முதுமை: உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன?
வயதாவது என்பது உடலின் செல்கள் மற்றும் உறுப்புகளின் செயல்திறன் காலப்போக்கில் குறைவதைக் குறிக்கிறது. இது ஒரு இயற்கையான உயிரியல் செயல்முறை ஆகும். மனித உடலில், மூலக்கூறு, மரபணு மற்றும் செல் சேதங்கள் குவிவதால் உடல் மற்றும் மனத் திறன்கள் குறைந்து, நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மனித உடல் தினமும் சுமார் 330 பில்லியன் செல்களைப் புதுப்பிக்கிறது. இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு 7 முதல் 10 வருடங்களுக்குள், ஒரு முழுமையான செல் புதுப்பித்தல் நடைபெறுகிறது. எனினும், ஒவ்வொரு செல்லின் ஆயுட்காலமும், புதுப்பித்தல் விகிதமும் வேறுபடும். சில செல்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், மற்றவை தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகின்றன.
உடலின் சில முக்கிய செல்களின் ஆயுட்காலம்: இரைப்பை (குடல்) உட்சுவர் செல்கள் 5 முதல் 7 நாட்கள்; தோல் செல்கள் 2 முதல் 4 வாரங்கள்; சுவை மொட்டுகள் 10 முதல் 14 நாட்கள்; சிவப்பு இரத்த அணுக்கள் (RBCs) சுமார் 120 நாட்கள்; வெள்ளை இரத்த அணுக்கள் (WBCs) சில மணிநேரங்கள் முதல் 7 நாட்கள் வரை; கல்லீரல் செல்கள் 300 முதல் 500 நாட்கள் (1 முதல் 1.5 ஆண்டுகள்); எலும்பு செல்கள் சுமார் 10 ஆண்டுகள்.
மூளை செல்கள் (Neurons) மற்றும் கண் லென்ஸ்கள் பொதுவாக புதுப்பிக்கப்படுவதில்லை. பிறக்கும்போது இருக்கும் மூளை செல்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். கண்களின் லென்ஸ்கள் ஒருமுறை உருவானால் அவை வாழ்நாள் முழுவதும் மாற்றப்படுவதில்லை.
முதுமையின் வெளிப்படையான அறிகுறிகள் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் சுருக்கங்கள், நரைமுடிகள், மற்றும் பார்வை மங்குதல் ஆகும். ஆனால் முதுமை தோலில் மட்டும் நிகழ்வதில்லை. உடலின் உள்புற உறுப்புகளும் அமைதியாக மாற்றமடைந்து, அவற்றின் செயல்திறன் படிப்படியாகக் குறைகிறது. மனித உடலில் முதுமையின் முதல் அடையாளங்கள் இருபது வயதிலேயே தோன்ற ஆரம்பிக்கலாம்.
முடிக்கு நிறம் அளிக்கும் மெலனின் (Melanin) என்ற நிறமிப் பொருளின் உற்பத்தி வயது ஆக ஆகக் குறைந்து, முடி நரைக்கத் தொடங்குகிறது. இளமையான தோலின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான கொலாஜன் (Collagen), எலாஸ்டின் (Elastin), ஹயலுரோனிக் அமிலம் (Hyaluronic Acid) ஆகியவற்றின் அளவு வயதுடன் குறைகிறது. இதனால் தோல் தனது இழுவைத்தன்மையை இழந்து, சுருக்கங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன.
கேட்கும் திறன் பாதிக்கப்படுவது உள் காதின் ஒரு பகுதியாக இருக்கும் க்ளியா (Cochlea)வில் உள்ள நுண்ணிய முடி உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவதால் நிகழ்கிறது. இதனால் குறிப்பாக உயர்ந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளைக் கேட்பது கடினமாகிறது. வயது அதிகரிக்கும்போது கண் லென்ஸ் தடிமனாகி, அருகிலுள்ள பொருள்களுக்குத் தன்னைச் சரிசெய்துக் கொள்ளும் திறன் (Accommodation) குறைகிறது. இதுவே முதுமைப் பார்வைக் குறைபாடு (Presbyopia) எனப்படுகிறது.
முப்பது வயதிற்குப் பிறகு குருத்தெலும்புகளின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, மூட்டுகள் விறைப்பாகின்றன. முதுகெலும்புகளுக்கு இடையில் இருக்கும் இடைமுதுகுத் தட்டுகள் (Intervertebral Discs) மெல்ல மெல்ல மெலிதாகின்றன. எலும்புகளை உருவாக்கும் வேகத்தைவிட அவை சிதைவடையும் வேகம் அதிகரிப்பதால் எலும்பு அடர்த்தி குறைந்து, எலும்பு முறிவுகளுக்கான அபாயம் அதிகரிக்கிறது.
40 முதல் 50 வயதிற்குள் மூளை தனது நிறையை மெல்ல இழக்கத் தொடங்குகிறது. இதனால் நரம்புச் செய்தி பரிமாற்றம் மந்தமாகி, நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனில் படிப்படியான வீழ்ச்சி ஏற்படலாம். நுரையீரல்களில் உள்ள ஆல்வியோலை (Alveoli) எனப்படும் காற்றுப் பைகளின் எண்ணிக்கை குறைவதால் நுரையீரல் கொள்ளளவு குறைந்து, இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் உடல் சக்தி மற்றும் சகிப்புத்தன்மை குறைகிறது.
நாற்பது வயதிற்கு அருகில் தசை நிறை குறையத் தொடங்குகிறது. உடலில் கொழுப்பு விகிதம் அதிகரிக்கிறது. இரத்த நாளங்களில் கால்சியம் படிவதால் அவை கடினமடைந்து, இரத்த அழுத்தம் உயரும். இதயத்தின் வேலைப்பளு அதிகரித்து, இதயத் தசை உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இதயத்தின் செயல்திறனும் குறைகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்திறன் குறைவதால் உடலில் உருவாகும் கழிவுப் பொருள்கள் மற்றும் நச்சுப் பொருள்களை அகற்றும் செயல்முறை மெதுவாகிறது.
சிறுநீர்ப்பை தனது நெகிழ்வுத்தன்மையை இழப்பதால் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. பெண்களில் இருபதுகளின் இறுதிப் பகுதியிலிருந்தே கருவுறும் திறன் குறையத் தொடங்குகிறது. ஆண்களில் நாற்பது வயதிலிருந்து டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து, விந்தணுக்களின் இயக்கத் திறன் குறைகிறது. வயதுடன் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தி குறைவதால் தொற்றுநோய்களை எதிர்க்கும் திறன் குறைந்து, உடல் மீளும் வேகம் மந்தமாகிறது.
தைமஸ் (Thymus) என்ற சிறிய உறுப்பு, டி-செல்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களைப் பயிற்றுவிக்கும் மையமாக செயல்படுகிறது. இந்த டி-செல்கள் தொற்றுகளை எதிர்க்கின்றன, புற்றுநோய் உயிரணுக்களை அடையாளம் காண்கின்றன, மற்றும் உடலைப் பாதுகாக்கின்றன. ஆரோக்கியமான தைமஸ் கொண்டவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தனர், இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயம் குறைவாக இருந்தது, மேலும் புற்றுநோய் எதிர்ப்பு நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்கு (Immunotherapy) சிறப்பாகப் பதிலளித்தனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முதுமையை முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால் சமநிலையான உணவு, போதுமான தூக்கம், வழக்கமான உடற்பயிற்சி, சமூக உறவுகள் மற்றும் குடும்ப ஆதரவு ஆகியவை ஆரோக்கியமான முதுமையை உருவாக்க உதவும். நீடித்த மனஅழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவை தைமஸ் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடும்.
இறைவன் மனித உடலை நுட்பமான அமைப்புகளுடன் படைத்துள்ளான். ஒவ்வொரு செல்லின் வாழ்வும், அதன் புதுப்பித்தலும், உறுப்புகளின் செயல்பாடுகளும் அவன் விதித்த நியதிப்படியே நிகழ்கின்றன. இந்த மாற்றங்களை அறிந்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், அவன் அருளிய வாழ்வை நன்றியுடனும் நிறைவுடனும் வாழலாம்.
ஆதாரம்: தினமணி