சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள் எதனால் ஆனவை?

அறிவியல் உண்மைகள்

சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்களை பயனியர் 11 (Pioneer 11), வாயேஜர் 1 (Voyager 1), வாயேஜர் 2 (Voyager 2), காசினி (Cassini) ஆகிய நான்கு விண்கலங்கள் ஆய்வு செய்துள்ளன. இந்த ஆய்வுகள், சனியின் வளையங்கள் திடமான அமைப்பு அல்ல என்பதைக் காட்டின. கோடிக்கணக்கான பொருள்கள் அருகருகே சனியைச் சுற்றி வருவதால், தொலைவிலிருந்து பார்க்கும்போது அவை ஒரு வளையம் போலத் தோற்றமளிக்கின்றன.

சனியின் வளையங்கள் சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் வரை விரிந்திருந்தாலும், அவற்றின் தடிப்பு (thickness) சுமார் 100 மீட்டர் மட்டுமே என்று இந்த விண்கலங்கள் கண்டறிந்தன. A, B, C, D, F, G ஆகிய ஆறு வளையத் தொகுப்புகளும், தொலைவில் உள்ள மெல்லிய E வளையத் தொகுப்பும் சேர்ந்து மொத்தம் ஏழு தொகுப்புகளே இந்த வளைய வடிவத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு தொகுப்பிற்குள்ளும் நூற்றுக்கணக்கான தனி வளையங்கள் உள்ளன. எனவே, மொத்தம் ஐநூறு முதல் ஆயிரம் வளையங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த வளையங்கள் கல், மண், பனி ஆகியவை கலந்த கண்ணுக்குப் புலப்படாத நுண்துகள்கள் முதல் பேருந்து அளவுள்ள பாறைகள் வரை பல ஆயிரம் சிறு துகள்களின் திரட்சி ஆகும். ஒரு ரயிலில் பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒழுங்காக இருப்பதுபோல, இந்தத் துகள்கள் குறிப்பிட்ட தொலைவில் சனியைச் சுற்றி வருவதால் வளையம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

சனியைச் சுற்றிவரும் சில நிலவுகள், தமது ஈர்ப்பு விசையால் துகள்களைத் தள்ளி நெருக்கி வைத்துக்கொள்கின்றன. உதாரணமாக, F வளையத்தின் உள்புறத்தில் ப்ரோமிதியஸ் (Prometheus) என்ற நிலவும், வெளிப்புறத்தில் பண்டோரா (Pandora) என்ற நிலவும் சுற்றி வருகின்றன. இவற்றின் ஈர்ப்பு விசையால் உள்நோக்கியும் வெளிநோக்கியும் தள்ளப்படும் துகள்கள், இந்த இரண்டு நிலவுகளின் பாதைகளுக்கு இடையே அடைபட்டு, அடர்த்தியாகி வளையம் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.

சனியின் வளையங்கள் எவ்வாறு உருவாயின என்பது குறித்து இரண்டு முக்கியக் கருதுகோள்கள் உள்ளன. ஒரு கருதுகோள், சூரியனிலிருந்து தொலைவிலும் பெரும் நிறையும் கொண்ட சனி போன்ற கோள்களின் ஈர்ப்புப் பகுதி (Hill sphere) பெரிதாக இருக்கும். இந்தப் பகுதிக்குள் வரும் விண்பாறைகள் சனியின் ஈர்ப்பு வலையில் சிக்கிக்கொள்ளும். இவ்வாறு மணல் துகள் முதல் பாறைகள் வரை கவரப்பட்டு, படிப்படியாக வளையம் உருவானது என்று கூறுகிறது.

மற்றொரு கருதுகோள், சனியின் ஏதேனும் ஒரு துணைக்கோள் உடைந்து நொறுங்கி வளையம் உருவானது என்பது. ஒரு பெரிய கோளின் அருகே நிலவு போன்ற பொருள் வரும்போது, அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு விசை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவில் இருக்கும். இதனால் அந்த வான்பொருள் பல திசைகளில் இழுக்கப்பட்டு, சிதைந்து நொறுங்கிவிடும். இவ்வாறு தொன்மைக் காலத்தில் சனியின் ஒரு துணைக்கோள் உடைந்து வளையம் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), ஒரு காலத்தில் சனியைச் சுற்றி வந்த ‘கிரிஸலிஸ்’ (Chrysalis) என்ற நிலவை ஈர்ப்பு விசையால் தள்ளியதன் விளைவாக, அது சனியை நோக்கி விழுந்திருக்கலாம். மோதுவதற்கு முன்பே சனியின் ஈர்ப்பு விசையால் அந்நிலவு சுக்குநூறாக நொறுங்கியிருக்கலாம். நொறுங்கிய பகுதிகள் வளையமாகச் சுற்றத் தொடங்கியதோடு, இந்த மோதலின் விளைவாக, சனியின் அச்சு (axis) சாய்ந்திருக்கக்கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இந்த வளையங்கள் எப்போது உருவாயின என்பது குறித்தும் இரு கருத்துகள் உள்ளன. சில ஆய்வாளர்கள், சுமார் நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியக் குடும்பமும் சனியும் உருவான காலத்திலேயே இவ்வளையங்களும் உருவாயின எனக் கருதுகின்றனர். ஆனால், சனிக்கு அருகே சென்று ஆய்வு செய்த விண்கலத் தரவுகளின் அடிப்படையில், இவை சமீபத்தில் உருவாகியிருக்கலாம் எனும் கருத்து மேலோங்கி வருகிறது.

சனியின் வளையங்கள் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் உள்ளன. எனவே, இவை பல நூறு கோடி ஆண்டுகள் பழமையானவையாக இருக்க முடியாது என்று சில விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் அடிப்படையில், சனி உருவான பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, 10 முதல் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு நிலவு உடைந்து இந்த வளையங்கள் உருவாகியிருக்கக்கூடும் என்கின்றனர். இது உண்மையாக இருப்பின், பூமியில் டைனசோர்கள் வாழ்ந்த காலத்தில் சனிக்கோளுக்கு இந்தப் பட்டை வளையங்கள் உருவாகியிருக்க வேண்டும்.

இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான அமைப்புகளையும், வியக்கத்தக்க ஒழுங்கையும் ஏற்படுத்தி உள்ளான் என்பதை சனிக்கோளின் வளையங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த அண்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அவனது வல்லமையையும் ஞானத்தையும் நாம் காணலாம். இத்தகைய படைப்புகளைப் பற்றி சிந்திப்பது, இறைவனின் மகத்துவத்தை மேலும் உணரச் செய்யும்.

ஆதாரம்: இந்து தமிழ் திசை