரு வாகனம். அப்படியிருக்க அவர் அதன் மீது ஏறாமல், அதை இழுத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ ஏன் நடந்து செல்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இது குர்பானிக்கான ஒட்டகம் என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “اِرْكَبْهَا” (அதன் மீது ஏறிச் செல்) என்றார்கள். அவரோ இது குர்பானி ஒட்டகம் என்று மீண்டும் கூறினார்.

குர்பானிப் பிராணியாக இருந்தாலும், அதை அறுக்கும் நாள் வரை அதைப் பயன்படுத்துவது தவறல்ல. பசு மாடாக இருந்தால் பால் கறக்கலாம், காளை மாடாக இருந்தால் வண்டியில் பூட்டலாம், உழவுக்குப் பயன்படுத்தலாம். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அதன் மீது ஏறுமாறு பணித்தார்கள். அவரோ இது குர்பானிப் பிராணி என்று தயங்கியபோது, மூன்றாவது முறையாகக் கோபத்தோடு “اِرْكَبْهَا وَيْلَكَ” (அதன் மேல் ஏறிச் செல், உமக்குக் கேடுதான்) என்று கடிந்துகொண்டார்கள். பேணுதல் என்ற பெயரில் மனிதப் பயன்பாட்டிற்குரிய கால்நடைகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு வீணாகத் தங்களைச் சிரமப்படுத்திக் கொள்வது தவறு என்பதையும், வாகனம் இருக்கும்போது நடந்து சென்று உடலை வருத்தக் கூடாது என்பதையும் இதன் மூலம் தெளிவுபடுத்தினார்கள்.

மக்கள் கால்நடைகளைப் பல்வேறு தேவைகளுக்காகப் பயிற்றுவித்து வைத்திருந்தார்கள். உழவுக்கு, வண்டி பூட்டுவதற்கு, செக்கு இழுப்பதற்கு, கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு என்று தனித்தனியாகப் பழக்கப்படுத்துவார்கள். அதுபோல ஒருவர் வயலுக்கு நீர் இறைக்கப் பயன்படும் இரண்டு ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு இரவு நேரத்தில் மதீனாப் பள்ளிவாசலுக்கு வந்தார்.

அப்போது முஆத் இப்னு ஜபல் அவர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தார். முஆத் இப்னு ஜபல் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, அந்த நன்மையைப் பெற்றுக்கொண்ட பிறகு, தம்முடைய மஹல்லா பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தும் வழக்கமுடையவராக இருந்தார்.

முஆத் (ரலி) அவர்கள் தமது மஹல்லாவில் உள்ள பள்ளிவாசலில் இஷா தொழுகை நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் தமது நீர் இறைக்கும் ஒட்டகத்தை ஒருபுறம் நிறுத்திவிட்டு வந்து தொழுகையில் இணைந்துகொண்டார். தொழுகையைத் தொடங்கிய முஆத் (ரலி) அவர்கள் فَقَرَأَ بِسُورَةِ الْبَقَرَةِ (பகரா சூராவை ஓத ஆரம்பித்தார்) அல்லது اَوِ النِّسَاءِ (நிஸா சூராவை ஓத ஆரம்பித்தார்) என்று அறிவிப்பாளர் சந்தேகப்படும் அளவிற்கு மிக நீண்டதொரு சூராவை ஓதத் தொடங்கினார். இரண்டரை ஜுஸ் வரை உள்ள பகரா சூரா போன்ற பெரிய அத்தியாயங்களை இஷாவில் ஓதினால் தொழுகை முடிவதற்கு நீண்ட நேரமாகும் என்பதையும், தமக்கு நீர் இறைக்கும் வேலைகள் அதிகம் இருப்பதால் அவை பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்த அந்த மனிதர், ஜமாஅத்திலிருந்து விலகி, தாமே தனியாக ருகூவு, ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்துத் தொழுகையை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

ஜமாஅத்தை முறித்துவிட்டுச் சென்ற அந்த மனிதரைப் பற்றி முஆத் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, தொழுகைக்குரிய மரியாதையைக் கூட அளிக்காமல் சென்றுவிட்டார் என்று கருதி முஆத் (ரலி) அவர்கள் அவரைக் கண்டித்துப் பேசினார். இதை அறிந்த அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தாம் தொழுகையில் சேர்ந்தபோது முஆத் (ரலி) அவர்கள் பகரா சூராவை ஓத ஆரம்பித்ததாகவும், தமக்கு வேலைகள் இருந்ததால் தாம் ஜமாஅத்தை முறித்துவிட்டுத் தனியாகத் தொழுதுவிட்டுச் சென்றதாகவும், அதற்காக முஆத் (ரலி) அவர்கள் தம்மைத் தவறாக விமர்சிப்பதாகவும் முறையிட்டார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை அழைத்து வரச்செய்து, மக்களுக்குச் சிரமம் கொடுத்ததன் காரணமாகக் கடுமையான கோபமடைந்து, “முஆதே! நீர் குழப்பம் விளைவிக்கின்றீரா?” என்று மூன்று முறை கேட்டார்கள். மக்கள் ஒரு மணி நேரம் தொடர்ந்து நிற்க முடியுமா என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் ஏன் அவ்வளவு பெரிய சூராவை ஓத வேண்டும் என்றும், ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிக’, ‘வஷ்ஷம்ஸி வளுஹாஹா’, ‘வல்லைலி இதா யஃக்ஷா’ போன்ற சிறிய அத்தியாயங்களை ஓதித் தொழுதிருக்கக் கூடாதா என்றும் கடிந்துகொண்டார்கள். மேலும் உமக்கு பின்னால் தொழுகின்றவர்களில் வேலைகள் மற்றும் பல்வேறு தேவைகள் உள்ளவர்கள் இருப்பார்கள் என்பதைக் கவனித்து நடக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்கள்.

أَفَتَّانٌ أَنْتَ يَا مُعَاذُ فَلَوْلَا صَلَّيْتَ بِـ سَبِّحِ اسْمَ رَبِّكَ وَالشَّمْسِ وَضُحَاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَى
முஆதே! நீர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறீரா? நீர் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிக’, ‘வஷ்ஷம்ஸி வளுஹாஹா’, ‘வல்லைலி இதா யஃக்ஷா’ ஆகியவற்றை ஓதித் தொழுவித்திருக்கக் கூடாதா?
(புகாரி: 705) ➚

வணக்கம் என்ற பெயரில் உடலை வருத்திக்கொண்டு எல்லை மீறிச் செல்லக் கூடாது. குறிப்பாக ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் வணங்குகிறோம் என்ற பெயரில் தூக்கத்தை முற்றிலும் தவிர்த்து, கண்ணில் வெங்காயச் சாற்றை ஊற்றிக்கொண்டு விழித்திருப்பதெல்லாம் மார்க்கத்தில் இல்லை. தூக்கம் வந்தால் தூங்கிவிட வேண்டும்; எவ்வளவு இயலுமோ அவ்வளவுதான் வணங்க வேண்டும். உடல் தாங்க முடியாத ஒரு செயலைச் செய்யும்போது அதில் ஈடுபாடோ மன அமைதியோ இருக்காது; மாறாக வெறுப்புதான் ஏற்படும். தனித்துத் தொழுபவர் தமக்கு விருப்பமான அளவு தொழுதுகொள்ளலாம்; ஆனால் இமாமாக நின்று மக்களுக்குத் தொழுவிப்பவர் தொழுகையை அளவுக்கு அதிகமாக நீட்டினால் பின்னால் நிற்பவர்களுக்கு அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதையே நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ فَإِنَّ مِنْهُمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالْكَبِيرَ وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ
உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் அவர் சுருக்கமாக நடத்தட்டும்; ஏனெனில் அவர்களில் பலவீனர்களும் நோயாளிகளும் முதியவர்களும் இருப்பார்கள். அவர் தமக்காகத் தனியாகத் தொழுதால் தாம் விரும்பிய அளவு நீட்டிக்கொள்ளட்டும்.
(புகாரி: 703) ➚

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மற்றொரு மனிதர் வந்து, தம் பகுதியில் உள்ள இமாம் தொழுகையை مِمَّا يُطِيلُ بِنَا (எங்களுக்கு மிக நீட்டுவதனால்) தாம் ஸுப்ஹுத் தொழுகைக்குத் தாமதமாகச் செல்வதாக நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். தொழுகை நீண்ட நேரம் நீள்வதால் கடைசி நேரத்தில் போய்ச் சேர்ந்து கொள்ளலாம் என்று தாம் தாமதமாகச் செல்வதாக அவர் கூறினார். இதைக் கேட்டதும் فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ (அந்நாளில் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறியபோது கோபமடைந்ததைப் போன்று வேறெப்போதும் கோபமடைந்து நான் கண்டதில்லை) என்று அறிவிப்பாளர் கூறும் அளவிற்கு நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. தொழுகைக்குத் தாமதமாக வந்தவர் மீது கோபப்படாமல், மார்க்கத்தின் பெயரால் அளவுக்கு அதிகமாக நீட்டித் தொழுவித்த இமாம் மீதே நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள்.

வணக்க வழிபாடுகளை அளவுக்கு அதிகமாக நீட்டி நடத்தும்போது, மக்கள் அதன் மீது வெறுப்படைந்து தொழுகைக்கே வராமல் போகும் நிலை உருவாகிவிடும். கூட்டாக ஜமாஅத்தாகத் தொழும்போது பலதரப்பட்ட மக்கள் இருப்பார்கள். பலவீனர்கள், தேவைகள் உள்ளவர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச அளவுக்குள் சுருக்கமாகத் தொழுவிக்க வேண்டும்; அதிகமான வணக்கங்களைத் தனிப்பட்ட முறையில் செய்துகொள்ள வேண்டும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் கடும் கோபத்தோடு எச்சரித்தார்கள்:

إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ صَلَّى بِالنَّاسِ فَلْيُوجِزْ
உங்களில் மக்களை வெறுப்படையச் செய்பவர்கள் இருக்கிறீர்கள்; எனவே உங்களில் எவர் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும்.
(புகாரி: 702) ➚

வணக்கத்தின் பெயரால் மக்கள் எல்லை மீறிவிடக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் தொழுகையைச் சற்று நீட்டலாம் என்று நபி (ஸல்) அவர்கள் நினைப்பார்கள். அக்காலத்தில் பெண்களும் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வருவார்கள். அப்படித் தொழுகையை நீட்ட நினைக்கும் வேளையில் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுவிட்டால், அக்குழந்தையின் தாயின் மனவேதனையைக் கவனத்தில் கொண்டு, كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ (அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக) தாம் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக்கொள்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி: 707) ➚. பலரும் நின்று தொழுதாலும், குழந்தையின் அழுகையால் பாதிக்கப்படும் அந்த ஒரு தாயின் நிலையைக்கூடக் கவனித்து நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டார்கள். தொழுகை நடத்துபவர்கள் பின்னால் நிற்பவர்களில் பலவீனமான நிலையில் உள்ளவர்களையும் கவனத்தில் கொண்டுதான் தொழுகை நடத்த வேண்டும் என்பதற்கு இதுவே சான்றாகும்.

ஜமாஅத் தொழுகை மார்க்கத்தில் பெரிதும் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும். தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவதற்கு இருபத்தைந்து அல்லது இருபத்தேழு மடங்கு அதிக நன்மைகள் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனினும், அத்தகைய ஜமாஅத் தொழுகைக்கு வருவதில் கடுமையான சிரமங்கள் ஏற்படும்போது, மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்காமல் இருப்பதற்கான சலுகையையும் நபி (ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

ஒரு முறை கடும் குளிரும் காற்றும் வீசிய ஓர் இரவில், இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகைக்காகப் பாங்கு கூறும்போது, தொழுகைக்கு வாருங்கள் என்று பொருள்படும் வழக்கமான அழைப்பிற்குப் பதிலாக, أَلَا صَلُّوا فِي الرِّحَالِ (அறிந்து கொள்ளுங்கள், உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்) என்று கூறினார்கள். இத்தகைய கடுமையான குளிர் காற்றில் மக்கள் சிரமப்பட்டு பள்ளிவாசலுக்கு வர வேண்டியதில்லை என்பதை உணர்ந்து அவர்கள் அவ்வாறு கூறினார்கள். பின்னர் இது தொடர்பாக, குளிர் மற்றும் மழை உள்ள இரவுகளில் இவ்வாறு பாங்கு கூறுமாறு நபி (ஸல்) அவர்களே கட்டளையிட்டிருந்ததை ஆதாரமாகக் குறிப்பிட்டார்கள்.

ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ أَنْ يَقُولَ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ
குளிர் மற்றும் மழை உள்ள இரவாக இருக்கும்போது, “அறிந்து கொள்ளுங்கள், உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினுக்குக் கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள்.
(புகாரி: 666) ➚

கடுமையான குளிரோ அல்லது மழையோ இருக்கும்போது, மக்கள் மழையில் நனைந்து கொண்டும் குளிரில் நடுங்கிக் கொண்டும் சிரமப்பட்டு பள்ளிவாசலுக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பவர்கள் சிரமமின்றி வந்துவிடலாம்; ஆனால் தூரத்தில் இருந்து சிரமப்பட்டு வரவேண்டிய நிலையில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளலாம். அவ்வாறான சூழ்நிலைகளில், மக்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளட்டும் என்று பள்ளிவாசலிலேயே அறிவிக்க வேண்டும்.

இதேபோன்று ஒரு முறை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், மழை நாளில் முஅத்தின் பாங்கு சொல்லும்போது தொழுகைக்கு வாருங்கள் என்று கூறாமல், வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று அறிவிக்குமாறு பணித்தார்கள். மக்கள் இதனை வியப்புடனும் அதிருப்தியுடனும் பார்த்தபோது, “நான் சொல்வதைக் கண்டு நீங்கள் வெறுப்படைய வேண்டாம்; என்னை விடச் சிறந்த நபி (ஸல்) அவர்களே இவ்வாறு செய்திருக்கிறார்கள்” என்று فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي (என்னை விடச் சிறந்தவர் இதைச் செய்திருக்கிறார்) எனக் கூறி விளக்கமளித்தார்கள்.

மழை போன்ற இயல்பான சிரமங்களின் போதுகூட மக்களை மார்க்கம் சிரமத்திற்கு உள்ளாக்காத நிலையில், சிலர் பேணுதலின் பெயரால் மார்க்கத்தில் இல்லாத பல சிரமங்களைத் தாங்களாகவே உண்டாக்கிக் கொள்கிறார்கள். கடலுக்குள் முத்துக் குளிக்கச் செல்பவர்கள் தண்ணீருக்குள்ளேயே ருகூஃ, சஜ்தா செய்து தொழுவதும், அதை வீடியோ எடுத்துப் பேணுதலாகக் காட்டுவதும் அறியாமையேயாகும். மார்க்கத்தில் இல்லாதவற்றைச் சுயமாக உருவாக்கிக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

இஸ்லாம் மனிதர்களுக்கு எளிமையையே விரும்புகிறது; மார்க்கம் வழங்கிய சலுகைகளைப் புறக்கணித்துவிட்டுப் பேணுதலின் பெயரால் சிரமங்களைத் தாமாக உருவாக்கிக் கொள்வது அறியாமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய சமுதாயத்தினர் மார்க்கத்தின் பெயரால் வரம்பு மீறி, தங்களுக்குத் தாங்களே சிரமங்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஆனால் மக்களிடையே, “நாம் செய்யக்கூடிய சாதாரண வணக்க வழிபாடுகள் போதுமானவை அல்ல; பெரியார்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் என்பவர்கள்தான் தங்களை இறைவனுக்காக முழுமையாக அர்ப்பணித்து எந்நேரமும் அவனது நினைவிலேயே வாழும் மேல் தட்டில் இருக்கிறார்கள்; நாம் தொழுகை, நோன்பு போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலும் ஆன்மீகத்தில் அடித்தட்டில்தான் இருக்கிறோம்” என்ற தவறான எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது.

இத்தகையதொரு எண்ணம் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே சில நபித்தோழர்களுக்கும் ஏற்பட்டது. ஒருமுறை ஹன்ளலா (ரலி) அவர்கள் வீதியில் வந்து கொண்டிருந்தபோது அபூபக்கர் (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், كَيْفَ أَنْتَ يَا حَنْظَلَةُ (ஹன்ளலாவே, எப்படி இருக்கிறீர்கள்?) என்று நலம் விசாரித்தார்கள். அதற்கு ஹன்ளலா (ரலி) அவர்கள், نَافَقَ حَنْظَلَةُ (ஹன்ளலா நயவஞ்சகனாகிவிட்டான்) என்று மிகுந்த கவலையோடு கூறினார்கள். அதைக் கேட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் வியப்புற்று, சுப்ஹானல்லாஹ், என்ன சொல்கிறீர்கள் என்று வினவினார்கள். அதற்கு ஹன்ளலா (ரலி) அவர்கள், نَكُونُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُذَكِّرُنَا بِالنَّارِ وَالْجَنَّةِ (நாம் நபி (ஸல்) அவர்களிடம் இருக்கும் போது, அவர்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் நாம் நேரில் காண்பது போன்று நினைவூட்டுகிறார்கள்) என்றும், ஆனால் அவர்களை விட்டு வெளியே வந்து மனைவி, மக்கள் மற்றும் தொழில் போன்ற உலகக் காரியங்களில் ஈடுபடும்போது, فَنَسِينَا كَثِيرًا (நிறைய விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம்) என்றும் விளக்கினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் இருக்கும்போது ஒரு நிலையிலும், வெளியே வந்ததும் வேறொரு நிலையிலும் இருப்பது இரட்டை நிலையான நயவஞ்சகத்தனம் இல்லையா என்று அஞ்சியே அவ்வாறு கூறியதாகத் தெரிவித்தார்கள்.

அப்போது இந்த உம்மத்திலேயே முதலிடத்தில் இருக்கும் அபூபக்கர் (ரலி) அவர்களும், அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது; அப்படியானால் நானும் நயவஞ்சகனாகத்தானே இருப்பேன் என்று கூறினார்கள். இறைவனோடு முழுமையாக ஒன்றிப்போன நிலை ஒரு மனிதருக்கு இருக்குமானால், இந்த உம்மத்தில் முதன்முதலாகச் சொர்க்கம் செல்வார் என்று நபி (ஸல்) அவர்களால் சான்றளிக்கப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களுக்குத்தான் அது இருந்திருக்க வேண்டும். அவரே தமக்கும் அந்த நிலைதான் இருக்கிறது என்று கூறி, “வாருங்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கேட்போம்” என்று ஹன்ளலா (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கு சென்று, நபி (ஸல்) அவர்களிடம் இருக்கும் போது ஏற்படும் ஆன்மீக உணர்வும் மார்க்க ஈடுபாடும், வெளியே வந்து உலகக் காரியங்களில் ஈடுபடும்போது குறைந்து விடுவதைக் கூறி விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனித இயல்பை விளக்கிப் பதிலளித்தார்கள்:

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ تَدُومُونَ عَلَى مَا تَكُونُونَ عِنْدِي لَصَافَحَتْكُمُ الْمَلَائِكَةُ عَلَى فُرُشِكُمْ وَفِي طُرُقِكُمْ وَلَكِنْ يَا حَنْظَلَةُ سَاعَةً وَسَاعَةً
என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! என்னிடத்தில் நீங்கள் இருக்கும் இந்த நிலையிலேயே எப்போதும் நீடித்திருப்பீர்களானால், உங்கள் படுக்கைகளிலும் உங்கள் பாதைகளிலும் மலக்குகள் உங்களிடம் முஸாபஹா செய்வார்கள். என்றாலும் ஹன்ளலாவே, சிறிது நேரம் அப்படி, சிறிது நேரம் இப்படித்தான்!
(முஸ்லிம்: 2750) ➚

மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரியான இறையச்ச உணர்விலேயே இருக்க முடியாது என்பதை நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் தெளிவுபடுத்தினார்கள். ஒரு நல்ல உபதேசத்தைக் கேட்கும்போதும், பள்ளிவாசலில் இருக்கும்போதும், குர்ஆனை ஓதும்போதும் உள்ளத்தில் ஏற்படும் அச்சமும் ஈடுபாடும், உலக விவகாரங்களுக்கு வரும்போது குறையத்தான் செய்யும். ரமலான் மாதத்தில் இருக்கும் இறையச்சம் மற்ற பதினொரு மாதங்களிலும் இருப்பதில்லை; வெள்ளிக்கிழமை இருக்கும் பயபக்தி வாரத்தின் மற்ற ஆறு நாட்களிலும் நீடிப்பதில்லை. மனித இயல்பே சில நேரங்களில் அதிக ஈடுபாட்டுடனும், பல நேரங்களில் குறைவான ஈடுபாட்டுடனும்தான் இருக்கும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறது. எப்போதும் அந்த ஆன்மீக உணர்விலேயே நிலைத்திருந்தால் மனிதன் மலக்குகளைப் போல மாறிவிடுவான்; மலக்குகள்தான் தவறு செய்யாமல் எந்நேரமும் வழிபாட்டிலேயே இருப்பவர்கள். எனவே, எப்போதும் முழுமையான இறையச்சத்திலேயே மூழ்கியிருக்க வேண்டும் என்பது மனிதர்களுக்குச் சாத்தியமானது அல்ல.

இதிலிருந்து, உலகத்தை முற்றிலுமாக மறந்து தவம் செய்வது போன்ற ஆன்மீக நிலை இஸ்லாத்தில் கிடையாது என்பது தெளிவாகிறது. மகான்கள் என்று சொல்லப்படுபவர்கள் தொழும்போது தலையில் பறவை கூடு கட்டும் அளவுக்கு உலகத்தையே மறந்து நின்றார்கள் என்றெல்லாம் கூறப்படும் கதைகள் மனித இயல்புக்கு எதிரானவை. மனிதர்களில் மிகச் சிறந்தவரான அபூபக்கர் (ரலி) அவர்களாலேயே எப்போதும் அதே நிலையில் நீடித்திருக்க முடியவில்லை எனும் போது, வேறு எவராலும் அப்படி இருக்க முடியாது. எனவே, சில நேரங்களில் இறையச்சமும், சில நேரங்களில் உலக ஈடுபாடும் இருப்பதால் நாம் மார்க்கத்தில் பின்தங்கிவிட்டோம் என்று கருத வேண்டியதில்லை. அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் நம்மீது கடமையாக்கிய வணக்க வழிபாடுகளைச் செய்துவிட்டு, தடுக்கப்பட்ட காரியங்களைத் தவிர்த்து, எவ்வித உறுத்தலும் இன்றி உலக விவகாரங்களில் ஈடுபடலாம். அவ்வாறு ஈடுபடுவது ஈமானுக்கு எதிரானதோ அல்லது ஆன்மீகத்தில் தாழ்ந்த நிலையோ கிடையாது.

இதேபோன்று ஹஜ்ஜின் போது மினாவில் கல்லெறிவதிலும் சிலர் வரம்பு மீறிச் செயல்படுவதைக் காண முடிகிறது. இப்ராஹீம் நபி அவர்கள் ஷைத்தானை விரட்டுவதற்காகக் கல்லெறிந்ததை நினைவுகூரும் ஓர் அடையாளமாகவே நாம் அங்கே கல்லெறிகிறோம். அங்கே ஷைத்தான் நேரில் நிற்பதில்லை. ஆனால் சிலர், அங்கே ஷைத்தானே நிற்பதாக எண்ணிக்கொண்டு, அவன் மீதான வெறுப்பைக் காட்டுவதற்காகப் பெரிய பாறாங்கற்களையும் செங்கற்களையும் கொண்டு எறிகிறார்கள். அறியாமைக் காலத்திலேயே இத்தகைய போக்கு மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சுண்டி எறியக்கூடிய அளவிற்குப் புளியங்கொட்டை அளவிலான சிறிய பொடிக்கற்களைப் பொறுக்கி வருமாறு கூறினார்கள். அவர்கள் சிறிய கற்களைக் கொண்டுவந்து கொடுத்தபோது, நபி (ஸல்) அவர்கள் அதைக் கையில் வைத்துக்கொண்டு, இத்தகைய அளவே போதுமானது என்று சுட்டிக்காட்டினார்கள். மேலும், وَإِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي الدِّينِ (மார்க்கத்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்) என்று கூறி, முந்தைய சமுதாயங்கள் அழிந்ததற்குக் காரணமே இத்தகைய வரம்பு மீறல்தான் என்பதை உணர்த்தினார்கள்:

فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ
நிச்சயமாக உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்து போனதெல்லாம் (மார்க்கத்தில் வரம்பு மீறியதால்தான்).
(நஸயீ 3057)

முந்தைய சமுதாயங்கள் அழிந்து போனதற்குக் காரணமே بِالْغُلُوِّ فِي الدِّينِ (மார்க்கத்தில் எல்லை மீறியது) தான். மார்க்கத்தில் தேவையான அனைத்தையும் அல்லாஹ் போதுமான அளவுக்குக் கற்றுத் தந்துவிட்டான். ஆனால், மார்க்கம் சொல்லித்தந்த வரம்பை மீறி, “அல்லாஹ்வும் அவனது தூதரும் குறைவாகத்தான் தந்திருக்கிறார்கள்; இது போதாது, இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்” என்று கருதி, புதிதாக ஒன்றை உருவாக்கினால் அது மனிதனை அழித்துவிடும். அழிந்துவிடுவார்கள் என்பது உடலால் மரணித்துப்போவதை மட்டுமல்ல, மார்க்கத்தை விட்டே வெளியேறி வழிதவறிப் போவதையும் குறிக்கிறது. முந்தைய சமுதாயங்கள் இறைத்தூதர்கள் கொண்டுவந்த மார்க்கத்தை விட்டு விலகி வழிகெட்டதற்குக் காரணம் எல்லை மீறியதுதான். ஈஸா (அலை) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் அவர்களைக் கடவுளின் மகன் என்று கூறி வரம்பு மீறியதும் இதற்கு ஓர் உதாரணம். ஹஜ்ஜில் கல்லெறியும் விஷயத்தில்கூட மார்க்கம் நிர்ணயித்த அந்த எல்லையைத் தாண்டக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சில காரியங்களுக்குச் சலுகை அளித்தார்கள். ஆனால் சிலரோ, “நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்யலாம் என்று அனுமதித்திருந்தாலும், இதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது; இது போதாது” என்று நினைத்து அந்த எல்லையை மீறினார்கள். மார்க்கம் ஒரு சலுகையை வழங்கினால் அதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, குளிப்பு கடமையான ஒருவருக்குக் கடுமையான குளிர் நிலவும் வேளையில், குளித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற நிலை இருந்தால், அவர் தயம்மும் செய்துகொள்ள மார்க்கத்தில் சலுகை உண்டு. அதை விடுத்து, பேணுதலான செயல் என்ற பெயரில் “உயிரே போனாலும் நான் குளித்துதான் தீருவேன்” என்று பிடிவாதம் பிடிப்பதுதான் மார்க்கத்தில் எல்லை மீறுவதாகும். இவ்வாறு சலுகை அளிக்கப்பட்ட விஷயங்களை மக்கள் தவிர்த்து வரம்பு மீறுவது நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்குச் சென்றபோது, அவர்கள் மக்களை ஒன்று கூட்டி ஓர் உரையாற்றினார்கள்.

مَا بَالُ أَقْوَامٍ يَتَنَزَّهُونَ عَنِ الشَّيْءِ أَصْنَعُهُ فَوَاللَّهِ إِنِّي لَأَعْلَمُهُمْ بِاللَّهِ وَأَشَدُّهُمْ لَهُ خَشْيَةً
நான் செய்யக்கூடிய ஒரு காரியத்தை விட்டும் விலகிக்கொள்கிறார்களே அத்தகைய மக்களின் நிலை என்னவாகப் போகிறது? அல்லாஹ்வின் மீது ஆணையாக, நிச்சயமாக நான் அவர்களை விட அல்லாஹ்வை நன்கு அறிந்தவனாகவும், அவனை அதிகம் அஞ்சக்கூடியவனாகவும் இருக்கிறேன்.
(புகாரி)

அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய, அவனைப் பற்றி மிக ஆழமாகப் புரிந்து வைத்துள்ள நபி (ஸல்) அவர்களே குறிப்பிட்ட ஓர் அளவைச் செய்து காட்டி இது போதுமானது என்று வழிகாட்டும்போது, மனிதர்களுக்கு மட்டும் ஏன் அதைவிடக் கூடுதலாகச் செய்யத் தோன்றுகிறது? மார்க்கத்தின் பெயரால் எல்லை மீறியதுதான் அனைத்து வழிகேடுகளுக்கும் கொள்கைக் குழப்பங்களுக்கும் மூலக்காரணமாக அமைந்தது. சமுதாயத்தில் பலவிதமான பித்அத்கள், அனாச்சாரங்கள், இறந்தவர்களுக்கு தர்கா எழுப்புதல், கொடியேற்றம் மற்றும் ஊர்வலங்கள் நடத்துதல் போன்றவை உருவானதற்குக் காரணம், இஸ்லாம் வழங்கியது போதாது என்று நினைத்ததும் எல்லை மீறியதும்தான்.

ஆரம்ப காலத்தில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த நபித்தோழர்கள் கடுமையான வறுமையில் வாழ்ந்தார்கள். ஒரு பேரீச்சம்பழமும் தண்ணீரும் மட்டுமே அன்றைய உணவாக இருக்கும் நிலைகூட இருந்தது. அப்பொழுது அவர்களுக்கு இயற்கை சார்ந்த உடல்தேவைகள் இருந்தும், மஹர் கொடுத்துப் பராமரிக்கும் பொருளாதார வசதி இல்லாததால் அவர்களால் திருமணம் செய்ய முடியவில்லை. இதனால் விபச்சாரம் போன்ற தவறுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆண்மை நீக்கம் செய்துகொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) போன்ற நபித்தோழர்கள் இதுபற்றிக் கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி மறுத்தார்கள். ஆண்மை என்பது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருள் கொடை; அதை இழக்கக் கூடாது என்றும், இச்சையைக் கட்டுப்படுத்த நோன்பு போன்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமே தவிர ஆண்மை நீக்கம் செய்யக்கூடாது என்றும் வழிகாட்டினார்கள்.

வறுமையின் காரணமாகத் திருமணம் செய்ய இயலாமல், தவறான எண்ண அலைகளிலிருந்து விடுபட ஆண்மை நீக்கம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பல நபித்தோழர்களுக்கு இருந்தது. அவர்கள் அனைவரின் சார்பாகவே உஸ்மான் இப்னு மழ்வூன் (ரலி) சென்று அனுமதி கேட்டார்.

وَلَوْ أَذِنَ لَهُ لَاخْتَصَيْنَا
அவருக்கு மட்டும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால், நாங்கள் நிச்சயமாக ஆண்மை நீக்கம் செய்திருப்போம்.
(புகாரி)

இறைவணக்கத்திற்குத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் சிலர் இதனை எண்ணினார்கள். ஆண்மை நீக்கம் செய்துவிட்டால் மனைவி, குழந்தைகள், குடும்பம் என்ற பொறுப்புகளோ, அவர்களுக்காக உழைக்க வேண்டிய தேவையோ இருக்காது; சிறிய அறையும் குறைந்த உணவும் போதும் என்பதால், மீதமிருக்கும் முழு நேரத்தையும் தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகளிலேயே கழித்துவிடலாம் என்று நினைத்தார்கள். இதனால்தான் பிற மார்க்கங்களில் துறவறத்தை வற்புறுத்தி, திருமணம் செய்யாமல் விலகி இருந்தால்தான் இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்க முடியும் என்ற தவறான வழியை உருவாக்கினார்கள்.

துறவறம் போன்ற சிந்தனைகளை நபி (ஸல்) அவர்கள் வன்மையாக மறுத்திருக்கிறார்கள். திருமணம் செய்ய வசதியில்லாத காரணத்தால் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள அனுமதி கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்ததாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (புகாரி: 4786, 4787) ➚. எனவே, மார்க்கத்தின் பெயரால் மனிதன் தன் இயல்பான சுகங்களையும் இன்பங்களையும் சுதந்திரங்களையும் இழந்துவிடக் கூடாது. உலக இன்பங்களைத் துறந்துவிட்டுத்தான் மார்க்கத்திற்குள் வர வேண்டும் என்பதில்லை. அனுமதிக்கப்பட்டவற்றை உண்டு பருகி, வாழ்வின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே இறைவன் ஏவிய கடமைகளை நிறைவேற்றலாம். நாம் செய்யும் வணக்கங்கள் போதவில்லை என்று நினைத்துக்கொண்டு மார்க்கத்தில் புதிய வழிமுறைகளை உருவாக்கக் கூடாது. நன்மைகளை அதிகமாகச் செய்ய விரும்பினால் மார்க்கத்தில் காட்டித் தரப்பட்ட வணக்கங்களையே அதிகம் செய்ய வேண்டும்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரி ஒருவர், மதீனாவிலிருந்து மக்காவிற்கு இறையில்லத்தை நோக்கி நடந்தே சென்று ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஹஜ் செய்வது நன்மையான காரியம் என்பதால், நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே சென்றால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்று அவர் கருதினார். இன்றும் கூட சிலர் நடந்தே ஹஜ் செய்வதைப் பெரிய சாதனையாகக் கருதுவதையும், மார்க்கப் பணிகளுக்காக வாகன வசதிகள் இருக்கும்போது கூட தேவையின்றி நடந்தே செல்வதையும் பார்க்கிறோம். ஆனால், அரை மணி நேரத்தில் சென்றுவிட முடிகிற காரியத்திற்குப் பல நாட்கள் சிரமப்பட்டு நடப்பது நன்மை கிடையாது; வாகன வசதி இல்லாத காலத்திற்குரியதே நடைப்பயணம். தன் சகோதரியின் நேர்ச்சை குறித்து உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கேட்டபோது, ஹஜ் செய்வது மட்டுமே நேர்ச்சையே தவிர சிரமப்பட்டு நடப்பது ஒரு வணக்கமல்ல என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டி, அவரை வாகனத்தில் செல்லுமாறு கூறினார்கள்.

نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ إِلَى بَيْتِ اللَّهِ وَأَمَرَتْنِي أَنْ أَسْتَفْتِيَ لَهَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتَمْشِ وَلْتَرْكَبْ
என் சகோதரி அல்லாஹ்வின் இல்லத்திற்கு நடந்தே செல்வதாக நேர்ச்சை செய்துவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வருமாறு என்னை அனுப்பினார்; (அதற்கு நபி (ஸல்) அவர்கள்) அவர் சிறிது தூரம் நடக்கட்டும்; வாகனத்திலும் ஏறிக்கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
(புகாரி: 1866) ➚

அக்காலகட்டத்தின் வாகன வசதிகளைப் பயன்படுத்தி ஹஜ்ஜையோ நற்காரியங்களையோ நிறைவேற்றுவதே மார்க்க நெறியாகும். சிரமங்களை உருவாக்கிக் கொள்வது நன்மையாகாது.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தபோது, பின்னால் மக்கள் வேகமாக ஓடிவரும் பெரும் சத்தம் கேட்டது. தொழுகை முடிந்ததும், “என்ன சத்தம் அது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “தொழுகையின் ரக்அத்தை அடைந்து கொள்வதற்காக வேகமாக ஓடிவந்தோம்” என்று கூறினார்கள். நன்மை என்று நினைத்துக்கொண்டு தொழுகைக்காகக் கூடப் பதற்றப்படுவதும் ஓடிவருவதும் எல்லை மீறுவதாகும் என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அந்த ரக்அத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதற்காகப் பள்ளிவாசலுக்கு வாகனங்களில் அதிவேகமாக வருவதையும் தவிர்க்க வேண்டும்.

فَلَا تَفْعَلُوا إِذَا أَتَيْتُمُ الصَّلَاةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا
அவ்வாறு செய்யாதீர்கள்; தொழுகைக்கு நீங்கள் வரும்போது அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடியுங்கள்; கிடைத்ததை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; தவறிவிட்டதை (பிறகு எழுந்து) நிறைவு செய்யுங்கள்.
(புகாரி: 635) ➚

மார்க்கத்தின் பெயரால் மக்கள் தேவையின்றித் தங்களைச் சிரமப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்கள்; எனவே செயற்கையாகச் சிரமங்களை உண்டாக்காமல், எளிமையான வழியில் மார்க்கத்தைப் பின்பற்றுவதே சரியான முறையாகும்.

மார்க்கத்தின் பெயராலும் ஆன்மீகத்தின் பெயராலும் மக்கள் சிரமப்படக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். அன்றைய அரபு நாட்டில் காலை உணவு, மாலை உணவு என இரு வேளைகளில் மட்டுமே சாப்பிடுவார்கள்; பகல் உணவு கிடையாது. ‘அஷா’ என்று அழைக்கப்படும் மாலை உணவை மஃரிப் நேரத்தில் உட்கொள்வார்கள். மஃரிப் தொழுகைக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டுவிட்டால், உணவிற்கே முன்னுரிமை கொடுத்து, அதை முதலில் சாப்பிட்டுவிட்டுப் பிறகு தொழச் செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள். பசியோடு தொழுகையில் நின்றால் கவனம் தொழுகையில் இருக்காது; எண்ணமெல்லாம் உணவின் மீதே இருக்கும் என்பதால், மனித உணர்வுகளுக்கு இஸ்லாம் இந்த அளவு மதிப்பளிக்கிறது.

إِذَا قُدِّمَ الْعَشَاءُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلَاةَ الْمَغْرِبِ وَلَا تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ
மாலை உணவு வைக்கப்பட்டுவிட்டால், மஃரிப் தொழுவதற்கு முன்பாக அதை உண்ணத் தொடங்குங்கள்; உங்கள் மாலை உணவை அவசரப்பட்டு விட்டுவிடாதீர்கள்.
(புகாரி: 672) ➚

உணவு வைக்கப்பட்டு, பள்ளிவாசலில் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டாலும் கூட முதலில் உணவிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

إِذَا وُضِعَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلَاةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ
உணவு வைக்கப்பட்டு, தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டுவிட்டால், முதலில் உணவையே உண்ணத் தொடங்குங்கள்.
(புகாரி: 671) ➚

இன்னொரு அறிவிப்பில் وَلَا يَعْجَلْ حَتَّى يَفْرُغَ مِنْهُ (சாப்பிட்டு முடிக்கும் வரை அவசரப்பட வேண்டாம்) என்றும், மற்றொரு அறிவிப்பில் فَلَا يَعْجَلَنَّ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ (தனது தேவையை நிறைவேற்றும் வரை அவசரப்பட வேண்டாம்) என்றும் வந்துள்ளது. ஜமாஅத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பசியோடு இருக்கும்போது அவசரப்பட்டுப் பாதியிலேயே உணவை விட்டுவிட்டு ஓட வேண்டியதில்லை. ஜமாஅத் தவறினாலும் பரவாயில்லை, தனது பசி தீரும் வரை நிதானமாக உண்டு முடித்த பிறகே தொழ வேண்டும். தொழுகையின் ஜமாஅத்தை விடவும் மனிதனின் பசிக்கு நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று ரமலான் மாதத்தில் இந்த வழிகாட்டுதல் பல இடங்களில் மீறப்படுகிறது. பள்ளிகளில் நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பாங்கு சொன்ன உடனேயே இகாமத்தும் சொல்லிவிடுகிறார்கள். பேரீச்சம்பழமும் தண்ணீரும் உட்கொண்ட உடனேயே தொழுகைக்கு நிற்க வேண்டிய நிலையை பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்துகின்றன. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத செயலாகும். சாதாரண காலை, இரவு உணவுக்கே நபி (ஸல்) அவர்கள் இந்த வழிகாட்டலைத் தந்துள்ளார்கள் எனும் போது, விடியற்காலை முதல் மாலை வரை பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேலாகப் பட்டினியாக இருக்கும் நோன்பாளிக்கு இன்னும் கூடுதல் அவகாசம் தரப்பட வேண்டும். பசியோடு தொழுகையில் நின்றால் மனம் தொழுகையில் லயிக்காது; எப்போது தொழுகை முடியும் என்ற எண்ணமே மேலோங்கும்.

மஃரிப் தொழுகைக்கான நேரம் என்பது சூரியன் மறைந்த சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடுவதில்லை. சூரியன் மறைந்ததிலிருந்து குறைந்தபட்சம் ஒன்றேகால் மணி நேரம் வரை மஃரிபின் நேரம் நீடிக்கிறது. உடனே தொழுதாலும், பத்து நிமிடம் கழித்து தொழுதாலும், அரை மணி நேரம் கழித்து தொழுதாலும் அது மஃரிப் தொழுகைதான். எனவே பள்ளிவாசல்களில் நோன்பு துறந்து, நோன்புக் கஞ்சியை நிதானமாகக் குடிப்பதற்கான போதிய அவகாசத்தை வழங்கி, அதன் பிறகே இகாமத் சொல்ல வேண்டும். அப்படி அவகாசம் தராவிட்டால், ஜமாஅத் தவறினாலும் பரவாயில்லை, பசியோடு இருப்பவர்கள் நிதானமாக நோன்பு துறந்துவிட்டுப் பிறகு தொழுது கொள்ளலாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி உணவுக்கு முன்னுரிமை அளிப்பதும் ஓர் இபாதத் ஆகும்.

நோன்பு துறக்கும் நேரத்தை நிர்ணயிப்பதிலும் சிலர் பேணுதல் என்ற பெயரில் தவறிழைக்கிறார்கள். சூரியன் மறையும் நேரம் தெளிவாகத் தெரிந்த பிறகும், ஐந்து நிமிடம் தள்ளி வைத்து நோன்பு துறக்கும் நேரத்தை அட்டவணைகளில் குறிப்பிடுகிறார்கள். இது நபிவழியைப் பாழாக்கும் செயலாகும். சூரியன் மறைந்துவிட்டால் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் உடனடியாக நோன்பைத் துறக்க வேண்டும். அல்லாஹ்வுக்காகத்தான் இவ்வளவு நேரம் பசித்திருந்தோம்; அவன் எப்போது தடையை நீக்கினானோ அப்போதே விரைந்து உண்ண வேண்டும். பேணுதல் என்று கூறித் தாமதிப்பவர்கள் நன்மையை அடைவதில்லை.

لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ
மக்கள் நோன்பை விரைந்து துறக்கும் வரை நன்மையில் நீடிப்பார்கள்.
(புகாரி: 1957) ➚

இது நோன்பிற்கு மட்டுமல்ல; சாதாரண பசிக்கும் பொருந்தும். மதிய உணவு பரிமாறப்பட்டுவிட்ட நிலையில் லுஹர் தொழுகையின் இகாமத் சத்தம் கேட்டாலும், உணவையே முதலில் உண்ண வேண்டும். வணக்கவழிபாடு என்ற பெயரில் மனிதர்களின் இயல்பான தேவைகளையும் மகிழ்ச்சியையும் தடுத்து, தேவையற்ற சிரமங்களை அவர்கள் மீது இஸ்லாம் சுமத்துவதில்லை. உணவு முன்னால் இருக்கும்போது உணவிற்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ
உணவு முன்னால் வைக்கப்பட்டிருக்கும்போது தொழுகை இல்லை.
(முஸ்லிம்: 560) ➚

அவசரமாக ஐந்து நிமிடத்திற்குள் தொழுது முடிக்க வேண்டும் என்ற நிலை எந்தத் தொழுகைக்கும் கிடையாது. எல்லாத் தொழுகைகளுக்கும் அல்லாஹ் போதுமான அவகாசத்தை வழங்கியிருக்கிறான்.

ஃபஜ்ருக்கும் மஃரிபுக்கும் இடையில் ஏறத்தாழ 75 முதல் 80 நிமிடங்கள் வரை நேரம் இருக்கிறது. மற்ற தொழுகைகளுக்கு அதைவிடவும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ளுஹர் தொழுகைக்கு மதியம் 12:00➚ மணி முதல் 3:30➚ மணி வரையிலும், அஸர் தொழுகைக்கு 3:30➚ மணி முதல் 6:00➚ மணி வரை ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மணி நேரங்கள் வரையிலும் அவகாசம் இருக்கிறது. இத்தகைய நீண்ட நேர இடைவெளியுடன்தான் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்போது தொழுதாலும் அது உரிய நேரத்தில் தொழுததாகவே கருதப்படும். மஃரிப் தொழுகையை 6:00➚ மணிக்கு தொழுதாலும், அல்லது 6:15➚, 6:30➚, 7:00➚ மணிக்கு தொழுதாலும் அது அந்த தொழுகைக்குரிய நேரத்தில்தான் அமைகிறது. எனவே உணவு தயாராக இருக்கும்போது சாப்பிட்டுவிட்டு தொழச் செல்வதால் தொழுகை தவறிவிடும் என்ற நிலை வராது என்பதைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் அச்சட்டத்தைக் கூறினார்கள்.

அதேபோன்று, மனிதனுக்கு சிறுநீர் அல்லது மலம் கழிக்க வேண்டிய இயற்கை உபாதை ஏற்படும்போது, அந்த உணர்வுகளை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது. தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்ட பிறகும் கழிப்பறையில் கூட்டம் இருந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தாமதமாகிறது என்பதற்காக சிறுநீரை அடக்கிக்கொண்டு தொழுகைக்குச் சென்றுவிடக் கூடாது. மலஜலத்தை அடக்கிக் கொண்ட நிலையில் لاَ صَلاَةَ (எந்தத் தொழுகையும் இல்லை) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பக்கத்தில் தொழுகை நடந்துகொண்டிருந்தாலும், இயற்கை உபாதையை நிதானமாக முடித்துவிட்டுப் பின்னரே தொழுகைக்கு வர வேண்டும். ஏனைய மார்க்கங்கள் மனிதர்களைச் சிரமப்படுத்துவதையே வற்புறுத்தும் நிலையில், இஸ்லாம் மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து வணக்கங்களை எளிமைப்படுத்தியுள்ளது.

நோன்பைப் பொறுத்தவரை சுப்ஹுடைய நேரம் தொடங்குவதற்கு முன்பு வரை சாப்பிடலாம். சுப்ஹு நேரம் அதிகாலை 5:00➚ மணிக்கு வருகிறது என்றால், ஸஹர் உணவை 3:00➚ மணிக்கே சாப்பிட்டுவிடக் கூடாது. அப்படி முன்கூட்டியே சாப்பிட்டால் உணவு சீக்கிரமாகவே செரிமானமாகி, இன்னும் இரண்டு மணி நேரம் கூடுதலாகப் பசியைத் தாங்க வேண்டிய சிரமம் ஏற்படும். மாறாக, அதிகாலை 4:30➚ அல்லது 4:45➚ மணி அளவில் தாமதப்படுத்தி சாப்பிடும்போது பசியோடு இருக்கும் நேரம் குறைகிறது; நோன்பும் சிரமமின்றி அமைகிறது. இஷா தொழுகை முடிந்ததுமே சாப்பிட்டுவிட்டு நோன்பு வைத்தால் மறுநாள் மஃரிப் வரை உடல் ஆற்றல் தாங்காது. உடலின் கொழுப்பும் குளுக்கோஸும் கரைவதற்குள்ளாகவே நோன்பு துறக்கும் நேரம் வந்துவிட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மார்க்கம் இந்த கால அளவை நிர்ணயித்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் குழப்பமடையாமல் இருப்பதற்காக இரண்டு முஅத்தின்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பிலால் அவர்களின் பாங்கு ஒலித்தால் அது ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பும் பாங்கு என்றும், அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் அவர்களின் பாங்கு ஒலித்தால் அது சுப்ஹு நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் பாங்கு என்றும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள். ஸஹருக்கான அந்த முதல் பாங்குக்கும் சுப்ஹுடைய பாங்குக்கும் மத்தியில் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரமே இடைவெளியாக இருந்தது. மக்கள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகவே ஸஹரை இறுதி நேரத்தில் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ كَمْ كَانَ بَيْنَ الْأَذَانِ وَالسَّحُورِ قَدْرُ خَمْسِينَ آيَةً
நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு ஸஹர் செய்தோம்; பின்னர் அவர்கள் தொழுகைக்கு நின்றார்கள். அவ்விரு நிகழ்வுகளுக்கும் இடையே ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம் இருந்தது.
(புகாரி: 1921) ➚

அதேபோல், ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போதே களைப்பின் காரணமாக தூக்கம் வந்தால், தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சிரமப்பட்டு நிற்க வேண்டியதில்லை. தொழுகையை முடித்துவிட்டுச் சென்று தூங்கிவிட வேண்டும்.

إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ
உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது அவருக்குத் தூக்கம் வந்தால், தூக்கம் அவரை விட்டும் நீங்கும் வரை அவர் உறங்கட்டும்.
(புகாரி: 212) ➚

தூக்கம் என்பது மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. எனவே, தூக்கத்தின் காரணமாக ஒருவரால் குறித்த நேரத்தில் எழ முடியாமல் ஒரு தொழுகை தவறிப்போனால் அவர் குற்றவாளியாக மாட்டார். அவர் விழித்த உடனே அத்தொழுகையை நிறைவேற்றிக்கொள்ள மார்க்கத்தில் அனுமதி உண்டு. உதாரணமாக, ளுஹர் தொழுகையைத் தொழாமல் ஒருவர் ஆழ்ந்து தூங்கிவிட, அவர் விழித்துப் பார்க்கும்போது அஸர் நேரம் வந்திருந்தாலும் கூட…

ஒருவர் தூக்கத்தினால் ளுஹர் தொழுகையைத் தவறவிட்டுவிட்டால், அந்தத் தொழுகை விடுபட்டுப்போனதாகக் கருத வேண்டியதில்லை. பொதுவாகத் தொழுகையை அதன் நேரம் கடந்து தொழ முடியாது என்றாலும், தூங்கிவிட்டவருக்கு மார்க்கம் இதில் சலுகை அளித்திருக்கிறது. அவர் அஸர் நேரத்தில் விழித்தாலும் கூட, விழிக்கும் அந்த நேரமே அவருக்குரிய ளுஹரின் நேரமாகும்; அந்த நேரத்தில் அவர் விடுபட்ட ளுஹரைத் தொழுதுகொள்ளலாம். தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே ஒருவருக்குத் தூக்கம் வந்தால், அவர் தொழுகையை நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் தூக்கக் கலக்கத்தோடு தொழும்போது ஒருவர் என்ன கூறுகிறார் என்பதே அவருக்குத் தெரியாது; தான் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்பதாக நினைத்துக்கொண்டு, தன்னுணர்வின்றித் தனக்குத்தானே சாபமிட்டுக்கொள்ளும் நிலையும் அவருக்கு ஏற்பட்டுவிடலாம்.

فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لاَ يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ
தூக்கக் கலக்கத்தோடு உங்களில் ஒருவர் தொழும்போது, அவர் பாவமன்னிப்புத் தேடுவதற்குப் பதிலாகத் தனக்குத்தானே சாபமிட்டுக்கொள்ளக்கூடும் என்பதால் அவர் என்ன கூறுகிறார் என்பதை அவரே அறியமாட்டார்.
(புகாரி, முஸ்லிம்)

பசி மற்றும் இயற்கை உபாதைகளைப் போன்று தூக்கமும் மனிதனின் ஓர் இன்றியமையாத உணர்வாகும். இதற்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கண்களில் வெங்காயத்தைத் தடவிக்கொண்டு தூக்கத்தைத் தியாகம் செய்து சிரமப்பட்டுத் தொழ வேண்டிய அவசியம் மார்க்கத்தில் இல்லை. அல்லாஹ்வே ஒருவருக்குத் தூக்கத்தை ஏற்படுத்தும் போது, அந்தத் தூக்கத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். ரமலானின் சிறப்புமிக்க ஓர் இரவாகவே இருந்தாலும் கூட, தூக்கம் மேலிட்டால் தூங்கிவிட வேண்டும். தொழுகைக்காகத் தக்பீர் கட்டி ஒரு ரக்அத் முடித்திருந்தாலும், தூக்கம் வந்தால் மீதி ரக்அத்களை முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை; தொழுகையை நிறுத்திவிட்டுத் தூங்கிவிடலாம். அதற்கு எந்தக் குற்றமும் இல்லை. நன்றாகத் தூங்கி எழுந்த பிறகு நிதானமாகத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَرْقُدْ
உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் தூக்கம் வந்தால் அவர் தூங்கிவிடட்டும்.
(புகாரி, முஸ்லிம்)

புகாரியில் பதிவாகியுள்ள மற்றொரு நிகழ்வில், நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். இரவின் கடைசிப் பகுதியில், அதாவது சுபுஹ் நேரத்திற்குச் சற்று முன்பு, பயணிகள் அனைவருக்கும் தாங்க முடியாத தூக்கம் வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் சுபுஹ் வந்துவிடும் என்பதால் கஷ்டப்பட்டு விழித்திருந்து தொழுதுவிட்டுத் தூங்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை; மாறாக அனைவரையும் தூங்குமாறு கூறினார்கள். சுபுஹுக்கு எழுந்துவிடலாம் என்ற எண்ணத்தோடுதான் அனைவரும் உறங்கினார்கள். ஆனால் சூரிய வெளிச்சம் முகத்தில் படும் வரை எவருமே எழவில்லை; நபி (ஸல்) அவர்களும் கண்விழிக்கவில்லை. தூக்கத்தின்போது நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்துகொண்டிருக்கலாம் என்பதால் நபித்தோழர்கள் அவர்களை நேரடியாக எழுப்பாமல், சத்தமாகத் தக்பீர் கூறினார்கள்; அதன் பிறகே நபி (ஸல்) அவர்கள் கண்விழித்தார்கள். சுபுஹ் தொழுகை தவறிவிட்டதே என்று பதற்றமடையாமல் நபி (ஸல்) அவர்கள், لا ضير (எந்தப் பிரச்சினையுமில்லை) என்று கூறினார்கள். பின்னர் அந்த இடத்தை விட்டும் சற்றுப் பயணித்து, மற்றொரு இடத்திற்குச் சென்று சுபுஹ் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தூக்கத்தினால் ஒரு தொழுகை விடுபட்டுவிட்டால், விழித்த பிறகு அதைத் தொழுதுகொள்ளலாம் என்பதற்கு இது தெளிவான சான்றாகும். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் அனைத்திலும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மனிதர்களுக்கு எவ்வித சிரமமும் தந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இயற்கையான மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மார்க்கம் வழங்கியுள்ள சலுகைகளைப் பயன்படுத்தி வணக்க வழிபாடுகளைச் சிரமமின்றி நிறைவேற்றுவதே இஸ்லாம் நமக்குக் கற்றுத்தரும் வழிகாட்டலாகும்.

ஆரம்ப காலத்தில் ரமளான் மாத நோன்பு கடமையாக்கப்பட்டபோது, பகலில் உண்ணவோ பருகவோ கூடாது என்றும் இரவில் உண்ணலாம் பருகலாம் என்றும் சட்டம் இருந்தது. ஆனால் தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் முழுமையாகத் தடை செய்யப்பட்டிருந்தது. இச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது நபித்தோழர்களுக்குக் கடினமாக இருந்தது. இரவு நேரத்தில் மனைவியருடன் இருக்கும் வேளையில் இக்கட்டளையை மீறி இல்லறத்தில் ஈடுபட்டு விட்டனர். மனிதர்களின் இந்த பலவீனத்தை அறிந்த அல்லாஹ், அவர்களின் இயல்பான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அச்சட்டத்தைத் தளர்த்தினான். அவர்கள் செய்ததை மன்னித்து, இரவில் உண்ணவும் பருகவும் அனுமதித்தது போன்றே தாம்பத்திய உறவிலும் ஈடுபடலாம் என்று فَالْآنَ بَاشِرُوهُنَّ (இப்போது அவர்களோடு இல்லறத்தில் ஈடுபடுங்கள்) எனக் கூறி சலுகை அளித்தான். ஒரு சட்டத்தைப் பேண மனிதர்கள் பலவீனமாக இருக்கும்போது, அவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக இறைவன் சட்டங்களை எளிதாக்குகிறான் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

பொதுவாகப் பிற சமுதாயங்களில் வழிபாட்டிற்காக வாரம் ஒரு நாள் முழுமையாக ஒதுக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, சனிக்கிழமையன்று மீன் பிடிக்கக் கூடாது என்று முழு நாளும் எவ்விதச் சம்பாத்தியமும் செய்யக் கூடாது என்ற சட்டம் ஒரு சமுதாயத்திற்கு இருந்தது. உலகெங்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுவதும் இதுபோன்ற நடைமுறையின் அடிப்படையில்தான். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனிதன் தேவைகள் நிறைந்தவனாகவும், சம்பாதிக்க உழைக்க வேண்டியவனாகவும் இருக்கிறான். எனவே வாரம் ஒரு நாள் முழுவதையும் வழிபாட்டிற்காக மட்டுமே ஒதுக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தாமல், ஒரு குறுகிய நேரத்தை மட்டுமே அல்லாஹ் வழிபாட்டிற்காக நிர்ணயித்துள்ளான். அதாவது ஜும்ஆ தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது முதல் தொழுகை முடியும் வரையிலான குறுகிய நேரத்திற்கு மட்டுமே வியாபாரத்தை விட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு வருமாறு பணிக்கிறான்.

إِذَا نُودِىَ لِلصَّلَوٰةِ مِن يَوْمِ ٱلْجُمُعَةِ فَٱسْعَوْا۟ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ وَذَرُوا۟ ٱلْبَيْعَ
வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதை நோக்கி விரைந்து செல்லுங்கள்; வியாபாரத்தை விட்டுவிடுங்கள்.
(அல்குர்ஆன்: 62:9)➚

தொழுகை முடிந்தவுடனேயே மனிதர்கள் மீண்டும் சென்று சம்பாதித்துக் கொள்வதற்கு மார்க்கம் முழு அனுமதி அளிக்கிறது. மனிதன் பொருளைத் தேட வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற அவனது இயல்பான உணர்வுகளை அல்லாஹ் முடக்குவதில்லை. நபி (ஸல்) அவர்கள் வழியாக நமக்கு வழங்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُوا۟ مِن فَضْلِ ٱللَّهِ
தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன்: 62:10)➚

இறைவனுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் துறவறத்தை மேற்கொள்கின்றனர். திருமணம் செய்யாமல் உலக விவகாரங்களை விட்டு விலகி, காடுகளிலோ தனிமையிலோ தவம் செய்ய வேண்டும் என்ற கோட்பாடு பல மதங்களிலும் காணப்படுகிறது. அத்தகைய துறவிகளையே ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களாக மக்கள் கருதுகின்றனர்; தொழில் செய்து உழைத்து வாழ்பவர்களைச் சாதாரணமானவர்களாகப் பார்க்கின்றனர். இந்தத் தவறான சிந்தனை இஸ்லாமிய சமுதாயத்திற்குள்ளும் சிலரிடம் ஊடுருவியது. மார்க்க அறிவற்ற சூஃபிகள் என்ற பெயரில் சிலர் திருமணத்தைத் துறப்பதையே கொள்கையாகப் பிரச்சாரம் செய்தனர். உதாரணமாக குணங்குடி மஸ்தான் போன்றவர்கள் இல்லறத்தைத் துறந்து வாழ்ந்ததால், அவர்களை அவ்லியாக்கள் என்று போற்றி தர்கா கட்டும் நிலை உருவானது. அவர் பெண்களையும் இல்லறத்தையும் ஆன்மீகத்திற்கு எதிரானது எனப் பாடினார். ஆனால் நபி (ஸல்) அவர்களோ, திருமணம் செய்யாதவர் தம்மைச் சார்ந்தவர் அல்லர் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். இறைவன் கற்றுத் தந்த வரம்போடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களை மிகைத்த பேணுதலாளர்களாகக் காட்டிக்கொள்ள முற்பட்டதால்தான் பித்அத்களும் வழிகேடுகளும் உருவாயின.

அதேசமயம், இறைவனுக்காகத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்ற உணர்வு மனிதர்களிடம் இயல்பாகவே இருப்பதை மார்க்கம் அங்கீகரிக்கிறது. அதற்காக வாழ்நாள் முழுவதையும் துறக்கச் சொல்லாமல், ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் என்ற வணக்கத்தை இஸ்லாம் வழிகாட்டுகிறது. குடும்ப வாழ்க்கை, தொழில், வியாபாரம் போன்ற உலகத் தொடர்புகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, பத்து நாட்கள் மட்டும் பள்ளிவாசலில் தங்கி தொழுகை, திக்ர் உள்ளிட்ட வழிபாடுகளில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்குச் சில நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட இந்த வழிகாட்டலை மக்கள் பின்பற்றுவதில்லை; மாறாக மார்க்கத்தில் இல்லாத பல புதுமைகளை உண்டாக்குகின்றனர். மனிதர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களின் ஆசைகளையும் தேவைகளையும் நன்கறிவான் என்பதால், அவன் மனித இயல்புகளை முற்றிலும் அறுத்தெறியுமாறு கட்டளையிடுவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கம் மட்டுமே மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தெளிவான பாதையைக் காட்டுகிறது. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில், அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமையாக்கியிருப்பதை அறிவித்தார்கள்.

أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمُ الْحَجَّ فَحُجُّوا
மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான்; எனவே ஹஜ் செய்யுங்கள்.
(முஸ்லிம்: 1337) ➚

அப்போது ஒரு மனிதர் எழுந்து, أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ (அல்லாஹ்வின் தூதரே, ஒவ்வோர் ஆண்டும் செய்ய வேண்டுமா?) என்று கேட்டார்.

அச்சபையில் இருந்த கிராமவாசி ஒருவர் எழுந்து, நபி (ஸல்) அவர்களிடம், ஒவ்வோர் ஆண்டும் ஹஜ் செய்ய வேண்டுமா என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அதற்குப் பதிலளிக்காமல் மௌனம் காத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு கேள்விக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தால், அது கேட்கப்படக் கூடாத கேள்வி என்பதை மற்ற நபித்தோழர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் அந்தக் கிராமவாசியோ அதை விளங்காமல் மீண்டும் எழுந்து, أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ (நபி (ஸல்) அவர்களே! ஒவ்வோர் ஆண்டுமா?) என்று இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் திரும்பத் திரும்பக் கேட்டார்.

மூன்று முறை அவர் கேட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள், தாம் “ஆம்” என்று சொல்லியிருந்தால் அது ஒவ்வோர் ஆண்டும் கடமையாகிப் போயிருக்கும் என்றும், அவ்வாறு கடமையாக்கப்பட்டிருந்தால் لَمَا اسْتَطَعْتُمْ (உங்களால் முடிந்திருக்காது) என்றும் கூறினார்கள். மனிதர்களின் சிரமங்களை இந்த மார்க்கம் எப்போதும் கருத்தில் கொள்கிறது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் கூட ஒவ்வோர் ஆண்டும் ஹஜ் செய்வது என்பது பெரும்பாலான மனிதர்களுக்கு இயலாத காரியம். வாழ்நாளில் ஒரு முறை என்பது மட்டுமே மனிதர்களால் இயலக்கூடியது. மார்க்கம் இயலாத ஒன்றை ஒருபோதும் கடமையாக்காது; அவ்வாறு கடமையாக்கினால் பெரும்பாலான மக்கள் அதைச் செய்ய முடியாமல் குற்றவாளிகளாக மாறிவிடுவார்கள்.

தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் மிக முக்கியமான ஓர் அறிவுரையை வழங்கினார்கள். மார்க்கத்தில் எதைப் பற்றிப் பேசாமல் விடப்பட்டிருக்கிறதோ, அதில் மார்க்கம் எந்தக் குறுக்கீடும் செய்யவில்லை; அது மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையாகும். இறைவனுக்கு மறதி என்பதே கிடையாது; وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا (உமது இறைவன் மறப்பவனாக இல்லை). அவன் மறந்துபோய் எதையும் சொல்லாமல் விட்டுவிடவில்லை; மாறாக, மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகவே மௌனமாக விட்டுள்ளான். அவ்வாறு சொல்லாமல் விடப்பட்டவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டவை ஆகும். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்கு ஆதாரம் தேட வேண்டியதில்லை; தடைக்குத்தான் ஆதாரம் தேவை. தடைக்கு ஆதாரம் இல்லாத வரை அது அனுமதிக்கப்பட்டதுதான். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தேவையற்ற கேள்விகளைக் கேட்டுச் சட்டங்களை அதிகமாக்கிச் சிரமத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்பதை உணர்த்தவே, தாம் கட்டளையிடுவதை இயன்ற அளவுக்குச் செய்யுமாறும், தாம் தடுப்பதை முற்றிலும் விட்டுவிடுமாறும் வழிகாட்டினார்கள். கட்டாயக் கடமைகளைத் தவிர, விரும்பத்தக்க உபரியான நற்செயல்களில் மனிதர்கள் தங்களால் இயன்றதைச் செய்தால் போதுமானது; ஆனால், தடை செய்யப்பட்ட விஷயங்களை முற்றிலும் விட்டுவிட வேண்டும்.

ذَرُونِي مَا تَرَكْتُكُمْ فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَدَعُوهُ
நான் உங்களை விட்டுவிட்ட (விஷயத்)தில் என்னையும் விட்டுவிடுங்கள்; நான் உங்களுக்கு ஒன்றை ஏவினால் உங்களால் முடிந்த அளவுக்கு அதைச் செய்யுங்கள்; ஒன்றை நான் தடை செய்தால் அதை விட்டுவிடுங்கள்.
(முஸ்லிம்: 1337) ➚

முந்தைய சமுதாயத்தினர் தங்கள் நபிமார்களிடம் அளவுக்கு அதிகமாகக் கேள்விகள் கேட்டதாலும், அவர்களோடு முரண்பட்டதாலும்தான் அழிந்துபோனார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய நபி (ஸல்) அவர்கள், தங்களுக்குத் தாங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தார்கள்.

ذَرُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ
நான் உங்களை விட்டுவிட்ட (விஷயத்)தில் என்னையும் விட்டுவிடுங்கள்; உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்டதாலும், அவர்களோடு முரண்பட்டதாலும்தான் அழிந்துபோனார்கள்.
(புகாரி: 7288) ➚

மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சிரமத்தை உண்டாக்கிக்கொள்ளக் கூடாது என்பதில் இந்த மார்க்கம் மிகுந்த கவனம் செலுத்துகிறது என்பதை மற்றொரு செய்தியிலும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள். அல்லாஹ் மனிதர்களுக்குச் சில கடமைகளை விதித்துள்ளான்; அவற்றை வீணடித்துவிடாமல் நிறைவேற்ற வேண்டும். சில காரியங்களைத் தடுத்துள்ளான்; அவற்றைச் செய்துவிடக் கூடாது. மேலும் சில எல்லைகளை வகுத்துள்ளான்; அவற்றை மீறிவிடக் கூடாது. உதாரணமாக, சூரியன் மறையும் வரை நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் ஓர் எல்லையை வகுத்திருக்கும்போது, இஷா வரை நோற்பேன் என்று கூறி அந்த எல்லையைத் தாண்டக் கூடாது. அதே சமயம், பல விஷயங்களைப் பற்றி அல்லாஹ் மறதியினால் அல்லாமல், மக்களுக்குச் சலுகையாகவே மௌனமாக விட்டுள்ளான். எனவே, மார்க்கம் மௌனம் காத்த விஷயங்களைத் துருவி ஆராய்ந்து வீண் சிரமத்தை உருவாக்கக் கூடாது.

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ فَرَضَ فَرَائِضَ فَلَا تُضَيِّعُوهَا وَحَرَّمَ حُرُمَاتٍ فَلَا تَنْتَهِكُوهَا وَحَدَّ حُدُودًا فَلَا تَعْتَدُوهَا وَسَكَتَ عَنْ أَشْيَاءَ مِنْ غَيْرِ நِسْيَانٍ
அல்லாஹ் சில கடமைகளை விதித்துள்ளான், அவற்றை வீணடித்துவிடாதீர்கள்; சிலவற்றைத் தடுத்துள்ளான், அவற்றை மீறிவிடாதீர்கள்; சில வரம்புகளை நிர்ணயித்துள்ளான், அவற்றை மீறாதீர்கள்; எதையும் மறக்காமல் பல விஷயங்களைப் பற்றி மௌனமாக இருந்துள்ளான், எனவே அவற்றைத் துருவி ஆராயாதீர்கள்.
(தாரகுத்னீ)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்போது நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொள்வார்கள். அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்க மாட்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், கொலை செய்ய மாட்டோம், அவதூறு கூற மாட்டோம், ஒப்பாரி வைக்க மாட்டோம் என்று அக்காலத்தில் பரவலாக இருந்த தீமைகளை விட்டும் விலகுவதாக உறுதிமொழி எடுப்பார்கள். அப்போது ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு கட்டுப்பட்டு நடப்பதாக உடன்படிக்கை செய்தபோது, “என்னால் இயன்ற அளவுக்கு” என்ற வார்த்தையையும், “அனைத்து முஸ்லிம்களுக்கும் நலம் நாடுவேன்” என்ற வார்த்தையையும் சேர்த்துச் சொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கற்றுத் தந்தார்கள்.

بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فَلَقَّنَنِي فِيمَا اسْتَطَعْتُ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ
நான் நபி (ஸல்) அவர்களிடம் செவியேற்றுக் கட்டுப்பட்டு நடப்பதாக உடன்படிக்கை செய்தபோது, “என்னால் இயன்ற வரை” என்றும், “ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவேன்” என்றும் எனக்கு அவர்கள் கற்றுத் தந்தார்கள்.
(புகாரி: 7204) ➚

மனிதர்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பவர்கள். முதுமை, நோய், பணிச்சுமை போன்ற பலவீனங்கள் மனிதர்களுக்கு உண்டு. நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிகாட்டல்கள் அனைத்தையும் எப்போதும் முழுமையாகச் செய்துவிடுவது மனிதர்களுக்கு இயலாது. அவ்வாறு இருக்க, முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று ஒருவர் உறுதிமொழி கொடுத்தால், அவரால் இயலாத சூழல் வரும்போது அவர் அளித்த உறுதிமொழியில் பொய்யராகிவிடக் கூடும் என்பதால்தான் இயன்ற அளவுக்கு என்று கூறும்படி நபி (ஸல்) அவர்கள் திருத்தினார்கள். ஒருவரால் சில சுன்னத்துகளைச் செய்ய முடியாமல் போனால் அது குற்றமாகவோ பாவமாகவோ ஆகிவிடாது; நன்மையில்தான் குறைவு ஏற்படும். தொழுகையின் முன் சுன்னத்துகள், பின் சுன்னத்துகள் போன்றவற்றைச் செய்வது கூடுதல் அந்தஸ்தைப் பெற்றுத்தருமே தவிர, அவற்றைச் செய்யாதவரை அல்லாஹ் குற்றவாளியாக்க மாட்டான். எனவே, மனிதனின் இயலுமையைக் கருத்தில் கொண்டே மார்க்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இத்தகைய சூழ்நிலைகளில்தான் ‘இயன்ற அளவுக்கு’ என்ற நிபந்தனையைச் சேர்த்து வழிகாட்டுகிறார்கள் (புகாரி: 7202) ➚.

அதேபோன்று, பாவமன்னிப்புக் கோருவதற்கென நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் தலையாயது ‘ஸையிதுல் இஸ்திஃபார்’ ஆகும். ஒருவர் தவறு செய்துவிட்டால் மன்னிப்புக் கேட்பதற்குப் பல வார்த்தைகள் இருந்தாலும், இந்தப் பிரார்த்தனை மிக முக்கியமானது. அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கும்போதும் துஆ கேட்கும்போதும் கூட, எதையும் யோசிக்காமல் வாக்குறுதி கொடுத்துவிடாமல், மனிதன் தன் பலவீனத்தை உணர்ந்து ‘என்னால் இயன்ற அளவுக்கு உனது உடன்படிக்கையையும் வாக்குறுதியையும் நிறைவேற்றுவேன்’ என்று கூற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் இதில் தெளிவுபடுத்துகிறார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ
இறைவா! நீயே என் இறைவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவருமில்லை; நீ என்னை படைத்தாய், நான் உனது அடிமையாக இருக்கிறேன்; என்னால் இயன்ற அளவுக்கு உனது உடன்படிக்கையையும் வாக்குறுதியையும் நிறைவேற்றுவேன்.
(புகாரி: 6306) ➚

மனிதன் தன் சக்திக்கு உட்பட்டு இயன்ற அளவுக்குத்தான் கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற இத்தகைய எதார்த்தமான ஆன்மிக வழிகாட்டல் உலகில் வேறு எங்குமே இல்லை. பிற ஆன்மிக நெறிகள் யாவும், தன்னைத்தானே அழித்துக் கொண்டாவது காரியங்களைச் செய்ய வேண்டும் என்று மனிதனை வருத்தும் நிலையில், அந்தத் தவறான கருத்தை நபி (ஸல்) அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.

மனிதனைச் சிரமத்திற்கு உள்ளாக்காமல், அவனது ஆற்றலுக்கு உட்பட்டு இயன்ற வரை இறைவழிபாட்டையும் நற்செயல்களையும் முன்னெடுக்க வழிகாட்டுவதே இஸ்லாமிய ஆன்மிகத்தின் தனிச்சிறப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மார்க்க நெறியில், மக்கள் சிரமப்படக் கூடாது, தங்களுக்குத் தாங்களே சுமைகளை அதிகப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் பல வழிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹஜ் செய்பவர்கள் இறுதியாக மினாவில் சைத்தானுக்குக் கல்லெறிவார்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து இஹ்ராம் கட்டும் தமத்துஃ முறையை மேற்கொண்டவர்கள் அதற்காகப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும். அதன் பிறகு தலையை மழித்து அல்லது குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். முறைப்படி பார்த்தால் முதலில் கல்லெறிய வேண்டும்; தமத்துஃ செய்தவர்கள் அடுத்துப் பலியிட வேண்டும்; இறுதியாகத் தலையை மழிக்க வேண்டும். இதுவே செய்ய வேண்டிய வரிசையாகும்.

ஆனால் மினாவில் இந்த மூன்றையும் நிறைவேற்றுவதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படும். தலைமுடியை மழிக்கும் இடத்திலும், பலியிடும் இடத்திலும், கல்லெறியும் இடத்திலும் நீண்ட வரிசைகளும் கூட்ட நெரிசலும் காணப்படும். இதனால் மக்கள் குறிப்பிட்ட வரிசைப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கல்லெறியும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, அறியாமையின் காரணமாக சிலர் முதலில் பலியிட்டு விடுவார்கள்; அல்லது கல்லெறிவதற்கு முன்பாகவே தலையை மழித்துக் கொள்வார்கள். இவ்வாறு நெரிசலின் காரணமாகச் செய்ய வேண்டிய வரிசை மாறிவிடும் நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது.

அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ (நான் கல்லெறிவதற்கு முன்னரே பலியிட்டு விட்டேன்) என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், اِرْمِ وَلَا حَرَجَ (பரவாயில்லை, இப்போது கல்லெறிந்து கொள்ளுங்கள்) என்றார்கள். மற்றொருவர் வந்து, حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ (பலியிடுவதற்கு முன்னரே தலையை மழித்துவிட்டேன்) என்றார். நபி (ஸல்) அவர்கள், اُنْحَرْ وَلَا حَرَجَ (பரவாயில்லை, இப்போது பலியிடுங்கள்) என்றார்கள். அந்நாளில் இவ்வாறு فَمَا سُئِلَ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلَا أُخِّرَ (முந்தியோ பிந்தியோ செய்யப்பட்ட எந்தக் காரியம் குறித்துக் கேட்கப்பட்டபோதும்), நபி (ஸல்) அவர்கள் اِفْعَلْ وَلَا حَرَجَ (செய்து கொள்ளுங்கள், குற்றமில்லை) என்றே பதிலளித்தார்கள். இது புகாரியில் 83 மற்றும் 124 ஆகிய எண்களில் பதிவாகியுள்ளது.

மார்க்கச் சட்டம் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைந்திருந்தாலும், கூட்ட நெரிசலில் அதை அப்படியே செயல்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மக்களுக்குச் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முந்திச் செய்வதைப் பிந்தியும், பிந்திச் செய்வதை முந்தியும் செய்ய மார்க்கம் அனுமதிக்கிறது. அந்த வரிசையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறினால் மக்கள் நீண்ட நேரம் வரிசையிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அந்த நேரத்தில் எது எளிதாக உள்ளதோ அதை முதலில் செய்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள். மக்கள் சிரமப்படக் கூடாது, எளிமையைக் கையாள வேண்டும் என்பதில் இஸ்லாமிய ஆன்மீக நெறி மிகுந்த கவனம் செலுத்துகிறது.

இம்ரான் இப்னு ஹுசைன் என்ற நபித்தோழருக்கு மூல நோய் இருந்தது. அந்நோயின் தீவிரத்தால் அவரால் நின்று தொழ முடியவில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தம்மால் மற்றவர்களைப் போன்று நின்று தொழ முடியாத நிலையைத் தெரிவித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், فَصَلِّ قَائِمًا (இயன்றால் நின்று தொழுவீராக), فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا (முடியாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக), فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ (அதுவும் முடியாவிட்டால் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு தொழுவீராக) என்று கூறினார்கள். இது புகாரியில் 1117-வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

தொழுகை மிக முக்கியமான ஒரு கடமை. மூல நோயினால் கீழே உட்காருவதற்குக் கூட சிரமமாக இருக்கும் நிலையில், படுத்துக் கொண்டே தொழுவதற்கு மார்க்கம் சலுகை அளிக்கிறது. உலக மக்களின் பார்வையில் சபையிலோ மற்றவர்கள் முன்னிலையிலோ படுத்துக் கிடப்பது மரியாதைக் குறைவாகக் கருதப்படலாம். ஆனால் அல்லாஹ் மனிதனின் இயலாமையையே பார்க்கிறான். நிற்கவோ உட்காரவோ முடியாதவர் பள்ளிவாசலிலேயே படுத்துக் கொண்டும் தொழுது கொள்ளலாம்.

இது மூல நோய்க்கு மட்டுமல்ல; எந்த நோயாக இருந்தாலும் ஒருவரால் இயன்றதைச் செய்யலாம், இயலாததை விட்டுவிடலாம் என்ற பொதுவான விதியாகும். தொழுகையில் நிற்றல், ருகூவு, ஸஜ்தா ஆகியவை அவசியமானவை. ஆனால் தலைவலி அல்லது வேறு உடல் உபாதைகள் காரணமாக ஒருவரால் ஸஜ்தா செய்ய முடியாவிட்டால், அவர் சிறிதளவு குனிந்து தொழலாம். குனிவதே மூட்டு வலியை அல்லது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், அவருக்கு எது இயலுமோ அதைச் செய்யலாம். தொழுகையில் நிற்க வேண்டும், குனிய வேண்டும், ஸஜ்தா செய்ய வேண்டும், அத்தஹிய்யாத்தில் அமர வேண்டும் என்ற நிலைகளை இயலாதபோது விட்டுவிடலாம். படுத்துக் கொண்டே மனதால் ருகூவு, ஸஜ்தா செய்வதாக எண்ணிக்கொண்டு தொழுது கொள்ளலாம். அல்லாஹ்விற்கு ருகூவும், மனிதன் தனது முழுப் பணிவையும் வெளிப்படுத்தும் ஸஜ்தாவும் மிகவும் விருப்பமானதாக இருந்தபோதிலும், மனிதனால் இயலாதபோது அவனது நிலைக்கு ஏற்ப இஸ்லாம் வளைந்து கொடுக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையும் நோன்பும் கடமையில்லை. இதில் விடுபட்ட தொழுகைகளை அவர்கள் பின்னர் களா செய்ய வேண்டியதில்லை; ஆனால் விடுபட்ட நோன்புகளை ரமலானுக்குப் பிறகு அவர்கள் நோற்றாக வேண்டும்.

ரமலான் மாதத்தில் பெண்களுக்கு இயல்பாகவே மாதவிடாயின் காரணமாகச் சில நோன்புகள் விடுபட்டுப் போகும். நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள், தமக்கு விடுபடும் நோன்புகளை ஷவ்வாலிலோ அல்லது அதற்குப் பின்வரும் மாதங்களிலோ வைக்க நினைத்தாலும், நபி (ஸல்) அவர்களைக் கவனிப்பது உள்ளிட்ட பணிகளினால் நேரம் கிடைக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள். அடுத்த ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஅபான் மாதத்தில்தான் அவர்களால் அந்த விடுபட்ட நோன்புகளைக் களா செய்ய முடிந்தது. மரணம் எப்போது வரும் என்று தெரியாது என்பதால் விடுபட்ட நோன்புகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இருந்தும், நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்நோன்புகளைக் களா செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எவையெல்லாம் விடுபட்டுப் போகின்றனவோ அவற்றை தாமதப்படுத்தாமல் உடனே நிறைவேற்ற வேண்டும்.

விடுபட்ட நோன்புகளை நிறைவேற்றாமல் ஒருவர் மரணித்துவிட்டால், அதை நிறைவேற்றுவதற்குரிய அவகாசம் இருந்தும் ஏன் செய்யவில்லை என்று அல்லாஹ் கேள்வி கேட்பான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கடமையாக இருந்தும் கூட, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டியிருந்த காரணத்தினால் விடுபட்ட நோன்புகளை உடனுக்குடன் நோற்க முடியாமல், அடுத்த ஷஅபான் மாதத்தில்தான் நோற்பார்கள். இதனை அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அவர்களுக்குத் தெரிந்தே செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் செய்திருந்தால் அது தனிப்பட்ட செயலாகக் கருதப்படுமே தவிர மார்க்கச் சட்டமாக ஆகாது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் வாழும்போதே செய்ததால் அவர்களின் அங்கீகாரம் இதற்கு இருக்கிறது. உடனடியாகக் களா செய்வது சிரமமாக இருக்கும் என்பதால், அடுத்தடுத்த மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என பதினோரு மாதங்கள் வரை அவகாசம் வழங்கி இச்சலுகை தரப்பட்டுள்ளது. இது சிரமத்தைக் குறைப்பதற்காக மார்க்கம் அளித்த வாய்ப்பாகும் (புகாரி: 1950) ➚.

இதேபோன்று, மதீனாவைச் சேர்ந்த அன்சாரித் தோழர் ஒருவர் உடல் பருமனாக இருந்தார். அவருக்குப் பார்வைக் குறைபாடோ அல்லது நோய்களோ இருக்கவில்லை; ஆனால் உடல் பருமன் காரணமாக அவரால் எளிதாக நடந்து வர முடியவில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, إِنِّي لَا أَسْتَطِيعُ الصَّلَاةَ مَعَكَ (என்னால் உங்களுடன் தொழுகையில் கலந்துகொள்ள முடியவில்லை) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் தொழுகை நடத்தும்போது அவர்களைப் பின்பற்றித் தொழுவதில் கூடுதல் நன்மைகள் உண்டு. அதை அவர் விரும்பினாலும், உடல் பருமனால் பள்ளிவாசலுக்கு நடந்து வர இயலவில்லை. எனவே அவர், நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டிற்கு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுது தந்தால், அதையே தம் தொழுகை இடமாக ஆக்கிக் கொள்வதாகக் கேட்டுக்கொண்டார். நபி (ஸல்) அவர்களும் அவரது வீட்டிற்குச் சென்று, அவர் காட்டிய இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுது கொடுத்தார்கள். அதன்பின் அவர் வீட்டிலேயே தொழலானார்.

ஜமாஅத் தொழுகை மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும், உடல் பருமனால் பள்ளிக்கு வர முடியாத அவருக்கு இந்தச் சலுகையை நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். சிரமம் இருக்கிறதா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட மனிதரே முடிவு செய்ய முடியும்; அவரது நிலையை அவரே அறிவார். வணக்கம் புரிவதாக இருந்தாலும் மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மார்க்கம் சட்டங்களைத் தளர்த்துகிறது (புகாரி: 124) ➚.

மேலும், இஸ்லாத்தில் சில தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் பரிகாரங்கள் உண்டு. சில தவறுகளுக்கு தௌபா செய்தால் போதுமானது; வேறு சிலவற்றிற்கு தௌபாவுடன் சேர்த்துப் பரிகாரமும் செய்ய வேண்டும். உதாரணமாக, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் போனால், பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, ஆடை வழங்குவது அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது போன்ற பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும்.

அதேபோல் ஒருவர் நோன்பு நோற்றுவிட்டு, மறதியாக எதையாவது உண்டுவிட்டால் நோன்பு முறியாது. அல்லாஹ்வே அவருக்கு உணவளித்தான் என்பதால் அவர் நோன்பைத் தொடரலாம். ஆனால், கடமையான ரமலான் நோன்பை வேண்டுமென்றே நடுப்பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டோ அல்லது உணவருந்தியோ முறித்துவிட்டால் வெறும் தௌபா மட்டும் போதாது; அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். ஒரு நோன்பை வேண்டுமென்றே முறித்தவர் அதற்குப் பகரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு வசதியில்லையென்றால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதுவும் இயலாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

ஒருமுறை ரமலான் மாதத்தில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நோன்பு நோற்றிருந்த நிலையில் பகலில் மனைவியுடன் கூடித் தாம் அழிந்து போய்விட்டதாகக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், أَعْتِقْ رَقَبَةً (ஓர் அடிமையை விடுதலை செய்) என்றார்கள். அதற்குரிய வசதி தம்மிடம் இல்லை என்று அவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ (தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பாயாக) என்றார்கள். அவரோ, தம்மால் அவ்வளவு காலம் நோன்பு நோற்க இயலாது என்றார். அவர் தள்ளாத முதியவர் அல்லர்; நோன்பின் பகலிலேயே மனைவியுடன் கூடும் அளவுக்கு இளமையும் வலிமையும் கொண்டவர். ஆனால் மனக்கட்டுப்பாட்டுடன் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பது தமக்குக் கடினம் என்ற அர்த்தத்திலேயே அவரால் முடியாது என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், فَاَطْعِمْ سِتِّيْنَ مِسْكِيْنًا (அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பாயாக) என்று கூறினார்கள். அதற்கும் அவர், அறுபது பேருக்கு உணவளிக்கும் அளவுக்குத் தம்மிடம் வசதியில்லை என்றார்.

நபி (ஸல்) அவர்கள் அவரைச் சிறிது நேரம் அமரச் சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் உணவுப் பொருள் அடங்கிய கூடை ஒன்று வந்தது. நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை அழைத்து, அதனை அறுபது ஏழைகளுக்கு உணவாக வழங்குமாறு கொடுத்தார்கள். ஆனால் அவரோ, “மதீனாவில் என்னை விடவும் என் குடும்பத்தை விடவும் ஏழைகள் எவரும் இல்லை; இதை நான் யாருக்குக் கொடுப்பது?” என்று கேட்டார். குற்றமும் செய்துவிட்டு, அதற்குரிய பரிகாரமும் செய்ய வசதியற்று இருந்த ஒருவருக்குப் பரிகாரப் பொருள் கிடைத்தவுடன், அதையும் தாமே பெற்றுக்கொள்ளும் நிலையை விளக்கிய அவரது பேச்சைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் தமது கடவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பின்னர், “இதை நீயே உனது குடும்பத்திற்கு வைத்துக்கொள்” என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.

நோன்பை முறித்த அவர் அடிமையையும் விடுதலை செய்யவில்லை; இரண்டு மாத நோன்பும் நோற்கவில்லை; அறுபது ஏழைகளுக்கும் உணவளிக்கவில்லை; மாறாகக் குற்றப்பரிகாரத்திற்குப் பதிலாக அறுபது பேருக்கான உணவுப் பொருளைத் தாமே பெற்றுக்கொண்டு சென்றார் (புகாரி: 6164) ➚. இந்த நடைமுறைகளின் மூலம், பரிகாரங்களை வெறும் சடங்காகப் பார்க்காமல், மனிதர்களின் இயலுமையையும் சிரமமின்மையையுமே இஸ்லாம் முதன்மையாகக் கருதுகிறது என்பதை அறிய முடிகிறது.

மார்க்கம் ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது அவனது சக்தியையும் இயலுமையையும்தான். பரிகாரம் செய்வதற்கு ஒருவருக்குச் சக்தி இல்லை என்றால், அவர் அல்லாஹ்விடம் தவ்பா செய்து பாவமன்னிப்புக் கோரினால் போதுமானது. சக்தி இல்லாத நிலையில் கடன் வாங்கியோ, பிறரிடம் யாசித்தோ அல்லது வசூல் செய்தோ அந்தப் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் கட்டாயப்படுத்தவில்லை. அறுபது நோன்புகள் நோற்கவோ, அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவோ முடியாத, அடிமைகளும் இல்லாத இக்காலத்தில் அதற்கான எந்த வசதியும் இல்லாத ஒரு பரம ஏழை உண்மையாகவே இயலாத நிலையில் இருந்தால் அவர்மீது எந்தப் பரிகாரமும் கடமையாகாது.

ஒருவர் அல்லாஹ்வுக்குப் பயந்து, தமக்கு உண்மையில் இயலவில்லை என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் அறிபவன். “யா அல்லாஹ்! நீ விதியாக்கியுள்ள இந்தப் பரிகாரத்தை நிறைவேற்ற எனக்குச் சக்தியில்லை என்பதை நீ அறிவாய்; எனவே என்னை மன்னித்துவிடு” என்று உண்மையான உள்ளத்தோடு வேண்டினால், வேண்டுமென்றே நோன்பை முறித்த குற்றத்திற்குக்கூட பரிகாரம் இல்லாமலேயே அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தை அவ்வளவு எளிமையானதாக வழங்கியுள்ளார்கள்.

ஹஜ் மற்றும் உம்ராவின் போது கஃபாவை நடந்து தவாஃப் செய்வதே வழக்கமான நடைமுறையாகும். கஃபாவிற்கு அருகில் சுற்றினால் நடக்கும் தொலைவு குறைவாக இருக்கும்; ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தூரத்திற்குச் சென்று சுற்றினால் ஒரு சுற்றே பல சுற்றுகளுக்குச் சமமான தொலைவாகிவிடும். நபி (ஸல்) அவர்களின் மனைவியான உம்மு ஸலமா அவர்களுக்கு உடல்நலமில்லாமல் போனபோது, தம்மால் நடந்து தவாஃப் செய்ய இயலவில்லை என்பதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள்.

ஹஜ்ஜிற்கு வந்துவிட்ட காரணத்தால், சிரமப்பட்டு அமர்ந்து ஓய்வெடுத்தாவது நடந்துதான் சுற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கூறவில்லை. மாறாக, மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு கூட்டத்திற்குப் பின்னால் ஒட்டகத்தில் அமர்ந்து, وَأَنْتِ رَاكِبَةٌ (வாகனத்தில் இருக்கும் நிலையிலேயே) தவாஃப் செய்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

கஃபாவை தவாஃப் செய்வது அல்லாஹ்வின் கட்டளையாகும்.

وَلْيَطَّوَّفُوا۟ بِٱلْبَيْتِ ٱلْعَتِيقِ
அவர்கள் அந்தப் பழமையான ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.
(அல்குர்ஆன்: 22:29)➚

அல்லாஹ்வின் கட்டளையான அந்த தவாஃபைக் கூட நடந்து செய்ய முடியாதவர்கள் வாகனங்களில் செய்யலாம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் இச்சலுகையே ஆதாரமாகும். முற்காலத்தில் நடக்க முடியாதவர்களைத் தோள்களில் சுமந்து தவாஃப் செய்தார்கள்; இன்றைக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படைத்த இறைவனுக்கு மனிதர்களின் பலவீனங்கள் தெரியும் என்பதால், ஒவ்வொரு மனிதனின் நிலைக்கு ஏற்ப மார்க்கக் கடமைகளை இலகுவாக்கித் தருவதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

இஸ்லாம் மனிதர்களின் பலவீனங்களை உணர்ந்து தகுந்த சலுகைகளை வழங்கும் ஓர் எளிய மார்க்கமாகும்; இயலாத சூழல்களில் சிரமங்களை வலிந்து சுமக்காமல், இறைவன் வழங்கிய சலுகைகளைப் பயன்படுத்தி அவனை வழிபடுவதே அவனது விருப்பமாகும்.