பாலூட்டிகளுக்கு ஏன் ஐந்து விரல்கள் உள்ளன?
மனிதர்களுக்குக் கைகளிலும் கால்களிலும் ஐந்து விரல்கள் இருப்பதுபோல, பூனைகள், நாய்கள் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளின் கால் பாதங்களில் ஐந்து விரல்கள் உள்ளன. முற்றிலும் வேறுபட்ட சூழலில் வாழும் மனிதர்களுக்கும், மற்ற பாலூட்டிகளுக்கும் இந்த ஒற்றுமை இருப்பதற்கான காரணம் என்ன என்பது அறிவியலாளர்களுக்கு நீண்ட காலமாக ஒரு கேள்வியாக இருந்துவருகிறது.
திமிங்கலங்கள், சீல்கள் போன்றவற்றுக்கு வழக்கமான கால்கள் இல்லை என்றாலும், அவற்றின் துடுப்புக்களில் ஐந்து விரல்கள் உள்ளன. குதிரைகளுக்கு ஒரு விரல் மட்டுமே உள்ளது. பறவைகளின் இறக்கைகளில் ஒரு இணைந்த விரல் எலும்பு உள்ளது. இந்த விலங்குகளும்கூட கருவில் ஐந்து விரல்களுடன் உருவாகி, பிறப்பதற்கு முன்பாக சில விரல்கள் சுருங்கிவிடுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரியலில், விரல்களை முடிவுசெய்வது ‘ஹாக்ஸ்’ மரபணுக்கள் ஆகும். இந்த மரபணுக்கள் உடலின் வடிவத்தைத் திட்டமிட்டு, உடல் உறுப்புகள் சரியான இடங்களில் உருவாக உதவுகின்றன. கைகள், கால்கள் எத்தனை நீளம் இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யும் மரபணுக்களும் இவைதான். பிறகு கைகள், கால்கள் முடியும் இடத்திற்கு அருகில் உள்ள செல்கள் தனித்தனி விரல்களை உருவாக்குகின்றன.
கால் பாதங்களில் ஐந்து விரல்கள் உருவாகும் உயிரியல் வினை எப்போது முதன்முதலாகப் பரிணாமம் அடைந்தது என்பது யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது. பெரும்பாலான முதுகெலும்பு கொண்ட உயிரினங்களில் காணப்படும் ஐந்து விரல் அமைப்பு, ஒரு பொது மூதாதையரிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அந்த மூதாதையர் ஐந்து விரல்களுக்குப் பரிணாம மாற்றம் கண்டு, அந்த அமைப்பை அதிலிருந்து பிரிந்துவந்த மற்ற உயிரினங்களுக்குக் கடத்தியிருக்கலாம்.
பாலூட்டிகளுக்கு ஐந்து விரல்கள் இருப்பதற்கு ஒரு பொது மூதாதையர் இருக்க வேண்டும் என்பது ஒரு விளக்கமாக இருந்தாலும், ஏன் ஐந்து விரல்கள் என்னும் கேள்விக்கு விடை இல்லை. காலப்போக்கில், ஒரு மரபணு மாற்றம் கொள்ளாமல் நிலைத்திருக்கும் பண்பு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே ஐந்து விரல்கள் சூழலுக்கு ஏற்றவாறு பயனுள்ளதாக அமைந்திருக்கலாம், அதனால் அதனை மாற்றுவதற்கான தேவை ஏற்படவில்லை என்றும் ஒரு கருத்து உள்ளது.
இறைவன் தனது படைப்பில் இத்தகைய நுட்பமான அமைப்புகளை உருவாக்கி, உயிரினங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளார். இந்த வியக்கத்தக்க ஒற்றுமைகளும், அவற்றின் பின்னணியில் உள்ள மரபணுக்களின் செயல்பாடுகளும் இறைவனின் அளவற்ற ஞானத்தையும், படைப்புத் திறனையும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆதாரம்: தினமணி