பாலூட்டிகளுக்கு ஏன் ஐந்து விரல்கள் உள்ளன?

அறிவியல் உண்மைகள்

மனிதர்களுக்குக் கைகளிலும் கால்களிலும் ஐந்து விரல்கள் இருப்பதுபோல, பூனைகள், நாய்கள் போன்ற பெரும்பாலான பாலூட்டிகளுக்கும் ஐந்து விரல்கள் உள்ளன. விலங்குகளின் கால்களில் சில விரல்கள் சிறியதாக இருக்கலாம் அல்லது இடம் மாறியிருக்கலாம். ஆனால், விரல்களின் எண்ணிக்கை ஐந்து என்பதில் மாற்றம் இல்லை.

முதுகெலும்புள்ள நான்கு கால் விலங்குகளைப் பற்றி நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஊர்வன, பறப்பன, தவளைகள் போன்ற விலங்குகளும் இந்த வகையில்தான் வரும். பாலூட்டிகள் இந்த வகையின் ஒரு மேன்மையான பிரிவு ஆகும். திமிங்கலங்கள், சீல்கள் போன்றவற்றுக்கு வழக்கமான கால்கள் இல்லை என்றாலும், அவற்றின் துடுப்புகளில் ஐந்து விரல்கள் உள்ளன.

சில விலங்குகளில் இந்த அமைப்பு மாறுபடுகிறது. குதிரைகளுக்கு ஒரே ஒரு விரல் மட்டுமே உள்ளது. பறவைகளின் இறக்கைகளில் ஒரு விரல் எலும்பு இணைந்திருக்கிறது. ஆனால், இந்த விலங்குகள் கூட கருவில் ஐந்து விரல்களுடன் உருவாகி, பிறப்பதற்கு முன் சில விரல்கள் சுருங்கிவிடுகின்றன என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உயிரியலில், விரல்களை உருவாக்குவதற்குக் காரணமானவை ‘ஹாக்ஸ்’ மரபணுக்கள் ஆகும். இந்த மரபணுக்கள் உடலின் வடிவத்தைத் திட்டமிட்டு உருவாக்குகின்றன. ‘ஹாக்ஸ்’ மரபணுக்கள், மற்ற மரபணுக்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் புரதங்களுக்குத் தேவையான கட்டளைகளைப் பதிவு செய்கின்றன.

ஒரு விலங்கின் உடலில், உறுப்புகள் சரியான இடங்களில் அமைய வேண்டும் என்பதற்குக் கரு உருவாகும்போதிலிருந்தே இந்த மரபணுக்கள் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, கைகள், கால்கள் எவ்வளவு நீளம் இருக்க வேண்டும் என்பதை இந்த மரபணுக்கள் முடிவு செய்கின்றன.

பிறகு, கைகள், கால்கள் முடியும் இடத்திற்கு அருகில் உள்ள செல்கள் தனித்தனி விரல்களை உருவாக்குகின்றன. இவை விரல் மொட்டுக்களாக வளர்கின்றன. விலங்குகளைப் பொறுத்து, இந்த விரல் மொட்டுக்கள் முழுமையான விரல்களாக வளரலாம் அல்லது மீண்டும் உடலுக்குள் உறிஞ்சப்படலாம்.

கால் பாதங்களில் ஐந்து விரல்கள் உருவாகும் உயிரியல் செயல்முறை எப்போது முதன்முதலில் தோன்றியது என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. சுமார் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மீன்களிலிருந்து தோன்றிய முதல் நான்கு கால் உயிரினங்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட விரல்கள் இருந்தன. அகந்தோஸ்டேகா என்ற அந்தக் காலத்து உயிரினத்திற்கு எட்டு விரல்கள் இருந்தன.

பெரும்பாலான முதுகெலும்புள்ள உயிரினங்களில் காணப்படும் ஐந்து விரல் அமைப்பு, ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதன் காரணமாக, ஒரு மரபணு அல்லது உடல் அமைப்பு, பொது மூதாதையரிடமிருந்து பிரிந்து வந்த பல உயிரினங்களுக்கும் பொதுவாக அமைந்துவிடுகிறது.

இன்று வாழும் அனைத்து நான்கு கால் முதுகெலும்புள்ள உயிரினங்களுக்கும் ஒரு பொது மூதாதையர் ஏதோ ஒரு வகையில் ஐந்து விரல் அமைப்பைப் பெற்று, அதன்பிறகு அந்த அமைப்பை அதிலிருந்து பிரிந்து வந்த மற்ற உயிரினங்களுக்குக் கடத்தியிருக்கிறார்.

பாலூட்டிகளுக்கு ஐந்து விரல்கள் இருப்பதற்கு ஒரு பொதுவான மூதாதையர் இருக்க வேண்டும் என்பது சரியான விளக்கமாக இருந்தாலும், ஏன் ஐந்து விரல்கள் என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை. காலப்போக்கில், ஒரு மரபணு மாற்றம் அடையாமல் நிலைத்திருக்கும் தன்மை காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பாலூட்டிகளின் முதுகெலும்பில் பெரும்பாலும் ஏழு எலும்புத் துண்டுகள் உள்ளன. இந்த அமைப்பும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே சூழலுக்கு ஏற்றவாறு பயனுள்ளதாக இருந்திருக்கலாம். அதனால், அதை மாற்றுவதற்கான தேவை ஏற்படவில்லை. இந்த விளக்கம் ஐந்து விரல்கள் ஏன் என்பதற்கும் பொருந்தும்.

ஆனால், அனைத்து ஆய்வாளர்களும் இந்தக் கருத்தை ஏற்பதில்லை. மனிதர்கள் உட்பட பல பாலூட்டி விலங்குகளிடம் ஐந்துக்கும் மேற்பட்ட விரல்கள் இருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு மாற்றங்கள் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட விரல்கள் தோன்றக்கூடும்.

ஒரு குறிப்பிட்ட மரபணு மாற்றத்தால் ஐந்துக்கும் மேற்பட்ட விரல்கள் உருவாகிறது என்றால், அப்படி ஒரு இனம் ஏன் இயற்கையில் உருவாகி நிலைபெறவில்லை என்று கேள்வி எழுகிறது. ஐந்துக்கும் மேற்பட்ட விரல்களைக் கொண்டவர்களை அரிதாகவே காண முடிகிறது.

ஆகவே, ஐந்து விரல்கள் ஏன் என்ற கேள்விக்கு விடை காண்பது மிகவும் சவாலானது மற்றும் சுவாரஸ்யமானது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

இந்த உலகின் ஒவ்வொரு படைப்பிலும், அதன் நுட்பமான அமைப்பிலும் இறைவனின் ஆற்றலையும் ஞானத்தையும் நாம் காணலாம். இந்த வியக்க வைக்கும் படைப்புகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, அவற்றைப் படைத்து ஒழுங்குபடுத்திய இறைவனின் மகத்துவத்தை நாம் உணர்கிறோம்.

ஆதாரம்: தினமணி